இந்த வாரம் த்ரீ இடியட்ஸ் படம் பார்த்தாகிவிட்டது, வெகுசில இந்திப்படங்களே நான் பார்த்துள்ளேன், இந்தப்படத்தையும் மொழி தெரியாமல் ரசித்துப் பார்க்கமுடிந்தது, காரணம் இது ஒரு சாதாரண படமாக எடுக்கப்பட்டிருந்தது என்றே எனக்குத்தோன்றியது. படத்தில் 44 வயது அமீர்கானை இளமையாக காண்பிக்க கரினா கபூரை ஜோடியாக போட்டிருப்பார்களோ என்று ஒரு பயங்கர சந்தேகம். அமீர்கான் எந்தவித ஹீரோயிசமும் காண்பிக்காமல் ஒரு மாணவனாக அசத்தியிருக்கிறார்.இப்படத்தின் இயக்குனர் இதற்கு முன்னர் இயக்கிய முன்னாபாய் படத்தை டெம்ப்பிளேட்டாக வைத்தே இப்படத்தை தந்திருக்கிறார். தாரே சமீன் பர் படத்தில் ஒரு ஆசிரியர் மாணவனின் டிஸ்லேக்ஸியா கண்டுபிடித்து அவனின் தனித்திறமையும் கண்டுபிடித்து ஊக்குவிப்பார். இந்தந்தனித்திறமை என்ற கருவை எடுத்து, வழக்கமாக பெற்றோர்களின் இஞ்சினியர்/டாக்டர் கனவுகளோடு சேர்த்து முன்னாபாய் படத்தளத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
அந்தப்பேராசிரியர் வேடம், அவரின் மகள் கரினா கபூரும் , வசூல்ராஜா படத்தில் வந்த பிரகாஷ்ராஜ் , சினேகா பாத்திரப்படைப்புகளின் வேறு மாதிரியான பிரதி, அமீர்,மாதவன் உள்ளிட்ட மூவர் கூட்டணி கமல் , பிரபு , கருணாஸ் கூட்டணியின் வேறு பிரதி. மூவர் கூட்டணியில் இயல்பான கல்லூரி கால வாழ்க்கை மூலம் வெகு அழகாக கதையை திரைக்கதை அமைத்து நகர்த்தி உள்ளார். குறிப்பாக கரீனாவின் அக்காவிற்கு அமீர் பிரசவம் பார்க்கும் காட்சி , வசூல்ராஜா கோமா கேரக்டருக்கு கமல் வைத்தியம் செய்து சிரிக்கை வைத்ததை போன்ற அதே உத்தி, அதே போல் கமலின் தேர்வுக்கு கிரேஸி உதவுவது போன்றதே, ராஜீ கேரக்டருக்கு அமீர் தேர்வுப்பேப்பரை கடத்தி உதவுவதும் மாட்டிக்கொள்வதும், இந்த இலகுவான உத்தியை வைத்து அதே அளவு நகைச்சுவையுடன் தெளிவான கருத்தை மொழி தெரியாதவனும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள். தமிழில் இப்படத்தை எடுத்தால் என்னுடைய தேர்வு நடிகர் விஜய். குருவி.வில்லு,வேட்டைக்காரன்,சுரா ஆகியவற்றை கலக்கி ஒரு இறா கொடுப்பதற்கு பதில் இப்படி ஒரு நல்லபடத்தை கொடுக்கலாம். விஜய் மீசையை மழித்துவிட்டு கொஞ்சம் முடிவெட்டிக்கொண்டால் மட்டும் போதும், வெகுஜன மக்களை எளிமையாக இப்படம் சென்றடையும்.
மீள்பதிவு.
----------------------------------------------------------------------------------------------------
அவதார் படம் பார்க்க என் மகள் அனுமதி கொடுக்கவில்லை,எப்படியோ அனுமதி பெற்று ,டாலஸில் இரண்டே இரண்டு ஐமேக்ஸ் தியேட்டரில்(?) ஒன்றான சினிமார்க் ஐமேக்ஸ் 3Dயில் பார்த்தேன் வெகு எளிமையான கதை அதன் பிரமாண்டம் பிரமிக்க வைத்தது, இயல்புடன் சேர்ந்த வாழ்க்கையை வலியுறுத்தும் இந்தப்படமும் எனக்கு மிகவும் பிடித்தது. தமிழ்ஹிந்து தளத்தில் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய இப்பட விமர்சனத்தில் இயற்கை வழிபாட்டோடு இணைத்து எழுதியிருந்தார்,பெரும்பகுதி அதில் எனக்கு உடன்பாடு உண்டு, இயற்கை வழிபாடு என்ற பெயரில் மூடநம்பிக்கையே / நம்பிக்கையோ எதுவாக இருப்பினும் மஞ்சள் கயிறு கட்டி சாமி மரமாகிய வேப்பமரம் அதிகநாள் உயிர்வாழ்கிறது, அதுபோல் கோவிலில் உள்ள ஸ்தல விருட்சங்கள். கிராமக்கோவில்களில் உள்ள அரசமரம் எதுவாக இருப்பினும் இயற்கை வழிபாடு நல்லதாகவே இருந்திருக்கிறது. அதே நேரத்தில் மூடநம்பிக்கையில் வீட்டு வாசலில் புளியமரம் நின்றால் வெட்டுவதும் நடக்கத்தான் செய்கிறது.
நேற்று டாலஸ் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்படும் பொங்கல் விழாவிற்கு சென்றேன். முன்னூறுக்கு மேற்பட்ட அளவிற்கு மக்கள் வந்திருந்தனர், ஆண்கள் வேட்டி சட்டையுடன், பெண்கள் பட்டுப்புடவை, குழந்தைகளும் தமிழக கலாச்சார உடை அணிந்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நன்றாக நடந்தது, இடைநிலைப் பள்ளி மாணவர்கள் நடித்து வழங்கிய சிலப்பதிகாரம் வெகுவாக என்னைக் கவர்ந்தது, பெரும்பாலான குழநதைகள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் ஆனாலும் மிகத்தெளிவாக தமிழ் உச்சரிப்பு இருந்தது, வீடியோ தொகுப்பு கிடைத்தால் அடுத்தடுத்த பதிவுகளில் இணைப்பு தருகிறேன்.