Tuesday, June 22, 2010

ஆரோக்கியமான பாதாம் அல்வா

நீண்ட நாளாக பாதாம் அல்வா செய்யவேண்டும் என்ற ஆசை நேற்று நிறைவேறியது, ஏதோ ஒரு தளத்தில் படித்த பாதாம் அல்வா செய்முறை நான் செய்த முறையில் இங்கே

தேவையானவை

2 கப் பாதாம் பருப்பு
2 கப் நெய்
2 கப் சக்கரை
2 கப் பால்(காய்ச்சிய)
சிறிது குங்குமப்பூ

முதலில் பாதாம் பருப்பை சிறிது நேரம் வேக வைத்து , தோலினை நீக்கிடவேண்டும், தோல் நீக்கிய பாதாம் பருப்புடன் பால் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். கிட்டத்தட்ட இட்லி மாவு பதத்திற்கு அரைக்கவேண்டும்.

அடி பெருத்த கடாயில் அரை கப் நெய் ஊற்றி, நெய் சூடானவுடன் பாதாம் + பால் மாவையும் சேர்ந்து இளஞ்சூட்டில் அரை மணி நேரம் அடி பிடிக்காமல் கிண்டிக்கொண்டே வேகவைக்கவேண்டும்.பின்னர் மீதமுள்ள ஒன்னரை கப் நெய் மற்றும் இரண்டு கப் சக்கரை போட்டு அடிபிடிக்காமல் கிண்டவேண்டும், கொப்பளிக்க ஆரம்பித்தவுடன் இறக்கி நெய் தடவப்பட்ட தட்டில் ஊற்றவேண்டும். சிறிது குங்குமம்பூவை வைத்து மேக்கப் போடவேண்டும்.

முக்கியமாக நெய்யின் அளவு குறைக்கவே கூடாது அல்வா சரியாக வராது.


செய்து முடித்தபின் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் கொடுத்தால் விரும்பி உண்பர்.நமது உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதால் நாம் பாதாமில் இருந்து நீக்கப்பட்ட தோலை எடுத்து உண்டால் நார்ச்சத்து கிடைக்கும். வீட்டில் இருந்த நெய் சக்கரையை வைத்து பாதாம் அல்வா செய்து உறவினர்களுக்கு கொடுத்துவிட்டு பாதாமின் தோலை மட்டும் நாம் உண்பதால் நமது ஆரோக்கியமும் கூடும், கொழுப்பு சக்கரை பொருள்களும் வீட்டில் குறைந்து ஆரோக்கியம் பேண வழிகாட்டும்.

Saturday, June 12, 2010

குப்பைமேனியா இது?

வடிவேலுவும் கமலும் உரையாடல்:

முன் குறிப்பு: சும்மா ஒரு நகைசுவை உரையாடல், யாரையும் புண்படுத்தினால் மன்னிக்கவும்

வடிவேலு: வாங்கய்யா உங்கள பேட்டி எடுக்க சொல்லி வலை உலகத்தில கேட்டுக்கிட்டாக வந்து கொடுங்கய்யா கொடுங்க?

கமல்ஹாசன் : அய்யா என்று அழகு தமிழில் அழைத்தமைக்கு நன்றி, அய்யா என்றழைக்காமல் கமல்ஹாசன் என்றழைத்தாலே சந்தோசப்பட்டிருப்பேன்.அதற்காக நீங்கள் அய்யா என்று அழைத்ததற்கு மகிழ்ச்சி இல்லை என்று நான் சொல்லமாட்டேன்.கம்பராமாயணத்தை புரிந்துகொண்ட தமிழர்களுக்கு இது புரியாதா என்ன. நீங்கள் சொல்லும் வலை உலகம் அறிவியலின் குழந்தை அதை யாரும் தடுக்க முடியாது என்பதுதான் உண்மை.ஆனால் உலகமே ஒரு வலை அதை அறிவியலால் தடுக்கமுடியாது.

வடிவேலு: கம்பராமாயணம் நான் படிச்சதில்லை, ஆனா நீங்க சொல்றது எனக்கு புரிஞ்ச மாதிரியே இருக்கு, உங்க படம் மருதநாயகம் என்ன ஆச்சு?

கமல்ஹாசன் : தேவர் மகனில் நான் உங்களை நடிக்க அழைக்கும்போது உங்களை இசக்கியாக பார்த்தேன், மருதநாயகம் கண்டிப்பாக வரும், உங்களை பார்த்தவுடன் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது, 23ம் புலிகேசி, இந்திரலோகம் போன்ற படங்களில் நடித்த உங்களை ஹீரோவாக வைத்து அந்த படத்தை எடுக்கலாம் என்றிருக்கிறேன், உங்களின் எட்டு வருட கால்ஷீட் அதற்கு தேவைப்படலாம். டைரக்டர் பாலாவும் நானும் இணைந்து இயக்கும் எண்ணமும் உள்ளது.

வடிவேலு: (மனதிற்குள்) இவருக்கு நம்ம மேல இவ்ளோ கோபம்.ஒருவேளை விஜயகாந்த் மூலமா எதுவும் சதி நடக்குதோ.

ரொம்ப நன்றி கமலய்யா ஆனா எனக்கு ஹீரோ வேசமெல்லாம் வேண்டாம்யா ஹீரோயினியோட ஒரேயொரு குத்து டான்ஸ் மட்டும் வெச்சு ஒரு காமெடி ரோல் மட்டும் போதும்யா சம்பளம் கூட வேண்டாம், அப்புறம் மருதநாயகம் படத்துல விஜயகாந்த ஹீரோவா போட்டு ஒரு பத்து வருடம் வெளிநாட்டுல சூட்டிங் வெச்சுக்கிட்டா உங்களுக்கு புண்ணியமா போகும்யா?

கமல்ஹாசன் : உங்களின் திறமையை நீங்கள் இன்னும் உணரவில்லை என்று நான் எண்ணவில்லை வியாபாரிகளின் சினிமாவில் நீங்கள் ஒரு விட்டில்பூச்சி, இதை நான் சொல்வதால் நான் விட்டில்பூச்சி இல்லை என்று அர்த்தம் கொண்டால் அது என்னுடைய தவறல்ல.

வடிவேலு: (மனதிற்குள்)பார்த்திபன் என்னை வேற மாதிரி குழப்புனாரு,ஆனா இவரு தெளிவா பாராட்டியே குழப்புறாரே.

அய்யா உங்களுக்கும் கவுதமிக்கும் பிரச்சினைன்னு?

கமல்ஹாசன் : நான் என் வீட்டில் ஜன்னல் வைத்திருப்பது நான் காற்று வாங்கவும், நான் வெளி உலகத்தையும் பார்க்கவுமே நீங்கள் எட்டிப்பார்ப்பதற்கு அல்ல, இப்படி என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கேள்வி தேவையில்லாதது இது உங்களுக்கும் பொருந்தும் மற்றவர்களுக்கு பொருந்தாது என்று பொருள் அல்ல.வெளிநடப்பு செய்கிறார்.

வடிவேலு: அய்யா நான் தேவர்மகன் படத்துல உள்ள சீன பத்திதானே சொன்னேன் அதுக்கு ஏன்யா கோபபடுறீங்க, நான் ஒரு கைப்புள்ள அடித்தவங்க விசயத்திலெல்லாம் தலையிட மாட்டேன்யா..............

Sunday, June 6, 2010

டீக்கடையில் வாழ்பவை

வெட்டிப் பேச்சுக்கேற்ப..
கூட்டம் சேரும்..
முச்சந்திகள்..

தேனீரில் சேர்க்கப்பட்ட..
செயற்கை வண்ணம்..
ருசிப்பதாக..
உறிஞ்சிக் கொண்டிருக்கும்..
அல்லக்கை கொழுந்துகள்..

பணம் தருவதாகச் சொல்லி..
வடை எண்பதை எடுத்து..
கடனை கடையில் வைத்து..
வெட்டிப்பேச்சை சிரமேற்கொண்டு..
தினம் பேசித் திரியும்..
இணையத்தின் சாதகத்தால்..

இட ஒதுக்கீடுகள் பல..
உடையவனை அடைய முடியாமல்..
தாத்தன் அப்பா அம்மா
நான் என் வாரிசு என் வாரிசின்...
பேரன் வரை அடைவது..
சமுதாயச் சிறப்பென்றும்..
தன் சாதியில் முதல் முறை பயனாளிக்கு
தகுதி போதாதென்றும் ..

இன்னும் பற்பல கணக்கு..
தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்..
உயர்சாதியை காட்டி..
உயர்கல்வியில் தனக்கு..
ஒரு சீட்டு எனும்..
உயரிய நோக்குடன்.. !


லக்ஷ்மன் ஸ்ருதி இசை நிகழ்ச்சி அனுபவம், விரைவில் அட்லாண்டாவில்


வெள்ளி இரவு டாலஸ் மெட்ரோப்பிளக்ஸ் தமிழ்சங்கத்தால், தமிழ்நாடு பவுண்டேசன் என்ற தன்னார்வ கல்வி உதவி நிறுவனத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு நடத்தப்பட்டது. நானும் கலந்துகொண்டேன், லக்ஷ்மன் ஸ்ருதி குழுவில் பாடகர் கிரிஸ்,மகதி, டிஎம்ஸ் செல்வக்குமார் மற்றும் மாலதி கலந்து கொண்டனர்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் நான் பார்த்த இசைநிகழ்ச்சி, மாலதி எப்போதும் போல் அருமை உற்சாகத்தோடு கிராமியப் பாடலான "சித்திர கோபுர கட்டவே " முதல் மன்மத ராசா வரை கலக்கினார்.

கிரிஸ் மற்றும் மகதியும் மிகவும் உற்சாகத்துடனும் ரசித்தும் பாடினர், செய்யும் தொழிலை ரசித்துச் செய்யும்போது வெற்றி தானாகவே கிட்டும் என்பதை உணர்த்தினார்கள்.கிரிஸ் மற்றும் மகதி நிறைய ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வந்த பாடலகள் பாடினர்.

டிம்எஸ் செல்வக்குமார் தந்தையைப்போல அப்படியே பாடுகிறார், இந்தந்திறமையை மட்டுமே வளர்த்துக்கொண்டதால் அவருக்கு சினிமாவில் புதிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற புரிதல் எனக்கு ஏற்பட்டது, மயக்கமென்ன என்ற வசந்தமாளிகை பாடலைப்பாடியபோதும் , உலகம் சுற்றும் வாலிபன் எம்ஜியாருக்கா பாடிய பாடலிலும் டிஎம்ஸ் காட்டிய வித்தியாசத்தை மகனாலும் தர முடிந்தது.

முத்தாய்ப்பாக டிரம்மர் பெயர் தெரியவில்லை, தனியாக பதினைந்து நிமிடம் தனித்திறமை காண்பித்தார், உண்மையிலேயே பறையோசையின் நீட்சியாகவே அதனை அனுபவிக்கமுடிந்தது, திறமைசாலி டிரம்மருக்கு என் பாரட்டுக்கள்.

நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் தொய்வு ஏற்படும் நிலையில் கிரிஸ் பார்வையாளர்களோடு இணைந்து நடனமாடி உற்சாகப்படுத்தினார். நடனமென்றால் என்னவென்றே தெரியாத நானும் கிரிஸ் பாடிய அண்ணாத்தே ஆடுறார் பாடலுக்கு கால் வலிக்க நடனமாடினேன்.

கிரிஸ் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார், அவரைப்பார்த்தவுடன் எனக்கும் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்ற ஆசை பீறிட்டு எழுந்தது.நாளைக்கு ஆட்டுக்கறி சாப்பிடும் ஆசையும் பீறிட்டு எழுந்துள்ளது என்ன மனிதனுக்கு நினைப்பதெல்லாம் நடப்பதில்லை, கண்டிப்பாக ஒரு ஆசையை நிறைவேற்றி திருப்தி அடைந்து கொள்வேன்.

டாலஸ் வாழ் தமிழர்களுக்கு இந்த நிகழ்ச்சி, நல்ல ஒரு பொழுது போக்காக அமைந்தது, வரும் ஆண்டிலும் மேலும் பல நிகழ்ச்சிகளில் நடத்தி மகிழ்வதுடன் மேலும் சிலரின் கல்விக்கு உதவுவோம் என்று நம்பி, வெறும் பார்வையாளனாக இல்லாமல் இனி தமிழ்ச்சங்க நடவடிக்ககளில் என்னுடைய பங்களிப்பையும் அளிக்கலாம் என்று நினைக்கிறேன்.

அடுத்த வாரம் ஜூன் 12 ம் தேதி அட்லாண்டாவில் இதே இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது, வசூலாகும் தோகை தமிழ்நாடு பவுண்டேசனுக்கு செல்வதால் சிலரின் கல்விக்கு உதவுகிறது, அட்லாண்டா தமிழர்கள் யாரேனும் என் பதிவை படிக்க நேரிட்டால் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்.

Thursday, June 3, 2010

டோண்டு என்றொரு மண்புழு.

எங்கெல்லாம் தன் சாதி சார்ந்தவர் தாக்கப்படுகிறரோ அங்கு உடனே டோண்டு தன்னுடைய சொம்பை எடுத்துக்கொண்டு செல்வது பதிவுலகம் அறிந்ததே. அதற்கு அவர் சொல்லும் காரணம் அனைவரும் தன் சாதி என்று வரும்போது தூக்கிப்பிடிக்கும்போது நான் ஏன் பார்ப்பனரை தூக்கிப்பிடிக்ககூடாது என்று அடம் பிடிப்பார், அவருடைய சமீபத்திய பதிவில் சாதியினால் சமூக நன்மை ஏற்பட்டது என்றும் வேறு கூறுகிறார், பீ அள்ளும் சாதியை உருவாக்கியது சமூக நன்மையா ? அவலமா? என்று சனாதன தர்மத்தை தூக்கிப்பிடிக்கும் டோண்டு அவர்கள் விளக்கலாம். எது எப்படியோ குறைந்த பட்சம் பீ அள்ளும் சாதியை உருவாக்கியது சமூக அவலம் என்பதை அனைவரும் உணர்ந்து,அனைத்து ஆதிக்க சாதியினர் மனதிலும் ஆணி போல் அடிக்கப்பட்டிருக்கிற சாதி என்ற ஆணி இன்னும் நூறாண்டுகளில் துரு பிடித்து மக்கிப்போகும் அல்லது சாதாரண குழு அடையாளமாகப்போகும்.

இதற்கிடையில் குட்டையை குழப்பி மீன் பிடிக்க என்றே சில கும்பல் இருக்கிறது, அவைகளின் தந்திரம் எல்லாவற்றையும் பார்ப்பனருடன் முடிச்சு போடுவது, பார்ப்பன , பார்ப்பான் என்று வெறும் தூண்டிலை போடுவார்கள், ஆனால் மண்புழு இருந்தால்தானே மீன் மாட்டும், ஆனால் அவர்களுக்கு தெரியும் டோண்டு எனும் மண்புழு தானாக வந்து கொக்கியில் மாட்டிக்கொள்ளும் என்று, டோண்டு என்ற மண்புழுவும் கடமையை சரியாகச் செய்யும் , குழப்பிய குட்டையில் உள்ள அனைத்து சாதி மீன்களும் மண்புழுவை தின்ன அடித்துக்கொண்டு வரும், அனைத்து சாதி மீன்களும் அருமையாக தூண்டிலில் மாட்டிக்கொள்ளும், மண்புழு கொஞ்சம் கொஞ்சமாக மீன்களுக்கு இரையாகும் மீன்கள் கொஞ்சம் கொஞ்சமாக கும்பலுக்கு இரையாகும்

பிகு: மீன் உணவு உடல்நலத்துக்கு நல்லதுன்னு சொல்றாங்களே ஒருவேளை டோண்டு நல்லதுதான் செய்கிறாரோ என்னவோ.

டோண்டுவின் கருத்து தவறு என்று நான் கருதுவதால் இட்ட இடுகை, டோண்டு அவரை மாற்றிக்கொள்ளமாட்டார் என்பது தெரியும், ஆனால் டோண்டு போன்ற கருத்து இருப்பவர்கள் மாறலாம் என்ற நம்பிக்கையில் இந்த இடுகை.அவரின் கருத்தைச் சொல்ல அவருக்கு இருக்கும் உரிமையில் நான் தலையிடவில்லை. தனி மனித தாக்குதல் கொண்ட பின்னூட்டங்கள் வெளியிடப்படாது.

Wednesday, June 2, 2010

அரிப்பை சொறிந்து கொள்வது எங்கே?

அரிப்பை சொறிந்து கொள்வது எங்கே?

கடந்த சில நாட்களாக நானும் பல பீலாக்குகளில் படிக்கிறேன். உதாரணமாக "அவன் அரிப்பை சொறிந்து கொள்ள் இங்கே வந்து இப்படி கமெண்டுறான், இப்படி பதிவு போட்டு தன் அரிப்பை சொறிந்து கொள்கிறான்" இப்படி நிறைய படிக்கிறேன்.

புரியாமத்தான் கேக்கறேன் அரிப்பை சொறிந்து கொள்ள அரிக்கிற இடத்தில இருக்குற இடத்திலேந்து சொறிஞ்சிக்கமுடியாதா? இப்படி பீலாக்குல வந்து சொறிஞ்சிக்கினாதான் அரிப்பை சொறியமுடியுமா? சத்தியமா சொல்றேன் என் அரிப்பை சொறிஞ்சிக்க இந்தப்பதிவை எழதலீங்க.