Monday, August 31, 2009

விகடனுக்கு யாராச்சும் சொல்லுங்கப்பா

விகடன் வாழ்நாள் சந்தாதாரன் ஆகிய நான், கடந்த சில வாரங்களாக வைரஸ் பிரச்சினையால் அந்தப்பக்கம் உள்ளே செல்ல முடியவில்லை. விகடனுக்கு யாராவது இந்த வைரஸ் பிரச்சினையை சரி செய்யச்சொல்லி சொல்லுங்கப்பா.

இதைப்படிக்காதீங்க.
மிஸ்டர் மியாவ்.
எல்லாவற்றிற்கும் மேலாக N.R மூர்த்தியின் கமெண்ட்

ஆகியனவற்றை படிக்காமல் தூக்கம் வராமல் தவிக்கும்

குடுகுடுப்பை.

Saturday, August 29, 2009

கேலிக்கூத்து

பிகர்கள் இல்லா

கலரற்ற வெறுங்கானகம்

இரையும் பாட்டிகள்

இரையாகும் தாத்தாக்கள்

மத்தியானத் தூக்கத்தில்

முடிச்சு அவிழ்க்கும் பேரன்கள்

எந்நேரமும் நாசி துளைக்கும்

கடுக்காய் மரப்பட்டை

சுல்லென்று ... சரக்குண்டு ...

சுண்டி இழுக்கும் கஞ்சா உண்டு ...

பக்கத்தில் கடைப் பாட்டி ...!!!

யாரங்கே ... ?

தண்ணி அடித்து

தானாய் ஆடும் கேலிக்கூத்து

பேரன் கிழவியிடம் கேட்டான்

உங்கண்ணனுக்கு பேத்தி இருக்காளா?!

lகளிக்கூத்து இங்கே

Tuesday, August 25, 2009

வெள்ளை அண்டாத பல்

செங்கல்லை குழைத்துக் குழைத்து
பல்லில் தேய்த்து தேய்த்து
பரத்தி விட்ட பின்னும் கூட
அந்த பல்லொன்றும்
வெள்ளையாகிவிடவில்லை ...

அன்று மட்டுமல்ல
என்றென்றும்
காவி தாண்டி
வெள்ளை நுழைவதில்லை ...

வெத்திலைக்கு ஒரு நிறம்
பாக்குக்கு ஒரு நிறம்
புகையிலைக்கு ஒரு நிறம்
சுண்ணாம்புக்கு ஒரு நிறம்
பான்பராக்கிற்கு ஒரு நிறம்
வெள்ளை தவிர எல்லாமுமாய்
முலாம் பூசுவதைப் போல
பூசிப் பூசிப் பழகிய பல்
வண்ணங்கள் நிறைந்த இந்தப்பல்
நாற்றம் அடிக்காததில்
சிறிதொரு சமாதானம்
பிறிதொரு சாந்தம் ...
சாராயக் குடுவையில்
பொங்கிச் சிந்திய கள்,பீர்,வண்ணமடித்த
நாட்டுச்சரக்கு குழப்பி
அடித்த பின்
சொத்தென்று கீழே விழுந்தேன்
தெளிந்து எழுந்து
செங்கல் தேடி குழைத்து
தேய்க்கப்பல் தேடினேன்
எங்கோ விழுந்து காணாமல் போயிருந்தது
வர்ணக் கலவைகளில் ...
வதைப்பட்டிருந்த
அந்த பல் செட்?!

ஒரிஜினல் பல் இங்கே

Wednesday, August 19, 2009

முனியங்கோயில் மந்தை

என்னுடைய கிராமத்தின் அருகில் இருக்கும் ஒரு பெரிய கிராமத்தில், மாசி மகத்தன்று முனியங்கோயிலில் நடக்கும் ஜல்லிக்கட்டு திருவிழா அனுபவம் பற்றி மூன்றே கதாபாத்திரங்களை வைத்து மந்தை நிகழ்வுகள் உரையாடல் வழியாக.

கதாபாத்திரங்கள்: முனியங்கோயில் நண்பர், புதுக்கோட்டை லங்கர் கடைக்காரர் மற்றும் நான்.

முனியங்கோயில் மந்தை நடக்குமிடம் என் ஊரிலிருந்து, ஒரு கிலோமீட்டர் தூரமே, வயல்வழியாக நடந்து முனியங்கோயிலுக்கு மாலை மூன்று மணியளவில் சென்றடைந்தேன். மந்தையில் ஜல்லிக்கட்டு ஆரம்பம் ஆகும் நிலையில் இருந்தது.
-------------------------------------------------------------------

வாடா மாப்பிளை, மந்தைக்கு மாடு அடக்க வந்தியளா?

இதெல்லாம் ஒரு மந்தை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாதிரி மாட்டத் தொழுவில விட்டு அடக்கினா அது வீரம், நீங்க கோயில் மாட்டுக்கழுத்துல கயிர கட்டிவிட்டு பிடிக்காதவன் ஊர் மாடு வந்தா கயித்தை இழுத்து மாட்ட மடக்கிருவீங்க, இந்தக்காளை மாட்ட பாக்க நாங்க ஒன்னும் வரலை , உங்க ஊரு கிடாரிகக்கண்ணுகளெல்லாம் இன்னைக்கு குளிச்சிட்டு, பூவும் பொட்டுமா வருவாளுக எதாவது தேறுதான்னு பாக்கலாம்னுதான் வந்தோம்.

நாங்க மட்டும் என்னா காளை மாடு அடக்கவா மந்தை நடத்துறோம், உங்களை மாதிரி இளிச்சவாயங்க யாராவது வந்து எங்கூரு புள்ளைகளை கணக்கு பண்ணுவீங்கன்னு தெரியும், மாட்டுறவனுக்கு இன்னைக்கு ராத்திரியே கல்யாணந்தான். சரி எவ்ளோ காசு வெச்சிருக்க எடு , சூதாட்டத்திலே ஒரு ரவுண்டு போய் ஜெயிச்சிட்டு வருவோம்.

டேய் உங்கூரு மந்தைக்கு வந்திருக்கேன் நீதாண்டா எனக்கு செலவு பண்ணனும்.சூதாட்டம் விளையாட என்கிட்ட காசு கேக்கிற வெட்கமா இல்லை.

என்ன மாப்பிளை எங்கூரு பள்ளிக்கூடத்திலதான் நீ பத்து வருசம் படிச்ச இன்னும் எங்களைப்பத்தி தெரியாம இருக்க, பச்சைத்தண்ணியும் சத்துணவையும் தவிர எதையும் எங்ககிட்ட நீ ஓசில தேத்தமுடியாது மாப்பிளை. பள்ளிக்கூடத்துக்கு டொனேசனே நாங்க வெளியூர்காரங்க தலைய தடவித்தான் வாங்குவோம், நன்கொடை நோட்டிஸ்போர்ட்ல சுத்துப்பட்டு கிராமத்தான் பேரா இருக்கும் எங்க பேரு இருக்கவே இருக்காது.

அது தெரியும், ஆனா அதுக்குன்னு திருவிழாவுக்கு வந்தவங்கிட்டயே காசு கேக்கறது அநியாயம்டா, சரி இந்தா பத்து ரூபாய்தான் இருக்கு.
---------------------

சூதாட்டம் நடக்கும் இடம்.

என்ன கொட்டை உருட்டறவரே எந்த ஊரு நீங்க?

நான் புதுக்கோட்டைங்க.

என்னா புதுக்கோட்டையா அங்கேயும் திருவிழா சீசன்தானே அங்கே கொட்டை உருட்டாம இங்க வந்து இருக்கீங்க.

அது ஒன்னுமில்லீங்க தம்பி ,புதுக்கோட்டை மாவட்டத்தில சூதாட்டம் சரியா போகாது, அங்க வயசு வித்தியாசம் இல்லாம எல்லாரும் குறவன் குறத்தி டான்ஸ் பாக்க போயிருவாங்க,கையில வெச்சிருக்கிற அஞ்சு, பத்தையும் குறத்தி ஜாக்கெட்ல குத்திட்டு வந்துருவாங்க, அதே தஞ்சாவூர் மாவட்டத்திலன்னா அப்பன், மவன் வித்தியாசம் இல்லாம சூதாட்டம்,சீட்டு விளையாட்டுன்னு காசு புரளும் நாமளும் கொஞ்சம் காசு பாக்கலாம் தம்பி.

ஓ அப்படியா, சரி பத்து ரூபாய் கிளாவர்ல போடறேன்.

வை சார் வை சார் வை, பத்து வெச்சா இருபது, டவுளுக்கு முப்பது.

டேய் கிளாவர் அடிக்கலடா , இருந்த பத்து ரூபாயும் போச்சு, நான் கொஞ்சம் வேடிக்கை பாத்துட்டு ஊரப்பாக்கப்போறேண்டா.

இருடா, இவங்கிட்ட அந்தப்பத்து ரூபாயை எப்படி திருப்பி வாங்கிறேன்னு பாரு

<கெட்டவார்த்தை> என் பணம் பத்து ரூபாய் போச்சுடா
<கெட்டவார்த்தை> என் பணம் பத்து ரூபாய் போச்சுடா
<கெட்டவார்த்தை> என் பணம் பத்து ரூபாய் போச்சுடா
<கெட்டவார்த்தை> என் பணம் பத்து ரூபாய் போச்சுடா

தம்பி நல்லா இருப்பீங்க இந்தாங்க உங்க பத்து ரூபாய் என் பொழப்ப கெடுக்காதீங்க, தயவு செய்து வேற இடத்துக்கு போயிருங்க..இங்க வந்ததுக்கு நத்தம் சாந்தி ஜாக்கெட்ல பத்து ரூபாய குத்திட்டு நான் எங்கூர் திருவிழாவிலேயே இருந்திருக்கலாம்.
--------------------------


இந்தாடா உன் பத்து ரூபாய், எங்கூரு புள்ளையள பாக்கத்தானே வந்த, போயி யாருக்காவது பூந்தி வாங்கி குடு.

உன் தங்கச்சிக்குதான் பூந்தி வாங்கி கொடுக்கலாம்னு இருந்தேன், அவ ஏற்கனவே பூந்தி சாப்பிட்டுகிட்டு இருக்கா. நான் இப்படியே குறுக்குப்பாதையிலே போய் பத்து ரூபாய்க்கு ஒரு மூட்டைய தூக்கிட்டு, பள்ளிக்கூடத்துல படுத்து தூங்கவேண்டியதுதான் இன்னைக்கு.

மூட்டைக்குறிப்பு: பட்டை சாராயம் பாக்கெட் பத்து ரூபாய், எங்க ஊர்ல அதை மூட்டைன்னு குழூவுக்குறில சொல்வாங்க

Tuesday, August 18, 2009

செந்தழல் ரவி, அது சரி, தமிழ்நம்பி ,இளா மற்றும் பிழைகளுடன் குடுகுடுப்பை.

தமிழ்மண நட்சத்திர வாரப்பதிவுகள் எழுத எனக்கு நிறைய நாட்கள் இருந்தது, என்னுடைய வேலைப்பளு மற்றும் உடல் நலன் காரணமாக வரலாறுபிக்சன், பாஸ் பண்ணது போதும் நிறுத்துடி பதிவுகள் தவிர அனைத்தையும் அன்றன்றே எழுதி அவரச கோலத்தில் வெளியிட்டு விட்டேன்.

நான் எழுத நினைத்த சில பதிவுகள் நிறைய கருத்தியல் எதிரிகளை பெற்றுத்தரக்கூடும் என்பதால், அவைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தை நான் இன்னும் அடையாத காரணத்தினால் அவைகளை எழுதாமல் வெறும் மொக்கைப்பதிவுகளோடு நிறுத்திக்கொண்டேன்.

வரலாறுபிக்சன் பதிவு நல்ல வரவேற்பு பெறும் என எதிர்பாத்தேன், நான்கு தமிழிஸ் வோட்டுக்களை மட்டுமே பெற்று சேரனின் மாயக்கண்ணாடி போல ஆகிவிட்டது கொஞ்சம் வருத்தமே.

நண்பர்கள் செந்தழல் ரவி, அது சரி இன்னும் சிலர், நான் நிறைய எழுத்துப்பிழைகள் மற்றும் வாக்கியப்பிழைகளோடு எழுதியதை தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டினார்கள். (குறிப்பாக 31 நூற்றாண்டு என்பது முப்பத்தொன்றாம் நூற்றாண்டு, 9 வதையே என்பதை ஒன்பதாவதையே என்றும் எழுதியிருந்தால் நன்றாக இருக்கும் என்றும், இன்னும் பல).

செந்தழல் ரவி இன்னும் ஒரு படி மேலே சென்று, பள்ளிக்கூடப்பையனின் எழுத்துக்கள் போல் உள்ளது என்று உரிமையுடன் கடிந்து கொண்டார்.இளா நட்சத்திர வாரத்தில் பதிவுகள் இன்னும் நன்றாக எழுதியிருக்கவேண்டும் என்றார். தமிழ்நம்பி என்னை மொழிச்செப்பத்தோடு எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும் என்றார்.

பதிவு எழுதுவதில் தரக்கட்டுப்பாடு வைத்துக்கொள்ளாமல் மனம்போன போக்கில் இலக்கில்லாமல் எழுதி வெளியிடுவது அதனைப்படிக்கும் பலரை எரிச்சல் அடையவைக்கும் என்று இதன்மூலம் அறிந்துகொண்டேன். இது என் இடம் நான் இப்படித்தான் எழுதுவேன் என்று மறுதளித்து, நான் திருந்தும் வாய்ப்பை நானே இழக்க விரும்பவில்லை.அதனால் இனி எண்ணிக்கையை குறைத்து வாரம் ஒரு இடுகை எழுத்து/வாக்கியப்பிழைகள் இல்லாமல் எழுத முயற்சிக்கிறேன்.

Sunday, August 16, 2009

கனவு முயற்சி தன்னம்பிக்கை


ஹரிணிக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று சென்ற ஆண்டு என் மனைவி முடிவெடுத்து, என்னிடம் ஹரிணியை நீச்சல் வகுப்பிற்கு அனுப்ப போகிறேன், வாரம் இருபது நிமிடம் வகுப்பு, மாதத்திற்கு $85 கட்டணம் என்றாள், எனக்கு நீச்சல் தெரியும் நான் கற்றுக்கொடுக்கிறேன் என்றேன். உங்களை நம்பி நீச்சல் குளத்தில் பாப்பாவை விட முடியாது, முறையாக நீச்சல் கற்றுக்கொண்டால்தான் முடியும் என முடிவு செய்து, இரண்டு மாதம் அந்த வகுப்பில் நீச்சல் கற்றுக்கொண்டாள், பட்டிக்காட்டில் பிறந்த எனக்கு அவர்கள் நீச்சல் கற்றுக்கொடுக்கும் முறையில் ஏனோ மனம் ஒட்டவில்லை. ஒரு மாதத்தில் ஐஸ் ஸ்கீரீம் ஸ்கூப், floaty என சில புதிய வார்த்தைகள்தான் கற்றுக்கொண்டால் ஆனால் நீச்சல் கற்றுக்கொள்ளவில்லை.

இந்த ஆண்டு கடந்த மாதத்தில் நீச்சல் குளத்தில் நானே அவளுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்தேன், ஆனாலும் அவளிடம் பயம் போகவில்லை, கையை வீசி நீச்சலடிக்காமல் என்னைப்பற்றிக்கொள்வதிலேயே குறியாக இருந்தாள், ஆழம் என்னவோ மூன்று அடிதான் அவள் மூழ்கும் அளவுக்கு ஆழம் இல்லை. நான் அவளிடம் நீச்சல் என்பது தண்ணீரில் இருக்கவேண்டும், ஆனால் தரையைத்தொடாமல் இருக்க முயற்சிசெய்யவேண்டும் என்றேன்.

இரண்டு நாளில் கொஞ்சம் கொஞ்சமாக நான் சொல்வதில் அவளுக்கு நம்பிக்கை வந்தது, ஒரு நாள் அவளாக

I think I can do it,I think I can do it,I think I can do it,I think I can do it,I think I can do it,I think I can do it
I think I can really do it,I think I can really do it.

என்று கண்ணை மூடிக்கொண்டு சொன்னாள், பின்னர் மூன்று மீட்டர் தூரத்தை கால் தரையில் படாமல் கடந்தாள்.இந்த தன்னம்பிக்கை எனக்கு மிகவும் ஆச்சர்யம் தருவதாக இருந்தது. அதே நாளில் தொடந்து பதினொரு முறை மூன்று மீட்டர் தொலைவைக்கடந்தாள். அவங்க அம்மாவை கூப்பிட்டு நீச்சலடித்து காண்பித்தாள், இன்னமும் மூன்று அடி ஆழப்பகுதியை தாண்டி நான்கு அடிப்பகுடிக்கு செல்வதில் அவளுக்கு பயம் இருக்கிறது, ஆனால் அவள் கடந்துவிடுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.அவளுக்கும் நான்கு அடி ஆழப்பகுதியிலும் நீச்சல் கற்றுத்தந்துவிடுவார் என்று அப்பா மேல் நம்பிக்கை இருக்கிறது.

நீச்சலடிக்கவேண்டும் என்ற அவளின் கனவு, இலக்கை நோக்கிய விடாமுயற்சி,பயிற்சி, மனதினுள் அவளுக்குள்ளாகவே உருவாக்கிக்கொண்ட நம்பிக்கை எனக்கும் சிலவற்றில் நம்பிக்கையை அளித்திருக்கிறது.
---

நட்சத்திரப்பதிவராக வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கும், தொடர்ந்து நகைச்சுவைப்பதிவுகள் என்ற பெயரில் நான் எழுதுபவற்றை படித்து ஆதரவு தரும் வாசகர்களுக்கும் நன்றி.

Friday, August 14, 2009

மொக்கையா ஒரு தேர்வு.

ராகவன்: டேய் மாப்பிள்ளை நான் இன்னைக்கு காலேஜூக்கு வரலை, இண்டர்வெல்ல ஹாஸ்டல் பக்கம் வந்தீன்னா கேண்டீன்ல கோல்ட் பிளேக் பிளையின் இரண்டு வாங்கிட்டு வாடா?

நடேசன் : ஏன் ஹாஸ்டல்ல இருந்து என்னக்கிழிக்கப்போற அங்க வந்து உட்காந்து பாடத்தை கவனிக்கலாம்ல.

ராகவன்: அந்த ஏர்வாடி பார்ட்டி வந்து அதை வெச்சிக்கிட்டீங்கனாக்கும் இதை எடுத்துக்கிட்டீங்கநாக்கும்னு சொல்றத கேட்டு நாக்கும் தவிர எதுவும் புரியறதில்லை. அதுனால இன்னைக்கு உருப்படியா அந்த மரமல்லி மரத்தில் எத்தனை பூ பூத்திருக்குன்னா முழசா எண்ணப்போறேன்.

நடேசன்: ஏண்டா மரத்தில எத்தனை பூ பூத்திருக்குன்னு எண்ணறதெல்லாம் ஒரு பொழுதுபோக்காடா? உருப்படியா ஒரு ஐடியா சொல்றேன் அதைக்கேளு fast reading அப்படின்னு ஒரு காண்செப்ட் இருக்கு, ராஜ் பப்னான்னு ஒருத்தர்தான் அத எழுதிருக்கார், அந்த புத்தகப்படி ஒருதடவை படிச்சா அடுத்த பதினெட்டு மணிநேரத்தில 80 % மறந்துருமாம் , அதுனால வேகமா படிக்கனும், பதினெட்டு மணி நேரத்திற்குள் இரண்டு,மூனு முறை திரும்ப படிச்சிட்டா 95% மேல மறக்காதாம். இந்தாடா இதுதான் அந்தப்புத்தகம் என்ன சொல்லிருக்காருன்னு படிடா.

ராகவன்: பதினெட்டு மணி நேரம் இருக்கேடா, நம்ம எப்பயும் அடுத்த நாள் காலைல பரீட்சைக்கு ராத்திரி 12 மணிக்கு மேலதானே படிப்போம் , படிச்சு மறக்கறதுக்கு முன்னாடியே பரீட்சையே முடிஞ்சுரும், அப்புறம் மறந்தா என்னா இருந்தா என்னடா?

நடேசன்: டேய் வெண்ணை இப்படி படிச்சு பாஸ் பண்றதுல என்னடா புண்ணியம் நான் சொல்றத முயற்சி பண்ணிப்பாருடா? நானும் இந்த முறை தேர்வுக்கு இன்ஸ்ட்ரூமெண்டேசன் பாடத்தை பப்னா சொன்னது மாதிரிதான் படிக்கப்போறேன், கண்டிப்பா 90% மார்க் வாங்க முடியும் அதோட காலத்துக்கும் மறக்காதுடா.
-----------------

இருவரும் தேர்வுக்காக பப்னா புத்தகத்தையும், இன்ஸ்ட்ரூமெண்டேசன் புத்தகத்தையும் வைத்து தீவிரமாக படித்தனர்.தேர்வும் முடிந்து முடிவுகள் வந்தது, எப்பயும் குறைந்தபட்ச மார்க் எடுத்து பாஸ் பண்ணும் ராகவன் இந்த முறை 90% வாங்கிவிட்டான்.

நடேசன் : பரவாயில்லைடா நான் சொன்ன மாதிரி படிச்சு 90% வாங்கிட்ட, ஆனா நானும் தீவிரமா பப்னா சொன்ன மாதிரிதான் படிச்சேன், ஆனா பேப்பர் புட்டுகிச்சுடா ஆச்சர்யமா இருக்கு, எங்கியோ தப்பு பண்ணிட்டேன். நீ எப்படி படிச்ச சொல்லு.

ராகவன்: அது ஒன்னும் இல்லடா , பப்னா புத்தகத்தில முத மூனு பக்கத்தை நல்லா மனப்பாடம் பண்ணிட்டேன் , அப்படியே இன்ஸ்ட்ரூமெண்டேசன் புத்தகத்திலே ஹெட்டிங்கெல்லாம் நல்லா மனப்பாடம் பண்ணிட்டேன். பரிட்சையிலே , கேட்டிருக்க கேள்விக்கு தகுந்த மாதிரி ஹெட்டிங் எழுதி பச்சை கலர் ஸ்கெட்ச்ல அண்டர்லைன் பண்ணிட்டேன். அதுக்கு கீழே பப்னா புத்தகத்தில் படிச்சத அப்படியே எழுதினேன், இடையிடையில டிரான்ஸ்டியூசர் அப்படின்னு போட்டு ஊதா கலர் ஸ்கெட்ச்ல அண்டர்லைன் பண்ணினேன். இது மெயின் சீட்டு முடியுற வரைக்கும் கை கொடுத்துச்சு. அப்புறம் பப்னா புத்தகத்தில படிச்சது நிறைய மறந்து போச்சு ,என்ன பண்றதுன்னு யோசிச்சேன் அடிசனல் சீட்டு வாங்கி மத்த கேள்விக்கு தகுந்த மாதிரி ஹெட்டிங்க மாத்திட்டு மெயின் சீட்ட பாத்து அப்படியே எழுதி வெச்சிட்டேன், அண்டர்லைனும் கரெக்டா போட்டுட்டேன் அவளோதாண்டா.

நடேசன்: ???????????!!!!!!!!!!!!!!!!

ஏன் கூலி?

நான் பதிவராகி எழுதிய முதல் பதிவு, சென்ற ஆண்டு இதே நாளில் எழுதப்பட்ட பதிவு. ஒரு ஆண்டு நிறைவை ஒட்டி அதே பதிவை மீள்பதிவு செய்கிறேன்.இந்த ஒரு ஆண்டு காலத்தில் நூறுக்கும் மேற்பட்ட வாசகர்களை பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது. தொடர்ந்து நீங்கள் தரும் ஊக்கமும் இடித்துரைத்தலும் என்னை மேம்படுத்திக்கொள்ள உதவும்.

நன்றி

குடுகுடுப்பை.



--------------
உலக மக்கள் தொகையில் சரிபாதி உள்ள இந்தியா ,சீனா மற்றும் சில ஆசிய நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் (நான் உட்பட) யாருக்காக உழைக்கிறோம் ,வெகு சிறிதளவே மக்கள் தொகை கொண்ட மேலை நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பயன்படும், ஒரு சில முறை உபயோகித்து தூக்கி எரியும் பொருட்களை உருவாக்கியோ அல்லது மேலை நாட்டு நிறுவனம் உருவாக்கும் மென்பொருள் ஒன்றில் ஒரு கூலியாக பங்கெடுத்து நம் உழைப்பை விற்று மிதமான சுக வாழ்க்கை வாழ்கிறோம்.

எனக்குள் பல கேள்விகள், நமது அதிக மக்கள் சக்தியை ஒரு சிறிய பகுதி மக்களுக்கு உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏன்?

நம்முடைய கல்வி முறை ஏறக்குறைய மேலை நாட்டினற்கு எப்படி வேலை செய்வது என்பதை சார்ந்தே உள்ளது(அல்லது நமது மன நிலை அப்படி உள்ளதா?) நமது ஆங்கில அடிமைத்தனமா? அப்படியும் தோன்றவில்லை.

பெரும்பாலான சீன பொருளாதாரம் மேலை நாடுகள் உபயோகிக்கும் ஆடம்பர / அத்தியாவசிய பொருடகள் சார்ந்தே உள்ளது.

இதுதான் கடவுள் நமக்கு இட்ட விதியா? சுமார 250 கோடி மக்கள் தொகை உள்ள நாம் , இந்த 250 கோடி மக்களுக்கும் உழைத்து உழைத்து அதன் மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள முடியாதா?

உலகமயமாக்களில் நமது பங்கு நமது உழைப்பை மட்டும் விற்பது தனா?
இதற்கெல்லாம் தீர்வு என்ன?

பி.கு : என் முதல் பதிவு. நான் சொல்ல நினைத்த கருத்தை எழுதி இருக்கிறேன்.ஒத்த / மாறுபட்ட கருத்துள்ள பதிவர்கள், ஒரு நல்ல பதிவை தர வேண்டுகிறேன்.

Thursday, August 13, 2009

தொவையல் : ஸ்டூடண்ஸூ, ஐபோனூ,இன்சூரன்சூ

தொவையல் 1:

கல்லூரியில் முதல் நாள், அப்பாவும் நானும் சென்றிருந்தோம், பெற்றோர்களுக்கான சிறப்பு பகுதியில் அப்பா உட்கார வைக்கப்பட்டார், புதிதாக சேர்ந்த முதலாண்டு மாணவர்களாகிய நாங்கள் வரிசையாக எங்களுக்கென ஒதுக்கப்பட்ட வகுப்பிற்குள் ஒருவொருவராக உள்ளே சென்றோம். நான் சென்றபோது மூன்று நபர்கள் அங்கே இருந்தனர்.,ஒவ்வொருவரிடமும் நான் குடுகுடுப்பை, தஞ்சாவூர் என அறிமுகப்படுத்திக்கொண்டு அவர்களிடமும் அதையே விசாரித்தேன்

முதலாமவர் நான் முகமது , ஊர் தூத்துக்குடி அப்படின்னார், அடுத்தவரிடம் சென்றேன் நான் முகமது , ஊர் தூத்துக்குடி அப்படின்னார். அடுத்தவரிடம் கேட்டேன் நான் முஹ்ம்மத் , ஊர் தூத்துடி அப்படின்னார். என்னடா முதல் நாளே நம்மள இப்படி ஓட்டுறாங்களேன்னு ஆடிப்போய் பேந்த பேந்த முழிச்சேன். கொஞ்ச நேரத்திலே இன்னொருத்தர் தெலுங்கு பட ஹீரோ கணக்கா உள்ள நுழைஞ்சார், உங்க பேரு ? நான் குட்டி, ஊர் தஞ்சாவூர் அப்படின்னார். எனக்கு இப்போ கொஞ்சம் தைரியம் வந்துச்சு, தெலுங்கு ஹீரோ பக்கத்தில இருக்கும்போது என்ன பயம் .

ஒரு வழியா நாங்க எல்லாரும் விடுதியில் ஒரே அறையில் அடைக்கப்பட்டோம்.பின்னர் தூத்துடிக்காரங்களோட நானும் சேர்ந்து வில்லனாயிட்டேன், நம்ம தெலுங்கு ஹீரோ குட்டி, ஹிந்தி ஹீரோக்கணக்கா இருக்கிற ஹீரோங்களோட சேர்ந்துக்கிட்டாரு.இன்றைய தேதியில் முதலாம்,இரண்டாம் முகமதுவும்,குட்டியும் நண்பர்களாக துபாயில் இருந்து, இந்த வில்லன் எழுதுவதை படித்துக்கொண்டிருக்கிறார்கள்.இந்த மூன்றாவது முஹம்மத், எல்லாரும் முகமதுன்னு சொல்லும்போதே முஹம்மத்துன்னு வித்தியாசமா சொல்லுவான், இப்ப வியாபார காந்தமாயிட்டான். ஆனால் வியாபாரம் கைகூடி வந்து ஒட்டும்போது பல சமயங்களில் காந்தந்தின் துருவத்தை மாற்றிவிடுவான்.

கல்லூரி முதல் நாளில் பெற்றோர்களுக்கும் ஒரு ரெப்ரெஷ்மெண்ட் அப்படின்னு பெரிசா கலர்,கலரா தட்டியெல்லாம் வெச்சு செங்கல்லுக்கு வெள்ளை அடிச்சி கலக்கலா வரவேற்பு கொடுத்திருந்தாங்க. மெஸ்ல ரெப்ரெஷ்மெண்டுன்னு சொல்லி, சரியா கழுவாத தட்டில், வேகாத சோற்றில், புளி(ளு)ரசத்தை ஊத்தினார்கள். எங்கப்பா என்னடா இது கருமாதில போடுற சாப்பாடே நல்லா இருக்குமேடான்னார். அடுத்த நான்கு வருடங்களும் இதே சாப்பாடுதான் எங்கள் வயிற்றை காயவைத்தது. இந்தக்கல்லூரியில் படித்ததன் மிகப்பெரிய பயன், எங்கள் கல்லூரி விடுதி மாணவர்களின் நட்பு கொஞ்சம் அதிகமாக இருந்தது போல் எனக்கு தோன்றியது. இதனை சென்னையில் நாங்கள் குழவாக வேலை தேடிய காலத்தில் அனுபவப்பூர்வமாக தெரிந்துகொண்டேன்.இன்றைக்கும் ஒரு புதிய சமூக சேவை முயற்சியில் இறங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது.

தொவையல் 2:

இங்கே அமெரிக்காவில் செல்போன்கள் இரண்டு ஆண்டு பிளானுடன் வாங்கும்போது இலவசமாக அல்லது குறைந்த விலையில் கிடைக்கும். இடையில் போன் உடைந்து /தொலைந்து போனால் காசு கொடுத்து வாங்கவேண்டும். அதற்காக ஒரு இன்சூரன்ஸ் பிளான் இருக்கிறது,அதாவது மாதம் 2$ அளவுக்கு கட்டினால், தொலைந்து போனால் புதிய போன் தந்துவிடுவார்கள். எனக்கு தெரிந்து பெரும்பாலும் யாரும் இன்சூரன்ஸ் வைத்துக்கொள்வதில்லை. நான் குடியிருக்கும் பகுதியில் இருக்கும் அக்கட பூமியை சார்ந்த ஒருவர் ஐபோனூ வாங்கியிருந்தார் என்னிடம் அதில் உள்ள வசதிகளை டெமோ கொடுத்துக்கொண்டிருந்தார், அதன் விலை 200$ மேலும் மாதம் 30$ டேட்டா பிளானுக்கு கூடுதலாக கட்டவேண்டும், ஆனா ஐபோனுக்கு இன்சூரன்சூ கிடையாதுன்னார். ஏன் என்று கேட்டேன்,அதற்கு அவரு சொன்னது, இங்க யுனிவர்சிட்டில படிக்கிற ஸ்டூடண்ஸூ எல்லாம் போன் வாங்கி, இன்சூரன்சும் வாங்கி ஒரு மாதத்தில தொலைஞ்சு போச்சுன்னு சொல்லி புதுசு வாங்கிடுவாங்களாம், தொலைஞ்சு போன போனு அல்லுடு, மஜக்குடு,ஜொல்லுடுன்னு ரிங்க் டோனா ஆந்திராவில அடிக்கப் போயிருமாம். அது மாதிரி நிறைய நடக்கிறதால ஐபோனுக்கு நோ இன்சூரன்சூ. இப்படி மொள்ளமாறித்தனம் தொடர்ந்து பண்ணினா எதுக்குமே நோ இன்சூரன்சூதான்.

தொவையல் 3:
சில ஆண்டுகளுக்கு முன் சிகாகோ அருகில் உள்ள சாம்பர்க் என்ற ஊரில் வசித்தபோது, வேலை பார்த்தது ஒரு இந்திய மென்பொருள் கம்பெனியில், பெங்களூரிலிருந்து ஆட்கள் வருவதும்,போவதுமாக இருப்பார்கள், கார்ப்பரேட் அபார்ட்மெண்டில் தங்கி இருந்தோம், நான் கார் வாங்கியிருந்த நேரம் அது, புதிதாக வருபவர்களை கடைக்கு அழைத்து செல்வது ஒரு சாதாரணமான நிகழ்வு, அப்படி ஒரு நாள் ஒரு தேசிக்கடைக்கு அக்கட பூமியைச்சேர்ந்த ஒரு நண்பரை அழைத்துச்சென்றேன், கடைக்கார குஜராத்தியிடம் அரிசிப்பையை காண்பித்து புதுசா, பழசா என்றார்,அவர் உடனே நம்ம கடையில் எல்லாமே புதுசுதான் என்றார். யூனோ பழைய அரிசிதான் நல்லா இருக்கும் புது அரிசி ஸ்டிக்கியா இருக்கும் எனக்கு பழைய அரிசிதான் வேணும் வேற கடைக்கு ஓட்டுங்க வண்டிய குடுகுடுப்பைன்னுட்டார்.

கடந்த வாரம் டாலஸில் ஒரு புதிய தேசிக்கடையில் எப்போதும் வாங்கும் லட்சுமி பிராண்ட் இட்லி அரிசி இல்லாததால்,ஸ்வாட் பிராண்டு இட்லி அரிசி வாங்கினேன், அரிசிப்பை பழசாக இருந்தது, இட்லி இந்த முறை ருசிதான் என நினைத்தேன், மாவு அரைச்ச வைத்த அடுத்த நாளே கருப்பு கலரில் பூஞ்சை படிந்துவிட்டது, என்ன செய்வது இந்த மாவில் வார்த்த தோசை ருசி இல்லை அதனால் பத்து தோசைக்கு மேல் சாப்பிட முடியவில்லை.

Wednesday, August 12, 2009

யாரு வெட்டிப்பய?

வாடா வாத்தி மவனே, ரொம்ப நாளா இந்தப்பக்கம் ஆளையேக்காணோம்.

இல்லடா கணேசா இப்பதான் மெட்ராஸ்லேந்து வந்தேன், நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே கணேசனின் அண்ணன் முருகேசன் வருகிறார்.

வாங்க தம்பி எப்ப வந்தீங்க, நல்லா இருக்கீங்களா, பேசிட்டு இருங்க நான் வயலுக்கு போயிட்டு வரேன்.

புதுக்கல்யாண மாப்பிள்ளை என்ன வயல் கியல்னு சொல்லிட்டு இருக்கீங்க.

அதுசரி அதெல்லாம் பாத்தா முடியுமா, அவசரமா ஒரு வேலை இருக்கு இந்தா வந்துர்றேன்.

அண்ணன்காரர் வயலுக்கு கிளம்பியவுடன், கணேசன் வீட்டுக்குள் எட்டிப்பார்த்தபடியே... சத்தமாக

ஏய் நீலாவதி தீப்பெட்டி எடுத்துட்டு வா.

என்னடா அம்மாவ பேரு சொல்லி கூப்புடுற, அதுவும் சிகரெட்டு பத்த வைக்க தீப்பெட்டி கேக்கிற.

கணேசனின் அம்மா வருகிறார்.

"இந்தாடா, நீங்க எப்ப தம்பி வந்தீங்க, இவன பாத்தியளா ஒரு வேலையும் செய்யாம அம்மாவ தீப்பெட்டி எடுத்துட்டு வரச்சொல்லி சிகரெட் பதத வைக்கிறான். அவங்க அண்ணன் கல்யாணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகல வயலுக்கு கெளம்பிட்டான்."

சரி சரி நீ உன் வேலையப்பாரு, ஒரு ஆளு மாட்டுனா போதுமே உடனே உன் பாட்டை ஆரம்பிச்சிருவியே.

சரி தம்பி நீங்க மெட்ராஸ்ல என்ன பண்றீங்க?

சும்மாதான் இருக்கேன்.

அப்ப நல்ல கூட்டாளிதான் இவனுக்கு நீங்க, என்னமோ போங்க..
..........

என்னடா கணேசா உங்க அத்தை மகன் கண்ணா பின்னான்னு பெருத்து போயிட்டான்.

அது ஒரு பெரிய கதைடா, படிப்பு சரியா வரலைன்னு படிப்ப நிறுத்திட்டு வயல் வேலைய பாத்துக்க சொன்னாங்க, வீட்டுக்கு வந்தப்புறம் அவன் டயட்டே மாறிப்போச்சு, இதுதான் அவனோட தினசரி டயட்டு

காலைல அஞ்சு மணிக்கு ஒரு குண்டான் பழைய சோறு, அப்புறம் அப்படியே பல்லு விளக்கிட்டு கடைவீதிக்கு வந்து முருவன் கடையில டிபன் பண்ணுவான். ஒரு இருவது புரோட்டா, 4 ஸ்பெசல் தோசை, கெட்டிச்சட்னி, சால்னாவெல்லாம் அதுக்கு ஏத்த மாதிரி சாப்புடுவான்.

அப்புறம் பதினோரு மணி வாக்குல முருவன் கடையில 10 வடை 10 போண்டா சாப்புடுவான். முருவன் கடைல காராசேவு, பக்கோடாவெல்லாம் சரியா இருக்காதுன்னு, கிட்னன் கடைல ஒரு 10-15 பொட்டலம் சாப்புடுவான். அவ்வளவுதான் காலை சாப்பாடு.

மத்தியானத்துக்கு இவந்தான் வயலுக்கு சாப்பாடு கொண்டு போறது,எங்கத்தை அம்பது பேருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டா , தொட்டுக்க குடுக்கற கூட்டு/பொறியல்ல நாப்பது ஆள் தொட்டுக்கய இவனே சாப்புட்டுருவான், மிச்சம் உள்ளதைதான் வேலையாளுங்க சாப்புடனும், எல்லாரும் எங்கத்தைதான் கொஞ்சமா கொடுத்துவிடுதுன்னு நெனச்சிட்டு இருக்காங்க, ஒரு நாளைக்கு எங்கத்தை குடுமிய அறுக்காம விடுறதில்லைன்னு வெறிகொண்டு அலையுறாங்க.பாவம் எங்கத்தை உருளைக்கிழங்கு,கத்தரிக்காய்,கொத்தரங்காய்,வாழக்காய்னு மலிவா கிடைக்கிற காய்கறிய வாங்கி நல்லா தொட்டுக்க பண்ணி கொடுக்குது, நீலாவதி மாதிரி ஓசில கிடைக்கிற திருமாங்கீரையும்,ஆளக்கீரையும் உப்பு போட்டு அவிச்சி குடுத்தாதான் அவங்களுக்கு தெரியும்.கொஞ்சம் காரம்,புளிப்பு சேத்தா கஞ்சி கூட குடிச்சிருவாங்கன்னு அதைக்கூட சேக்கறதில்லை.

இருந்தாலும் உனக்கு உங்க அத்தை பாசம் அதிகமாதாண்டா இருக்கு, சரி அவ்வளவுதான் உங்காளு சாப்பாடா?

அப்புறம் வெள்ளரிக்காய், மாம்பழம் அப்படி ஏதாவது கடைவீதில வித்துச்சுன்னா அதுல ஒரு பத்து பாஞ்சு சாப்பிடுவான், ஒரு பத்து பாஞ்சு டீ குடிப்பான்.ராத்திரிக்கு ஒரு பருக்கை கூட சாப்பிடமாட்டான்,ஒரு சொம்பு தண்ணி குடிச்சிட்டு தூங்கிருவான், காலைல அஞ்சு மணிக்கு எந்திருச்சு மூத்திரம் பேஞ்சிட்டு, பழைய சோத்துலேந்து ஆரம்பிச்சிருவான்.

நல்ல டயட்டுதாண்டா!!!!!!!!!!!!
......................

ஒரு மூன்று பேர் கணேசனின் அண்ணன் முருகேசனை கைத்தாங்கலாக நடத்திக்கொண்டு வந்தனர், பின்னாடியே ஒருவர் யமகாவை தள்ளிக்கொண்டு வந்தார்.

ஒன்னுமில்லை குட்டைகுளத்துக்கரைல ஓட்டிட்டு போகும் கப்பிக்கல்லு தடுக்கி வண்டிலேந்து விழுந்துட்டாப்ல கால்ல நல்லா அடிபட்டிருச்சு.
............
ஏண்டா என்னமோ வயலுக்கு போறேன்னு கெளம்புன, கக்கூஸ் போறதுக்கு குட்டைக்குளத்துக்கரைக்கு போறதுக்கு உனக்கு யமகா தேவைப்பட்டிருக்கு, உனக்கு அம்மா வேற சப்போட்டு. உன்னை சொல்லி குத்தம் இல்லை. உனக்கு ஒருத்தன் பொண்ணு குடுத்து ஒரு யமகா வேற வாங்கி கொடுத்துருக்கான் பாரு அவன சொல்லனும். நீலாவதி காச எடு உன் பெரிய மவன் கக்கூஸ் போயி காலை உடைச்சிட்டு வந்திருக்கான் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போவனும்.

நீ கெளம்புடா வாத்தி மவனே, ஒருநாள் கூட சும்மா ரெஸ்ட் எடுக்க விடுறாங்களா, இது மாதிரிதான் எதாச்சும் வேலை வந்துட்டே இருக்கு.

Tuesday, August 11, 2009

அறிவு.

ஹாஸ்டலில் போரடித்துப்போன அறிவு ஒருநாள் எங்களிடம் ,டேய் எல்லாரும் எங்க வீட்டுக்கு ஒரு வாட்டி வாங்கடா, ரெண்டு மணி நேரத்தில வீட்டுக்கு போயிரலாம் .

சரிடா ஹாஸ்டல் சாப்பாடும் கடுப்பா இருக்கு நம்ம பிரெண்ட்ஸ் எல்லாம் வரோம்டா,சாப்பாடு வெயிட்டா இருக்கனும். நான், ஷேக், மதிமாறன்,ஸ்டீபன் உட்பட ஆறு பேர் மேலூருக்கு அருகில் உள்ள அறிவின் குக்குக்குகிராமத்திற்கு சனி,ஞாயிறு சாப்பாட்டுகான பயணம்.

மேலூரில் பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன், அறிவு எங்களிடம் சொன்னான் பக்கத்து ஊருக்கு போற பஸ் போயிருச்சு நடந்துதான் போகனும், ஏழு கிலோமீட்டர்தான் ஒரு மணிநேரத்தில போயிரலாம்.

என்னடா சொல்ற?

அந்த நேரத்தில் அங்கே வந்த அறிவின் அப்பா, என்னடா அறிவு நீ எப்ப வந்த?

இப்பதான் வந்தேன் ,இவங்கெல்லாம் என்னோட படிக்கிறாய்ங்க, நம்ம ஊரை சுத்திக்காட்டலாம்னு கூட்டியாந்தேன்.

நல்லது , நான் மாட்டு வண்டிலதான் உரம் எடுக்க வந்தேன், உரத்தை ஏத்திட்டு நீங்க எல்லாரும் வண்டில போங்க தம்பிகளா வயசான நான் உங்க கூட வந்த நல்லா இருக்காது,நான் அப்புரமா வரேன்.
----------------------------------
அறிவின் ஊர் மொத்தம் 25 குடும்பங்களே உள்ள ஒரு மிகச்சிறிய கிராமம். அறிவு வீட்டு வாசலில் வண்டி நின்றவுடன் அறிவின் தம்பி நிலவும் அவங்க அம்மாவும் எங்களை வரவேற்றனர்.

ஏண்டா அறிவு சொல்லிட்டு வந்திருக்கலாம்லடா? காலை சாப்பாட்டுக்கு இட்லி தோசைக்கு ஊற வெச்சிருக்கலாம்லடா?

பரவாயில்லைம்மா நாங்க இருக்கிறத சாப்பிட்டுக்கறோம்.

என்னடா அறிவு இவ்வளவு சின்ன ஊரா இருக்கு.?

இப்ப இருட்டிருச்சு காலைல எந்திரிச்சி ஊர் சுத்தி பாப்பம்டா, நிறைய வயல் இருக்கு பெரியாத்துப்பாசனம் பச்சப்பசேல்னு இருக்கும்டா? அப்ப பாரு ஊரு பெரிசுன்னு சொல்வீங்கடா.!

அடுத்த நாள் காலையில் ஊர் சுற்றிப்பார்க்க கிளம்பினோம்.

எல்லாரும் செருப்ப கையில எடுத்துக்கங்கடா , கம்மாங்கரைலதான் சாமி இருக்கு செருப்பு போட்டு நடக்கக்கூடாது?

சரளைக்கல்லா இருக்கு குத்துமேடா?

அதெல்லாம் குத்தாது எல்லாம் சாமி நடக்கிற பாதை, நீ நடந்து பாரு குத்தாது...

என்ன நிலவு ஓரளவு விவசாயம் பண்றீங்க ? ஆனால் எல்லார் வீடும் குடிசை வீடாவே இருக்கே ஏன்?

வசதியெல்லாம் பரவாயில்லை, இங்க யாரும் அவ்வளவா படிக்கலை, அண்ணன் தான் முதன்முதலா இஞ்சினியரிங்க் படிக்குது, இந்த ஏரியாவில அடிக்கடி சாதி சண்டை வரும், அதுக்கு கோர்ட் கேஸ்னு செலவுக்கே நிறைய செலவு ஆகும், அதுக்காக மட்டுமே எங்க ஊரு சார்பா 25 லட்சம் ஃபண்டு இருக்கு.

என்ன சொல்றீங்க இதை வெச்சே எல்லாரும் ஒரு நல்ல ஓட்டு வீடு கட்டிக்கலாம், ரோடு போட்டுக்கலாம் வசதியை பெருக்கிக்கலாமே, ஏன் அந்த சாதி காரங்க கூட சண்டை போட்டுட்டே இருக்கீங்க? இரண்டு பேரும் சேந்தே முன்னேறலாமே?

அது அப்படியே ஆகிப்போச்சு, நாங்க படிச்சு பெரிய ஆளாகி எதாவது நடந்தாதான் உண்டு.

'பாரதிராஜா இந்த ஊரை வெச்சி ஒரு படம் டிரெக்ட் பண்ணலாம்' - எங்களில் ஒருத்தன்

என்ன தம்பி இஞ்சினியருக்கு படிக்கறீங்க டிரெக்ட் அப்படிங்கறீங்க அது டைரக்ட், டைரக்சன்னு சொல்லனும்- அறிவின் பங்காளி வீட்டு அண்ணன்.

அவரு நல்லா இங்கிலீஸ் பேசுவாரு ஜெர்மனியருதி போயி ஜெயில்ல இருந்துட்டு வந்துருக்காரு-- நிலவு..

அது ஒரு கதை தம்பி மலேசியா அனுப்பறேன்னு ஒரு திருட்டு கும்பல் கிட்ட காச குடுத்து , கடைசில ஜெர்மனி ஜெயிலில் இரண்டு வருசம் இருந்தேன்.

----------------

மீண்டும் அறிவின் வீடு.

அறிவின் அம்மா எல்லாருக்கும் பசுமாட்டுத்தயிருடன் பழையசோறு கலந்து சிறிய வெங்காயத்துடன் எல்லாருக்கும் காலை உணவு தந்தார், அமிர்தமாக இருந்தது, மதியம் அறிவு வீட்டில் இருந்த சில நாட்டுக்கோழிகள் எங்களுக்கு உணவாகின, இரண்டு நாளும் இப்படியே கழிந்தது.

தம்பிகளா தீபாவளிக்கு நம்ம வீட்டுக்கு வாங்க? நம்ம நிலவு மேலூர்ல வெடிக்கடை போடுறான் அவன் கூட இருந்து பாருங்க.சும்மா படிச்சா மட்டும் போதாது நாலு விசயம் கத்துக்கனும் என்று அறிவின் அப்பா எங்களை தீபாவளிக்கு அழைத்தார்.

சரிங்க கண்டிப்பா வர்றோம். தீபாவளிக்கும் சென்றோம்,வெடிக்கடையில் நின்று நிலவோடு வியாபாரம் பார்த்தோம், இது போல பலமுறை அறிவு வீட்டில் பழைய சோறு,நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி என்று அடிக்கடி விருந்து வாடிக்கையாகிப்போனது எங்களுக்கு.

----

கல்லூரி இறுதியாண்டு முடிந்து ரிசல்ட் வந்து மார்க் சீட் வாங்கிக்கொண்டு வந்து பஸ் ஸ்டாப்பில் உள்ள கணேசன் கடையில் டீ சொல்லி விட்டு திரும்பினேன். அறிவும் அவங்க அப்பாவும் உட்கார்ந்திருந்தனர். என்னைப்பாத்து அறிவின் அப்பா கேட்டார் ஏன் தம்பி வருசா வருசம் வீட்டூக்கு வந்தீங்க அறிவு ஒரு பரிட்சை கூட எழுதைலைங்கிற விசயத்தை எங்க காதுல ஒரு வாட்டி போட்டிருக்கலாமே என்றார்.

அறிவு வீட்டில் சாப்பிட்ட பழையசோறு புளித்த ஏப்பமாய் என்னமோ செய்தது எனக்கு.

Sunday, August 9, 2009

பாஸ் பண்ணது போதும் நிறுத்துடி

”ஏய் சாந்தி அருவாமனையை எடுத்து சுரைக்காய் வெட்டி வை, மத்தியானத்துக்கு கூட்டு பண்ணனும்.”

சரிம்மா நான் போய் யூரின் பாஸ் பண்ணிட்டு வந்து வெட்டி வைக்கிறேன்.

ஆமா 9 வதையே 3 வருசமா பாஸ் பண்றண்ணுதான் சொல்லிட்டிருந்த,அதெல்லாம் ஒன்னும் பாஸ் பண்ணவேண்டாம் நீ போய் வேலையப்பாரு ஆத்தா.

இந்த உரையாடல் சிரிப்பை வரவழைக்கும். ஆனால் எந்த மாதிரி சூழ்நிலையில் இம்மாதிரி உரையாடல் பிறக்கிறது,நான் எடுத்துக்கொள்ளப்போவது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு.

மேலே சொல்லப்பட்ட சாந்தி, ஒரு கிராமப்பள்ளிக்கூடத்தில் மூன்று முறை பத்தாம் வகுப்பை எட்டிவிடும் முயற்சியில் தவறுகிறாள்,தவறாமல் பத்தாம் வகுப்பு சென்றவர்கள் எல்லாம் நம் தேர்வுத்திட்டத்தின் படி அறிவாளிகள், அவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடுமையாக பயிற்றுவிக்கப்பட்டு, பத்து கேள்வி வங்கி புத்தகத்தை மனப்பாடம் செய்ய வைக்கப்பட்டால் 100 % தேர்ச்சி பெற வைக்கமுடியும். எங்கள் பள்ளி 100% தேர்ச்சி என்று பெருமை அடித்துக்கொள்ளமுடியும். இந்த 100% தேர்ச்சி என்ற ஒரு மந்திரத்திற்காக 9 ம் வகுப்பில் 50 % மாணவர்கள் வடிகட்டப்படுவார்கள்.அவர்களில் ஒருத்திதான் சாந்தி.

இதே சாந்தி பத்தாவது படித்திருந்தால் ஒரு முறையோ இரண்டு முறையே தேர்வில் தவறி. கேள்வி வங்கிகளுக்கு பழக்கப்பட்டு எப்படியாவது வெற்றி பெற்று பின்னர் நல்ல வேலைக்கும் கூட சென்றிருக்க முடியும், ஆனால் 100% சதவீத தேர்ச்சி மந்திரம் அவளை முடக்கிவிட்டது.

முதலில் இதற்கெல்லாம் காரணம் இந்த தேர்வு முறைதான். பத்தாவது தேர்வு எந்த விதத்திலும் ஒரு மாணவனின் கற்றதை தேர்வு செய்யும் விதத்தில் இருப்பதாக இல்லை. இக்கல்வித்திட்டம் தேர்வில் வெற்றி பெறுவதற்காகவே உருவாக்கப்பட்டது போல் ஆகிவிட்டது.
பத்தாம் வகுப்பு கணக்குப்பாடத்தில் உள்ள அணிகள்(Matrix) மிகவும் எளிது. ஆனால் அதன் பயன் படிப்பவனுக்கும் தெரியாது சொல்லிக்கொடுப்பவருக்கும் தெரியாது. (எனக்கும் தெரியாது). பயிற்றுவித்து 100 மார்க் எடுக்க வைத்துவிடலாம்.

மற்றொரு சிறு உதாரணம் நான் பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கும்போது எனக்கு ஆயிரம் முறை எழுதச்சொல்லி கொடுக்கப்பட்ட இம்போசிசன் இது

”ஒரு வேதிவினையில் ஈடுபடும் வினைபடு பொருள்களின் செயல்படு பொருண்மை அவ்வேதி வினையால் விளையும் பொருளின் செயல்படு பொருண்மைக்கு சமம்.”

இதே மாதிரி பல, ஆங்கில வழியில் கற்றவனுக்கும் இன்றைக்கு வரைக்கும் ஞாபகம் இருக்கும். ஆனால் வேதிவினை என்றால் என்னவென்று கற்றிருக்கமாட்டோம்.

இந்த பத்தாம் வகுப்பு தேர்வு, கற்றல் இல்லா கல்வித்திட்டம், பள்ளிகளின் நூறு சதவீத தேர்ச்சி வெறி, நிறைய சாந்திகளை எளிதில் உருவாக்கும்.

நமது கல்வித்திட்டம் முதலில் கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை அவ்வப்பொழுது தேர்வாக வைத்து அவன் கற்றதை எழுத/செய்ய சொல்லவேண்டும். தேர்வுக்காக கற்றால் குறுக்கு வழி நிறைய கிடைக்கும், ஆனால் குறுக்கு வழி அனைவருக்கும் கிடைக்காது.ஒரு உருப்படியான கற்றல் கல்வித்திட்டத்துடன் ஆராய்ச்சிகள்,செயல்முறை, மாற்றங்களை உள்வாங்கிக்கொள்ளும் ஒவ்வொரு ஆண்டும் மாறும் ஒரு சமச்சீர் கல்வித்திட்டம். செயல்படுத்தினால். பத்தாம் வகுப்பு தேர்வு என்ற ஒன்றை கண்டிப்பாக தூக்கிவிடலாம். எல்லாருக்கும் கற்கும்படியான கல்விமுறை வந்தால் தேர்வு என்பது அனைவருக்கும் இனிமையான ஒன்றே.

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.

"அம்மா நான் சுரைக்காய் வெட்டி வெச்சிட்டேன், நம்ம ஊரு பள்ளிக்கூடத்தில படிச்ச குடுகுடுப்பை மச்சான் பிளாக் எழுதுறார், தமிழ்மண நட்சத்திரம் ஆகிருக்கார், பக்கத்து வீட்டு மலர் வீட்டு கம்பியூட்டர்ல போயி படிச்சிட்டு வறேன்"

அவரு அமெரிக்காவில போய் வேலை பாத்து சம்பாதிச்சிட்டே பிலாக்காய் ஒடிக்கிறார், நீ சமையல் வேலையை பண்ணிட்டு போய் பிலாக்காய் ஒடி ஆத்தா.
---------------
குடுகுடுப்பை என்ன பதிவு எழுதிருக்காரு மலர்.

அடிப்போடி மாவட்டத்திலே பத்தாம் வகுப்புல முதல் ரேங்க் எடுத்து இஞ்சினியரிங் படிச்சிட்டிருக்கிற என்னைப்பத்தி எழுதுவாருன்னு பாத்தா, 9 ம் வகுப்பையை தாண்டாத உன்னைப்பத்தி எழுதிருக்காரு, பெரிய ஸ்டாருன்னு நெனப்புதான்.

Monday, August 3, 2009

தொவையல்: அமெரிக்கத்தொவையல்,பார்ப்பனர், தமிழ்.

1. எனெர்ஜி ஸ்டார்.(energy star).
பழைய குண்டு பல்புகள் 60 வாட் 100 வாட் எடுக்கிறது என்று புதிதாக ஐந்து வருட எனெர்ஜி ஸ்டார் பல்புகள் 13 வாட்டில் 60வாட் வெளிச்சம் கொடுக்கும், ஆனால் பல்பு விலை பத்து மடங்கு அதிகம், ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் பல்புகள் 6 மாதத்தில் பஸ்பமாயின.
8000 மணிநேரம் எரித்தால் நீங்கள் 56$ சேமிக்கலாம், அதனால் மறக்காமல் லைட்டை எட்டாயிரம் மணிநேரம் இரவு பகலாக எரித்து 56$ மிச்சம் செய்யுங்கள்.

இரண்டாவதாக front loading வாஷிங் மெசின், இதுவும் பழைய மாடலை விட இரண்டிலிருந்து மூன்று மடங்கு விலை அதிகம் ஆனால் 60% சதவீதம் மின்சாரமும், 60% தண்ணீரும் சேமிக்கலாம்.ஆனால் இவற்றின் விலைக்கேற்ற தரம் இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். ஐந்து வருடமாவது வேண்டும் நீங்கள் அதிகம் செலவு செய்த பணத்தை எடுக்க. இதற்கிடையில் தரம் குறைவாக இருப்பதால் இதற்கு 5 வருட வாரண்டி வாங்கினால் ஒரு $100 ஆகும். இந்தகாசுதான் நீங்கள் ஐந்து வருடத்தில் சேமிக்க முடியும் அதுவும் கடைக்காரர்களுக்கே சென்றுவிடும். மொத்தத்தில் உபயோகிப்பவர்கள் சுற்றுப்புற சூழலை காப்பாற்றினால், பொருளாதார ரீதியான பலன் அடைவது அவர்கள் இல்லை. இதில் மோட்டிவேசன் எங்கிருந்து வரும்.?

2. வீட்டு லோன்
அதாவது நீங்கள் $100000 க்கு கடன் வாங்கினால், அதுக்கான வட்டி 5% , ஆரம்பத்துல லோன் பீஸ் ஒரு ஆயிரம் டாலர் கைலேந்து கட்டணும், வட்டி குறைக்க ஒரு வழி இருக்கு. அதாவது லோன் அமவுண்டான $100000 ல ஒரு பாயிண்ட் அதாவது $1000 லோன் ஆரிஜினேசன் பீஸ் கட்டினா வட்டி 4.75 ஆ குறையும் உங்க மாதத்தவனை கம்மியாகிடும்.

அப்படிங்களா அப்ப 100 பாயிண்டு லோன் ஆரிஜினேசன் பீஸ் கட்டினா வட்டி எவ்வளவு சார்?

அப்போ உங்களுக்கு 0% வட்டில தறோம் அது மட்டுமில்லாம 90% லோன் தள்ளுபடியும் பண்றோம். நீங்க $10000மும் லோன் பீஸ் $1000ம் கட்டினா போதும்.

90% தள்ளுபடி 0% வட்டி நல்லா இருக்கு இந்த டீல் நான் இதையே எடுத்துக்கறேன்.

3.பக்கத்தில் வாழும் தமிழர்கள் ஒரு பத்து குடும்பங்கள் சேர்ந்து, குழந்தைகளுக்கான தமிழ் பாட்டு, நாடகம் நடத்தலாம் என்று என் மகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியை ஏற்பாடு செய்திருந்தார். மூன்று வாரம் ஆடல்,பாடலில் கடினப்பயிற்சி தன் சொந்த முயற்சியில் அவருடைய வீட்டில் ஒரு பைசா காசு வாங்காமல் அனைவரையும் ஒருங்கினைத்து நடத்தினார். என் மகளின் பயிற்சி முழுவதையும் 1000% அற்பணிப்போடு என் மனைவி மட்டுமே செய்தார்(என்னுடைய பங்களிப்பு அவர்களின் உழைப்பை திருடி பதிவாக்குவது மட்டுமே). தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சி வெகு சிறப்பாக அமைந்தது. அனைத்துக்குழந்தைகளும் நல்ல தமிழில் பேசினர். பலருக்கு எழுதப்படிக்கவும் தெரியும்.தமிழ் கற்றுக்கொடுப்பதற்காக அவர்கள் செய்யும் முயற்சி அளப்பறியது.

சீராரும் வதனமென.... திராவிடநல் திருநாடும் .... என்று பாடியதில்,என்னையும் மற்றொருவரையும் தவிர தமிழின விரோதிகள் ஆரியர்கள் /பார்ப்பனர்கள் என வசைச்சொல் வாங்குபவர்கள்.

ஒன்று மட்டும் புரியவில்லை இவர்கள் தமிழை அவ்வளவு சிரமம் எடுத்து படிக்கிறார்கள். தமிழிலேயே குழந்தைகளோடு வீட்டில் பேசுகிறார்கள், தெரிந்த தமிழர்களை தமிழ் கற்றுக்கொடுக்க சொல்லி ஊக்குவிக்கிறார்கள்.அவர்களிடம் கடின உழைப்பும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இருந்துகொண்டே இருக்கிறது, எங்கு சென்றாலும் பிழைத்துக்கொள்வார்கள் தமிழையும் விடாமல் பேசுவார்கள் இவர்கள் தமிழ் விரோதிகள் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எனக்கும் அவர்களோடு பல கருத்து வேறுபாடுகள் உண்டு அது சுமூக சூழ்நிலையில் களையப்படவேண்டுமே தவிர வெறுப்புணர்ச்சியை தூண்டி அல்ல. அவர்கள் தமிழர் அல்ல என்று வேற்றுமை உருவாக்காமல் அனைத்து தமிழர்களும் உள்ளடக்கிய ஒரு சுமூக சூழ்நிலையை ஏற்படுத்தி அனைத்து அறிவும் பகிர்ந்து கொள்ளப்படவேண்டும்..சமூகங்களிடையே புரிதலை ஏற்படுத்தி முன்னேற வழி இருந்தால் அதை செய்வோமே.

அவர்களிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை பதிவாகப்போடலாம். ஆனால் முதலில் சுய விமர்சனம்.

ஹரிணியின் பாட்டு இங்கே