ஆயிரத்தில் ஒருவனும் ஒரு வழியாக நானும் பார்த்துவிட்டேன், சந்தனமுல்லையின் பதிவின் சொன்னதுபோல் பிரபல தமிழ்/தெலுங்கு படங்களில் (கட்டிப்புடி , கட்டிப்புடிடா என்ற பாடலை விட ,ஒரு உதாரணத்துக்கு) உள்ள ஆபாசத்தை விட, இந்தப்படத்தில் எங்கே ஆபாசம் இருக்கிறது என்று எனக்குத்தெரியவில்லை, வன்முறை இருக்கிறது ஆனால் தேவைப்பட்டதாகத்தான் இருக்கிறது.தன் கழுத்தை தானே அறுத்து பலியிட்டுக்கொள்வதும் , அதனை ராஜாக்கள் ஏற்றுக்கொள்வதும் அந்தக்காலத்தில் இருந்திருக்கலாம், அதற்கேற்றப் புனைவு தான் இது எனவும் நாம் ஏற்றுக்கொள்ளலாம். பலருக்கு இந்த வன்முறை அதிகமாக தோன்றியிருப்பதில் ஒன்றும் வியப்பில்லை.இந்தப்படம் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம். இப்படத்தில் கார்த்திக் ஏற்று நடித்திருக்கும் வேடமான எடுபிடி வேலை செய்பவர்களின் தலைவன் வேடத்தில்(தலையாரி) சிறப்பாக செய்திருக்கிறார், தமிழ் சினிமாக்களில் வழக்கமாக நடிகைகளுக்கு வேலை இருக்காது, ஆனால் இந்தப்படத்தில் இரண்டு நடிகைகளுக்கும் வேலை இருக்கிறது, ரீமா சென்னுக்கு பழிவாங்கும் பாண்டியத்தி வேடமென்பதால் ஆதிக்கம் செலுத்துகிறார், சோழர்களுக்கு சேதி கொண்டு போக தலையாரியாக சென்ற அவருடைய வேடத்தை அவரும் சிறப்பாக செய்திருக்கிறார், ஹீரோயிசத்தையே பார்த்து பழகிவிட்ட நமக்கு , அல்லக்கை வேடம் என்றாலே வடிவேல் அல்லது, தாமு போன்றவர்கள் தமிழ் சினிமாவில் வருவது போல் ஹீரோவுக்கு சொம்பு தூக்கும் வேடம் நம் மனதில் நின்றுவிட்டதால் , கார்த்தி அல்லக்கை வேடத்தில் வீனடிக்கப்பட்டுவிட்டார் என்று நம் மனம் கருதுகிறது. படத்தில் கிளைமாக்ஸில் கார்த்தி தனி மனிதனாக சண்டை போட்டு ரீமாவைக்கொண்று, பார்த்திபனை காப்பாற்றி ஆண்டிரியாவை கைப்பிடித்திருந்தால், கார்த்தி கலக்கிவிட்டார் என்று விமர்சனம் வந்திருக்ககூடும்.அல்லக்கையோ , தலையாரி வேடமோ ஒரு ஹீரோவுக்கு உரிய கதாபாத்திரம் என்பதை நாம் என்றுக்கொள்ளும் போது இன்னும் நல்ல படங்கள் வரலாம். கார்த்தி நன்றாக நடித்திருக்கிறார் நல்ல நடிகராக வலம் வருவார்.
சிக்கன் புளிசாதம்
அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு நானும் மனைவியும் வந்துகொண்டிருந்தோம் , என் வீட்டுக்கு வெகு அருகில் புதிதாக ருசி என்று ஒரு இந்திய உணவகம் திறந்திருந்தார்கள், இன்றுதான் என் கண்ணில் பட்டது, என் மனைவியிடம் சொன்னேன், அவரும் உடனடியாக இன்று இங்கேயே சாப்பிடுவோம் என்றார். மாலை ஆறரை மணிக்கு நாங்கள் மட்டுமே அங்கே இருந்தோம். சிக்கன் பிரியாணி, சில்லி சிக்கன் ஆர்டர் செய்தோம், சில்லி சிக்கன் என்ற பெயரில் வேகவைத்த சிக்கனுடன் ரெடிமேட் சில்லி சாஸை சிக்கனில் ஊற்றி வெங்காயமும் எலுமிச்சையும் வெட்டி வைத்து கொடுத்தனர். அடுத்து வந்தது சிக்கன் பிரியாணி, பாஸ்மதி அரிசியில் புளிசாதம் பொடியை கலந்து சிக்கனையும் சேர்த்து செய்தது போன்ற சுவையுடன், பக்கத்தில் உள்ள குரோசரி கடையில் நான்கு டாலருக்கு மட்டன் பிரியாணி பார்சல் கிடைக்கும் சுவையும் அருமை. இவன் புளிசாதத்தில் சிக்கனைப் போட்டு அதை வேற உட்காந்து சாப்பிட வெச்சிட்டான். ஆனாலும் ஒரு நன்மை என் மனைவிக்கு புளிசாதம் மிகவும் பிடிக்கும் என்பதால் நன்றாக சாப்பிட்டார். மிச்சமுள்ள சி.புளி சாதத்தை பார்சல் செய்து கொண்டோம் , நாளைக்கு என் மனைவிக்கு அதுதான் மதிய உணவு. எனக்கு ஞாயிறு அன்று வைத்த பழைய மீன் குழம்பு இருக்கிறது அதை வைத்தே அரைபடி அரிசி சோறு இறங்கும். வழக்கமாக என் மனைவிக்கு புளி சாதம் வாங்க வேண்டா வெறுப்பாக எட்டு மைல் தூரம் உள்ள கடைக்கு சென்று புளி சாதம் வாங்கி வருவேன்,(இதுவே மீன் வாங்கச்சொன்னா எவ்வளவு தூரம் வேணும்னாலும் சலிச்சிக்காம போவேன்) இனி அந்த சிரமம் இல்லை, நடந்தே சென்று ருசியில் சிக்கன் இல்லாத சிக்கன் பிரியாணி ஆர்டர் பண்ணினா போதும் அலைச்சல் மிச்சம்.