பதிவர் சித்ரா என்பவரின் டைம் டாப் 100 ல் வந்த இந்தியர்கள் பதிவு படித்தவுடன் எழுத தோன்றிய பதிவு, சில வருடங்களுக்கு முன்னர் என்னுடைய இமெலுக்கு டைம் சப்ஸ்கிரிப்சன் இமெயில் வந்தது , இருபது டாலருக்கு வாரம் ஒரு டைம் அப்படின்னு டீல் இருந்துச்சு, நானும் இருபது டாலருக்கு வாரம் ஒரு வாட்ச் இலவசமா வருதே, இந்த வாட்சுகள இந்தியாவுக்கு போகும்போது சொந்தக்காரங்க , தெரிஞ்சவிங்க ஊர்க்காரங்களுக்கு கொடுத்து நாமும் வாட்ச் கொடுத்த வள்ளல்னு பேரு வாங்கலாம்னு முடிவு பண்ணி சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன், பாத்தா வாரா வாரம் இந்த இங்கிலிஸு புத்தகத்தை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க, தமிளு புத்தகமே விகடன் தாண்டி நமக்கு அறிவு கிடையாது, அதனால அன்னிலேந்து அத வாங்கி ரீசைக்கிள்ல போடறதோட சரி, திடீர்னு சிலவாரங்களுக்கு முன்னாடி கொஞ்சம் தடிச்ச டைம் புத்தகம் வந்துச்சு, சரி வாட்செல்லாம் அனுப்பிட்டாங்க போலன்னு பிரிச்சிப்பாத்தேன் என்னமோ டாப் 100ன்னு போட்டிருந்தான், அப்புறம், சித்ரா மேடம் பதிவில தமிழில் படிச்சி தெரிஞ்சிக்கிட்டேன்.
சரி இப்ப இன்னாத்துக்கு இந்தக்கதைன்னு உங்களுக்கு தோனலாம், வாராவாரம் சனிக்கிழமை இந்த டைம் புத்தகம் வரும், அத எடுக்க தபால் பெட்டிய திறந்தேன், உள்ள ஒரு புது பார்சல் இருந்துச்சு, சொரூபா பிந்தினிக்கு நசரேயனிடமிருந்து, பிரிச்சிப்பாத்தேன் ஒரு துண்டு இருந்துச்சி, இந்த உரல் , உலக்கை எதுக்கு சேலை, சுடிதார், மிடி போட்டாலும் துண்டு போடுவாருன்னு தெரியும், ஒரு பதிவுக்கு சும்மா பேரு மாத்தினதுக்கு இப்படி துண்டு பார்சல் பண்ணுவாருன்னு எதிர்பார்க்கல, சரி இவ்வளவு நாளா துண்டு போடுறாரே , இதுவரைக்குமா ஒன்னும் செட் ஆகலன்னு நானும் உங்கள மாதிரியே யோசிச்சிருக்கேன், ஏன் செட்டாகலங்கற காரணம் அந்தத்துண்ட பாத்தவுடன் தெரிஞ்சு போஞ்சு , அது கிலோ பத்து ரூபாய்க்கு வாங்கின பி.வாசு படத்தில ஹீரோ போட்டிருக்குற குற்றாலம் துண்டு. இனிமேலும் சொரூபா பிந்தினிக்கு அவர் துண்டு அனுப்பவேண்டாம் என்பதற்காகவே மீண்டும் நான் பெயர் மாற்றம் செய்துகொள்கிறேன்.
இப்போது இன்னொரு பதிவரின் நூத்துக்கு நூறு.
வணிக நோக்கில் நடத்தப்படும் கல்விக்கூடங்களின் பைத்தியக்காரத்தனம் உச்சத்தை எட்டியுள்ளது.
இன்றைய தினமணி செய்தித்தாளில் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி நடத்திய அட்டூழியம் வெளியாகி உள்ளது.
தனது பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள் முப்பதுபேரை மாற்றுச்சான்றிதழ் கொடுத்து வெளியேற்றியுள்ளது இந்தப்பள்ளி.
மாணவர்கள் செய்த தவறென்ன?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த 30 மாணவர்களும் தேர்ச்சிபெற வாய்ப்பில்லையாம்.
பத்தாம் வகுப்பு தேர்விற்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது.
ஓராண்டு காலத்தில் இந்த 30 மாணவர்களை தேர்ச்சிபெற வைக்க இயலவில்லை என்றால் இந்தப்பள்ளியில் வேறு என்னவேலை நடந்துகொண்டிருக்கிறது?
நூறுசதவீத தேர்ச்சி என்று மார்தட்டிக்கொள்ளவும், அதன்மூலம் பெற்றோரின் பணப்பையை தட்டிப்பறிக்கவும் துடிக்கின்றன இந்த தனியார் பள்ளிகள்.
இந்த லட்சணத்தில் அதிகாரிகளின் நெருக்குதல் வேறு.
ஒவ்வோர் ஆண்டும் நூறுசதவீத தேர்ச்சி காட்டும் பள்ளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தடை செய்யப்படவேண்டும்.
மாறாக, 90 சதவீதத்திற்குமேல் தேர்ச்சி காட்டும் பள்ளிகளுக்கு பொன்னாடை போர்த்தலாம்; விருது வழங்கலாம்; வேறு எதுவேண்டுமானாலும் செய்யலாம்.
போதுமான ஆசிரியர்களை கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே வழங்க அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை.
ஆனால் நூறுசதவீத தேர்ச்சிவேண்டும் என்று பள்ளித்தலைவர்களுக்கு நெருக்குதல் கொடுக்க மட்டும் இந்த அதிகாரிகள் அதிகாரம் படைத்தவர்கள்.
இதுபோன்ற வெட்கக்கேடான விஷயங்கள் வேறு எந்த நாட்டிலும் நடக்காது.
முதல் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்புவரை தன்னுடைய பள்ளியில் படித்த முப்பது மாணவர்களை கடுமையாக உழைத்து பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற வைக்க இயலவில்லை என்றால் இதுபோன்ற பள்ளிகள் இந்த நாட்டிற்குத்தேவைதானா?