ஒரு வசதியான இடத்தில் தனிமையின் இனிமையை இயற்கைத்தாய் அருளிய கொடையின் மூலமாக ரசிக்கும் எண்ணத்தோடு செயற்கையாக செய்யப்பட்ட தங்க வடிப்பானின் உதவியுடன் ஊண்றுகோல் இல்லாமல் இயற்கை அண்ணையின் விசித்திரமான மேடு பள்ளங்களில் செருப்பில்லாத கால்களோடு நான் நடத்துகொண்டு தவளையின் தன்னிகரில்லா ஒலியை என் காது மடல் வழியாக ரசித்துக்கொண்டிருக்கும் போது பின்னணி இசை போல் சீறிய பாம்பின் சீற்றம் எனக்குப் பயத்தைக்கொடுத்தாலும் தவளையை முழுங்கியபின் பாம்பின் கவனம் என் மீது இல்லை என உறுதிப்படுத்திக்கொண்டபின், என்னுள் உணவுச்சுழற்சியை பற்றிய எண்ணம் ஆக்கிரமித்தது, ஆக்கிரமிப்பு வடமொழியா, தமிழ்மொழியா என்று யோசித்துக்கொண்டே , தூண்டிலில் உணவுச்சுழற்சி விதிகளின் படி அனுமதிக்கப்பட்ட செய்கையாக மண்புழுவை கோர்த்தேன், பாம்பு வாயில் தவளை இருப்பதால் அது என் தூண்டிலில் மாட்டாது என்ற நம்பிக்கை என் ஆழ்மனதில் ஓடியது, தூண்டிலை வீசினேன் தக்கை மிதப்பதை பார்த்துக்கொண்டே இருப்பது மனதை ஒருநிலைப்படுத்தும் இது ஒருவகை தியானம் என்ற என் அப்பன் கூறியது நினைவுக்கு வந்த வேளையில், கொண்டு வந்த ஐஸ் பெட்டியில் இருந்த பீர் பாட்டில் ஞாபகம் வந்ததை தடுக்கமுடியவில்லை, பீர் பாட்டில் திறப்பதற்கு திறப்பான் கொண்டுவரவில்லை என்று தெரிந்ததும் என் கூரிய சிங்கப்பல்லால் மூடியை திறத்து தண்ணீரில் விழுந்துவிட்ட மூடி இயற்கையை குப்பையாக்கும் என் அறிவு சொல்லினாலும் என் உடனடித்தேவையாக, அரை பீரை யோசிக்கும் முன்னரே வயிற்றுக்குள் தள்ளியிருந்தேன், இந்நேரம் தவளையும் பாம்பின் கழுத்துப்பகுதியை தாண்டி உள்ளே சென்றதை பாம்பை உற்று நோக்கியதில் அறிய முடிந்தது.
முற்றுமாக முற்றிய மூங்கிலின் பிளாச்சுகளால் கைதேர்ந்த ஆசாரியால் செயற்கையாக செய்யப்பட்ட இயற்கை பாலத்தில் உட்கார்ந்தபடி நாணலால் செய்யப்பட்ட தக்கையை மீண்டும் பார்த்தன், அசைவற்று மிதந்தது எனக்கு சற்றே அயர்ச்சி தந்தது, அயர்ச்சியின் பலனாக சிங்கப்பல் மீண்டும் வேலை செய்ய மற்றோரு பீர் பாட்டில் காலியாகியிருந்தது, தவறி தண்ணீரில் விழுந்த பீர் பாட்டிலை சிறிய மீன்கள் சுற்றி வந்தது, அவற்றிக்கு குடிக்கும் வயது இன்னும் ஆகவில்லை, ஆனாலும் பீரை மோந்து பார்க்க வயது வரம்பு இல்லை என்று ஆறுதல் பட்ட்டுக்கொண்டேன். எங்கிருந்தோ பறந்து வந்த காக்கை என் தலையில் எச்சமிட மிச்சமிருந்த பீரை தலையில் ஊற்றி எச்சம் கழுவிய பின்னர் தோன்றியது எதிரில் தண்ணீர் நிறைய இருப்பது.
குடித்த பீருக்கு இப்போது உச்சா வந்தது, நீர்நிலையை அசுத்தப்படுத்தக்கூடாது என்ற சமூக அறிவு இருந்ததால் சற்று தூரம் சென்று வெட்ட வெளியில் உச்சா அடித்தேன், உச்சா அடித்ததன் விளைவில் போதை சுத்தமாக இறங்கியதால் மீண்டும் ஒருமுறை சிங்கப்பல்லில் வலி வந்தது, குடித்தபின் பிடித்த மீன் சாப்பிட ஆசைப்பட்டு மீண்டும் தக்கையைப் பார்த்தேன், தக்கை அங்கிமிங்கும் ஆடியது மாட்டியிருந்தது கயல்விழி கொண்ட கெண்டை மீன், மீனை தூண்டில் முள்ளில் இருந்து எடுக்கும்போது என்னையும் அறியாமல் பக்கத்து ஊர் கயல்விழிக்கு தூண்டில் போட்டிருந்தால் மாட்டியிருப்பாளோ என்றும் தோன்றியது, மனிதப்பிறவியாய் பிறந்ததால் இப்படியெல்லாம் தோன்றுகிறது என்று மனதைத் தேத்திக்கொண்டு கிடைக்காத கயல்விழி மறந்து , கிடைத்த கயல்விழியை உண்ணும் மனநிலைக்கு மீண்டு வந்தேன்.மீனை சுத்தம் செய்ய கத்தி தேடினேன், மறந்து விட்டிருந்தது தெரிந்தது, ஆதிமனிதன் போல் தீயிட்டு திண்ணலாம் என்ற எண்ணத்தில், சுற்றிக்கிடந்த சுள்ளி பல பொருக்கி, தங்கவடிப்பான் பற்ற வைக்கும் அதே லைட்டர் மூலம் பற்றவைத்து தீமூட்டி மீனை மேலே போட்டு வாட்டினேன்.
சற்று தூரத்தில் திடீரென மரங்கள் பற்றி எரிந்தன, உடனடியாக உணர்ந்தேன் சுள்ளித்தீயில் பறந்த கங்கு ஒன்றுதான் காரணம், ஐஸ் பெட்டியில் தண்ணீர் எடுத்து அணைக்க முயன்றேன், தீ எல்லை தாண்டிய நிலையில் ஒன்றும் செய்யமுடியாது என்றும் உணர்ந்தேன், இயற்கை ஆர்வலனான எனக்கு இயல்பாக இப்போது தோன்றியது தப்பித்து விடு, முடிந்தவரை என் சாமான்களை சமர்த்தாக எடுத்துக்கொண்டு மனிதன் ஆகினேன். அன்று மாலை காடுகளை அழிப்பது தவறு என்று எனது உரையை நான் முடிக்கும்போது எழுந்த கைதட்டல் ஓசை என் செவியில் தேனாய் பாய்ந்தது.