Wednesday, December 31, 2008

குடுகுடுப்பை அ.தி.மு.க -விகடன்

குடுகுடுப்பை அ.தி.மு.க -விகடன்

நீங்கள் விகடன் வாசகரா
இங்கே படியுங்கள் , அதன் தலைப்பில் குடுகுடுப்பை அ.தி.மு.க என்று உள்ளது


இதனால் சகலமானவர்களுக்கும் உடுக்கை அடித்து தெரிவித்துகொள்வது என்னவென்றால். ஜுனியர் விகடனில் குறிப்பிட்டிருக்கும் குடுகுடுப்பை நான் அல்ல.விகடனில் வரும் அளவுக்கு நான் இன்னும் பிரபலமாகவில்லை(!?)என்றே கருதுகிறேன்.

நான் எந்தக்கட்சியிலும் சேராத ஒரு நடுநிலைவாதி.

ஒரு மொக்கை பதிவு போட வழி கொடுத்த விகடனுக்கு நன்றி.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அப்படியே சீனாவில் குடுகுடுப்பைக்காரன் பயண அனுபவம் பாருங்க

குடுகுடுப்பை: சீனாவில் குடுகுடுப்பைக்காரன் : மஸாஜ்,குளியல் மற்றும் சில மக்கள் - பாகம் 3

நன்றி
குடுகுடுப்பை

Tuesday, December 30, 2008

சீனாவில் குடுகுடுப்பைக்காரன் : மஸாஜ்,குளியல் மற்றும் சில மக்கள் - பாகம் 3

பாகம் 1

பாகம் 2

பார்த்த இடங்களை பார்க்கும் முன்னர் சீன மஸாஜ்,மருத்துவம் மற்றும் சந்தித்த சில மனிதர்கள் பற்றி எழுதுகிறேன்.அங்கே தங்கியிருந்த நாட்களில் சில நாட்கள் ஒரு பிரபலமான சீன முறை மருத்துவமனையில் மஸாஜ்,அக்குபஞ்சர்,பாடி பாத், ஸ்டீம் பாத்தெல்லாம் எடுத்தேன்.

மஸாஜ் டாக்டர் பெயர் ஏதோ ஒரு குவாங், அவருக்கு ஒரு வரி கூட ஆங்கிலம் தெரியாது, ஆனாலும் அவரிடமும் உரையாடினேன்.சீன மஸாஜ் நம்ம ஆயுர்வேத எண்ணெய் மஸாஜிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, அவரு கை விரல்களை மடக்கி நம்ம உடம்பு முழுவதும் பகுதி பகுதியா தேய்ச்சபடி ஒரு ரவுண்டு வருவார், மஸாஜ் பண்ணும் இடத்தில் ஒரு இலேசான துணி போட்டு அது மேலதான் மஸாஜ் பண்ணுவாங்க.

இவரு நல்லா மஸாஜ் பண்ணுவாராம் அதுனால வெளிநாட்டுக்காரங்களுக்கு இவர்தான் பண்ணுவாராம், மஸாஜ் பண்ணுர இன்னோரு பொண்ணு சொன்னுது,இவரில்லாத ஒரு நாள் அந்த பொண்ணு மஸாஜ் பண்ணினப்ப அது எவ்வளவு பெரிய உண்மைன்னும் தெரிந்தது, அந்த மஸாஜ் ரூம்ல பட்டையெல்லாம் போட்டு ஒரு வடிகலன் இருந்தது, அத கொஞ்சம் குடிக்க சொன்னாரு, மூக்கு கிட்ட போனப்பவே தெரிஞ்சது நம்மூரு பட்டை சாராயம் மாதிரி, ஆனா இது சும்மா பட்டைய ஊரவெச்சு கொஞ்சமா வடிச்சி அந்த மஸாஜ் டாக்டருங்க ராத்திரில குடிக்கவாம்.

பேருதான் டாக்டரு அவங்களுக்கு கொடுக்கிர சம்பளத்தில மூனு நண்டு வாங்கலாம் அவ்ளோதான்,அவரோட பையன் ஒரு நாள் வந்திருந்தாரு என்கிட்ட ஆங்கிலத்தில பேசச்சொல்லி அதக்கேட்டதுல நம்மூரு அம்மாக்கள் குழந்தைகள் மம்மின்னு சொல்றத கேக்கறதோட அதிகமா இருந்துச்சு அவரோட மகிழ்ச்சி.மஸாஜ் பண்ணி முடிச்சவுடன் ஒரு புத்துணர்வு கண்டிப்பா கிடைக்கும்.இந்த மஸாஜ் டாக்டருக்கு சாக்கியமுனி பத்தி தெரிஞ்சிருக்கு அதாங்க புத்தர், ஆனா அவருக்கு பக்தியெல்லாம் கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் லெனின் தெரியுமான்னு நான் நிறைய பேருகிட்ட கேட்டேன் ஒருத்தருக்கும் தெரியல.நான் கேட்டது புரியாம கூட இருந்திருக்கலாம், நம்ம ராகவன் பின்னூட்டத்தில சொல்வார்.

ஒரு நாள் என்னோட முதுகுவலிக்கு அக்குபஞ்சர் எடுத்தேன், மூனு ஊசிய வெச்சு முதுகுல மாட்டிவிட்டாங்க அப்ப வலிச்சது அப்புரம் கொஞ்ச நாளைக்கு வலி கம்மியா இருந்தது, நிரந்தர தீர்வு கண்டிப்பா இதன் மூலம் கிடைக்காதுன்னு தெரிஞ்சது.

இப்போ சீன மருத்துவக்குளியல் நல்லா சுடுதண்ணில சீன மூலிகைகளை போட்டு 45 நிமிடம் படுத்துக்கனும், தண்ணியோட சூடுதாங்க முடியுதான்னு அந்த குளியல கவனிச்சுக்கிர பொண்ணுகிட்ட சொல்லனும்,ஆனா அவங்களுக்கு hot,cold ன்ன என்னன்னே தெரியாது.சரின்னு நான் சீனம் கத்துக்கிட்டேன்.

எனக்கு தெரிந்த சில சீன வார்த்தைகள்
ழங்மா -- hot
coldக்கு மறந்து போச்சு
நேகா - நீங்கள் நலமா ?ஹலோ சீனர்கள் போன் எடுத்து பேசும் முதல் வார்த்தை இது.(ஹலோ அல்ல)
சியசிய -- நன்றி (மேலதிகத்தகவல்)
சாய்ஜியன் -- பை
டொய்புச்சிய - மன்னிக்கவும்
தவ்ஷங்கா -- காலை வணக்கம்

இவ்ளொதான் எனக்கு தெரிந்த சீனம், அதே போல foot bath, அப்படின்னு ஒன்னு மூலிகைய போட்டு அதுல ஒரு இருபது நிமிடம் கால் வெச்சிருக்கனும்.அப்படி வெச்சிருந்தா கால் பாதம் வழியா மருந்து சேருமாம்.எனக்கு தெரிந்து இது எல்லாம் ஒரு நம்பிக்கைதான்.நிறைய சீனர்கள் சீன மருத்துவத்தையே நாடுகின்றனர். அங்கேயும் சிட்டுக்குருவி(போலி) டாக்டர்கள் அதிகம்தான் போல எனக்கு தோனுது.சீன மருத்துவத்தில் என்னுடைய அனுபவம் இவ்வளவுதான்.

இங்கெ நான் ஒரு சவுதி அரேபியாவை சேர்ந்த அரபியை சந்தித்தேன், பாக்கறதுக்கு இந்தியர் மாதிரிதான் இருந்தார். அவரும் அவரோட மனைவியோட தம்பியும் ஏதோ வேலையா வந்திருந்தாங்க, நல்ல ஆங்கிலம் பேசினார், அவர் மச்சானுக்கு அரபு தவிர வேற மொழி தெரியாதுன்னும் சொன்னார்.ஒரு டாக்ஸியை முழு நேரமும் வாடகைக்கு அமர்த்திக்கொண்டார்கள்,வாயில் சிகரெட்டையும் முழுநேரமும் வைத்துக்கொண்டார்கள், என்னையும் ஒரு காபி கிளப் போவோம்னு கூப்பிட்டார், நானும் கூடவே சென்றேன் பூம்பூம் மாடு மாதிரி.

காபி கிளப்பில காபி சொல்லிட்டு நாங்க பேசிட்டு இருந்தோம், ஒரு வேலையா சீனா வந்தேன், என்னோட மனைவி அவுங்க தம்பிய எனக்கு பாதுகாப்பா அனுப்பி வெச்சிருக்காங்க.அரேபியாவிலேயும் தங்கமணி ராஜ்ஜியம் தான் போலன்னு நெனச்சேன்.

காபி கிளப்பில் நாங்க இருந்த சமயத்தில அங்கே பீஜிங் ஒலிம்பிக்ஸ்க்காக ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்க வந்த ஒரு மாணவர் கூட்டம் ஏதோ பார்ட்டி கொண்டாடிக்கொண்டு இருந்தார்கள், அதிலே சற்று போதையுடன் இருந்த ஒரு பெண் என்னைப்பார்த்து உங்கள் கண்கள் மிக அழகு என்று சொன்னாள், நான் மகிழ்ச்சியில் இருந்த அந்த தருணம் , அந்த மாமன் மச்சான் அரேபியர்கள் இருவரும் அந்த பெண்ணை அவர்களுக்கு நடுவில் உட்காரவைத்து கடலை போட ஆரம்பித்துவிட்டார்கள்.சிகரெட் பகிர்ந்தார்கள்...
நான் எதிர்லே உட்காந்து வேடிக்கை பாத்தேன் என் அழகான கண்களால்.

தொடரும்....

Monday, December 29, 2008

சீனாவில் குடுகுடுப்பைக்காரன் : பெய்ஜிங் உணவு - பாகம் 2

பாகம் 1

இந்த பதிவில போட்டோ போடலாம்னு நெனச்சு கோடக்கேலரிய ரெண்டு வருசத்துக்கு அப்புரம் லாகின் பண்ணி பாத்தா ஒரு ஆல்பத்தையும் காணோம், வீட்ல போயி பேக்கப் ஹாட்டிஸ்க் முழுவதும் தேடிப்பாத்துட்டேன் அங்கேயும் காணோம்.சீனப்பயணத்துக்கு அடையாளமா ஒரு போட்டோ கூட இல்ல அதுனால என் அனுபவத்தை மட்டும் எழுதறேன்.இந்தப்பகுதி முழுவதும் உணவு, கண்டிப்பாக சீன உணவு சீனாவில் வேறு சுவை.இங்கே அமெரிக்காவில் அமெரிக்கப்படுத்தப்பட்ட சீன உணவுக்கும் அதற்கும் நிறைய வித்தியாசம்

நான் பார்த்து பேசிய வரை அல்லது எனக்கு புரிந்தவரை அரசியல்/மதம் விசயத்தில் யாருக்கும் அக்கறை இல்லை. பெரும்பாலனாவர்களுக்கு அன்றைய பிழைப்பு உணவு இது தாண்டி ஒன்றும் யோசிக்க நேரமில்லையாகவும் இருக்கலாம்.

உணவுப்பிரியனான நான் முதலில் சாப்பிட நினைத்தது பீஜிங் டக், சாங்க்பிங்க் ஏரியாவில் உள்ள ஒரு உணவகத்தில் நானும் என்னுடன் வந்த சீனரும் பீஜிங் டக் ஆர்டர் செய்தோம். ஒரு முழு வாத்தை ஏதோ மசாலா தடவி எண்ணெயில் வறுத்து நம் கண் முன்னால் ஒரு டிராலியில் கொண்டு வந்து நிறுத்தினார்.பின்னர் சிறிய துண்டுகளாக நாம் சாப்பிடும் வரை வெட்டி தட்டுகளில் வைத்தார், தொட்டுக்கொள்ள மிளகு,உப்பு ஏதோ சீன மசால கலந்த ஒரு பொடியில் தொட்டு சாப்பிட்டால் சுவை ஆஆஆஆஆஆஹாஹாஹாஹா.ஒரு முழு வாத்தையும் இருவரால் சாப்பிட்டு முடிக்க இயலவில்லை, பார்சல் கட்டி ஹோட்டல் அறையில் இரவு உணவுக்கு மிச்சம் உள்ள வாத்து சரியாக இருந்தது.

நண்பர்களின் எச்சரிக்கையினால் தங்கியிருந்த இடத்தின் மேற்குப்பகுதியில் உள்ள உணவகங்களுக்கு செல்லவில்லை,அங்கே ஆமை ரத்தத்தை பச்சையாக குடிப்பார்களாம், பின்னர் சமைத்து சாப்பிடுவார்களாம்.நமக்கு இன்னும் அந்த அளவு சகிப்புத்தன்மை வரலை.முடிந்த வரை தங்கியிருந்த இடத்தில் காலை உணவு பல நேரங்களில் அரிசி கஞ்சி வாங்கி சாப்பிடுவேன், மதியம் பல சுவைகளில சிக்கன்,நூடுல்ஸ் ஆகவோ பிரையாகவோ, சில நேரங்களில் டம்ப்ளிங்ஸ். டம்ப்ளிங்ஸ் நல்ல சுவை.பல நேரங்களில் மீன்.

நான் தங்கியிருந்த நேரத்தில் பஞ்சாபி தம்பதிகள் அங்கு இருந்தனர்,ஒரு சிரியன் அவர் சீனம் நன்றாக பேசுவார், அவர்களும் நல்ல உணவுப்பிரியர்கள் அவர்களோடு சேர்ந்து ஒரு நாள் ஒரு உணவகத்தில் இரால் வருவல்,மீன் மற்றும் சிக்கன் பல பெயர்களில் சாப்பிட்டோம்.உயிரோடு தொட்டியில் இருக்கும் இரால் மீன்களை நம் கண் முன்னால் பிடித்து எடை போட்டு அப்படியே இரண்டு நிமிடம் கொதிக்கும் நீரில் அவித்து ஒரு கிலோ காஞ்ச மிளகாய் மற்றும் சில சீன மசாலா உப்போடு சேர்த்து வறுத்து கொடுத்தார்கள்.மிளகாய்க்கு இடையில் உள்ள இரால்களை பொறுக்கி சாப்பிடவேண்டும், மிளகாயை கொட்டிவிடுவார்களாம்.

பஞ்சாபி மேடம் இரால் சுத்தப்படுத்தி அப்புரம் வறுக்க மாட்டீங்களான்னு கேட்டாங்க, முடியாது அதுக்கு ரெண்டு மணி நேரத்துக்கு மேலே ஆகும் அப்படின்னு சொல்லி மறுத்துட்டாங்க. இரால் சாப்பிட நல்லா ஜீஸுயா இருந்துச்சு, அவங்க யாரும் இரால் சரியா சாப்பிடலை மீண்டும் நானே பேக்கிங், சும்மா சொல்லக்கூடாது சுவை அருமை.

மீன் உணவு மின் வருவல் கிட்டத்தட்ட நம்மூரு மாதிரிதான், அதுவும் உயிரோட பக்கத்துல உள்ள தொட்டில நீந்திகிட்டு இருக்கும் நாம மீன காமிக்கனும் உடனே சமையல்தான். அதுல பீஜிங் ஸ்டைல் பிஷ்னு ஒரு மெனு, மிளகாய அரைச்சு ஊத்தி காரம்னா தாங்க முடியல ஆனா மீன் ருசிதான், அப்புரம் ஒரு நாள் நம்மூரு குளத்து கெளுத்தி மாதிரி ஒன்னு நான் உடகாந்திருந்த டேபிள் வெச்சே குழம்பு வெச்சு தந்தாங்க தனியா ஆடுனாலும் அடிச்சு ஆடுனேன்.

மற்றொரு நாள் நண்டு உயிரோட இருந்த ஒரு பெரிய நண்டு ஆர்டர் பண்ணினேன், சமைச்சு அந்த ஓட்டயும் கொண்டு வந்து வெச்சாங்க கூடவே வழக்கமா குடுக்குர ரெண்டு குச்சி, இத வெச்சு எப்படி நண்டு சாப்பிட முடியும்,அப்புரமா ஒரு கத்தியும் கைக்கு ஒரு பிளாஸ்டி உறையும் கொடுத்தாங்க, நானும் வெட்டிப்பாத்தேன், ம்ஹீம் நமக்கு கையில எடுத்து கடிச்சு சாப்பிடனும். பாத்தேன் பார்சல் பண்ண சொல்லி நிம்மதியா அறைல வந்து பிரிச்சு மேஞ்சாச்சு. நான் சாப்பிட்ட நண்டுகளில் சுவையான நண்டுகளில் இதுவும் ஒன்று.

ஒரு கொரியன் உணவகத்தில் ஒரு நாள் சைவ பஜ்ஜிக்களும், மட்டன் ப்ரை கொஞ்சம் சுட்ட மீன் சாப்பிட்டேன் இது நம்ம பஞ்சாபிகாராரோட போய் சாப்பிட்டது,இவைகள் சீன உணவோடு கொஞ்சம் மாறுபட்டு இருந்தது, விலை மிக மலிவு மூனு பேருக்கு 75 யுவான் தான், நான் சாப்பிட்ட நண்டு மட்டும் 275 யுவான்.

பஞ்சாபிகாரருக்கு சீனாவில் தெருக்கடைகளில் சாப்பிட ஆசை அவரோடு சேர்ந்து தெருக்கடைகளில் விற்கும் சிக்கன் வருவல், மீன் வருவல்/பஜ்ஜி எல்லாம் சாப்பிட்டேன் சில கடைகளில், இது மாலை நேர உணவு, சுகாதாராம் சென்னை ரோட்டுக்கடைகளுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல அதே போல் சுவையும்.

பீஜிங் டக் சாப்பிட்ட ஓட்டலில் விலாங்கு மீன் பார்த்தேன் ஆனால் அங்கே மீண்டும் செல்ல வாய்ப்பு இல்லை, அந்த வருத்தம் இன்னும் உள்ளது.அங்கே இருந்த kfc போன்ற அமெரிக்க உணவகங்களில் நான் ஒருநாளும் சாப்பிடவில்லை, மொத்தத்தில் உணவு விசயத்தில் சீனாவில மிக திருப்தியாக சாப்பிட்டேன்.இந்தியா கிச்சன் என்ற இந்திய உணவகத்திற்கும் செல்லும் வாய்ப்பு அமையவில்லை.

அடுத்து கிரேட்வால், forbidden city மற்றும் palace சென்ற அனுபவம்...

Saturday, December 27, 2008

உங்களுக்கு மீன் பிடிக்குமா இங்கே வாருங்கள்

உங்களுக்கு மீன் பிடிக்குமா இங்கே வாருங்கள்

பஞ்சாயத்துக்குளத்தில்
வந்து நீச்சலடித்தாய்
உண்மையைச் சொல்,
வழிதவறிதானே
மாட்டிக்கொண்டாய்..?


நீ தூண்டிலில் மாட்டிக்கொண்டது
எல்லோருக்கும்
தெரிந்து விட்டது போலும்,
மீன்காரன் கடக்கும்போது
எல்லோரும்
என்னையே பார்க்கிறார்கள்..!

உன் மண்டையை
நான் மட்டும் தானே கேட்டேன்
உடைந்து போய்
ஊருக்கே உணவாகி விட்டாயே..!

அன்றொருநாள்
உன் வாலின் முள்
என் தொண்டையில்
சிக்கிக் கொண்டதே
நினைவிருக்கிறதா,
அன்றுதான் என் காசு
டாக்டரின் கையில் சிக்கியது...!

உன் அக்காவின் மரணத்தில்
உன் மரணம் எப்போவென
யாரோ கேட்டதற்கு
நீ என்னைப் பார்த்தாயே
நினைவிருக்கிறதா?!


உனக்கு பிடித்த
மீன் யார் என்றாய்,
விரா மீன் என்றேன்
பயந்து போய்
கடைசியாய் சிரித்தாயே
நினைவிருக்கிறதா?!!


நேற்று ஊர் கிணற்றில்
என் அம்மா
நீர் இறைத்த போது
துள்ளிக் குதித்தாயாமே
அம்மா உன்னை
மெச்சிக் கொண்டே இருந்தாள்
தெரியாமல்தான் கேட்கிறேன்
நான்
நீர் இறைத்திருந்தால்
துள்ளிக் குதித்திருப்பாயா..?!


உன் குஞ்சுகளை
என் தொல்லை
அதிகமென்று
உத்திராபதி வீட்டுக் குட்டையில்
வளர்த்தாயா
நாங்கள் கூட்டாளிகள்
என்று தெரியாதா
நீ இருக்கும் இடம் நோக்கி
வருகிறோம் தப்பிவிடு..!

மீனே இல்லை என்று நினைத்த குளத்திலும்
அனிச்சையாய் பார்க்கிறேன்
உன் கயல்விழி
காட்டிக்கொடுத்துவிட்டதே...!


குழம்பில் சற்று
துள்ளி துள்ளி குதிப்பாய்
நீ குதிக்கும் கோலத்தை
என்னவென்று சொல்வது...!


நிறைகுடமும் கூத்தாடும்
நீ அதனுள் வருகையில்..!


உன்னை சாப்பிட்டுக்
கொண்டே வந்ததில்
எதிரே இருந்த தட்டில்
இடரி விழப்போன இன்னொரு மீனை
பார்த்து எஸ்கேப் என்கிறாய்..!

அன்றொருநாள்,
உன் உதட்டிற்குக் கீழே
எனது விரல் கொண்டு
கோடு வரைவதுபோல்
பாவனை செய்தேன்,
என்ன செய்கிறாய் என்றாய்,
உண்ண பிடித்த பகுதிகளை
தடவிப் பார்ப்பது
என் வழக்கம் என்றேன்,
"ஆ"எனச் சொல்லி
தண்ணீருக்குள் முகம் புதைத்தாயே,
நினைவிருக்கிறதா!

கவுஜ மூலம் நாடோடி இலக்கியன் கவிதைகள்...!: உங்களுக்கு காதல் பிடிக்குமா? அப்போ இங்கே வாங்க....!,

வெவ்வேறு கவுஜயில் வெவ்வேறு மீன்கள் இடம் பிடித்திருக்கும்.இறுதியில் அனைத்தும் உணவாகிவிட்டதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்

Wednesday, December 24, 2008

இளையராஜா பிரியர்களுக்கு ஒரு இணைப்பு.

இளையராஜா பிரியர்களுக்கு ஒரு இணைப்பு.
அனைத்து வாசகர்களுக்கும்

இனிய விடுமுறை நாள் வாழ்த்துக்கள்.

பார்த்தது:
சிகாகோ நகரப்பகுதியில் உள்ள அரோரா கோவில் செல்லும் வழியில் அடுத்தடுத்து வடக்கு தெற்காக ஓடுகின்ற இரு சாலைகளின் எண்.
IL – 25, IL 31. இரண்டுக்கும் நடுவில் ஓடுகிறது ஒரு ஆறு. (25+ஆறு =31)

படித்தது :
சென்னை 32அ பஸ்ஸில் ஒட்டப்பட்டிருந்த ஒரு remix.

படியினில் தொங்கி பிடி தவறி விழுந்தால்
சங்கினால் ஊதப்படும்.

கேட்டது:
இளையராஜா இசை அமைக்கும் முறை பற்றிய ஒர் ஆய்வு.மேலும் பல நல்ல ஆய்வுகள் உள்ளது.

http://www.itsdiff.com/Tamil2007.html
தேடுங்கள் "Maestro Illayaraja - Style of Music."

Monday, December 22, 2008

முருங்கை மரமும் பசுமாடும் நொண்டியும்

அது ஒரு சராசரி விவசாயக்குடும்பம், வீட்டு வாசலில் கத்தரிக்காய்,சுண்டைக்காய், வேப்பமரம் எல்லாம் வளர்த்தார்கள், எல்லாமே ஓரளவிற்கு அந்தந்த காலத்தில் பயன் தந்தபடி இருந்தது, வேப்பமரம் இலையுதிர்காலம் தவிர மற்ற நாட்களில் நிழல் தந்தபடி இருந்தது, அனைத்து காலங்களில் வீட்டில் வசிப்பவர்கள், விருந்தாடிகள்,பக்கத்து வீட்டுக்கு காரர்களுக்கு பல் விளக்கவும் உதவியதால் கல்லாக்கோட்டையான் கடையில் கோல்டேஜ்(கோல்கேட்டின் டூப்ளிகேட்) பேஸ்ட் வியாபாரத்தை குறைத்தது.

இதற்கிடையில் புதுமாதிரி விவசாயங்களில் நம்பிக்கை உள்ள அந்த வீட்டு விவசாயி எங்கேயோ கிடைத்த ஒரு முருங்கை விதையை வாங்கி வந்தார், வழக்கமாக முருங்கைக்கு போத்துதானே வெட்டி நடுவார்கள், இது என்னடா புது மாதிரியாக விதை, அதுக்கு பெயர் ஏதோ செடி முருங்கையாம், விதை விருட்சமாகி நன்றாக வளர்ந்தது, செடி முருங்கை என்ற பெயர் இருந்தாலும் நல்ல மரமாகவே வளர்ந்தது.பூக்கள் பூக்க ஆரம்பித்ததது.

காய்கள் இன்னும் சில நாட்களில் வந்து விடும் என்ற நிலையில் வேப்ப மரத்தில் கட்டப்பட்டிருந்த செல்லமாக வளர்க்கும் பசு மாடு கயிரை அறுத்துக்கொண்டு முருங்கை மரத்தின் கீரையை சாப்பிடும் எண்ணத்தில் மரத்தின் ஒரு கிளையை இழுக்க, கால் எப்படியோ முருங்கை மரத்தின் அடிப்பகுதியில் மாட்டிக்கொண்டது, இதனைப்பார்த்த வீட்டுக்கார அம்மா பதட்டத்தில் ஓடி வந்து விழுந்ததில் கீழே விழுந்து முதுகெலும்பில் அடிபட்டது,பசு காலை எடுக்கும் முயற்சியில் முருங்கை மரம் உடைந்து விழுந்தது, பசுவிற்கும் நல்ல அடி இடுப்புபகுதியில் அடிபட்டது .ஒரே விபத்தில் முருங்கையும் பசுவும் நொண்டியாகிப்போனது, வீட்டுக்கார அம்மாவிற்கு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்தே நடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

நாட்கள் கடந்தது முருங்கை மரம் மீண்டும வளர ஆரம்பித்தது ஒரு மாதிரி நொண்டி மரமாக, ஊராரே பொறாமை படும் அளவுக்கு காய்க்க ஆரம்பித்தது, பசு மாடும் நொண்டியாக இருந்தாலும் கன்றுகள் ஈன்று பால் கொடுக்க ஆரம்பித்தது, வீட்டுக்கார அம்மாவும் முதுகுவலியிலும் அந்த மாட்டில் பால் கறந்து வீட்டு உபயோகத்திற்கு பயன்பட்டது போக மீதியை விற்று மாட்டுக்கு தீவணம் வாங்குவதற்கு பயன்படுத்திக்கொண்டார்.

முருங்கை மரம் நன்றாக காய்ப்பதை பார்த்த வீட்டுக்காரர், மகிழ்ச்சியில் விதைக்காக சில முருக்கைக்காய்களை பரிக்காமல் விட்டுவைத்தார், அதில் வந்த விதைகளை எடுத்துப்போய் தன் வயலில் இருக்கும் போர்வெல் பகுதியில் சிலவற்றை விதைத்து வைத்தார்.போர்வெல்லுக்கு எதிரில் வசித்த சேகரும் சில விதைகளை வாங்கி அவர் வீட்டு தோட்டத்தில் போட்டு வைத்தார்.

போர்வெல்லில் போட்ட முருங்கை ஒன்றும் வளரவில்லை,ஆனால் சேகர் வீட்டு முருங்கைமரம் நன்றாக வளர்ந்தது, ஆனால் காய்க்கவே இல்லை, சேகருக்கு காரணம் புரியவில்லை, நன்றாக காய்க்கும் நொண்டி மரமும் ரோட்டு ஓரம்தான் இருக்கு அதில் எடுத்த விதையில் வளர்ந்த இந்த மரமும் ரோட்டு ஓரம்தான் இருக்கு ரோட்டோர முருங்கை நல்லா காய்க்கும்னு சொல்வாங்களே, ஒருவேளை நொண்டியாக்குனா காய்க்குமோ என்ற குழப்பத்தில் சேகர்.

இதற்கிடையில் நொண்டி மரம் பக்கத்தில் இருந்த கொய்யா மரத்தில் நிறைய கொய்யா காய்த்திருந்தது, அதனைப்பறிக்க நொண்டி மரத்து வீட்டுப்பையன் முருங்கை மரத்தின் மீது ஏறி கொய்யா பறிக்க முயன்றான், கொய்யா பறிக்க அவன் கையை மேலே நீட்டியபோது அந்த மரத்தின் ஊடே சென்று கொண்டிருந்த ஒரு வீட்டின் எலெக்ட்ரிக் வயரில் பட்டு சாக் அடித்து கதறினான் அவன்..........இப்போது முருங்கை மரம் மேலும் ஒருமுறை நொண்டியாகி அவனை காப்பாற்றியது.

சில வருடங்களுக்கு பிறகு அவன் வெளியூர் சென்றான்,வேலை பார்த்தான், தன் வாழ்க்கையில் அவன் எதிர்பார்க்காத சம்பவங்கள் நடந்தது,இந்த சம்பவங்கள் அவனை முடக்கிப்போட்டது, பிடிக்காதவர்கள், ஊரார்கள் எள்ளல் பேசுவார்களே என எண்ணி நொந்து போனான்,மனதால் சோர்ந்து போனான்.

இப்போது ஊர் நோக்கி பல வருடங்களுக்கு அப்புரம் வந்து பார்த்தான் அந்த முருங்கை மரம் இன்னும் காய்த்து பலன் கொடுத்தபடியே இருந்தது, வேப்பமரத்தில் கட்டியிருந்த நொண்டிப்பசுமாடு எட்டாவது கன்றை ஈன்று பால் கொடுத்தபடியே இருந்தது, தேவையில்லாமல் உழைத்தாலும் அவன் அம்மா இடுப்பு வலியை பொருட்படுத்தாது உழைத்தபடிதான் இருந்தாள். ஊனமாக உள்ள இவைகள் எதுவுமே தன்னை ஊனமாக கருதாமல் தத்தம் வேலைகளை செய்தபடி இருந்தது கண்டான், தம் மனதில் உள்ள குழப்பங்கள் தெளிந்தான் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களால் மனதில் ஏற்பட்ட ஊனத்தை தூக்கி எறிந்து விட்டு தனது வெற்றிப்பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

கதை மாதிரி ஒன்னு எழுதியிருக்கேன், பிடிச்சிருந்தா கருத்து சொல்லுங்க, ஓட்டளியுங்கள்

Sunday, December 21, 2008

சில ஓவியங்களும் அதன் விளக்கமும்

முதல் படத்தில் உள்ளது வரிசையாக ஞாயிறு முதல் சனி வரை. ஒவ்வொன்றாக கிளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்.ஓவியங்களும் பெயரிட்டதும் நான் அல்ல.:)
கடைசியாக உள்ள வீடியோவில் படங்களுக்கு குரல் விளக்கம் உள்ளது. வாய்ப்பு இருப்பின் மறக்காமல் கேட்கவும்











Thursday, December 18, 2008

டாலஸ் டெக்ஸாஸில் பதிவர் வாசகர் சந்திப்பு.

டாலஸ் டெக்ஸாஸில் பதிவர் வாசகர் சந்திப்பு.

பதிவர் சந்திப்பு, பதிவர் வாசகர் சந்திப்பு அடிக்கடி நடந்தவண்ணமே உள்ளது, நானும் என் பங்குக்கு ஒரு பதிவர் -வாசகர் சந்திப்பை பகிருகிறேன்.வலையுலகத்தில் குறைவான வாசகர்களோடு ஆனாலும் விடாமல் பதிவு நடத்திக்கொண்டிருப்பதில் நானும் ஒருவன், என்னுடைய பதிவின் தரத்தை(?) மேம்படுத்த பொன்னியின் செல்வன் படிப்பதாக முடிவு செய்து டவுன்லோடும் செயதாகிவிட்டது.

இப்போது வாசகர் சந்திப்பிற்கு செல்வோம், இவர் பதிவு போட்டவுடன் படித்து எனக்கு அலுவலகத்திற்கு தொலைபேசி அடிக்கடி நான் செய்யும் எழுத்துப்பிழை கருத்துப்பிழைகளை சுட்டிக்காட்டுவார்.ஆனால் ஒருநாளும் பின்னூட்டம் எல்லாம் போடமாட்டார்.

டீ குடித்தபடியே டீயில் சிறிது சக்கரை கூட வேண்டும் என்றார்,அப்படியே என்னுடைய பதிவில் பிடித்ததாக இரண்டு பதிவுகளை குறிப்பிட்டார் அந்த இரண்டு பதிவுக்கும் சொந்தக்காரர் ஹரிணி.

குடுகுடுப்பை: பெற்றோருக்கு kindergarten படிக்கும் மகளின் பரிசு.

குடுகுடுப்பை: என் மகளின் பதிவு


அப்ப என்னதான் சொல்ல வரார் நம்ம இதுவரைக்கும் எந்த பதிவுமே உருப்படியா எழுதலையா என்ற கவலையில் இருந்தபோது.

இந்த பதிவுகள்

வருங்கால முதல்வர்: இலங்கைக்கு அமெரிக்காவின் இலவச ஆயுதம்.

வருங்கால முதல்வர்: இல்லாத நடிகையின் பொல்லாத நாய்.

பிடித்ததாக சொன்னார்.நல்ல மாதிரி பதிவு எழுதினாதானே வாசகர்கள் வருவார்கள், அதுனால நல்லா எழுத முயற்சி பண்ணுங்க இல்லாட்டி எழுதற நிறுத்துங்கன்னு சொன்னார்

கிளம்பும் நேரம் வந்தது , இன்னைக்கு ஒரே கார்ல ஆபிஸ் போறோமோ இல்ல தனித்தனி காரா எனக்கேட்டார், இந்த கேள்வியை கேட்டபின் ஒரே காரில்தான் போக வேண்டும் என்பதுதான் சட்டம். இந்த பதிவர் -வாசகர் சந்திப்பு, விமர்சனம் தினமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

Wednesday, December 17, 2008

சீனாவில் குடுகுடுப்பைக்காரன் : பெய்ஜிங் பயணம்

2006 ஆம் ஆண்டு பெய்ஜிங்கிற்கு இரண்டு முறை செல்ல நேரிட்டது, அந்த பயண அனுபவத்தை உங்களிடம் பகிருவதற்காக இந்த பதிவு.

முதல் முறை ஜூலை மாதம் சென்றேன் கிட்டத்தட்ட 4 வாரம் தங்கியிருந்தேன்.டாலஸில் இருந்து டோக்கியோ வழியாக அமெரிக்கனில் பயணம். டோக்கியோ ஏர்போர்ட்டில் காலை ஜப்பானில் காபி எனப்பாடிய படி ஒரு மாலை நேரத்தில் காபியை குடித்துவிட்டு ஏர் நிப்பானில் பெய்ஜிங், சாப்பாடு கொடுத்தார்கள், மீன் பிரியனான நான் சிக்கனா,மீனான்னு கேட்டப்போ, மீன் அப்படின்னு சொல்லிட்டேன்.கொடுத்தார்கள் வேக வைக்காத பச்சை மீனையும் வெத்திலை போன்ற இலையையும், இலை மற்றும் வெறும் சோற்றை சாப்பிட்டுவிட்டுவிட்டு தூங்கிப்போனேன்.

பெய்ஜிங் விமான நிலையம் நிச்சயமாக மிகப்பிரமாண்டமான விமான நிலையம், தரையில் பெட்டியை இழுத்து வரும் போது சில இடங்களில் சீனத்தரம் தென்பட்டது, இறங்கி எனது அரைகுறை ஆங்கிலத்தில் அவர்களுடன் சீனத்தில் பேசி எப்படியோ இம்மிக்ரேசன் தாண்டியாச்சு,

என்னை கூட்டிச்செல்ல வரவேண்டியவர் வெளியில் இருப்பாரா என்ற பயம் வேறு, பெட்டியை தள்ளிக்கொண்டு வர சிகப்பு உடை அணிந்த உதவியாளர் குழு ஒன்று உள்ளது,நானும் ஒருவரை அமர்த்திக்கொண்டேன், kudukuduppai என்று யாராவது தட்டி வைத்த நபர் தெரிகிறாரா எனபதே என் ஒரே நோக்கம், விமான நிலையம் முழுவதும் அமெரிக்கப்படுத்தப்பட்ட கடைகள். நிரம்பி வழிந்த ஸ்டார்பக்ஸ், கேஎப்சி மற்றும் சில ...

வெளியில் வந்தாயிற்று குடுகுடுப்பை தட்டியுடன் ஒரு சீனப்பெண் என்னை வரவேற்றார், என்னுடைய டிராலியை தள்ளிக்கொண்டு வந்த சீனருக்கு 100 யுவான் கொடுத்தேன் அவர் அமெரிக்கா டாலர் எதிர்பார்த்திருப்பார் போல கொஞ்சம் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. அவர் சாய்ஜியன் என்றபடியே விடைபெற்றார்.

"யூ இந்துவா" -- நான் இந்து என்று இவருக்கு எப்படி தெரியும் என நினைத்தபடியே யெஸ் என்றேன்.சீனத்தரத்துடன் வந்த காரில் ஏறினேன்.நான் ஹோட்டல் அறையை சேர்ந்த போது இரவு மணி எட்டு, இரவு சாப்பாடு என்ன வேண்டும் என அந்த சீனப்பெண் கேட்டார்.கொடுக்கப்பட்ட மெனுவில் இருந்த சிக்கன் மற்றும் அரிசி சாதம் தேர்வு செய்தேன்.சாப்பாடு எனக்கு பிடித்தது.

சில நாட்களில் புரிந்தது இந்துவா என்றுதான் இந்தியாவை சீனத்தில் சொல்கிறார்கள் என்று.நான் இருந்த இடம் பெய்ஜிங்கின் Changping District, ஏதோ ஒரு புறநகர்ப்பகுதி.பெரிய சாலைகளில் ஆங்கிலத்திலும் பெயர்கள் இருந்தது. மற்றபடி சிறிய சாலைகள் உணவகங்களில் முழுவதும் சீனத்திலேயே எழுதி இருந்தது. நான் பார்த்தவரையில் ஆங்காங்கே ஆங்கிலப் பயிற்சிப்பள்ளிகள் நம்மூரு ஸ்போக்கன் இங்கிலிஷ் மாதிரி இருந்தன.

யுவான் நோட்டில் இருக்கும் மாசேதுங்கை காட்டி யார் இவர் என்று ஒருவரிடம் கேட்டேன். அவருக்கு ஒன்று தெரியவில்லை அல்லது
நான் கேட்டது புரியவில்லை.

படங்களோடு அடுத்த பாகம்.

தொடரும்..

Tuesday, December 16, 2008

பல்லவர்களுடன் ஒரு அனுபவம்:

மு:கு : இது ஒரு மீள்பதிவு

முன்னொரு
நாள் சோழ நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் கதையின் நாயகன் தொடக்கப்பள்ளியில் இருந்து உயர் நிலைப்பள்ளியில் சேர்ந்த மகிழ்ச்சியில் மணியாபியம் விளையாடிக்கொண்டிருந்தான்.

ஆபியம் தந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை, தவறி விழுந்ததில் முன் பல் அடிப்பட்டு நொறுங்கியது,கடுமையான வலி.

அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் நாயகனின்(நான்) தந்தையிடம் சக மாணவர்கள் கூட்டிச்சென்றனர். அவரும் தன்னுடைய பாசத்தை என் கன்னத்தில் ஒரு அறை விட்டு காண்பித்து பல் டாக்டரிடம் அழைத்துசென்றார். பல் பாதியானாலும் அப்போதைக்கு பிரச்சினை சரியானது..

சில வருடங்களுக்கு முன் சென்னையில் அப்பா கொடுத்துக்கொண்டே இருந்த பணத்தை வைத்து வேலை தேடிக்கொண்டேஏஏஏஏஏஏஏ ருந்தபோது, அந்தப்பல் வலிக்க ஆரம்பிச்சது.

வாடகை, டீ, தங்க வடிப்பான்,மற்றும் ஓரிரு வேலை உணவுக்கே சிங்கி அடிக்கும் நிலையில் இலவச பல் சிகிச்சை எங்காவது கிடைக்குமான்னு தேடினேன்.

நண்பர் VHS பார்க்கலாம்னு சொன்னான். VHS போன் பண்ணி கேட்டப்ப, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ராகாஸ் டெண்டல் காலேஜ் போகச்சொன்னங்க.

நானும் என் நண்பனும் அடுத்த நாள் அங்கே.

ராகாஸ் டெண்டல் காலேஜ், இரண்டாமாண்டு அல்லது மூன்றாமாண்டு மாணவர்கள் என்னுடைய பல்லை செக் பண்ண தயார் நிலையில் குறடு மற்றும் கிடுக்கிகளோடு.

அழகிய பல் வரிசை கொண்ட ஒரு அழகிய பல்லவி என்னை "ஆ" சொல்லுங்க , "ஈ " சொல்லுங்கன்னார். நானும் ஆஆஆஆஆ, ஹிஹிஹிஹி சொன்னேன்.

வரிசையாக பல வருங்கால பல்லவர்கள்/ பல்லவிகள் , சொல்லசொல்லினர்.என்னமோ குறிப்பு எடுத்துக்கொண்டனர்.

லேட்டரல் <எனக்கு சரியா தெரியல> அப்செஸ்,
< எனக்கு சரியா தெரியல> அப்செஸ்,
மற்றும் சில அப்செஸ்களை டயாக்னோசிஸ் சொன்னாங்க.

கடைசியா பாடம் எடுக்கிற பல்லவ பேரரசர் வந்தார். , சொல்ல சொன்னார். மாணவப் பல்லவர்கள் சொல்லாத ஒரு அப்செஸை டயாக்னோசிஸா சொன்னார்.

என்னைத்தவிர அனைவரும் ஹிஹிஹிஹி,

நண்பர் அனைத்தையும் நோட்டம் விட்டபடியே இருந்தான்.

கொஞ்சம் pus வெச்சிருக்கு, ரூட் கெனால் சர்ஜரி பண்ணிதான் சரி பண்ணனும்னு சொன்னார். தரமணி VHS இருக்கிற ராகாஸ் டெண்டல் காலேஜ் MDS மாணவர்கள் அறுவை சிகிச்சை செய்வார்கள் என அங்கே செல்ல பரிந்துரைத்தார்.

சரின்னு சொல்லிட்டு வெளில வந்தோம், நாயர் கடையில் கொஞ்சம் சக்கரை வெந்நீர் குடிச்சிட்டு , தங்க வடிப்பான் பஞ்சு கையை சுட்டதும், கீழே போட்டுவிட்டு நண்பன்.

“டேய் learn dentistry in 24 hours, dentistry for dummies” மாதிரி புத்தகம் எல்லாம் ஒன்னும் இல்லையாடான்னு கேட்டான்.கத்துகிட்டு நாமலே சர்ஜரி பண்ணிடலாம்னான்.

இவர் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது நல்லபாம்பு,நட்டுவாக்கலிகளுக்கு சர்ஜரி பண்ணிய முன் அனுபவம் உள்ளவர். இவரின் சர்ஜரி நிறைய பேரின் உயிரை காப்பாற்றியிருக்கிறது சர்ஜரி செய்துகொண்டவர்கள் இறந்து போனதால்.நல்லவேளை அப்படி எல்லாம் புத்தகம் இல்லை.

அடுத்த நாள் தரமணி VHS இருக்கிற ராகாஸ் டெண்டல் காலேஜ் போனோம், MDS படிக்கிற பல்லவர் பார்த்துட்டு, ரூட் கெனால் சர்ஜரி பண்ணிடலாம், நீங்க ரூ-30 பீஸ் VHS க்கு கட்டிருங்கன்னு சொன்னார். நல்லபடியா மிகவும் சிரத்தையுடன் ரூட் கெனால் சர்ஜரியும் பண்ணினார்.
அவரை நம்பியதற்கு எனக்கு நன்றி சொன்னார்.நானும் சைகையில் நன்றியைதெரிவித்துக்கொண்டு விடை பெற்றேன்.

வீங்கிய வாயுடன் ஒரு வாரம், முப்பதே ரூபாய் செலவில் என்னுடைய பல்வலியும் சரியானது, இந்த வாரத்தில் கிட்டதட்ட நாள் ஒன்றுக்கு 25 ரூபாய் செலவும் குறைந்தது. நான் செய்ய நினைத்த வேலையில் முன் அனுபவம் எனக்கு இல்லாமல் இருந்தாலும் யாராவது என்னை நம்பி வேலை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையும் இதன் மூலம் பிறந்தது.

அந்த அழகிய பல்லவியை மீண்டும் பார்த்தா ஹிஹிஹி சொல்லலாம்னுஆசையாதான் இருக்கு. ஆனால் குந்தவை நாச்சியார் மீண்டும் MDS பல்லவர பார்க்க வேண்டி வரும்கிறார்.

பி,கு : (<எனக்கு சரியா தெரியல> = பல்லவர்களும்/பல்லவிகளும் ஏதோ மருத்துவபேரு சொன்னாங்க எனக்கு மறந்து போச்சு)

இது ஒரு மீள்பதிவு

Sunday, December 14, 2008

பெற்றோருக்கு kindergarten படிக்கும் மகளின் பரிசு.

கடந்த வாரம் என் மகள் படிக்கும் பள்ளியில், குழந்தைகள் பரிசுப்பொருள் வாங்க கிறிஸ்ட்மஸ் பரிசுப்பொருள் கடை ஒன்று வைத்து $10 க்குள் குழந்தைகள் தங்கள் குடும்பத்தினருக்கு பரிசுப்பொருள் வாங்கும் நிகழ்ச்சி நடத்தினர். என் மகள் கொடுத்த பத்து டாலரில் அப்பாவிற்கு பரிசாக வாங்கிய காபி கப், அம்மாவிற்கு வாங்கிய போட்டோ பிரேம்தான் படத்தில் உள்ளது.தனக்காக வெறும் 25 cents க்கு ஒரு சிறிய மோதிரம் மட்டுமே வாங்கிக்கொண்டாள், பரிசு வாங்கி எங்களிடம் கொடுத்தபோது அவளின் மகிழ்ச்சியையும் எங்களின் மகிழ்ச்சியையும் எழுத்தினால் கொண்டுவரமுடியவில்லை.

என் மகள் எங்களுக்கு அளித்த முதல் பரிசை பதிவாக்கி மகிழ்கிறேன்

Thursday, December 11, 2008

ரஜினி ரசிகனுடன் முதல் நாள் ரஜினி படம் பார்க்க சென்ற அனுபவம்

ஏதோ தீபாவளியோ பொங்கலோ சரியாக ஞாபகம் இல்லை, சித்தி வீட்டிற்கு சென்றிருந்த போது, பாண்டியன் படம் ரிலீஸ் ஆகி இருந்தது, சித்தி மகன் ஒரு ரஜினி ரசிகன் என்று சொல்வதை விட வெறியன் என்று சொல்லலாம்.

கமல்ஹாசன் மாதிரி ரஜினியால நல்லா நடிக்க முடுயுமா என்ற கேள்விக்கு அவன் தரும் பதில் நாய் கூடத்தான் நடிக்கும், ஆனா ரஜினி மாதிரி ஸ்டைல் யாரு பண்ணுவா என்பதுதான் அந்த அளவுக்கு ரஜினி வெறியன்.

காலையில சாப்பிட்டு காலைக்காட்சி பார்க்க இரண்டு கிலோமீட்டர் நடந்தே அந்த தியேட்டரை அடைந்தோம். தியேட்டர் இருந்த தெரு முழுக்க கட்டுக்கடங்காத கூட்டம்,ஒரே சத்தம் ரஜினி படம் பார்க்க முதல் நாள் செல்வது இதுதான் முதல்முறை எனக்கு வித்தியாசமாக இருந்தது.இதற்கிடையில் இன்னும் பெட்டி வரலன்னு ஒரே குழப்பம் வேற.

தியேட்டர் கேட்டெல்லாம் பூட்டியே இருக்கு, டிக்கெட் கவுன்டரும் திறக்கவேயில்லை,ரசிகர் மன்றத்துக்கு மட்டும் சிறப்பு காட்சி அப்படின்னு புரளி வேற.திடீர்னு அந்த வழியா தியேட்டர் நிர்வாகம் படப்பெட்டி கொண்டு போறத பாத்தவுடனே ரசிகர்கள் கட்டைச்சுவர் ஏறி தியேட்டருக்குள்ள குதிக்கிராங்க, சுவத்துல கண்ணாடி பதிச்சிருக்கு உடைஞ்ச கண்ணாடிய சரியா உபயோகப்படுத்துறது நம்ம ஊர்லதான்,சுவத்துல ஏற செருப்பு வழுக்குதுன்னு கழட்டி வீசிட்டு ஏறி குதிக்க்கராங்க ,காலில் குத்தி ரத்தம் வருவதெல்லாம் யாரும் கண்டுக்கவேயில்லை.நானும் டிக்கெட் கவுன்டர் திறப்பாங்கன்னு பாக்கிறேன் ,ம்ஹூம் திறக்கவேயில்லை.

திடீர்னு பாத்தா பக்கத்துல நின்னுட்டு இருந்த சித்தி பையன் சுவத்துல ஏறிகிட்டு இருக்கான், நான் ஒருத்தன் அவன் கூட வந்ததேயே கண்டுக்கல, ஏறி உள்ள குதிச்சிட்டான். எனக்கு சுவர் ஏறி குதிக்க பயம்.என்னடா பண்றதுன்னு ஒரே குழப்பம். கொஞ்ச நேரம் நின்னு பாத்தேன் டிக்கர் கவுண்டரும் தொறக்கர மாதிரி தெரியல...

வேற வழி திரும்பி வீட்டுக்கு நடந்தேன், போற வழில இன்னோரு தியேட்டர்ல செந்தமிழ்ப்பாட்டுன்னு ஒரு பி.வாசு படம் போட்டிருந்தான் ஈஸீயா டிக்கெட் கெடச்சது. ஆனா பாருங்க ரஜினி படம் பாக்க போயிருந்தா கால்ல கண்ணாடி கிழிச்சிருக்கும், படம் நல்லாருக்கோ இல்லயோ ஓஓஓஓன்னு சத்தம் போட்டு மகிழ்ச்சியா இருந்திருக்கலாம், இங்க அண்ணன் பி.வாசு கட்டி வெச்சு தலையிலே ஆணியே அடிச்சிட்டாரு.

Wednesday, December 10, 2008

வாசித்தல் அனுபவம்:

நண்பர் தமிழ்ப்பறவை புத்தகம் வாசித்தல் அனுபவம் தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்.அதற்காக இந்த பதிவு, நான் குறிப்பிட்டு எந்த புத்தகமும் வாசிக்காவிட்டாலும் வாசிக்கும் பழக்கம் உள்ள பழமைபேசி போன்றோரை அழைக்கவே இந்த பதிவு.

சின்ன வயசிலேர்ந்து எதைப்பார்த்தாலும் படிக்கும் பழக்கம் என் அப்பாவிடம் இருந்து தொற்றிக்கொண்டது, சுவரில் எழுதியிருக்கும் போடுஙகம்மா ஓட்டு முதல் சிவாஜி,பத்மினி மற்றும் பலர் நடித்த தில்லானா மோகனாம்பாள் திரைப்பட போஸ்டர் வரை. இதில் எனக்கு ஒரு பயங்கரமான சந்தேகம் இந்த மற்றும் பலர் மட்டும் எப்படி எல்லா படத்திலேயும் நடிக்கிறாங்கன்னு.

வீட்டில் தினம் தினமணி வாங்குவோம், அது வீட்டில் எல்லாம் கொண்டு வந்து போடமாட்டார்கள் அப்பா வேலை பார்க்கும் பள்ளிக்கு வரும் அங்கே மந்திரவாதி மாண்ட்ரேக் படிப்பதோடு சரி. வீட்டுக்கு வந்தவுடன் அதில் வரும் சினிமா செய்திகள் படித்தல் அவ்வளவுதான் சின்ன வயசில்.உயர் நிலைப்பள்ளியில் படிக்கையில் அதே தினமணிதான் ஆனால் கொஞ்சம் அரசியல் செய்தி, டீக்கடைகளில் தினந்தந்தியின் அதிரடி செய்திகள்.

அம்மாவின் புண்ணியத்தில் தேவி,ராணி போன்ற புத்தகத்தில் உள்ள சினிமா செய்திகள்,அப்பப்போ பொன்னியின் செல்வன் படிச்சா கீழேயே வைக்கமுடியாது என்று அம்மா சொல்லக்கேட்டிருக்கிறேன்.ஆனால் இதுவரை படித்ததில்லை.குமுதம், விகடனெல்லாம் வீட்டுக்கு எப்படியோ வர ஆரம்பிச்சது, குமுதத்தில சாண்டில்யனோட அலை அரசியோ,யவன ராணியோ சரியா ஞாபகம் இல்லை அந்த வயதில் படிக்க ஆசையாக இருக்கும் புரியாவிட்டாலும்.தாத்தா வீட்டிற்கு செல்லும்போது கல்கி புத்தகம் பார்த்திருக்கிறேன், படித்த போது என் புரிதலுக்கு உட்பட்டதல்ல என்று தெரிந்துகொண்டேன்.

ஜீனியர் விகடனில் வந்த தியாகுவின் கம்பிக்குள் வெளிச்சங்கள் தான் தொடர்ந்து படிக்க ஆரம்பித்த தொடர் என நினைக்கிறேன்.எட்டாவது முதல் பத்தாவது வரை எப்படியோ கிடைக்கும் ராணி காமிக்ஸ் புத்தகம், டெக்ஸாஸ் மாகாணத்தில் அலெக்ஸ் என்பவர் மாடு மேய்த்து கொண்டிருந்தார் என ஆரம்பிக்கும் கதைகள், இப்போது நானே இங்கே சற்றும் எதிர்பாராதது.

மற்றபடி செய்தித்தாளில் விரும்பி படிப்பது ஹிந்துவில் sports பகுதி கிரிக்கெட்டிற்காக.know your english மற்றொரு பிடித்த பகுதி.கல்லூரி நாட்களில் அனைத்து விகடனும்,நக்கீரனும்,குமுதமும். எல்லாவற்றையும், குறிப்பாக சுஜாதாவின் அனைத்து தொடர்களும் படிப்பது.

குமுதத்தில் படித்த ஒரு ஹெல்மெட் கதை ரொம்ப மனசை பாதித்தது.மற்றபடி அதன் கிளு கிளு கதைகள்.

பஸ்ஸில் செல்லும்போது விகடனின் அனைத்து புத்தகங்களையும் வாங்கி படித்துவிட்டு பஸ்ஸிலேயே விட்டுவிடுவது வழக்கம்.மதுரை பேருந்து நிலையத்தில் 10 ரூபாய்க்கு மூன்று பழைய புத்தகம் பஸ்ஸில் ஏறி விற்பார்கள்,ஒருமுறை புதிய புத்தகம் என நினைத்து ஒன்றுக்கு மட்டும் 10 ரூபாய் கொடுத்து ஏமாந்த சம்பவம் உண்டு.

சோவின் துக்ளக் மற்றொரு பிடித்த இதழ், அதில் வரும் சோவின் கேள்வி பதில் பிடிக்கும், குறிப்பாக இந்த பதில் இன்னும் மறக்கமுடியாது

கேள்வி:தமிழக சமாஜ்வாதி ஜனதா கட்சி இரண்டாக உடைந்து விட்டதாமே?

சோ: அணுவை விஞ்ஞானிகளால் மட்டுமே பிளக்க முடியும் என்ற கூற்றை பொய்யாக்கிவிட்டார்கள்.

நாவல்கள் என்றால் ஒரு காலத்தில் கிரைம் நாவல்கள் மட்டுமே, பட்டுக்கோட்டை பிரபாகர்,சுபா,ராஜேஸ்குமார்.பாலகுமாரன் கதைகளை நாலு பக்கம் தாண்டி படித்ததில்லை.

தவளைக்குளம் என்று ஒரு கதைப்புத்தகம் உயர்நிலைப்பள்ளி நூலகத்தில் எடுத்து படித்திருக்கிறேன், ஆனால் கதையெல்லாம் ஞாபகம் இல்லை.வைரமுத்துவின் வைகறை மேகங்கள் கவிதை படித்திருக்கிறேன் யாரோ பரிசாக கொடுத்ததால்.

மற்றபடி நூலகம் சென்று வாசித்த அனுபவம் அதிகம் இல்லை,தஞ்சை நூலகத்தில் உட்கார்ந்திருந்த போது மூட்டைப்பூச்சி கடித்த அனுபவம் ஞாபகம் உள்ளது.

எதையாவது படிப்பேன், உருப்படியாக எதையும் படித்தேனா என்று தெரியவில்லை.வீட்டில் time book வாங்குகிறேன்,இப்போதெல்லாம் தமிழ்மணம் அதிகம் படிப்பதால் time book ஒழுங்காக படிப்பதில்லை.

நான் வாசிக்க நினைத்திருக்கும் ஒரு சரித்திர பதிவு நண்பர் இளைய பல்லவனின் சக்கர வியூகம்,

என்னை எழுத அழைத்த நண்பர் தமிழ்ப்பறவை நல்ல ஓவியர் எனபது தெரியும்,இதை படித்த பின் கண்டிப்பாக தலைமுடியை பிய்த்துக்கொண்டிருப்பார் ,அவரது அடுத்த பதிவில் அதையே ஓவியமாக வரைந்து பதிவிடுவார் நாம் அனைவரும் ரசிப்போம்

இப்படி ஒரு ஏமாற்றத்தை தந்த நான் உண்மையான இரு வாசிப்பாளிகளை எழுத அழைக்கிறேன்.

பழமைபேசி
இளைய பல்லவன்

Monday, December 8, 2008

கல்லூரி சாலை: மேல்மருவத்தூரில் கல்யாணம், பாண்டிச்சேரியில் குளியல், நெய்வேலியில் சாப்பாடு. பாகம் 2

பாகம் 1
எங்களை நோக்கி ஓடி வந்த பார் நிர்வாகத்தினரை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் நெட்டையனும், நானும் அதற்கான இழப்பீடு கொடுக்கிறோம் என்றோம். இதற்கிடையில் கடையத்தான் விடாமல் ஆம்லெட் சீக்கிரம் கொண்டுவரச் சொன்னபடியே இருந்தான்.

மேலூரான் எனக்கு இன்னும் ஒரு குவாட்டர் வாங்கிகொடுங்கன்னு மற்ற நண்பர்கள்கிட்ட சவுண்ட கொடுத்தபடியே இருந்தான்.பார் நிர்வாகத்தினர் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு உங்களோட சரக்கத்தான் உடைச்சிருக்காப்ல நீங்க நஷ்ட ஈடெல்லாம் கொடுக்கவேண்டாம் முதல்ல கூட்டிட்டு கெளம்புங்க அப்படின்னு சொன்னாங்க.

எப்படியோ ஒருவழியா வெளில இழுத்துட்டு வந்துட்டோம், கடையத்தான் ஆம்லெட் வாங்கல அதுக்கு காசு கொடுக்கலைலன்னு சொல்லி எங்க கிட்ட தான் போதையிலும் ஸ்டெடியா இருக்கிறத சொல்லியபடியே வந்தான்.

வெளில மேலூரான ஆட்டோல ஏத்துனோம், ஆனா ஆட்டோவ புடிச்சு நெறுத்தினான், ஆட்டோக்காரர், அவன எங்கிட்ட உட்டுட்டு கெளம்புங்க நாங்க பாத்துக்கறோம் ரெண்டு போட்டாதான் அடங்குவான் அப்படின்னாங்க.ஆட்டோலேந்து இறங்கி பஸ்ஸ்டாண்ட் நோக்கி நடந்தே அவனையும் நடத்திக்கிட்டே வந்தோம்.

பஸ் ஸ்டாண்ட் நெருங்குற சமயத்துல நெய்வேலி தாசன் கிட்ட வம்புக்கு போயிட்டான், நெய்வேலியாரும் டேய் மவனே நீ நெய்வேலி தாண்டிதான் ஊருக்கு போகனும் அப்படின்னு எகிற, இப்ப எங்க நிலைமை பாண்டிச்சேரி தாண்டி போக முடியுமாங்கிறதுதான்.அடுத்த நிமிடம் நெய்வேலியாரின் சட்டையில் காலர் மேலுரானின் வாயில், அவன் போட்டிருந்த மூக்கு கண்ணாடி காணாமல் போன விசயமும் சற்று நேரம் கழித்தே தெரிந்தது.காலர் இல்லாத சட்டையுடன் நெய்வேலியான் கொஞ்சம் அழகு கூடியிருந்தான்.

ஒருவழியா எப்படியோ பஸ்ஸ்டாண்ட் உள்ள வந்துட்டோம், ஆனா பாருங்க மேலூரான் வாந்தி எடுத்தபடியே ஒரு பஸ் பக்கத்தில தரையில சாஞ்சுட்டான், நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணி மூஞ்சில தண்ணி அடிச்சு பாக்கிறோம் எழுத்திருக்க மாட்டேங்கிறான்.கிட்டத்தட்ட மணி நள்ளிரவு பண்ணிரண்டு இருக்கும்.

இதெல்லாம் இங்க நடக்கும்போது பசிக்குதுன்னு சொல்லிட்டு நம்ம நெய்வேலிதாசனும்,கடையத்தானும் சாப்பிட போயிட்டாங்க.

அந்த நேரம் பாத்து வெள்ளை நிற உடையோட ஒருத்தர் அவரோட பஸ்ஸ ஊழியர்கள் கழுவுவதை பார்வையிட்டுகோண்டே , தம்பிகளா ஊருக்கு புதுசா, இப்படியெல்லாம் பண்ணா எழுந்திருக்க மாட்டான் ஓங்கி கன்னதுல ரெண்டு அப்பு,அப்புங்க அப்படின்னாரு.

நெட்டையனும் மெதுவா ரெண்டு அப்பு,அப்பினான். இப்படியெல்லாம் அடிச்சா பத்தாது நகருங்கன்னு சொல்லிட்டு விட்டாரு ஒரு அறை.அறை விழுந்த வேகத்தில் எழுந்த மேலூரான் அதே வேகத்தில் ஒரு அறை விட்டான் அந்த வெள்ளை சட்டை பஸ் ஓனரை.அவர் வெள்ளை சட்டையெல்லாம் சகதியாக.......

இன்னைக்கி நமக்கு பாண்டிச்சேரில அடிவாங்கனும்னு தலையெழுத்து போலன்னு நெனச்சிட்டே, எல்லாருமா சேந்து மன்னிச்சுருங்கன்னு சொன்னோம், அவரு ரொம்ப நல்ல மனுசன், அவன் ரொம்ப அறிவாளிங்க நீங்க அடிச்சபெல்லாம் அடிக்கல நான் அடிச்சோன திருப்பிட்டான்னு சொல்லிட்டு, நீங்க என்ன பண்ணுவீங்க சும்மா விடுங்கண்ணார், அப்படியே அந்த பஸ் கழுவிய தொழிலாளர்கள் கூப்பிட்டு இவனை அந்த கட்டண குளியல் அறைல கொண்டு போய் போடுங்கண்ணார்,.அங்கே மேலூரான குளிக்க வெச்சு உடைகள மாத்தினோம்.பஸ் ஓனருக்கும் அவருடைய தொழிலாளிகளுக்கும் எங்கள் நன்றியை சொல்லிவிட்டு அடுத்த முடிவுக்கு காத்திருந்தோம்.

கொஞ்ச நேரம் கழிச்சு நெய்வேலியானும்,கடையத்தானும் வந்தாங்க, வழக்கம்போல கடையத்தான் அந்தக்கடையில கடையில ஆம்லெட் சூப்பரு, நாங்க பாத்துக்கறோம் போயி சாப்பிட்டு வாங்க அப்படின்னான்.இதுவரைக்கும் நடந்த எதுவுமே இவனுங்களுக்கு தெரியாது.

நெய்வேலிதாசன் சொன்னான் எல்லாரும் எங்க அக்கா வீட்டிற்கு NLC குடியிருப்புக்கு போவோம், மத்தத அங்க முடிவு பண்ணுவோம் அப்படின்னான்.
ஒருவழியா எப்படியோ அதிகாலை நெய்வேலி போயி அங்க ஒரு நாள் முழுவதும் இருந்து வழக்கம் போல நல்லா சாப்பிட்டோம்.

நெய்வேலிதாசனும்,மேலூரானும் பேசின வீர வசனம்,அவர்களுக்குள் போட்டுக்கொண்ட சண்டை எல்லாம் கொஞ்சம் கூட ஞாபகம் இல்லாம,இன்னும் சொல்லப்போனா பாண்டிச்சேரின்னு ஒரு ஊருக்கு போனது கூட ஞாபகம் இல்லாம ஒரே கொஞ்சல்.

எனக்கு இன்னைக்கு நெனச்சாலும் பயமா இருக்கு..யோசிச்சு பாருங்க அந்த பாண்டிச்சேரி பஸ் ஓனர் நெனச்சிருந்தா எங்கள அந்தர் பண்ணிருக்கலாம்.அதுவும் வேற மாநிலத்தில்..

எங்கிருந்தாலும் அந்த நல்ல மனுசன் வாழ்க..

கூடுதல் செய்தி :நெய்வேலியான் விரைவில் அமெரிக்கா வருகிறான்... அவன் எனக்கு நேத்து போன் பண்ணினான் அப்ப தோனுச்சு இத பதிவா போட்டு அவர குடும்பத்தோட வரவேற்கனும்னு.

இன்றைக்கு வந்த செய்தி: நண்பர் நெட்டையன் ஆண் குழந்தைக்கு தந்தையாகிவிட்டான்.

கல்லூரி சாலை: மேல்மருவத்தூரில் கல்யாணம், பாண்டிச்சேரியில் குளியல், நெய்வேலியில் சாப்பாடு. பாகம் 1

கல்லூரி இறுதியாண்டு படிக்கும் போது, நெருங்கிய நண்பனின் அண்ணன் திருமணம்,மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி திருமண மண்டபத்தில் திருமணம், கல்லூரியில் நிறைய நண்பர்களை கொண்ட நல்ல உள்ளம் படைத்த நண்பர் என்பதால் கிட்டத்தட்ட 50 பேர் திருமணத்திற்கு ராமநாதபுரத்தில் இருந்து வந்திருந்தோம்.

மிக உயர் பதவியில் உள்ளவர் வீட்டு திருமணம் என்பதால் பரிசுப்பொருட்கள் எல்லாம் வந்து இறங்கியவண்ணம் இருந்தது.நாங்க எப்பயுமே வெறுங்கையோட போயி சாப்பிட்டு பஸ்ஸுக்கு காசு வாங்கிட்டு வரதுதான் வழக்கம். இப்பயும் அதேதான் அவன்கிட்ட ஏற்கனவே நிறைய கல்லா கட்டிதான் இங்க வந்திருந்தோம்.ஆனாலும் பரிசுப்பொருள் ஒன்னுமே கொடுக்கலண்ணா அசிங்கமா போயிடும்னு நண்பன்கிட்ட சொன்னோம், அவனும் அவங்க அப்பாகிட்ட சொல்லி ஒரு அதிகாரிய அழைச்சிட்டு அவரோட டாட்டா சுமோல பக்கத்துல இருக்கிற பெரிய ஊரான மதுராந்தகம் போனோம். அங்க ஒரே ஒரு பேன்சி ஸ்டோர்ல மொத்தமா ஒரு அஞ்சு பரிசுப்போருள்தான் இருந்துச்சு மொத்த மதிப்பு 500 ரூபாய் தேறும்.

50 பேரும் வரிசையா நின்னு அஞ்சு பரிசுப்பொருளையும் சுழற்சி முறையில மேடையில கொடுத்து போட்டோவெல்லாம் எடுத்துக்கிட்டு, மதிய கல்யாண சாப்பாடு,முக்கனிகளோட சிறந்த உணவு, உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு அதுனால கொஞ்ச நேரம் எங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறையில் ஓய்வு.

அவரவர் குழுவாக ஊருக்கோ அல்லது ஹாஸ்டலுக்கோ திரும்பினர்.
எங்கள் குழு ஒரு ஆறு பேர் பாண்டிச்சேரி போகலாம்னு முடிவாச்சு, இதுல நண்பர் நெட்டையனோட ஊர்க்கார நண்பர்கள் இருவர்,நெய்வேலி தாசன், மேலூரான்,கடையத்தான்,விருதுநகரான் மற்றும் நான் அடக்கம்.

பாண்டிச்சேரி போயி இறங்கி, பீச்சாங்கரை பக்கமா சும்மா சுத்தி பாத்துட்டு, மேலுரானின் ஒரே ஆசையை நிறைவேற்ற பாருக்குள்ளே நல்ல பாரா பாத்து களம் இறங்கியாச்சு, மேலூரான் இருக்குமிடத்தில் எப்பயுமே சாக்கிரதையா இருக்கனும்கிற விசயம் நெட்டையனுக்கும் எனக்கும் நல்லா தெரியும் முன் அனுபவம். மேலூரான்,நெய்வேலி தாசன், கடையம் மற்றும் நெட்டையனின் நண்பர்கள் நன்றாக குடித்தார்கள், நெட்டையனும் நானும் வேடிக்கை பார்த்த படி இருந்தோம் மனசுக்குள் ஒரு பயத்தோடு,

நெய்வேலி தாசன் போதை தலைக்கு ஏறியவுடன் பாண்டிச்சேரி நம்ம ஊரு மாப்பிள்ளை ஒன்னும் கவலைப்படாதீங்கன்னு சொல்லிட்டுருக்கும்போதே, மேலூரான் போதையில் டேபிளில் வைத்திருந்த பாட்டில் மற்றும் சைடிஷ் தூக்கிப்போட்டு உடைக்க ஆரம்பித்தான்.இவ்வளவு நடக்கையிலும் கடையத்தான் எனக்கொரு ஆம்லெட் என்று ஆர்டர் கொடுத்தான்.பார் நிர்வாகத்தினர் எங்கள் இருப்பிடத்தை நோக்கி விரைந்தனர்....

தொடரும்...

Friday, December 5, 2008

சின்ன கணக்கப்பிள்ளையின் தீர்ப்பு.

கிராமக் கூட்டம் அனைவரும் வந்து நம்ம ஊருக்கு என்ன தேவைன்னு சொல்லுங்க, துனைத்தலைவர் கேட்டவுடன், ஒட்டு மொத்த மக்களும் பெரும்பாலும் பக்கத்து ஊர்ல பாருங்க சுடுகாட்டுக்கு ரோடு போட்டிருக்காங்க நம்ம ஊரு சுடுகாட்டுக்கு ரோடே கிடையாது, யாரும் செத்தா வயக்காட்டு வழியா தண்ணிலதான் தூக்கிட்டு போகவேண்டியதா இருக்கு.

துனைதலைவரும் ஆமாம் நீங்க சொல்ரதும் சரிதான், இதே பஞ்சாயத்துல உள்ள பெரிய ஊருக்கெல்லாம் சுடுகாட்டுக்கு ரோடு இருக்கு நமக்குதான் இல்லை.இதுக்கு ஒரு கண்டுபிடிக்கனும். தலைவருகிட்ட சொல்லி இந்த வருசம் நம்மூருக்கான பட்ஜெட்ல ரோடு போட சொல்லிருவோம்.

அந்த சமயம் பாத்து மாமானார் வீட்டோட வீட்டோட மாப்பிள்ளையா இருக்கிற சின்ன கணக்கப்பிள்ளை வந்தாரு, உடனெ துனைத்தலைவரு சுடுகாட்டுக்கு ரோடு போடப்போர விசயத்தை பெருமையா சொன்னாரு.

எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட சின்னக்கணக்கப்பிள்ளை , சரி நம்ம ஊருல மொத்தம் எத்தனை பேரு , 200 பேரு இருப்போமா, அதுல ஒரு 50 பேரு படிக்கிற குழந்தைங்க ஒரு பள்ளிக்கூடம் கேக்கலாமே.

இல்ல பள்ளிக்கூடம் அடுத்த மாவட்டத்து ஊரா இருந்தாலும் 100 அடில இருக்கே?

சரி நியாயந்தான் பள்ளிக்கூடம் வேண்டாம். குடிக்க தண்ணிக்கு என்ன பண்றீங்க?

பக்கத்துல உள்ள கேணிகள்ல எடுத்துக்கரோம், இல்லாட்டி அந்த ஊருல குடிநீர் குழாய்ல எடுத்துக்கரோம். அவங்களும் பெருந்தன்மையா குடுக்குராங்க.

சரி இப்போ தினமும் அடுத்த ஊரு பெருந்தன்மைல தண்ணி தினமும் தேவையான தண்ணிய எடுக்கறீங்க,அவங்களோட தேவைகள் அதிகரிச்சா ஒருநாள் கொடுக்க மாட்டாங்க, தண்ணீல உரிமை உள்ளவனுக்கு அடுத்த மாநிலத்து காரன் சட்டம் போட்டு கொடுக்க சொன்னா கூட கொடுக்க மாட்டேங்கிரான், உங்களுக்கு அந்த தண்ணில உரிமையே இல்ல கொடுக்க மாட்டேன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க,இப்ப உள்ள பணத்தை வெச்சு ஒரு தண்ணீர் தொட்டி கட்டி குழாய் மூலம் சுகாதாராம தண்ணீர் தினமும் குடிக்கலாமே?அத விட்டுப்புட்டு இருக்கர 200 பேருல அஞ்சு வருசத்துக்கு ஒருத்தன் தான் சாவுரான் அத தூக்கிட்டு போரதுக்கு ரோடு கேக்கரீங்க. பணத்தை எப்படி சரியா பயன்படுத்தனும்னு தெரிய வேண்டாம?

இப்பயும் கூட சிலர் நீங்க வேற ஊருக்கு போயிட்டீங்க உங்களுக்கு எங்க சிரமம் புரியாது? சும்மா வம்பு இழுத்து உடாதீங்க அப்படின்னு திட்டவும் சின்ன கணக்கப்பிள்ளை உங்களையெல்லாம் திருத்த முடியாதுன்னு அந்த இடத்தை விட்டு கிளம்பினார்.

Monday, December 1, 2008

கல்லூரி சாலை : ஸ்காலர்ஷிப் பணமும் பாரிஸ் வீட்டு விருந்தும்.

கல்லூரி இரண்டாமாண்டு, குறிப்பிட்ட வருமானத்துக்கு குறைவாக உள்ள மாணவர்களுக்கு அரசு தரும் ஸ்காலர்ஷிப் பணம் ஆயிரம் ரூபாய் என நினைக்கிறேன்.(எனக்கு கிடையாது,அப்பா ஆசிரியர் அதனால் வருமானம் அதிகம் ). இதை பெரும்பாலும் கல்லூரி செமஸ்டர் பீஸ் /அல்லது மெஸ் பில்லில் கழித்துக்கொள்வார்கள்.அந்த மாதிரி ஒரு சமயத்துல சில நண்பர்கள் கிட்ட மிஞ்சி இருந்த பணத்தை வெச்சிட்டு நண்பன் பாரிஸ் வீட்டிற்கு விருந்து சாப்பிட போறதுன்னு முடிவாச்சு.

பாரிஸோட சொந்த ஊரு, அறந்தாங்கி பக்கம் உள்ள ஒரு சிறிய கிராமம். ஊருக்கு போயி ஒரு அதிகாலை நேரத்தில இறங்கினோம். பக்கத்தில இருக்கிர ஒரு குளத்திலதான் குளியல், அதுக்கு பக்கத்தில இன்னோரு குளம் அதுதான் நல்ல தண்ணி குளம், மக்கள் அந்த தண்ணிய எடுத்துட்டு போயி தேத்தாங்க்கொட்ட அப்படின்னு ஒன்னு குடத்துல போட்டு தெளியவெச்சுதான் குடிப்பாங்களாம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி இருந்தாலும் தண்ணீர் பெரும்பாலும் வருவதில்லை.

காலை சாப்பாடு, நாங்க ஒரு அஞ்சு பேரு போயிருந்தோம், நெறய இட்லி வெச்சுருந்தாங்க, நாங்களும் சுடச்சுட சாப்பிட்டே இருந்தோம், பாரிஸ் வந்தான் ஏண்டா பரதேசி நாயகளா, இது கிராமம்டா , இப்படி ஒருத்தன் இருவது இட்லி தின்னா வீட்ல உள்ள பொம்பளங்க என்னடா நெனப்பாங்க. அதுவும் எங்க வீட்டு இட்லி நல்லாவே இருக்காதுன்னு எங்க ஊர்ல எல்லாரும் சொலவாக, இதப்போயி இருவது, எந்திருங்கடா அப்படின்னு வெரட்டி காலை டிபன் ஒரு வழியாக முடிக்கப்பட்டது.

இட்லி போன வேகத்தை புரிந்துகொண்ட வீட்டினர் மதியத்திக்கு நெறய மட்டன் பிரியாணி பண்ணி வெச்சுருந்தாங்க, பழையபடி வெட்டல்.

அப்புறம் எல்லாரும் ரெண்டு நாள் தங்கினோம், இடியாப்பம்,சிக்கன் தூக்கம் வெட்டிப்பேச்சு, முடிச்சி ஊரு கெளம்பும்போது பாரிஸ் செஞ்ச காரியம் இதுதான்.

அவங்க அம்மாகிட்ட போயி காலேஜுக்கு ஸ்காலர்ஷிப் பணம் 2000 கட்டனும் குடு அப்படின்னான்.

அவங்க அம்மாவும் நீங்கெல்லாம் ஸ்காலர்ஷிப் பணம் கட்டியாச்சா தம்பிகளா எங்ககிட்ட கேட்டுட்டு பாரிஸ்கிட்ட ஒரு சந்தேகத்தோட/பாசத்தோட/நம்பிக்கையோட 2000 ரூபாய் கொடுத்தாங்க.

பி:கு: பாரிஸ் அந்த பணத்தை நெஜமாவே செமஸ்ட்டர் பீஸ் கட்ட முடியாத ஒரு நண்பனுக்கு கொடுத்து உதவினான்.

முடிஞ்சா இதப்படிங்க

வருங்கால முதல்வர்: தஞ்சை மாவட்டம் மற்றும் மக்கள் ஒரு மொக்கை அறிமுகம் - பாகம் 2