Wednesday, July 25, 2012

கோபாடெக்ஸ், திராவிடன் பண்ட்.


 மிகச்சிறிய கிராமத்தில் வளர்ந்தாலும், அப்பா ஆசிரியராக பணி ஆற்றியதால் நடுத்தர விவசாய குடும்பத்தினரை விட வசதியான ஒரு பிம்பம் எங்கள் குடும்பத்தின் மேல் எப்போதும் உண்டு. அதற்கு இரண்டு காரணம் எங்கப்பாவின் ஆசிரிய வருமானம் மற்றும், நகரத்தில் பிறந்த அம்மா.

தஞ்சை மாவட்ட விவசாய குடும்பம் எவ்வளவு வசதியாக இருந்தாலும், நகர மக்களை போல் விரும்பிய உணவு உட்கொள்ள முடியாது, வயலில் வேலை செய்யும் ஆட்களுக்கும் சமைக்க வேண்டும் என்பதால் பெரும்பாலும், காலையில் பழைய சோறும், மதியம் சில நாட்களில் பருப்பு கொழம்பு அல்லது ரசமோ தான் அன்றாட விவசாய குடும்பத்தின் உணவு, அதுவும் நடவு போன்ற பெரு வேலை நாட்களில் வெறும் கஞ்சி ஆகிவிடும்.(இப்பொழுது கஞ்சி இல்லை). கிராமங்களில் உள்ள குளங்களில் மீன் பிடித்தாலோ, பாய் ஆடு வெட்டினாலோ உயர் தர கவிச்சியும் , காசு இல்லாத நிலையில் ஒரத்தநாடு சந்தையில் வாங்கிய திருக்கை கருவாட்டை ரசம் சோத்துக்கு சுட்டுதின்பதும்தான் பெரும்பாலான விவசாயிகளின்  உணவு முறை. எங்கள் வீட்டிலும் இப்படியும் உண்டு  என்றாலும், பள்ளிக்கு செல்வதால், தினமும் மதிய உணவு, புது விதமான குழம்புகளுடன் நல்ல சாப்பாடு அம்மா புண்ணியத்தால் உண்டு.மேலும் விவசாய குடும்பங்களில் சில திண்ணு கெட்ட குடும்பங்கள் இருக்கும், அவர்களோடு நாங்கள் நெருக்கமாக இருப்போம், அவர்களோடு சேர்ந்து ஆடு வாங்குவது, மீன் வாங்க ஊரனிபுரம் செல்வது போன்றவை என்னுடன்  படிப்பவர் சிலருக்கு வசதியான தோற்றத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது.


அப்பா அதே பகுதியில் வேலை பார்த்ததாலும், நான் அவர் பள்ளியிலேயே படித்ததாலும் ஏற்பட்ட சங்கடங்கள் நிறைய. அதிலும் பள்ளி இருக்கும் ஊரைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் குடும்பம் எங்களுக்கு உறவும் கூட. அவர் ஒரு வித நக்கல் கலந்த சோகத்தோடும் பொறாமையோடு பேசுவார். அவரின் அப்பாவோ அடிக்கடி என்னிடம் ‘நான் பள்ளிக்கூடம் கட்டி வெச்சேன், ஒங்ஙொப்பன் சம்பாதிக்கிறான்’ என்பார். பள்ளிக்கூடம் கட்டினேன் என்று அவர் சொல்வது அவர் காண்ட்ராக்ட் எடுத்து கட்டிய பள்ளி. எனக்கு அப்போதுமே கொஞ்சம் வாய்க் கொழுப்பு அதிகம்.

‘நீங்க பள்ளிக்கூடம் கட்டாட்டியும், அவர் வேற ஊர்ல வாத்தியாரா இருந்து சம்பளம் வாங்கியிருப்பார்!’ என்று பதிலடி கொடுப்பேன்.

அவர் மகனும் அவர் போலவே ஆரம்பித்தான்.

’உனக்கென்னடா! உங்கப்பா தீவாளி, பொங்கலுக்கு கோபாடெக்ஸ்ல கெவருமெண்ட் காசுல துணி வாங்கி கொடுப்பாரு’ என்பான். உண்மையில் தீபாவளிக்கு வீட்டில் கோ ஆப்டெக்ஸ் போர்வை வாங்குவோம். அதோடு சகோதரர்கள் மூவருக்கும் போர்வை மாதிரியே இன்னோரு துணி அஞ்சு மீட்டர் எடுத்து சட்டைக்கு கொடுப்பார்கள். அதையும் என் பங்காளி டெய்லர் ஆறு மாசத்துக்கு பிறகு தைத்துக் கொடுப்பார்.

அதோடு அவன் புலம்பல் நிற்காது. ‘உங்களுக்கு பணத்துக்கு என்னடா குறைச்சல்? கெவருமெண்டு திராவிடன் ஃபண்டுல பணம் போட்டு வைக்கிறான். அடிச்சி மொழக்குவீங்கன்னு சொல்லுவான்.

இன்றைக்கு நினைத்துப் பார்த்தால் விவசாயம் மட்டுமே செய்து கொண்டிருந்தால் அப்பாவால் எங்களைப் படிக்க வைத்திருக்க முடியாது. அவரின் ப்ராவிடன்ட் ஃபண்ட் கடன், நிலங்களை விற்றகாசோடு சம்பளமும் கொஞ்சம் உதவி இருக்கிறது.

விவசாயம் மட்டுமே செய்து கொண்டிருக்கிற அத்தனை குடும்பங்களும் இன்று மேலும் நலிவடைந்து இருக்கிறது.கிராமங்களில் இன்னும் விவசாயத்தை மட்டும் நம்பி வாழும் குடும்பங்களின் எதிர்காலம் கண்டிப்பாக ஒரு வறட்சி தன்மையை எதிர் நோக்கியிருக்கிறது. வறுமை பல நேரம் போராட்ட குணத்தை கொடுத்து வெற்றிக்கு வழி வகுக்கும், ஆனால் கிடைக்கும் இலவச அரிசிக்கும் நூறு நாள் வேலைக்கும்,சாராயத்துக்கும் அடிமையாகி ஒட்டு உரிமை கொண்ட ஜனநாயக அடிமைகள் ஆகும் வாய்ப்பும் கண்ணுக்கு தெரிகிறது.

Tuesday, July 17, 2012

தஞ்சைக்கள்ளர் - முதலியார்கள்.


முதலியார்களில் பலவகை சாதி முதலியார்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் தஞ்சை மாவட்டத்தில் ஒரு சில ஊர்களில் மட்டும் வாழும் தஞ்சைக்கள்ளர் சமூகத்தை சேர்ந்த முதலியார்களைப் பற்றி எனக்கு வாய் வழியாக கிடைத்த தகவல்களை பகிர்கிறேன். 

முதலிப்பட்டி எனும் கிராமம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில்,பழைய புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு உட்பட்ட ஒரு சிறிய கிராமம், தற்போது முதலிப்பட்டி எனும் ஊர் புதுக்கோட்டை மாவட்டத்திலும், அதனைச்சார்ந்த அவிச்சிக்கோன்பட்டி எனும் ஊர் தஞ்சை மாவட்டத்திலும் இருக்கிறது, முன்பு ஒன்றாக இருந்திருக்கவேண்டும்,இன்றும் இதன் ஊரின் எல்லை வீடுகளின் கொள்ளைப்புறம்தான். இந்தப்பெயரில் இருக்கும் முதலி மற்றும் கோனில் வரலாறு இருக்கிறது.

கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டிற்கு முன் அல்லது சோழர்களின் ஆட்சிக்காலத்தில் முதலிப்பட்டி எனும் கிராமம், தற்போது இருக்கும் இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மஹாராஜா சமுத்திரம் எனும் காட்டாற்றின் கரையில் இருந்திருக்கிறது, இன்னும் கிட்டத்தட்ட  ஐநூறாண்டு பழைய சிவன் கோவிலும், பொன்னிநதியின் பெயர் கொண்ட சாமியாகிய பொன்னியம்ம்மன் கோவிலும் இடிபாடுகளுடன் உள்ளது. இங்கு வாழ்ந்தவர்கள்தான் இந்தப்பதிவில் வரும் முதலியார்கள்.இன்றும் பொன்னியம்மன் கோவிலுக்கு காணும் பொங்கல் அன்று செல்வார்கள், சில காலம் முன் வரை பொன்னியம்மனுக்கு படையல் எல்லாம் செய்திருக்கிறார்கள், சிதிலமடைந்த சிவன் கோவிலில் பெரும்பாலும் யாரும் வழிபடுவதில்லை.

காட்டாற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு உயிரிழப்புகளும்,கால்நடை இழப்புகளும் ஏற்பட்டதால், மிச்சமிருந்தவர்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கோனார்கள் சிலர் வசித்த மேடான இடத்திற்கு குடியேறியிருக்கிறார்கள் முதலியார்கள், மேலும் சில குழுக்கள் இடம்பெயர்ந்து பட்டுக்கோட்டை பகுதி நோக்கி சென்றுள்ளனர், இவர்களின் தற்போதைய கிராமம் திருநல்லூர், கிளாமங்களம், கரம்பயம் ஆகியவை, கிளாமங்களம் குஞ்சான் தெருவில் இன்றைய முதலிப்பட்டியில் அன்று இருந்த கோனார்கள் குடியேறி இருக்கிறார்களாம், குஞ்சான் தெருவில் உள்ளவர்கள் இன்றைக்கும் முதலிப்பட்டி கிராமத்தினருக்கு தங்கள் இருப்பிடத்தில் இருந்து விரட்டி விட்டதால் குடிக்க தண்ணீர் கொடுக்கமாட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது. ஆனால் முதலிப்பட்டியில் இருந்து செல்பவர்களிடம் எங்களுடைய பூர்வீகம் முதலிப்பட்டி என்று பொன்னாப்பூர், திருநல்லூர் பகுதி முதலியார்கள் சொல்வது கேள்விப்பட்டிருக்கிறேன்.

மன்னார்குடி பகுதி நோக்கி இடம் பெயர்ந்தவர்கள் பொன்னாப்பூர்,மூவரக்கோட்டை,பெருகவாழ்ந்தானிலும்,தஞ்சை நோக்கி இடம் பெயர்ந்தவர்கள் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள குளிச்சப்பட்டு, கருப்பமுதலியார்கோட்டை போன்ற கிராமங்களிலும், ஊருக்கு அருகே இடம் பெயர்ந்தவர்கள் ஈச்சங்கோட்டை மற்றும் குருங்குளம் பகுதிகளிலும் வாழ்கிறார்கள்.

தஞ்சைப்பகுதியில் இருப்பவர்கள் ,அதுவும் தஞ்சைக்கள்ளர் சாதியை சார்ந்தவர்களுக்கே பலருக்கு முதலியார் என்ற பட்டம் இருப்பது தெரியாது, என்னுடைய முந்திய பதிவின் மூலம் இவர்கள் பற்றி யாருக்கும் தெரியுமா என்று அறிய முயன்றேன்,எதிர்பார்த்தது போல் யாருக்கும் தெரியவில்லை.

இன்றைய அவிச்சிக்கோன்பட்டியில் வாழ்பவர்கள் பெரும்பாலும் செட்டியார்கள்,ஒரே ஒரு கோனார் குடும்பம்தான் உள்ளது.  முதலியார்கள் நகரமயமாக்கப்பட்ட சூழலில் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்துவிடும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் நாளைய முதலிப்பட்டியில் வேறு யாரோ இருக்கலாம்.

நாடோடி இலக்கியன் எழுதிய பதிவினை காணவில்லை, கிடைத்தவுடன் இணைப்பு தருகிறேன்.

Monday, July 16, 2012

தஞ்சை மாவட்ட முதலியார்கள், ஆனால் முதலியார் ஜாதி அல்லாதவர்கள்.


தஞ்சை மாவட்ட முதலியார்கள், ஆனால் முதலியார் ஜாதி அல்லாதவர்கள்,தஞ்சை குருங்குலம், சுந்தராம்பட்டி, குளிச்சப்பட்டு, வாகரைகோட்டை,ஒரத்தநாடு ஈச்சங்கோட்டை, மன்னார்குடி மூவரக்கோட்டை, பெருகவாழ்ந்தான், கீழ்க்கரம்பையம், நீடாமங்கலம்,திருவரங்கநல்லூர், பட்டுக்கோட்டை கிளாமங்கலம், பொன்னாப்பூர், திருநல்லூர் ,ஒரத்தநாடு முதலிப்பட்டி என்னும் ஊரில் வாழும் முதலியார்கள் யார்?

அம்மாப்பேட்டை கருப்பமுதலியார் கோட்டையிலும் வசிக்கிறார்கள் என்று நம்புகிறேன்.

இவர்களுக்கும் செங்குந்த முதலியார், ஆற்காடு முதலியார் மற்றைய முதலியார் சாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவர்களை பற்றிய பதிவு ஒன்று விரைவில் எனக்கு வாய் வழியாக தெரிந்த செய்தியினை வைத்து எழுதப்போகிறேன், மேற்கண்ட ஊர்களில் வசிக்கும் நபர்கள் யாரும் இருந்தால் kudukuduppai@gmail.com தொடர்பு கொண்டு அவர்கள் பற்றிய தகவல்கள் இருந்தால் தெரிவிக்கவும்.

சில ஊர்களின் தகவல்கள் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை.