Saturday, February 2, 2013

கதை மணிரத்தினம் கதை

கடல் படம் பின்வரும் பேட்டர்னில் வருகிறதா?

கதை 1: முதலில் பிடிக்கவில்லை, பிறகு பிடிக்கிறது, துணைக்கு ஆபத்து காப்பாற்றுகிறார்.


திரைக்கதை 1 – நாயகி கட்டாயத்தின் பேரில் ஒருவனை மணக்கிறார். பழைய நினைவுகள் மனதில் இருப்பதால் கணவனோடு ஒட்டவில்லை, டெல்லி செல்கிறார், பின்னர் கணவனை புரிந்து கொஞ்சம் கொஞ்சமாக லவ்வுகிறார்.இதனிடையே கணவனை குண்டர்கள் கடதிக்கொண்டு சென்றுவிடுகின்றனர், அவரை மீட்க போராடுகிறாள் இந்த மனைவி.

இந்த கதை, கொஞ்சமா வசனம், டெல்லி பின்னனி , நேர்மை, குண்டர்கள், இளையராஜவின் இசை எல்லாம் சேர்ந்து மவுனராகம் ஆனது.


திரைக்கதை 2 – நாயகி கட்டாயத்தின் பேரில் அக்காவை பெண் பார்க்க வருபவரை மணந்து கொள்கிறார். நாயகிக்கு கணவனை ஆரம்பத்தில் பிடிக்கவில்லை.கணவனோடு காஷ்மீர் செல்கிறார். உண்மை தெரிந்து கணவனை புரிந்து லவ்வுகிறார். இதனிடையே கணவனை தீவிரவாதிகள் கடதிக்கொண்டு சென்றுவிடுகின்றனர், அவரை மீட்க போராடுகிறாள் இந்த மனைவி.

இந்த கதை, கொஞ்சமா வசனம், காஷ்மீர் பின்னனி , தீவிரவாதம், தேசப்பற்று, ரகுமானின் இசை எல்லாம் சேர்ந்து ரோஜா வானது.


திரைக்கதை 3 : இந்த படத்தையும் சற்றே மாற்றிய கதையின் மூலம் இந்த template ல் கொண்டு வரலாம். நாயகி பிடித்து திருமணம் செய்து கொள்கிறார்,பின்னர் பிடிக்காமல் போகிறது, உண்மை தெரிந்து கணவனை புரிந்து லவ்வுகிறார். அதற்குள் விபத்தில் சிக்குகிறார்.இங்கே ஒரு மாறுதலாக கணவன், மனைவியை காப்பாற்ற போராடுகிறார். இன்னொரு மாற்றம் குண்டர், தீவிரவாதிகளுக்கு பதிலாக குஷ்பு,அரவிந்தசாமி.

இந்த கதை, கொஞ்சமா வசனம், சென்னை பின்னனி , மென்பொருள், மிடில் கிளாஸ், ரகுமானின் இசை எல்லாம் சேர்ந்து அலைபாயுதே வானது.

கதை 2: ஒரு நல்ல மனசு கொண்ட தாதா, அவர் என்ன சொன்னாலும் நிறைவேற்றும் ஒரு அடியாள் நண்பர்.

திரைக்கதை 1 : ஒரு நல்ல மனசு உள்ள தாதா நாலு பேரு நல்லா இருக்க கடத்தல் அதன் மூலம் வரும் பிரச்சினைகளுக்கு அடிதடி மூலம் பதில். இந்த தாதா என்ன சொன்னாலும் நிறைவேற்ற அவரின் தளபதி யாக வரும் ஜனகராஜ் நிறைவேற்றுகிறார். இந்த தாதாவை கைது செய்ய அவரின் போலிஸ் ஆபிசர் மருமகன் நாசர் மெனக்கடுகிறார். தாதாவின் மகள் தந்தையை நினைத்து கவலைப்படுவார்.

இந்த கதை, கொஞ்சமா வசனம், பம்பாய் குடிசை வாழ்க்கை பின்னனி, இளையராஜவின் இசை எல்லாம் சேர்ந்து நாயகன் ஆனது.

திரைக்கதை 2: ஒரு நல்ல மனசு உள்ள தாதா அவரின் அல்லக்கை ஒருவரையே கொண்ற ஒருவரை காப்பாற்ற, அவர் , தாதாவின் தளபதி ஆகிறார். இந்த தாதா என்ன சொன்னாலும் நிறைவேற்ற அவரின் தளபதி யாக வரும் ரஜினி நிறைவேற்றுகிறார். தாதாவை கைது செய்ய அவரின் கலெக்டர் தம்பி அரவிந்தசாமி மெனக்கடுகிறார். தாதாவின் அம்மா மூத்த மகனை நினைத்து கவலைப்படுவார். கிளைக்கதையாக ஷோபனா, ரஜினி காதல்,ஷோபனா, அரவிந்தசாமி திருமணம் , ஷோபனா கணவன் தன் காதலால் காப்பாற்றப்படுவதை கதை 1 னோடு நீங்கள் ஒப்பிட்டால் அதற்கு குடுகுடுப்பை பொறுப்பல்ல.

இந்த கதை, கொஞ்சமா வசனம், சென்னை வாழ்க்கை பின்னனி, இலவச இணைப்பாக மகாபாரத உணர்வு, இளையராஜவின் இசை எல்லாம் சேர்ந்து தளபதி ஆனது.

காமெடி, டூயட்,இருட்டு,வெளிச்சம் எல்லாம் சேர்த்துக்கொள்ளுங்கள், பதிவில் எல்லாம் என்னால் அதை கொண்டு வர முடியாது.

இப்படியெல்லாம் சொன்னா அப்புறம் எப்படி தான் படம் எடுக்கிறது அப்படினு எல்லாம் எங்கிட்ட கேக்கக்கூடாது.

“முடியாது,கமெண்ட் போட முடியாது” அப்படியெல்லாம் சொல்லப்படாது
டிஸ்கி1 : முதல் இரண்டு திரைக்கதையும் நான் , ஜாம்பஜாரில் வாடை பிடித்துகொண்டிருந்தபோது கிடைத்த வாடை.

டிஸ்கி2 : 5 படங்களும் எனக்கு பிடித்து இருந்தது.