Monday, November 18, 2013

சாதியும் சான்றிதழும்.

கல்லூரியில் படிக்கும் போது ஒரு நாள் எதற்காகவோ அவசரமாக சாதி சான்றிதழ் தேவைப்பட்டது, அதனை வாங்க எங்க ஊர் கிராம நிர்வாக அலுவலரைத்தேடி இரண்டு நாள் கிராம நிர்வாக அலுவலகம் அலைஞ்சதுதான் மிச்சம். கணேசன் கடைல மத்தியாணம் உச்சி வெயிலில் சுண்டக் காஞ்ச பாலில் டீ குடிச்சிட்டுருக்கும்போது ஒருநாள் நணபர் லெட்சுமணன் கிட்ட இதை சொன்னேன், உடனே அவரு சொன்னார் நாளைக்கு காலையிலேயே வண்டி எடுத்துட்டு அவரு வீட்டுக்கே போயிருவோம்.அங்கேயே ஆளை மடக்கி தள்ள வேண்டியத தள்ளி வாங்கிட்டு வந்திரலாம்.

அடுத்த நாள் எங்க வீட்ல இருந்த M80ய (80 ஒரு 40 கழண்டு போன வண்டி)எடுத்துட்டு கிளம்பினோம் , நண்பர் லெட்சுமணுக்கு சொந்தம் நண்பர்கள் என்று நிறைய பேர் VAO ஊருக்கு போகிற வழியில்.

வழியில் நடந்து வரும் ஒரு பெண்ணைப்பார்த்து லெட்சுமணின் உரையாடல்.

என்ன பாத்திமாயீ நடவுக்கு கெளம்பிட்டியளா?

ஆமாம்.

உங்க வீட்டுக்காரு பணத்தேரு ஓட்டுவாரே எங்க ரொம்ப நாளா ஆளக்காணோம்.

சவுதிக்கு போயி ஒட்டக சாணி அள்ளிட்டு வந்தவங்க ஒரு நாளு பேரு ஊருல வந்து அத்தர் அடிச்சிக்கிட்டு திரியிறாங்க, அப்படியே மாட்டுச்சாணி அள்ளுறது கேவலம்னு சொல்லி இந்தாளு பொழப்ப கெடுத்துபுட்டாங்க , மாட்டை வித்துப்புட்டு சவுதிக்கு போறதுக்காக பணம் கட்டிட்டு அவங்க பின்னாடியே திரியிறார்.ஒரு வருசமாச்சு இன்னும் போன பாட்டக்காணோம்.

அது சரி, எதாவது தொழில் தெரிஞ்சு போனா நல்ல வேலை கிடைக்கும், உங்க ஆளு பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காத ஆளாச்சே,ஒட்டகம் பெரிசு அங்கேயே போய் அள்ளட்டும்.

போகும் வழியில் இன்னோரு ஊர், இந்த ஊர்லதான் உங்க தாத்தா மண்டையன்கிட்ட நெல்லு வட்டிக்கு கடன் வாங்குவாராம் உங்கப்பாவை படிக்க வைக்க, அறுவடை சமயத்துல களத்துலேயே நெல்லை ஏத்திட்டு போயிருவான் மண்டையன்.

கேள்விப்பட்டிருக்கேன், இது போல நிறைய பேரு வட்டிக்கு தாத்தாவுக்கு பணம் குடுத்துட்டு, நீ வாத்தியாரா இருக்கறதுக்கு நாந்தான் காரணம்னு எங்கப்பா கிட்ட சொல்ற ஒரு கும்பலே அலையுது.

அப்படியே கடந்து போய் இன்னோரு ஊரில் ஒரு கடையில் டீ குடிக்க அமர்ந்தோம்

என்ன லெட்சுமண் இரண்டு விதமா டபரா செட் வெச்சிருக்காங்க, சில்வர்ல ஒன்னு , வெங்கலத்துல ஒன்னு.

குடியான பொம்பள சனங்களுக்கு கொடுக்க சில்வர் டபரா செட், குடியான ஆம்பிளைகளுக்கு கிளாஸ், தாழ்த்தப்பட்டவகளுக்கு வெங்கல டபரா.

அது என்ன தாழ்த்தப்பட்டவர்களுக்கு வெங்கல டபரா?

அதுல எச்சி ஒட்டாதாம் இவங்க கண்டுபிடிப்பு, ஏரியாவில ஒருத்தன் கூட பத்தாவது படிச்சிருக்கமாட்டான் ஆனா இந்த அறிவியல் கண்டுபிடிப்பெல்லாம் நிறையா இருக்கு.

என்னப்பா நம்ம ஊரு ஒரு ஆறு கிலோ மீட்டர் தள்ளிதான் இருக்கு, அங்கே ஆம்பிளைகளுக்கு கிளாஸ் பொம்பங்களுக்கு சில்வர் டபரா அப்படி தானே கடைகள்ல இருக்கு.

அது மட்டுமா நம்ம கணேசன் கடைல யாரு டீ குடிச்ச கிளாஸையும் கழுவறதேயில்லை, ஒருத்தன் குடிச்ச கிளாஸ்லதான் இன்னோருத்தன் குடிக்கனும்.சமத்துவம் அந்த அளவுக்கு ஆகிப்போச்சு. நம்ம ஏரியாவில கையில காசு பணம் இருக்கோ இல்லியோ படிக்க வைக்கனும்னு நெனப்பாங்க, வெள்ளை வேட்டி சட்டை கலையாம வீட்டு வாசல் தாண்ட மாட்டாங்க, நாளு கிழமைன்னா தண்ணி போடாமயும் இருக்க மாட்டோம். இவங்க எல்லாரும் காசு நிறைய வெச்சிருப்பாங்க, ஆனா கோமணத்துக்கும் வேட்டிக்கும் வித்தியாசம் தெரியாது ரெண்டும் செம்மண் கலர்லதான் இருக்கும், மிஞ்சிப்போன பக்கத்து ஊரு சந்தை வரைக்கும் தான் தெரியும்.அரசாங்க தொடர்புன்னா நாயக்கர் பாத்துக்குவாரு. அவரு எந்த ஊருலேந்து இங்க வந்தாருன்னு தெரியல பல வருசமா அவருதான் பிரசிடெண்ட், அவங்க தம்பிதான் சொசைட்டி பிரசிடெண்ட் அவங்க
சொல்றதுதான் இவங்களுக்கு வேத வாக்கு. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா எதிர்ப்பு கெளம்புது.

அப்படியா?

சரி VAO வீடு வந்திருச்சி ,இருக்காரான்னு பாப்போம்.

ஹலோ சார் இருங்காங்களா?

VAOவின் மகள்: அப்பா வெணூமா, அப்பா டேஞ்சூர் போயிருக்காங்க, வரதுக்கு 2 டேய்ஸ் ஆகும்.

அப்படிங்களா? நான் எனக்கு சாதி சான்றிதழ் வாங்க வந்தேன் , காலேஜ்ல அவசரமா கேக்கிறாங்க

லெட்சுமண்: நீங்க என்னா பண்றீங்க?

VAOவின் மகள்: நான் டேஞ்சூர் ஆர்ட்ஸ் காலேஜ்ல பிகாம் பண்ணிட்டிருக்கேன்.

லெட்சுமண்: அப்படிங்களா ? அப்பா வந்தா சொல்லுங்க இந்த மாதிரி குடுகுடுப்பை சாதி சான்றிதழ் கேட்டு வந்ததா?

VAOவின் மகள்: கேஸ்ட் செர்டிபிகேட், குடுகுடுப்பை,குடுகுடுப்பையூர், சொல்லிடறேன்.

ஏமாற்றத்தோடு திரும்பி வந்தோம், லெட்சுமண் சொன்னார். இன்னும் நாளு வாட்டி சாதிச்சான்றிதழ் வாங்க VAO வீட்டுப்பக்கம் நீ வந்தா சான்றிதழ் கிடைக்குதோ இல்லையா சாதி மாறி VAO மகள் குடுகுடுப்பைக்காரனோட ஓடிப்போயிட்டான்னு பேராகிப்போயிரும் பாத்து இருந்துக்கோ.

Thursday, October 31, 2013

கம்பியூட்டர் புரோகிராமும் ராகவனின் குழப்பமும்.

ராகவன்: மாப்பிள்ளை இன்னக்கி கம்பியூட்டர் சயின்ஸ் பேப்பர் பரீட்ச்சைக்கு என்னடா ப்ரொகிராம் வரும், எதுனா சொல்லுடா நானும் கடம் போட்டு வெக்கிறேன்.


ராவணன்: நீ வேறடா, நானே இந்த கருமம் புடிச்ச பாடத்த எதுக்கு மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிக்கிற நமக்கு வைக்கிறாங்கன்னே தெரியலன்னு கடுப்புல இருக்கேன், ஒரு எழவும் புரிய மாட்டேங்குது. புரோகிராம்னு சொல்லி சும்மா பிராக்கெட்,பிராக்கெட்டா போட்டு வெச்சிருக்காங்க, இத கடம் போடரதோட ஒரு ஜாக்கெட்டுக்கு பிராக்கெட் போடறது ஈசிடா.

ராமசாமி(cse): கம்பியூட்டர் சயின்ஸ் புரோகிராமிங் ரொம்ப ஈசிடா, ஒன்னயும் ரெண்டையும் கூட்டரதுக்கு ஒரு புரோகிராம் போடரது மாதிரிதான்.

ராவணன்:டேய் நெறுத்துடா உன்க்கெல்லாம் தெர்மோடைனமிக்ஸ் பாடத்தை வெச்சாதான் எங்க கஷ்டம் புரியும். சரி விடு பரீட்சைல போய் தெரிஞ்ச தியரிய எழுதிட்டு வரவேண்டியது தான்.சரிடா ராமசாமி அப்படியே ஒரு பீடிய கொடுத்துட்டி போடா.

ராகவன் : ஒருவேளை பீடி குடிச்சா புரோகிராம் போடவருமாடா?

ராமசாமி(cse): டேய் லூசு எங்கிளாஸ் பொண்ணுங்க யாருமே பீடி குடிக்கரதில்லடா, அவங்ககிட்டதான் நாங்க கத்துக்கிறோம்.

ராகவன் : உனக்கு யோகம், மெக்கானிக்கல்ல பொண்ணுங்க இருந்தாலாவது நாங்களும் உன்ன மாதிரி பிராக்கெட் போட கத்துப்போம்.

இடம்:தேர்வு அறை

ராகவன் கேள்விதாளை வாங்கி வைத்துக்கொண்டு, தனக்கு தெரிஞ்ச தியரியெல்லாம் எழிதிட்டாரு, பாஸ் மார்க் வாங்கனுமுன்னா ஒரு புரோக்கிராமாவது எழுதனும், அவனும் உருப்புடாதது அணிமா அண்ணன் மாதிரி விட்டத்த வெறிச்சி யோசிச்சி பாத்தாரு, ஆனாலும் ஒன்னும் விளங்கல.கருமம் எந்தரிச்சு போகவேண்டியதுதான், ஒரு புரோகிராம் சரியா எழுதினா இந்த கருமத்தை திருப்பி எழுத வேண்டாமேடான்னு நெனச்சிட்டே பக்கத்தில் உட்காந்திருந்த கம்பியூட்டர் சயின்ஸ் ராமசாமி polyndrome program எழுதறது பாத்தாரு, ஆஹா அடிச்ச்துடா லக்குன்னு, டப்புன்னு அப்படியே காப்பி அடிச்சிட்டாரு, பாஸாகப்போற சந்தோசத்தில இருக்கும் போது அங்க வந்தாரு சூப்பரவைசர் நாகூரான்.

நாகூரான்: டேய் வேவஸ்த இல்லை அடுத்த பிராஞ்ச் காரன பாத்து காப்பி அடிக்கற என்ன எழுதறமுன்னாவது தெரியுமா.?

ராகவன்: அது வந்து இல்ல சார், ஒரே கேள்விதான் சார், அவனுக்கும் பாலிண்ட்ரோம் என்க்கும் பாலிண்ட்ரொம் அதான் சார் கண்டுக்காம விடுங்க சார் பாசயிருவேன். இந்த கம்பியூட்டர் பேப்பர்லாம் இழுத்துகிட்டு திரிய முடியாது சார்.

நாகூரான்: டேய் அவன் C++ ல பாலிண்ட்ரொம் புரோகிராம் போட்டிருக்கான், உனக்கு கேட்டிருக்கது Java ல டா அறிவு கெட்டவனே.

ராகவன்: அப்படி வேற இருக்கா? ஆனா என் புத்தகத்தில பாத்த மாதிரி பிராக்கெட்டாதானே சார் இருக்கு.

நாகூரான் : டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Saturday, February 2, 2013

கதை மணிரத்தினம் கதை

கடல் படம் பின்வரும் பேட்டர்னில் வருகிறதா?

கதை 1: முதலில் பிடிக்கவில்லை, பிறகு பிடிக்கிறது, துணைக்கு ஆபத்து காப்பாற்றுகிறார்.


திரைக்கதை 1 – நாயகி கட்டாயத்தின் பேரில் ஒருவனை மணக்கிறார். பழைய நினைவுகள் மனதில் இருப்பதால் கணவனோடு ஒட்டவில்லை, டெல்லி செல்கிறார், பின்னர் கணவனை புரிந்து கொஞ்சம் கொஞ்சமாக லவ்வுகிறார்.இதனிடையே கணவனை குண்டர்கள் கடதிக்கொண்டு சென்றுவிடுகின்றனர், அவரை மீட்க போராடுகிறாள் இந்த மனைவி.

இந்த கதை, கொஞ்சமா வசனம், டெல்லி பின்னனி , நேர்மை, குண்டர்கள், இளையராஜவின் இசை எல்லாம் சேர்ந்து மவுனராகம் ஆனது.


திரைக்கதை 2 – நாயகி கட்டாயத்தின் பேரில் அக்காவை பெண் பார்க்க வருபவரை மணந்து கொள்கிறார். நாயகிக்கு கணவனை ஆரம்பத்தில் பிடிக்கவில்லை.கணவனோடு காஷ்மீர் செல்கிறார். உண்மை தெரிந்து கணவனை புரிந்து லவ்வுகிறார். இதனிடையே கணவனை தீவிரவாதிகள் கடதிக்கொண்டு சென்றுவிடுகின்றனர், அவரை மீட்க போராடுகிறாள் இந்த மனைவி.

இந்த கதை, கொஞ்சமா வசனம், காஷ்மீர் பின்னனி , தீவிரவாதம், தேசப்பற்று, ரகுமானின் இசை எல்லாம் சேர்ந்து ரோஜா வானது.


திரைக்கதை 3 : இந்த படத்தையும் சற்றே மாற்றிய கதையின் மூலம் இந்த template ல் கொண்டு வரலாம். நாயகி பிடித்து திருமணம் செய்து கொள்கிறார்,பின்னர் பிடிக்காமல் போகிறது, உண்மை தெரிந்து கணவனை புரிந்து லவ்வுகிறார். அதற்குள் விபத்தில் சிக்குகிறார்.இங்கே ஒரு மாறுதலாக கணவன், மனைவியை காப்பாற்ற போராடுகிறார். இன்னொரு மாற்றம் குண்டர், தீவிரவாதிகளுக்கு பதிலாக குஷ்பு,அரவிந்தசாமி.

இந்த கதை, கொஞ்சமா வசனம், சென்னை பின்னனி , மென்பொருள், மிடில் கிளாஸ், ரகுமானின் இசை எல்லாம் சேர்ந்து அலைபாயுதே வானது.

கதை 2: ஒரு நல்ல மனசு கொண்ட தாதா, அவர் என்ன சொன்னாலும் நிறைவேற்றும் ஒரு அடியாள் நண்பர்.

திரைக்கதை 1 : ஒரு நல்ல மனசு உள்ள தாதா நாலு பேரு நல்லா இருக்க கடத்தல் அதன் மூலம் வரும் பிரச்சினைகளுக்கு அடிதடி மூலம் பதில். இந்த தாதா என்ன சொன்னாலும் நிறைவேற்ற அவரின் தளபதி யாக வரும் ஜனகராஜ் நிறைவேற்றுகிறார். இந்த தாதாவை கைது செய்ய அவரின் போலிஸ் ஆபிசர் மருமகன் நாசர் மெனக்கடுகிறார். தாதாவின் மகள் தந்தையை நினைத்து கவலைப்படுவார்.

இந்த கதை, கொஞ்சமா வசனம், பம்பாய் குடிசை வாழ்க்கை பின்னனி, இளையராஜவின் இசை எல்லாம் சேர்ந்து நாயகன் ஆனது.

திரைக்கதை 2: ஒரு நல்ல மனசு உள்ள தாதா அவரின் அல்லக்கை ஒருவரையே கொண்ற ஒருவரை காப்பாற்ற, அவர் , தாதாவின் தளபதி ஆகிறார். இந்த தாதா என்ன சொன்னாலும் நிறைவேற்ற அவரின் தளபதி யாக வரும் ரஜினி நிறைவேற்றுகிறார். தாதாவை கைது செய்ய அவரின் கலெக்டர் தம்பி அரவிந்தசாமி மெனக்கடுகிறார். தாதாவின் அம்மா மூத்த மகனை நினைத்து கவலைப்படுவார். கிளைக்கதையாக ஷோபனா, ரஜினி காதல்,ஷோபனா, அரவிந்தசாமி திருமணம் , ஷோபனா கணவன் தன் காதலால் காப்பாற்றப்படுவதை கதை 1 னோடு நீங்கள் ஒப்பிட்டால் அதற்கு குடுகுடுப்பை பொறுப்பல்ல.

இந்த கதை, கொஞ்சமா வசனம், சென்னை வாழ்க்கை பின்னனி, இலவச இணைப்பாக மகாபாரத உணர்வு, இளையராஜவின் இசை எல்லாம் சேர்ந்து தளபதி ஆனது.

காமெடி, டூயட்,இருட்டு,வெளிச்சம் எல்லாம் சேர்த்துக்கொள்ளுங்கள், பதிவில் எல்லாம் என்னால் அதை கொண்டு வர முடியாது.

இப்படியெல்லாம் சொன்னா அப்புறம் எப்படி தான் படம் எடுக்கிறது அப்படினு எல்லாம் எங்கிட்ட கேக்கக்கூடாது.

“முடியாது,கமெண்ட் போட முடியாது” அப்படியெல்லாம் சொல்லப்படாது
டிஸ்கி1 : முதல் இரண்டு திரைக்கதையும் நான் , ஜாம்பஜாரில் வாடை பிடித்துகொண்டிருந்தபோது கிடைத்த வாடை.

டிஸ்கி2 : 5 படங்களும் எனக்கு பிடித்து இருந்தது.