Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Saturday, February 2, 2013

கதை மணிரத்தினம் கதை

கடல் படம் பின்வரும் பேட்டர்னில் வருகிறதா?

கதை 1: முதலில் பிடிக்கவில்லை, பிறகு பிடிக்கிறது, துணைக்கு ஆபத்து காப்பாற்றுகிறார்.


திரைக்கதை 1 – நாயகி கட்டாயத்தின் பேரில் ஒருவனை மணக்கிறார். பழைய நினைவுகள் மனதில் இருப்பதால் கணவனோடு ஒட்டவில்லை, டெல்லி செல்கிறார், பின்னர் கணவனை புரிந்து கொஞ்சம் கொஞ்சமாக லவ்வுகிறார்.இதனிடையே கணவனை குண்டர்கள் கடதிக்கொண்டு சென்றுவிடுகின்றனர், அவரை மீட்க போராடுகிறாள் இந்த மனைவி.

இந்த கதை, கொஞ்சமா வசனம், டெல்லி பின்னனி , நேர்மை, குண்டர்கள், இளையராஜவின் இசை எல்லாம் சேர்ந்து மவுனராகம் ஆனது.


திரைக்கதை 2 – நாயகி கட்டாயத்தின் பேரில் அக்காவை பெண் பார்க்க வருபவரை மணந்து கொள்கிறார். நாயகிக்கு கணவனை ஆரம்பத்தில் பிடிக்கவில்லை.கணவனோடு காஷ்மீர் செல்கிறார். உண்மை தெரிந்து கணவனை புரிந்து லவ்வுகிறார். இதனிடையே கணவனை தீவிரவாதிகள் கடதிக்கொண்டு சென்றுவிடுகின்றனர், அவரை மீட்க போராடுகிறாள் இந்த மனைவி.

இந்த கதை, கொஞ்சமா வசனம், காஷ்மீர் பின்னனி , தீவிரவாதம், தேசப்பற்று, ரகுமானின் இசை எல்லாம் சேர்ந்து ரோஜா வானது.


திரைக்கதை 3 : இந்த படத்தையும் சற்றே மாற்றிய கதையின் மூலம் இந்த template ல் கொண்டு வரலாம். நாயகி பிடித்து திருமணம் செய்து கொள்கிறார்,பின்னர் பிடிக்காமல் போகிறது, உண்மை தெரிந்து கணவனை புரிந்து லவ்வுகிறார். அதற்குள் விபத்தில் சிக்குகிறார்.இங்கே ஒரு மாறுதலாக கணவன், மனைவியை காப்பாற்ற போராடுகிறார். இன்னொரு மாற்றம் குண்டர், தீவிரவாதிகளுக்கு பதிலாக குஷ்பு,அரவிந்தசாமி.

இந்த கதை, கொஞ்சமா வசனம், சென்னை பின்னனி , மென்பொருள், மிடில் கிளாஸ், ரகுமானின் இசை எல்லாம் சேர்ந்து அலைபாயுதே வானது.

கதை 2: ஒரு நல்ல மனசு கொண்ட தாதா, அவர் என்ன சொன்னாலும் நிறைவேற்றும் ஒரு அடியாள் நண்பர்.

திரைக்கதை 1 : ஒரு நல்ல மனசு உள்ள தாதா நாலு பேரு நல்லா இருக்க கடத்தல் அதன் மூலம் வரும் பிரச்சினைகளுக்கு அடிதடி மூலம் பதில். இந்த தாதா என்ன சொன்னாலும் நிறைவேற்ற அவரின் தளபதி யாக வரும் ஜனகராஜ் நிறைவேற்றுகிறார். இந்த தாதாவை கைது செய்ய அவரின் போலிஸ் ஆபிசர் மருமகன் நாசர் மெனக்கடுகிறார். தாதாவின் மகள் தந்தையை நினைத்து கவலைப்படுவார்.

இந்த கதை, கொஞ்சமா வசனம், பம்பாய் குடிசை வாழ்க்கை பின்னனி, இளையராஜவின் இசை எல்லாம் சேர்ந்து நாயகன் ஆனது.

திரைக்கதை 2: ஒரு நல்ல மனசு உள்ள தாதா அவரின் அல்லக்கை ஒருவரையே கொண்ற ஒருவரை காப்பாற்ற, அவர் , தாதாவின் தளபதி ஆகிறார். இந்த தாதா என்ன சொன்னாலும் நிறைவேற்ற அவரின் தளபதி யாக வரும் ரஜினி நிறைவேற்றுகிறார். தாதாவை கைது செய்ய அவரின் கலெக்டர் தம்பி அரவிந்தசாமி மெனக்கடுகிறார். தாதாவின் அம்மா மூத்த மகனை நினைத்து கவலைப்படுவார். கிளைக்கதையாக ஷோபனா, ரஜினி காதல்,ஷோபனா, அரவிந்தசாமி திருமணம் , ஷோபனா கணவன் தன் காதலால் காப்பாற்றப்படுவதை கதை 1 னோடு நீங்கள் ஒப்பிட்டால் அதற்கு குடுகுடுப்பை பொறுப்பல்ல.

இந்த கதை, கொஞ்சமா வசனம், சென்னை வாழ்க்கை பின்னனி, இலவச இணைப்பாக மகாபாரத உணர்வு, இளையராஜவின் இசை எல்லாம் சேர்ந்து தளபதி ஆனது.

காமெடி, டூயட்,இருட்டு,வெளிச்சம் எல்லாம் சேர்த்துக்கொள்ளுங்கள், பதிவில் எல்லாம் என்னால் அதை கொண்டு வர முடியாது.

இப்படியெல்லாம் சொன்னா அப்புறம் எப்படி தான் படம் எடுக்கிறது அப்படினு எல்லாம் எங்கிட்ட கேக்கக்கூடாது.

“முடியாது,கமெண்ட் போட முடியாது” அப்படியெல்லாம் சொல்லப்படாது
டிஸ்கி1 : முதல் இரண்டு திரைக்கதையும் நான் , ஜாம்பஜாரில் வாடை பிடித்துகொண்டிருந்தபோது கிடைத்த வாடை.

டிஸ்கி2 : 5 படங்களும் எனக்கு பிடித்து இருந்தது.

Wednesday, April 15, 2009

பாகம் 2:வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்.

பாகம் 1

வீட்டுக்காரம்மா: இந்த மனுசனுக்கு வாக்கப்பட்டு காலம் பூரா பேச்சு வாங்கியே என் ஆயிசு ஓடிருச்சு.

முருகன்: சரி அத்தோட விடுங்க..
-----


விநாயகம்: பட்டைகிட்ட செங்கல்லுக்கு பேசிட்டேன், நீயும் முருகனுமா போய் ஏத்திட்டு வாங்க.

பரமன்: முருகன் சின்னப்பைய அவனும் நானும் போதுமா, வைத்திய வேணும்னா கூப்புட்டுக்கலாமா?

முருகன்: வேண்டாம்பா எனக்கு 15 வயசு ஆயிடுச்சு, நான் செங்கல் வண்டில ஏத்துறேன். நீயும் வைத்தியும் வந்தா அப்புரம் உங்க ரெண்டு பேரையும் வண்டில ஏத்தனும்.

--

செங்கல் ஏற்றிக்கொண்டு வீட்டில் வந்து சேர்ந்தனர்.

விநாயகம்: என்னய்யா இது செங்கல்லு, உடைஞ்ச கல்லா இருக்கு, பாத்து வாங்கறதில்லை, அவந்தான் சின்னப்பையன் ஒன்னும் தெரியாது உனக்கு எங்க போச்சு அறிவு.

பரமன்: அவன் ஏத்திக்க சொன்னத தான் நாங்க ஏத்துனோம் ,நீ இதத்தான் வாங்கினேன்னு சொன்னான்

--
விநாயகம்: யோவ் பட்டை உங்கிட்ட வீடு கட்ட செங்கல் கேட்டனா இல்ல பல்லு விளக்க செங்கல் கேட்டேனா? நீ அனுப்பிருக்க செங்கல்லுல பல்லுதான் விளக்கமுடியும்.

பட்டை: இல்லடா தம்பி, லேசா கார்னர்தானடா உடைஞ்சிருக்கும். அத வெச்சு நல்லா வீடு கட்டலாம்டா நல்லா சுட்ட செங்கல்லுடா?

விநாயகம்: நீயெல்லாம் ஏன்யா பெரிய மனுசன்னு வேட்டிய கட்டிட்டு அலையுற? மரியாதையா காச திருப்பிக்கொடுத்துட்டு உன் கல்லை வந்து ஏத்திட்டு போயிரு, அதுல பல்லு விளக்குவியோ வீடு கட்டுவியோ உன் இஷ்டம். காசு திருப்பிக்கொடுக்கலைன்னா நடக்கிறதே வேற.

பட்டை: என்னடா இது பெரிய மனுசன்னு பாக்காம மரியாதை கெட்டத்தனமா பேசுற?

விநாயகம் : நாலு பேர அழைச்சிட்டு வா,நீ வித்த செங்கல்ல காட்டுவோம்.

பட்டை: இந்தாப்பா உன்காசு, நான் நாலு இடத்துல வட்டிக்கு விட்டு பொழப்பு நடத்துறவன் என் பொழப்புல மண்ணல்லி போட்டுறதா.

விநாயகம்: சரி சரி மறக்காம அந்த செம்மண்ண திருப்பி ஏத்திட்டு போயிரு.

----

விநாயகம்: யப்பா சிப்பினாம்பட்டில வேப்பமரம் மலிவா கிடைச்சது, கணேசன் கிட்ட கடன் வாங்கி அந்த மரத்தை வாங்கிட்டேன். நீ முத்தையன் ஆசாரிய அழைச்சிட்டு போய் அத உத்திரத்துக்கும் ஓடு போடறதுக்கு சட்டமும் மத்த வேலைக்குமா கரம்பக்குடி மில்லுல அறுத்து எடுத்துட்டு வாங்க. லாரிக்கு கரம்பக்குடில சொல்லிருக்கேன்.

பரமன்: சரிடா நான் பாத்துக்கறேன்.

--

புதிய இடத்தில் செங்கல் வாங்கி, சிமெண்ட் வாங்கி வீடு கட்டுதல் நல்ல முன்னேற்றம் அடைந்த நிலையில்.

குமரன்: டேய் எவண்டா இங்க கொத்தன், என் பொண்டாண்டி இங்கே சித்தாளா வேலை பாத்தா நீ மரியாதையா பேசாம முறைகேடா பேசிட்டிருக்க. எப்ப பாத்தாலும் தூக்கு இறக்குன்னு பேசிட்டிருக்க. அவள திமிராட உனக்கு பிழைக்க வந்த நாயே.

சித்தாள்: இந்தாய்யா குடிச்சிட்டு சும்மா பேசமா அந்தப்பக்கம் போ.

கொத்தனார்: யோவ் இங்க சாந்து சட்டிய தூக்கு, இறக்குன்னுதான்யா சொல்லியாகனும், அப்புறம் எப்படிய்யா சொல்றது? பொண்டாட்டிய வேலைக்கு அனுப்பிச்சிட்டு வெட்டியா குடிச்சிக்கிட்டு வீண் வம்புக்கு ஏன்யா அலையுற, வேணும்னா நீயும் வந்து மம்மட்டி ஆளா வேலையப்பாரு.

குமரன்: யாரப்பாத்து என்ன பேசுற ,அதுவும் என் ஊர்ல வந்து, டேய் விநாயகம் இந்த நாயை அடிச்சி வெரட்டு, இல்லன்னா நீ எப்படி வீடு கட்டறேன்னு பாக்கிறேன்.

கொத்தனார்: யப்பா விநாயகம் இவன் தொல்லை தாங்க முடியல இவன் என் பேரக்கெடுத்துருவான், நீ வேற ஆள் வெச்சு வீடக்கட்டிக்கப்பா, உன் ஊரு பக்கமே நான் இனிமே தலை வெச்சு படுக்கமாட்டேன்.


சித்தாள்: குடிக்குறதும் இல்லாம என் பொழப்ப வேற கெடுத்துப்புட்டான் இந்தப்படுபாவி.

விநாயகம்: என்னடா ஓடு போடவேண்டிய நேரம் வந்தாச்சு, கொத்தனார் வேற விட்டுட்டு போயிட்டார், இப்ப என்ன பண்றது,சான் ஏறுனா முழம் சறுக்குது.

முருகன்: நம்மூரு அம்பேத்கார் இப்ப கொத்தனார் வேலை பாக்கிறாப்ல நல்லாதான் பண்றாரு அவர வெச்சு வேலையை முடிப்போம்.

பரமன்: கீழ் சாதிக்காரப்பயல வெச்சு வீடு கட்ட சொல்லுறியா நீ?

விநாயகம்: பெரிசா வந்துட்ட நீ வேற கீழ்சாதி மேல்சாதின்னு,குடிக்கறப்ப மட்டும்தான் அது உனக்கு தெரியாது, சரிடா தம்பி நீ அம்பேத்கார கூட்டிட்டு வா நம்ம வேலைய ஆரம்பிப்போம்..

----------
முத்தையன் ஆசாரி: அந்த கொத்தனார் சைடு சுவர ரொம்ப பெரிசா கட்டிட்டாருப்பா, அத இடிக்கனும் உத்திரத்திலேந்து குத்துச்சட்டம் இவ்வளவு உயரந்தான் கணக்கு ஆனா சுவரு உயரமா இருக்கு, இடிக்கனும்.

அம்பேத்கார்: இல்லண்ணே சுவர் இவ்ளோ உயரம் இருந்தாதான் ஓட்டு வீட்டுக்கு நல்லது, நீங்க குத்துச்சட்டம் பெரிசா பண்ணிருக்கனும் இல்லண்ணா வீடு பந்தல் மாதிரி ஆயிரும் அப்புரம் ஒழுகும்.

முத்தையன் ஆசாரி: தம்பி நீ தொழிலுக்கு புதுசு சின்னப்பய ,நான் பல காலமா தொழில்ல இருக்கேன், எனக்கு நீ புத்திமதி சொல்லவேண்டாம்.

அம்பேத்கார்:உங்களுக்கும் இதுதானே முதல் வீடு கட்டுற அனுபவம் , நான் நிறைய கவர்மெண்ட் குவாட்டர்ஸ்,டவுண்ல நிறைய வீட்ல வேல பாத்திருக்கேன். நீங்க பெஞ்சு,நாற்காலி நல்லா செய்வீரூ, ஆனா வீட்டு அனுபவம் உங்களுக்கு பத்தாது.

விநாயகம்: யோவ் என்னய்யா ஆசாரி கூட்டிட்டு வந்திருக்க, இது வரைக்கும் வீடே கட்டினதில்லையாம், எனக்கும் இதுதான் முத வீடு அந்தாளுக்கும் இதுதான் முத வீடாம்.

பரமன்: என்ன என்னடா பண்ண சொல்றா சாராயக்கடைல பேமசா பேசிக்கிட்டாங்க அதான்.

அம்பேத்கார்: என்னாட விநாயகம் என்கிட்ட முன்னாடியே சொல்லிருக்க கூடாதா, சாதி பாத்துதானடா நீயும் என்னைக்கூப்புடல.

விநாயகம்: நீ வேறடா , நீ கொத்தனார் வேலை பாக்கிறத முருகன் சொல்லிதான் எனக்கு தெரியும், நீ டவுண்ல வேலை பாத்திட்டு அங்கேயே இருக்கே , எனக்கு தெரியாம போச்சுடா. இப்பவே செலவு தலைக்கு மேல ஆயிருச்சு.

அம்பேத்கார்: இதெல்லாம் ஒரு சிரமமாடா நாங்க படற சிரமத்தோட. விடுறா எல்லாம் நல்லா நடக்கும்.

----

ஒருவழியா ஓடு போடும் நாள் வந்தது..

முத்தையன் : என்ன மருமவனே அந்த சட்டத்தை நல்லா அடிச்சிட்டிங்களா?

சிவக்குமார்: அடிச்சிட்டேன் மாமா. ஆனா வெச்சு பாத்தா ஓடு ஒன்னுமேல ஒன்னு ஏறி வருது.

விநாயகம் : என்னய்யா சொல்ற உனக்கும் வீட்டு வேலை தெரியாதா?

சிவக்குமார்: தம்பி நான் கொல்ல ஆசாரி இரும்பு வேலை பாக்கிற ஆள், வேலை இல்லாம இருந்தேன் மாமா கூப்பிட்டாருன்னு வந்தேன்.

விநாயகம் : யோவ் உன் குடும்பத்துக்கு வேலை கொடுக்கவாய்யா நான் வீடு கட்டறேன். இப்ப என்னய்யா பண்றது. எல்லா சட்டத்தையும் பிரிச்சுதான் அடிக்கனுமா?

முத்தையன் : ஊரு நாட்டுல நடக்காததயா நான் பண்ணேன். சொந்தக்காரங்களுக்கு நாம செய்யலண்ணா வேற யாரு செய்யுறது.பிரிச்செல்லாம் அடிக்கவேணாம், ஓடு நெறுக்கு வாட்டில போட்டா ஒழுகாது, இப்படியே போட்டிருவோம்.

அம்பேத்கார்: ஓடு சரியா அந்த காடில பிட் ஆகலண்ணா, ஓட்டு மேல ஏறி நடந்த உடையும்னே.

முத்தையன் : அதெல்லாம் உடையாது, இப்ப பிரிச்சு அடிச்சா நிறைய சட்டம் வீணாப்பொயிரும், ஓடு போடுற வேலைய பாப்போம்.

---

ஒரு வழியாக வீடு கட்டி முடிச்சாச்சு கொத்தனார் அம்பேத்கார் நல்லமுறையில் வீட்டிற்குள், தளம் பூச்செல்லாம் பூசி முடித்தவுடன் அவரிடம் மெதுவாக சென்ற பரமன். தம்பி கிரஹப்பிரவேசம் முடிஞ்சதுக்கப்புறம் நீ வீட்டிக்குள்ள வரக்கூடாதென்றார்.

விநாயகம்: போய்யா உன் வேலையப்பாரு? நீ வாடா அம்பேத். இந்தாளுக்கு வேற பொழப்பு இல்லை, நீயே மதம் மாறி வந்தா உன்னோட உக்காந்து பாரின் சரக்கடிப்பான். இப்ப நம்ம போய் ஒரு 90 அடிச்சிட்டு வருவோம் வா.

அம்பேத்: இல்லடா நான் அய்யப்பன் கோவிலுக்கு மாலை போடப்போறேன் எனக்கு வேண்டாம்.


ஒரு வழியாக நல்ல படியாக வீடு கட்டி விநாயகத்திற்கு கல்யாணமும் இனிமையாக விமரிசையாக நடந்தது, முருகனும் கல்யாணத்துக்கு வந்த சின்னப்பெண்களையெல்லாம் தனக்காக இப்போதே பெண் பார்த்து வைத்திருந்தான்.
----------------------------------

விநாயகம் மனைவி : ஏங்க இந்த வீடு சின்னதா இருக்கு எங்க அண்ணன் வீடு மாதிரி பெரிய வீடு கட்டி தனியா போயிரலாமா?

விநாயகம்:அம்பேத் நீதாண்டா என்னைக்காப்பாத்தனும்..

இப்போது இந்தக்கதையின் தலைப்பு மாறுகிறது : கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக்கட்டிப்பார்.

உங்க பொன்னான கருத்தை சொல்லுங்க

Tuesday, April 14, 2009

வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்.

பரமசிவம் : என்னடா முருகா நாந்தான் என் காலத்தில வீடு கட்ட முடியல எங்கப்பன் கட்டுன பழைய வீட்டிலேயே காலத்த தள்ளிட்டேன், நீ இப்போ புதுசா ஒரு வீடு கட்டுடா கடைசி காலத்துல ஒரு நல்ல வீட்ல இருந்துட்டு போறேன்.

விநாயகம்: நீ சம்பாதிச்சு என்ன பண்ண எல்லாத்தையும் குடிச்சே அழிச்ச,இப்பவாச்சும் குடிக்க காசு கேட்காம வீடு கட்ட சொன்னியே அதுக்கு உனக்கு ஒரு பாட்டில் வாங்கி கொடுக்கலாம்பா.

பரமன்: நீங்க பாட்டில் வாங்கித்தருவியன்னுதான் நாங்க நாக்க தொங்க போட்டுட்டு அலையுரோம், நான் குடிக்கிறது எப்படின்னு எனக்குத்தெரியும் நீ உன் வேலையபாருடா.

விநாயகம்: சரி நான் வீடு கட்டுற வேலை ஆரம்பிச்சிட்டேன், நம்ம ஆண்டிப்பட்டி கொத்தனார் வருவார் அவர் அளந்து கோடு போட்டு சொல்ற இடத்துல நீனும் முருகனுமா விடவு பறிங்க. அப்படியே போய் இரண்டு கிலோ மீன் வாங்கிட்டு வந்து அம்மா கிட்ட கொடுத்திரு,இன்னைக்கு கொத்தனாருக்கு நம்ம வீட்லதான் சாப்பாடு.

பரமன்: சரிடா செஞ்சிடறேன், அப்படியே ஒரு அம்பது ரூபாய் கூடகொடு.

விநாயகம்: உன்னையெல்லாம் திருத்தமுடியாது, நான் போய் பட்டைகிட்ட செங்கல் கேட்டிருக்கேன், பேசிட்டு வரேன்.

பரமன்: ஆண்டிப்பட்டி கொத்தன் நல்லா கட்டுவானா? ஆசாரி முத்தையன வெச்சுக்கலாம், அவனும் அவன் மவனுந்தான் இப்ப ஊர் காட்டுல உள்ள பத்தாயத்திலேர்ந்து, பெஞ்சு,நாற்காலியெல்லாம் செய்யிறாங்க ரொம்ப பேமசா பேசிக்கிறாங்க.

விநாயகம்: சரி அவரையே கூப்பிட்டுக்கலாம், கொத்து ஆண்டிப்பட்டியார் நல்லா பண்ணுவாரு அவரையே வெச்சுக்குவோம்.
--

சாப்பாடு நேரம், மீன் குழம்புடன் கொத்தனார், ஆசாரி புடைசூழ சாப்பாடு.

விநாயகம்: என்ன சாப்பாடு நல்லா இருக்கா?

ஆசாரி முத்தையன் : பிரமாதம்.

முருகன் : (ஆசாரி முத்தையன் மகன் ரமேசை சாப்பிட அழைக்கிறார்).நீங்களும் உட்காருங்க.

ரமேஷ் : இல்ல நான் வெளி இடத்தில சாப்பிட மாட்டேன்.வீட்ல சாப்பிட்டு வந்துட்டேன்

முத்தையன்: என்ன பழக்கமோ போ, நம்ம தொழில்ல நாலு இடத்திற்கு போயிதான் ஆகனும் , கை நெனச்சுதான் ஆகனும் பட்டினியாவா வேலை செய்ய முடியும். சரி என்ன சாப்பிட்ட.

ரமேஷ்: சாம்பார் சாப்பாடும்,காலி பிளவர் கூட்டும்.

முத்தையன் : காளி பிளவரோ , யோக்கியன் பிளவரோ வயித்துக்கு வஞ்சனை பண்ணாம சாப்பிட்டா சரி.

பரமன்: என்னதான் குழம்பு வைக்கிறாளோ உங்கம்மா, உப்பு உறைப்பு இல்லாம சப்புன்னு கெடக்கு.

விநாயகம் : டேய் முருகா அந்தாளுக்கு வைத்தி வீட்லேந்து கொஞ்சம் மீன் குழம்பு வாங்கி கொண்டாந்து கொடுறா?

முருகன்: இந்தாப்பா வைத்தி வீட்டு மீன் குழம்பு உனக்கு ஏத்த மாதிரி கார சாரமா இருக்கும்.

பரமன் : இது நல்லா ருசியா இருக்குடா,?

முருகன்: நம்ம வீட்டு மீன் குழம்புதான் அதுல ஒரு டம்ளர் தண்ணி ஊத்தி கொடுத்தேன் அத நல்லாயிருக்குன்னு சொல்ற நீ. உன்னையெல்லாம் என்ன பண்றது.

தொடரும்..

குடுகுடுப்பை: பாகம் 2:வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்.

Monday, December 22, 2008

முருங்கை மரமும் பசுமாடும் நொண்டியும்

அது ஒரு சராசரி விவசாயக்குடும்பம், வீட்டு வாசலில் கத்தரிக்காய்,சுண்டைக்காய், வேப்பமரம் எல்லாம் வளர்த்தார்கள், எல்லாமே ஓரளவிற்கு அந்தந்த காலத்தில் பயன் தந்தபடி இருந்தது, வேப்பமரம் இலையுதிர்காலம் தவிர மற்ற நாட்களில் நிழல் தந்தபடி இருந்தது, அனைத்து காலங்களில் வீட்டில் வசிப்பவர்கள், விருந்தாடிகள்,பக்கத்து வீட்டுக்கு காரர்களுக்கு பல் விளக்கவும் உதவியதால் கல்லாக்கோட்டையான் கடையில் கோல்டேஜ்(கோல்கேட்டின் டூப்ளிகேட்) பேஸ்ட் வியாபாரத்தை குறைத்தது.

இதற்கிடையில் புதுமாதிரி விவசாயங்களில் நம்பிக்கை உள்ள அந்த வீட்டு விவசாயி எங்கேயோ கிடைத்த ஒரு முருங்கை விதையை வாங்கி வந்தார், வழக்கமாக முருங்கைக்கு போத்துதானே வெட்டி நடுவார்கள், இது என்னடா புது மாதிரியாக விதை, அதுக்கு பெயர் ஏதோ செடி முருங்கையாம், விதை விருட்சமாகி நன்றாக வளர்ந்தது, செடி முருங்கை என்ற பெயர் இருந்தாலும் நல்ல மரமாகவே வளர்ந்தது.பூக்கள் பூக்க ஆரம்பித்ததது.

காய்கள் இன்னும் சில நாட்களில் வந்து விடும் என்ற நிலையில் வேப்ப மரத்தில் கட்டப்பட்டிருந்த செல்லமாக வளர்க்கும் பசு மாடு கயிரை அறுத்துக்கொண்டு முருங்கை மரத்தின் கீரையை சாப்பிடும் எண்ணத்தில் மரத்தின் ஒரு கிளையை இழுக்க, கால் எப்படியோ முருங்கை மரத்தின் அடிப்பகுதியில் மாட்டிக்கொண்டது, இதனைப்பார்த்த வீட்டுக்கார அம்மா பதட்டத்தில் ஓடி வந்து விழுந்ததில் கீழே விழுந்து முதுகெலும்பில் அடிபட்டது,பசு காலை எடுக்கும் முயற்சியில் முருங்கை மரம் உடைந்து விழுந்தது, பசுவிற்கும் நல்ல அடி இடுப்புபகுதியில் அடிபட்டது .ஒரே விபத்தில் முருங்கையும் பசுவும் நொண்டியாகிப்போனது, வீட்டுக்கார அம்மாவிற்கு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்தே நடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

நாட்கள் கடந்தது முருங்கை மரம் மீண்டும வளர ஆரம்பித்தது ஒரு மாதிரி நொண்டி மரமாக, ஊராரே பொறாமை படும் அளவுக்கு காய்க்க ஆரம்பித்தது, பசு மாடும் நொண்டியாக இருந்தாலும் கன்றுகள் ஈன்று பால் கொடுக்க ஆரம்பித்தது, வீட்டுக்கார அம்மாவும் முதுகுவலியிலும் அந்த மாட்டில் பால் கறந்து வீட்டு உபயோகத்திற்கு பயன்பட்டது போக மீதியை விற்று மாட்டுக்கு தீவணம் வாங்குவதற்கு பயன்படுத்திக்கொண்டார்.

முருங்கை மரம் நன்றாக காய்ப்பதை பார்த்த வீட்டுக்காரர், மகிழ்ச்சியில் விதைக்காக சில முருக்கைக்காய்களை பரிக்காமல் விட்டுவைத்தார், அதில் வந்த விதைகளை எடுத்துப்போய் தன் வயலில் இருக்கும் போர்வெல் பகுதியில் சிலவற்றை விதைத்து வைத்தார்.போர்வெல்லுக்கு எதிரில் வசித்த சேகரும் சில விதைகளை வாங்கி அவர் வீட்டு தோட்டத்தில் போட்டு வைத்தார்.

போர்வெல்லில் போட்ட முருங்கை ஒன்றும் வளரவில்லை,ஆனால் சேகர் வீட்டு முருங்கைமரம் நன்றாக வளர்ந்தது, ஆனால் காய்க்கவே இல்லை, சேகருக்கு காரணம் புரியவில்லை, நன்றாக காய்க்கும் நொண்டி மரமும் ரோட்டு ஓரம்தான் இருக்கு அதில் எடுத்த விதையில் வளர்ந்த இந்த மரமும் ரோட்டு ஓரம்தான் இருக்கு ரோட்டோர முருங்கை நல்லா காய்க்கும்னு சொல்வாங்களே, ஒருவேளை நொண்டியாக்குனா காய்க்குமோ என்ற குழப்பத்தில் சேகர்.

இதற்கிடையில் நொண்டி மரம் பக்கத்தில் இருந்த கொய்யா மரத்தில் நிறைய கொய்யா காய்த்திருந்தது, அதனைப்பறிக்க நொண்டி மரத்து வீட்டுப்பையன் முருங்கை மரத்தின் மீது ஏறி கொய்யா பறிக்க முயன்றான், கொய்யா பறிக்க அவன் கையை மேலே நீட்டியபோது அந்த மரத்தின் ஊடே சென்று கொண்டிருந்த ஒரு வீட்டின் எலெக்ட்ரிக் வயரில் பட்டு சாக் அடித்து கதறினான் அவன்..........இப்போது முருங்கை மரம் மேலும் ஒருமுறை நொண்டியாகி அவனை காப்பாற்றியது.

சில வருடங்களுக்கு பிறகு அவன் வெளியூர் சென்றான்,வேலை பார்த்தான், தன் வாழ்க்கையில் அவன் எதிர்பார்க்காத சம்பவங்கள் நடந்தது,இந்த சம்பவங்கள் அவனை முடக்கிப்போட்டது, பிடிக்காதவர்கள், ஊரார்கள் எள்ளல் பேசுவார்களே என எண்ணி நொந்து போனான்,மனதால் சோர்ந்து போனான்.

இப்போது ஊர் நோக்கி பல வருடங்களுக்கு அப்புரம் வந்து பார்த்தான் அந்த முருங்கை மரம் இன்னும் காய்த்து பலன் கொடுத்தபடியே இருந்தது, வேப்பமரத்தில் கட்டியிருந்த நொண்டிப்பசுமாடு எட்டாவது கன்றை ஈன்று பால் கொடுத்தபடியே இருந்தது, தேவையில்லாமல் உழைத்தாலும் அவன் அம்மா இடுப்பு வலியை பொருட்படுத்தாது உழைத்தபடிதான் இருந்தாள். ஊனமாக உள்ள இவைகள் எதுவுமே தன்னை ஊனமாக கருதாமல் தத்தம் வேலைகளை செய்தபடி இருந்தது கண்டான், தம் மனதில் உள்ள குழப்பங்கள் தெளிந்தான் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களால் மனதில் ஏற்பட்ட ஊனத்தை தூக்கி எறிந்து விட்டு தனது வெற்றிப்பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

கதை மாதிரி ஒன்னு எழுதியிருக்கேன், பிடிச்சிருந்தா கருத்து சொல்லுங்க, ஓட்டளியுங்கள்

Friday, December 5, 2008

சின்ன கணக்கப்பிள்ளையின் தீர்ப்பு.

கிராமக் கூட்டம் அனைவரும் வந்து நம்ம ஊருக்கு என்ன தேவைன்னு சொல்லுங்க, துனைத்தலைவர் கேட்டவுடன், ஒட்டு மொத்த மக்களும் பெரும்பாலும் பக்கத்து ஊர்ல பாருங்க சுடுகாட்டுக்கு ரோடு போட்டிருக்காங்க நம்ம ஊரு சுடுகாட்டுக்கு ரோடே கிடையாது, யாரும் செத்தா வயக்காட்டு வழியா தண்ணிலதான் தூக்கிட்டு போகவேண்டியதா இருக்கு.

துனைதலைவரும் ஆமாம் நீங்க சொல்ரதும் சரிதான், இதே பஞ்சாயத்துல உள்ள பெரிய ஊருக்கெல்லாம் சுடுகாட்டுக்கு ரோடு இருக்கு நமக்குதான் இல்லை.இதுக்கு ஒரு கண்டுபிடிக்கனும். தலைவருகிட்ட சொல்லி இந்த வருசம் நம்மூருக்கான பட்ஜெட்ல ரோடு போட சொல்லிருவோம்.

அந்த சமயம் பாத்து மாமானார் வீட்டோட வீட்டோட மாப்பிள்ளையா இருக்கிற சின்ன கணக்கப்பிள்ளை வந்தாரு, உடனெ துனைத்தலைவரு சுடுகாட்டுக்கு ரோடு போடப்போர விசயத்தை பெருமையா சொன்னாரு.

எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட சின்னக்கணக்கப்பிள்ளை , சரி நம்ம ஊருல மொத்தம் எத்தனை பேரு , 200 பேரு இருப்போமா, அதுல ஒரு 50 பேரு படிக்கிற குழந்தைங்க ஒரு பள்ளிக்கூடம் கேக்கலாமே.

இல்ல பள்ளிக்கூடம் அடுத்த மாவட்டத்து ஊரா இருந்தாலும் 100 அடில இருக்கே?

சரி நியாயந்தான் பள்ளிக்கூடம் வேண்டாம். குடிக்க தண்ணிக்கு என்ன பண்றீங்க?

பக்கத்துல உள்ள கேணிகள்ல எடுத்துக்கரோம், இல்லாட்டி அந்த ஊருல குடிநீர் குழாய்ல எடுத்துக்கரோம். அவங்களும் பெருந்தன்மையா குடுக்குராங்க.

சரி இப்போ தினமும் அடுத்த ஊரு பெருந்தன்மைல தண்ணி தினமும் தேவையான தண்ணிய எடுக்கறீங்க,அவங்களோட தேவைகள் அதிகரிச்சா ஒருநாள் கொடுக்க மாட்டாங்க, தண்ணீல உரிமை உள்ளவனுக்கு அடுத்த மாநிலத்து காரன் சட்டம் போட்டு கொடுக்க சொன்னா கூட கொடுக்க மாட்டேங்கிரான், உங்களுக்கு அந்த தண்ணில உரிமையே இல்ல கொடுக்க மாட்டேன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க,இப்ப உள்ள பணத்தை வெச்சு ஒரு தண்ணீர் தொட்டி கட்டி குழாய் மூலம் சுகாதாராம தண்ணீர் தினமும் குடிக்கலாமே?அத விட்டுப்புட்டு இருக்கர 200 பேருல அஞ்சு வருசத்துக்கு ஒருத்தன் தான் சாவுரான் அத தூக்கிட்டு போரதுக்கு ரோடு கேக்கரீங்க. பணத்தை எப்படி சரியா பயன்படுத்தனும்னு தெரிய வேண்டாம?

இப்பயும் கூட சிலர் நீங்க வேற ஊருக்கு போயிட்டீங்க உங்களுக்கு எங்க சிரமம் புரியாது? சும்மா வம்பு இழுத்து உடாதீங்க அப்படின்னு திட்டவும் சின்ன கணக்கப்பிள்ளை உங்களையெல்லாம் திருத்த முடியாதுன்னு அந்த இடத்தை விட்டு கிளம்பினார்.

Thursday, September 11, 2008

நாட்டாமை கேட்ட தீர்ப்பு -குறுங்கதை

1984 ம் வருடத்தில் ஒரு நாள், 80 வயதான நாட்டாமை கணேசன் வழக்கம் போல பாலத்து சீனி பிள்ளை டீக்கடையில் வழக்கமாக சாப்பிடும் போண்டா மற்றும் டீ சாப்பிட்டு, கைத்தடியின் உதவியுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.


கணேசன் நாட்டாமை வீட்டில் வேலை பார்க்கும் மாயாவு, நாட்டாமையின் மகனின் சைக்கிளில் வயலுக்கு தேவையான உர மூட்டையை ஏற்றிக்கொண்டு நடவு ஆள் வருவதற்கு முன் அடி உரம் போடும் அவசரத்தில் வேகமாக சைக்கிளை மிதித்தார்.

முன்னால் செல்லும் பெரியவர் நாட்டாமை என்பதை கவனிக்காமல், சைக்கிள் பெல்லை அடித்தார் வழி விடக்கோரி.


வழிவிட்ட படியே திரும்பி பார்த்த நாட்டாமை, கீழ்சாதிக்கார மாயாவு தனக்கு பெல் அடித்து வழி கேட்டதை தாங்காது அதிர்ச்சியடைந்தவர், கோபத்துடன் டேய் கீழ்சாதிக்காரப்பயளே யாரப்பாத்து கினிகினின்னு மணி அடிக்கறே, அதுவும் என் மவன் சைக்கிள வெச்சே. அடிக்கவும் தன் கைத்தடியை ஓங்கினார்.

மாயாவு உடனே அய்யா சாமி நீங்கன்னு தெரியாம மணி அடிச்சுப்புட்டேன், என்ன மன்னிச்சிருங்க, சின்னய்யா சீக்கிரம் உரம் வாங்கியாரச் சொன்னாரு அந்த அவசரத்தில கவனிக்கல என்ன மன்னிச்ருங்கய்யா

அடுத்த நாள் நாட்டாமை கணேசனுக்கு படுக்கையை விட்டு எழமுடியவில்லை, முதுமை தன் வேலையை செய்தது, நாட்டாமையின் மகன் பக்கத்து ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் செய்யும் டாக்டர் சந்திரசேகரனை வீட்டுக்கு வரவழைத்து வர மாயாவை அனுப்பினார்.

டாக்டர் சந்திரசேகரன் வீட்டுக்கு வந்து, என்ன நாட்டாமை அய்யா என்பது காதில் விழுந்த கணத்தில், டாக்டரய்யா என்ன காப்பாத்துங்கய்யா என்று கதறினார் நாட்டாமை அந்த தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த டாக்டரிடம்

பி.கு: இந்த பதிவுதான். என்னை இந்த கதையை எழுத தூண்டியது.

1984ம் ஆண்டு 80 வயதை கடந்த ஒரு முதியவரின் சாதி உணர்வு தன் உயிர் காக்கப்படவேண்டும் என்ற நிலையில் மறந்து போனது.

2008 ல் வாழும் நாம் மாறுபட்ட ஒரு உலகில் வாழ்கிறோம், தயவு செய்து சாதி என்கிற அடையாளத்தை காட்டி ஒருவனின் வழிபாட்டு உரிமையை பறிக்காதீர்கள். குறைந்த பட்சம் சாதி அடையாளத்தை திருமணத்திற்குள் நிறுத்திக்கொள்ளுங்கள்.

இந்திய சமூகம் உலகத்திற்கு நிறைய நன்மைகளை வழங்கியுள்ளது.சாதிகளற்ற இந்திய சமூகம் உலகத்திற்கு மேலும் நனமைகளை செய்யமுடியும். இல்லையென்றால் இந்தியர்கள் நாம் நம் அடையாளத்தை தொலைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.