Sunday, September 7, 2008

தமிழ்வழிக்கல்வி ஒரு பார்வை.

ஒருவன் தனது தாய்மொழி மூலம் கல்வி கற்கும் போது படிப்பதை எளிதில் உணர்ந்து கற்றுக்கொள்ள முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.

தாய்மொழிக்கல்வி வெற்றிக்கு அடையாளமாக ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முன்னேற்றத்தை கூறலாம்.

பல மொழி பேசும் முன்னால் ஆங்கில காலனியாகிய நம் நாட்டில் ஆங்கிலத்தின் மூலம் உயர்கல்வி கற்க வேண்டிய நிலை எளிதில் மாற்றக்கூடியது அல்ல.

இந்நிலையில் தமிழ்வழி மூலம் +2 வரை கல்வி கற்றவர்கள், கல்லூரியில் ஒரு முழு புரிதல் இல்லாமல் சில காலம் படிக்க நேரிடலாம். நன்கு ஆங்கிலம் தெரிந்த சில நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்பு, திறமை இருந்தும் ஆங்கில அறிவின் குறையினால் உலகமயமாக்கப்பட்ட இந்த வேலை சந்தையில் இவர்கள் இழப்பது அதிகம். இக்குறையை முளையிலேயே களைந்திட பெற்றோர் எடுக்கும் ஒரு முயற்சியே முதலில் இருந்தே ஆங்கில வழி கல்வி.

முதலில் இருந்து ஆங்கில வழி கல்வி என்பது பல பிரச்சினைகள் உள்ள ஒன்றாகவே எனக்கு படுகிறது.முதலில் புரியாத ஒரு மொழியில் அனைத்தையும் புரிந்து படிக்க முடுயுமா?
மேலும் பிறருக்கு வேலை செய்து தன் பிழைப்பு நடத்த, தன் அடையாளத்தை அவன் அறியாமலேயே இழக்க கூடிய நிலையை இது உருவாக்குகிறது.

ஒரு மனிதக்கூட்டத்தின் நாகரிகம் அவன் பேசும் மொழியில் தான் அளவிடப்படுகிறது. ஆனால் பிழைப்பிற்காக அதனை மனிதன் இழப்பது இயல்பான ஒன்றே.

இந்நிலையில் கல்வியாளர்கள் என்ன சொன்னாலும் பெற்றோர்கள் செவி மடுப்பது சந்தேகமே.சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஒரிவரிடம் இது பற்றி விவாதம் செய்த போது, இரண்டும் கலந்த ஒரு கல்வி முறை கல்வியாளர்கள் மத்தியில் ஆலோசிக்கப்பட்டதாக கூறினார்.

இக்கல்வி முறைப்படி குறைந்தது வரலாறு, கணக்கு போன்ற பாடங்கள் தமிழில் கற்பிக்கப்பட்டால், வரலாறும், கணிதமும் (மொழியின் பங்கு சிறிதளவே) நன்றாக கற்றுக்கொள்வதோடு தனது மொழியையும் அவன் கற்றுக்கொள்கிறான். அறிவியல் பாடத்தை ஆங்கிலத்தில் கற்பதால் உயர்கல்வியும் எளிதாக அமைகிறது.

இதன் மூலம் தமிழை நாம் காக்க முடியும் என்று நம்பலாம். குழந்தைகள் அம்மா,அப்பா என்று அழைத்தால் பெற்றோர்கள் பையனுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றெல்லாம் வருத்தப்பட மாட்டார்கள் எனவும் நம்பலாம்.

என் மகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது என்று பெருமை அடித்துக்கொள்ள சிலருக்கு வாய்ப்பில்லாமல் போகலாம்.

பலருக்கு வரலாறு புரிந்து , நம் நாட்டை முகலாயர் மற்றும் ஆங்கிலேயர்கள் போன்ற அந்நிய சக்திகள் ஆண்டதை தனது பெற்றோருக்கு எடுத்துரைக்கலாம்.

வருங்கால தமிழர்கள் இந்த பதிவைப் படித்து விமர்சிக்க நேரிடலாம். யாருடா குடுகுடுப்பை தமிழில் ஒரு நல்ல பதிவை கூட தரவில்லை எனலாம்.

22 comments:

Anonymous said...

மாற்றுப்பார்வை.

//வருங்கால தமிழர்கள் இந்த பதிவைப் படித்து விமர்சிக்க நேரிடலாம். யாருடா குடுகுடுப்பை தமிழில் ஒரு நல்ல பதிவை கூட தரவில்லை எனலாம். //

நெனப்புத்தான்...

குடுகுடுப்பை said...

வாங்க ரங்கு

நெனச்சுகிட்டாவது இருப்போம்.

Unknown said...

நல்ல கருத்து, புதிய சிந்தனை. தமிழ் வழிக் கல்வியின் எதிர்ப்பாளர்களையும் கூட சிறிது யோசிக்க வைக்கும் சமரச அழைப்பு. ஆனால் தமிழ் வழிக் கல்வியில் சமரசம் கூடாது என்பது பொதுவான கருத்து..

Anonymous said...

தாய்மொழிக்கல்வி மிக அவசியமான ஒன்று என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை

புதுகை.அப்துல்லா said...

அண்ணே சுயசிந்தனைங்கிறது தாய்மொழிக் கல்விலதான் வரும். கல்விங்கறதுக்கு உண்மையான் அர்த்தம் கற்றல்,சிந்தித்தல்,செயல்படுத்துதல். நம்ம ஆளுக்கு வேற மொழியில கற்கவே வராதுங்குற போது எங்க சிந்திக்கிறது அப்புறம் செயல்படுத்துறது? தாய்மொழிக்கல்வியில் சமரசம் கூடாதுங்கிறதுதான் என் கருத்து.

குடுகுடுப்பை said...

வாங்க பின்னூட்டம் பெரியசாமி,அனானி,புதுகை.அப்துல்லா
கருத்துக்கு நன்றி

உங்கள் கருத்துக்கள் மூலம் என் பதிவில் உள்ள குறையை அறிய முடிந்தது.

நானும் என் மனைவியும் கிராமத்தில் தமிழ் வழியில் கல்வி கற்றவர்கள்.தமிழில் கற்றதால் நாங்கள் உணர்ந்து கற்றோம் என்பதை மறுக்க முடியாது.

தமிழ் வழியில் இப்போது கல்வி கற்பவர்கள் அப்படியே தொடரலாம். ஆனால் ஆங்கில வழி பள்ளிகளில் வரலாறு/சமூக அறிவியல் பாடங்களை கண்டிப்பாக தமிழில் தான் படிக்கவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தவேண்டும்.

தற்போது உள்ள தமிழ் வழி பள்ளிகளில் அறிவியல் பாடங்களை வேண்டுமென்றால் ஆங்கில வழியாகவும் கறக வாய்ப்பளிக்கலாம்.

நான் படித்த கிராமப் பள்ளியில், நான் படிக்கும் போது 80 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினோம், ஆனால் இன்றைக்கு அங்கு 30 மாணவர்கள் கூட இல்லை.இவர்கள் பக்கத்து நகரத்தில் உள்ள பாரதிதாசன் ஆங்கிலப்பள்ளிக்கு பெற்றோர்கள் அனுப்புகின்றனர்.இதனை எப்படி தடுப்பது?

பழமைபேசி said...

இப்போதைக்கு என் வருகையை பதிவு செய்கிறேன். மீண்டும் வருவேன். நன்றி!

பழமைபேசி said...

ஐயா,

நாம உங்க பதிவப் பாத்ததுல நொம்ப மகிழ்ச்சிங்க...
தலைக்கு மேல வெள்ளம் போயாச்சு... இனி அது சாண் போனா என்ன? மொழம் போனா என்ன??

மன்னிச்சுக்குங்க.... தமிழ் ஆசிரியரே, "எல்லாரும் Testக்கு படிச்சுட்டு வாங்க. இல்லேன்னா நீங்க Failதான்னு சொல்லுற காலம் இது.

அது சரி said...

//
முதலில் இருந்து ஆங்கில வழி கல்வி என்பது பல பிரச்சினைகள் உள்ள ஒன்றாகவே எனக்கு படுகிறது.முதலில் புரியாத ஒரு மொழியில் அனைத்தையும் புரிந்து படிக்க முடுயுமா?
மேலும் பிறருக்கு வேலை செய்து தன் பிழைப்பு நடத்த, தன் அடையாளத்தை அவன் அறியாமலேயே இழக்க கூடிய நிலையை இது உருவாக்குகிறது.
//

குடுகுடுப்பை காரரே,

சிறு வயதிலிருந்தே படித்தால் அது எப்படி புரியாத மொழி ஆகும்? அப்படி பார்த்தால் ஆங்கில வழியில் படிப்பவர்கள் எல்லாம் மண்டுகளாக அல்லவா இருக்க வேண்டும்? எல்லாரும் அப்படி இருப்பதில்லை.

வேலை செய்து பிழைப்பு நடத்துவது அடையாளத்தை இழப்பது அல்ல. தவிர எ ந்த மொழியில் படித்தாலும், வேலை செய்து தானே தீர வேண்டும்?? தாய்மொழியில் படித்தால் மட்டும் எல்லாரும் சுய தொழில் அதிபர்களாகி விடுவார்களா? அப்படியென்றால், நீங்கள் சொல்வது போல் ஜப்பானில் எல்லாரும் தொழில் அதிபர்களாக இருக்கவேண்டுமே??

//
ஒரு மனிதக்கூட்டத்தின் நாகரிகம் அவன் பேசும் மொழியில் தான் அளவிடப்படுகிறது. ஆனால் பிழைப்பிற்காக அதனை மனிதன் இழப்பது இயல்பான ஒன்றே.
//

இது என‌க்கு புரிய‌வில்லை. மொழிக்கும் நாக‌ரீக‌த்திற்கும் என்ன‌ தொட‌ர்பு?? ஒரு மொழி 5000 வ‌ருட‌ம் ப‌ழ‌மையான‌து என்றால் அது சிற‌ந்த‌ நாக‌ரீக‌மா? நீங்க‌ள் சொல்வ‌து என‌க்கு புரிய‌வில்லை.

//
இக்கல்வி முறைப்படி குறைந்தது வரலாறு, கணக்கு போன்ற பாடங்கள் தமிழில் கற்பிக்கப்பட்டால், வரலாறும், கணிதமும் (மொழியின் பங்கு சிறிதளவே) நன்றாக கற்றுக்கொள்வதோடு தனது மொழியையும் அவன் கற்றுக்கொள்கிறான். அறிவியல் பாடத்தை ஆங்கிலத்தில் கற்பதால் உயர்கல்வியும் எளிதாக அமைகிறது.
//

இது ந‌ல்ல‌ ஐடியாவாக‌ தெரிகிற‌து :0)

//
வருங்கால தமிழர்கள் இந்த பதிவைப் படித்து விமர்சிக்க நேரிடலாம். யாருடா குடுகுடுப்பை தமிழில் ஒரு நல்ல பதிவை கூட தரவில்லை எனலாம்.
//

நானும் இந்த‌ ந‌ம்பிக்கையில் தான் என‌து ப‌திவுக‌ளை க‌ல்வெட்டாக‌ செதுக்க‌ ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன். என்னோட‌ வ‌ர‌லாற்றை ப‌டிக்கிற‌வ‌ங்க‌ பின்னாடி வ‌ருத்த‌ப்ப‌ட‌ கூடாது பாருங்க‌ :0)))

குடுகுடுப்பை said...

பழமைபேசு ,அது சரி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


அது சரி உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். நான் சொல்ல வந்த செய்தி, தமிழர்கள் தமிழையும் இழக்காமல், அறிவியலையும் இழக்காமல் கல்வி கற்பதற்கு நடைமுறை படுத்தக்கூடிய ஒரு வழிமுறை.

நீங்களும் , நானும் தமிழில் ஏன் எழுதுகிறோம், நம் மொழி ஒரளவிற்கு நன்றாக எழுதமுடியும் என்பதால் என நினைக்கிறேன், நம்முடைய நாகரிகத்தில் உள்ள சரி / தவறுகளை நாமே விமர்சணம் செய்து சரிப்படுத்திகொள்ள ஒரு வாய்ப்பு, இன்னும் 5000 வருடங்கள் கழித்து வரலாறு தமிழர்கள் பற்றி , இது தன்னைத்தானே மேம்படுத்திக்கொண்ட சமுதாயம் என கூறலாம் அல்லவா.

குடுகுடுப்பையின் செய்தி : தமிழர்கள் தமிழையும் இழக்காமல் முன்னேற ஒரு வழி அது மட்டுமே.

Anonymous said...

//நான் படித்த கிராமப் பள்ளியில், நான் படிக்கும் போது 80 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினோம், ஆனால் இன்றைக்கு அங்கு 30 மாணவர்கள் கூட இல்லை.இவர்கள் பக்கத்து நகரத்தில் உள்ள பாரதிதாசன் ஆங்கிலப்பள்ளிக்கு பெற்றோர்கள் அனுப்புகின்றனர்.இதனை எப்படி தடுப்பது?//
இலங்கையில் தமிழ் மாணவர்கள் University செல்லும் வரை ஆங்கிலம் தவர மற்ற பாடங்க அனைத்தையும் தமிழில்தான் இன்றைக்கும் படிக்கிறார்கள்.

குடுகுடுப்பை said...

//இலங்கையில் தமிழ் மாணவர்கள் University செல்லும் வரை ஆங்கிலம் தவர மற்ற பாடங்க அனைத்தையும் தமிழில்தான் இன்றைக்கும் படிக்கிறார்கள்.//
தமிழகத்திலும் கிராமப்பகுதிகளில் அப்படித்தான். ஆனால் இன்றைய சூழ்நிலை பெற்றோர்கள் ஆங்கில வழி கல்வியை நாட தூண்டுகிறது.அனைத்து பள்ளிகளிலும் கணக்கு ,வரலாறு பாடங்கள் தமிழ் வழியிலும் அறிவியல் பாடங்கள் ஆங்கிலம்/தமிழ் வழியில் படிக்கலாம் என்று ஆக்கினால், இரண்டு மொழிகளையும் பேசவும்,பயன்படுத்தவும் கற்றுக்கொள்வது எளிது என்பது என் கருத்து. இதன் மூலம் ஆங்கில வழி மட்டுமே தரமானது என்ற மாயை குறையும்.

குடுகுடுப்பை said...

//மன்னிச்சுக்குங்க.... தமிழ் ஆசிரியரே, "எல்லாரும் Testக்கு படிச்சுட்டு வாங்க. இல்லேன்னா நீங்க Failதான்னு சொல்லுற காலம் இது.//

மறைமலை அடிகள் மீட்டெடுத்தது போல் என்றாவது ஒருநாள் தமிழ் மீண்டும் மீட்கப்படும் என்று நம்புவோம்.

Mahesh said...

முதல்ல தமிழை தமிழ்ல எழுதவும், பேசவும் முயற்சி எடுக்கணும்... அப்புறம்தான் தாய் மொழிக் கல்வி பத்தி பேச முடியும்னு நினைக்கிறேன்.

குடுகுடுப்பை said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மகேஷ்

\\முதல்ல தமிழை தமிழ்ல எழுதவும், பேசவும் முயற்சி எடுக்கணும்... அப்புறம்தான் தாய் மொழிக் கல்வி பத்தி பேச முடியும்னு நினைக்கிறேன்.\\

இந்த முயற்சி தமிழ் எழுத படிக்க தெரிந்தால் தானே முடியும்.தமிழ்/ஆங்கில கலப்பு கல்வி மூலம் இரண்டு மொழிகளையும் எழுதவும் படிக்கவும் வாய்ப்பு உள்ளது. இது மறைமுக வரி போன்றது.படித்த தமிழ் பாடத்தை வரலாறு/செய்தி/கலை போன்றவற்றில் இயல்பாக பயிற்சி எடுக்கலாம். படித்த ஆங்கிலத்தை அறிவியல் பாடம் மூலம் பயிற்சி எடுக்கலாம்.

குடுகுடுப்பை said...

அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ?

Anonymous said...

தாய்மொழிக்கல்வி அவசியமான ஒன்று. நல்ல ப‌திவு.

குடுகுடுப்பை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
கடையம் ஆனந்த்

பாபு said...

"இக்கல்வி முறைப்படி குறைந்தது வரலாறு, கணக்கு போன்ற பாடங்கள் தமிழில் கற்பிக்கப்பட்டால், வரலாறும், கணிதமும் (மொழியின் பங்கு சிறிதளவே) நன்றாக கற்றுக்கொள்வதோடு தனது மொழியையும் அவன் கற்றுக்கொள்கிறான். அறிவியல் பாடத்தை ஆங்கிலத்தில் கற்பதால் உயர்கல்வியும் எளிதாக அமைகிறது."

இதை நடை முறை படுத்தலாம்,நல்ல ஐடியா

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி பாபு,
பூனைக்கு மணி கட்டுவது யார்?

பழமைபேசி said...

ஐயா,

நான் அன்று உங்கள் பக்கம் வந்து புலம்பிச் சென்றேன். இன்றைக்கு என் கருத்தை பதிவதில் எந்த சஞ்சலமும் இல்லை. ஆம், தமிழ்ப் பாடம் முறையாக, தரத்துடன் கற்றுக் கொடுத்தால் மட்டுமே போதுமானது. நீங்கள், என் பதிவை படித்து விட்டமையால், உங்களுக்கு என் வருத்தம் புரிந்து இருக்கும் என எண்ணுகிறேன்.

பழமைபேசி said...

தமிழ்ப் பாடமே தமிழில் இல்லாத போது, மற்ற பாடங்கள் எதற்கு ரெண்டுங் கெட்டான் மொழியில்?