Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Monday, August 3, 2009

தொவையல்: அமெரிக்கத்தொவையல்,பார்ப்பனர், தமிழ்.

1. எனெர்ஜி ஸ்டார்.(energy star).
பழைய குண்டு பல்புகள் 60 வாட் 100 வாட் எடுக்கிறது என்று புதிதாக ஐந்து வருட எனெர்ஜி ஸ்டார் பல்புகள் 13 வாட்டில் 60வாட் வெளிச்சம் கொடுக்கும், ஆனால் பல்பு விலை பத்து மடங்கு அதிகம், ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் பல்புகள் 6 மாதத்தில் பஸ்பமாயின.
8000 மணிநேரம் எரித்தால் நீங்கள் 56$ சேமிக்கலாம், அதனால் மறக்காமல் லைட்டை எட்டாயிரம் மணிநேரம் இரவு பகலாக எரித்து 56$ மிச்சம் செய்யுங்கள்.

இரண்டாவதாக front loading வாஷிங் மெசின், இதுவும் பழைய மாடலை விட இரண்டிலிருந்து மூன்று மடங்கு விலை அதிகம் ஆனால் 60% சதவீதம் மின்சாரமும், 60% தண்ணீரும் சேமிக்கலாம்.ஆனால் இவற்றின் விலைக்கேற்ற தரம் இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். ஐந்து வருடமாவது வேண்டும் நீங்கள் அதிகம் செலவு செய்த பணத்தை எடுக்க. இதற்கிடையில் தரம் குறைவாக இருப்பதால் இதற்கு 5 வருட வாரண்டி வாங்கினால் ஒரு $100 ஆகும். இந்தகாசுதான் நீங்கள் ஐந்து வருடத்தில் சேமிக்க முடியும் அதுவும் கடைக்காரர்களுக்கே சென்றுவிடும். மொத்தத்தில் உபயோகிப்பவர்கள் சுற்றுப்புற சூழலை காப்பாற்றினால், பொருளாதார ரீதியான பலன் அடைவது அவர்கள் இல்லை. இதில் மோட்டிவேசன் எங்கிருந்து வரும்.?

2. வீட்டு லோன்
அதாவது நீங்கள் $100000 க்கு கடன் வாங்கினால், அதுக்கான வட்டி 5% , ஆரம்பத்துல லோன் பீஸ் ஒரு ஆயிரம் டாலர் கைலேந்து கட்டணும், வட்டி குறைக்க ஒரு வழி இருக்கு. அதாவது லோன் அமவுண்டான $100000 ல ஒரு பாயிண்ட் அதாவது $1000 லோன் ஆரிஜினேசன் பீஸ் கட்டினா வட்டி 4.75 ஆ குறையும் உங்க மாதத்தவனை கம்மியாகிடும்.

அப்படிங்களா அப்ப 100 பாயிண்டு லோன் ஆரிஜினேசன் பீஸ் கட்டினா வட்டி எவ்வளவு சார்?

அப்போ உங்களுக்கு 0% வட்டில தறோம் அது மட்டுமில்லாம 90% லோன் தள்ளுபடியும் பண்றோம். நீங்க $10000மும் லோன் பீஸ் $1000ம் கட்டினா போதும்.

90% தள்ளுபடி 0% வட்டி நல்லா இருக்கு இந்த டீல் நான் இதையே எடுத்துக்கறேன்.

3.பக்கத்தில் வாழும் தமிழர்கள் ஒரு பத்து குடும்பங்கள் சேர்ந்து, குழந்தைகளுக்கான தமிழ் பாட்டு, நாடகம் நடத்தலாம் என்று என் மகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியை ஏற்பாடு செய்திருந்தார். மூன்று வாரம் ஆடல்,பாடலில் கடினப்பயிற்சி தன் சொந்த முயற்சியில் அவருடைய வீட்டில் ஒரு பைசா காசு வாங்காமல் அனைவரையும் ஒருங்கினைத்து நடத்தினார். என் மகளின் பயிற்சி முழுவதையும் 1000% அற்பணிப்போடு என் மனைவி மட்டுமே செய்தார்(என்னுடைய பங்களிப்பு அவர்களின் உழைப்பை திருடி பதிவாக்குவது மட்டுமே). தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சி வெகு சிறப்பாக அமைந்தது. அனைத்துக்குழந்தைகளும் நல்ல தமிழில் பேசினர். பலருக்கு எழுதப்படிக்கவும் தெரியும்.தமிழ் கற்றுக்கொடுப்பதற்காக அவர்கள் செய்யும் முயற்சி அளப்பறியது.

சீராரும் வதனமென.... திராவிடநல் திருநாடும் .... என்று பாடியதில்,என்னையும் மற்றொருவரையும் தவிர தமிழின விரோதிகள் ஆரியர்கள் /பார்ப்பனர்கள் என வசைச்சொல் வாங்குபவர்கள்.

ஒன்று மட்டும் புரியவில்லை இவர்கள் தமிழை அவ்வளவு சிரமம் எடுத்து படிக்கிறார்கள். தமிழிலேயே குழந்தைகளோடு வீட்டில் பேசுகிறார்கள், தெரிந்த தமிழர்களை தமிழ் கற்றுக்கொடுக்க சொல்லி ஊக்குவிக்கிறார்கள்.அவர்களிடம் கடின உழைப்பும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இருந்துகொண்டே இருக்கிறது, எங்கு சென்றாலும் பிழைத்துக்கொள்வார்கள் தமிழையும் விடாமல் பேசுவார்கள் இவர்கள் தமிழ் விரோதிகள் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எனக்கும் அவர்களோடு பல கருத்து வேறுபாடுகள் உண்டு அது சுமூக சூழ்நிலையில் களையப்படவேண்டுமே தவிர வெறுப்புணர்ச்சியை தூண்டி அல்ல. அவர்கள் தமிழர் அல்ல என்று வேற்றுமை உருவாக்காமல் அனைத்து தமிழர்களும் உள்ளடக்கிய ஒரு சுமூக சூழ்நிலையை ஏற்படுத்தி அனைத்து அறிவும் பகிர்ந்து கொள்ளப்படவேண்டும்..சமூகங்களிடையே புரிதலை ஏற்படுத்தி முன்னேற வழி இருந்தால் அதை செய்வோமே.

அவர்களிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை பதிவாகப்போடலாம். ஆனால் முதலில் சுய விமர்சனம்.

ஹரிணியின் பாட்டு இங்கே

Sunday, September 7, 2008

தமிழ்வழிக்கல்வி ஒரு பார்வை.

ஒருவன் தனது தாய்மொழி மூலம் கல்வி கற்கும் போது படிப்பதை எளிதில் உணர்ந்து கற்றுக்கொள்ள முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.

தாய்மொழிக்கல்வி வெற்றிக்கு அடையாளமாக ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முன்னேற்றத்தை கூறலாம்.

பல மொழி பேசும் முன்னால் ஆங்கில காலனியாகிய நம் நாட்டில் ஆங்கிலத்தின் மூலம் உயர்கல்வி கற்க வேண்டிய நிலை எளிதில் மாற்றக்கூடியது அல்ல.

இந்நிலையில் தமிழ்வழி மூலம் +2 வரை கல்வி கற்றவர்கள், கல்லூரியில் ஒரு முழு புரிதல் இல்லாமல் சில காலம் படிக்க நேரிடலாம். நன்கு ஆங்கிலம் தெரிந்த சில நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்பு, திறமை இருந்தும் ஆங்கில அறிவின் குறையினால் உலகமயமாக்கப்பட்ட இந்த வேலை சந்தையில் இவர்கள் இழப்பது அதிகம். இக்குறையை முளையிலேயே களைந்திட பெற்றோர் எடுக்கும் ஒரு முயற்சியே முதலில் இருந்தே ஆங்கில வழி கல்வி.

முதலில் இருந்து ஆங்கில வழி கல்வி என்பது பல பிரச்சினைகள் உள்ள ஒன்றாகவே எனக்கு படுகிறது.முதலில் புரியாத ஒரு மொழியில் அனைத்தையும் புரிந்து படிக்க முடுயுமா?
மேலும் பிறருக்கு வேலை செய்து தன் பிழைப்பு நடத்த, தன் அடையாளத்தை அவன் அறியாமலேயே இழக்க கூடிய நிலையை இது உருவாக்குகிறது.

ஒரு மனிதக்கூட்டத்தின் நாகரிகம் அவன் பேசும் மொழியில் தான் அளவிடப்படுகிறது. ஆனால் பிழைப்பிற்காக அதனை மனிதன் இழப்பது இயல்பான ஒன்றே.

இந்நிலையில் கல்வியாளர்கள் என்ன சொன்னாலும் பெற்றோர்கள் செவி மடுப்பது சந்தேகமே.சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஒரிவரிடம் இது பற்றி விவாதம் செய்த போது, இரண்டும் கலந்த ஒரு கல்வி முறை கல்வியாளர்கள் மத்தியில் ஆலோசிக்கப்பட்டதாக கூறினார்.

இக்கல்வி முறைப்படி குறைந்தது வரலாறு, கணக்கு போன்ற பாடங்கள் தமிழில் கற்பிக்கப்பட்டால், வரலாறும், கணிதமும் (மொழியின் பங்கு சிறிதளவே) நன்றாக கற்றுக்கொள்வதோடு தனது மொழியையும் அவன் கற்றுக்கொள்கிறான். அறிவியல் பாடத்தை ஆங்கிலத்தில் கற்பதால் உயர்கல்வியும் எளிதாக அமைகிறது.

இதன் மூலம் தமிழை நாம் காக்க முடியும் என்று நம்பலாம். குழந்தைகள் அம்மா,அப்பா என்று அழைத்தால் பெற்றோர்கள் பையனுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றெல்லாம் வருத்தப்பட மாட்டார்கள் எனவும் நம்பலாம்.

என் மகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது என்று பெருமை அடித்துக்கொள்ள சிலருக்கு வாய்ப்பில்லாமல் போகலாம்.

பலருக்கு வரலாறு புரிந்து , நம் நாட்டை முகலாயர் மற்றும் ஆங்கிலேயர்கள் போன்ற அந்நிய சக்திகள் ஆண்டதை தனது பெற்றோருக்கு எடுத்துரைக்கலாம்.

வருங்கால தமிழர்கள் இந்த பதிவைப் படித்து விமர்சிக்க நேரிடலாம். யாருடா குடுகுடுப்பை தமிழில் ஒரு நல்ல பதிவை கூட தரவில்லை எனலாம்.