Monday, September 27, 2010

தீர்வு எனப்படுவது யாதெனில்....

பிரச்சினை இல்லாத பிரச்சினை எதுவும் உலகில் இருப்பதாக என் சிறு புத்திக்கு தெரியவில்லை, எந்தவொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு இருக்கும் என்று யாரோ எதற்காகவோ எப்போது உளறிக்கொட்டியது இப்போது ஏனோ எனக்கு ஞாபகம் வந்ததால் தூங்க முயன்ற நான் தூக்கம் வராமல் விழித்து என் தூக்கப்பிரச்சினைக்கு உடனடித்தீர்வாக விழித்திருந்து ஏதாவது செய் என்று எண்ணியதால் இந்த தீர்வு பற்றிய ஆராய்சியினை என்னுடைய பிளாக்கில் ஒரு இடைக்காலத்தீர்வாக பதிந்து வைக்கிறேன்.

எந்தவொரு தீர்வும் முடிவான/முழுமையான தீர்வல்ல என்பது என் மனதில் உதித்த முழுமையடையாத தீர்வு, தீர்வுகள் காலப்போக்கில் மாறிக்கொண்டேயிருக்கும், அந்தத்தீர்வுகள் எப்படி இருக்கும் என்று நாம் கணிக்கமுடியுமா என்பது என்னைவிட என் வாரிசுகள் புத்திசாலிகள் என்று ஒத்துக்கொள்ளும் நான் அநததீர்வுகளும் மேம்படுத்தப்பட்டதாகவே இருக்கும் எனக்கருதுகிறேன்.

மொத்தத்தில் இந்தப்பிரச்சினைக்கு இதுதான் முடிவான / முழுமையான தீர்வு எனும் கூறும் இசங்களோ, மதங்களோ முடிவான தீர்வுகளாக இருக்கமுடியாது என்பதுதான் மனதில் உதித்த முழுமையில்லாத இன்றைய தீர்வு.

Friday, September 24, 2010

பாநிதாவுக்கு ஒரு மொக்கை வேண்டுகோள்.

முதலில் இந்த வேண்டுகோளை தமிழ்ப் பத்திரிகைகளில் தான் எழுதலாம் என்றிருந்தேன், ஆனால் இந்த எழவெடுத்த பத்திரிகைகாரங்க யாரும் என்னை ஏறெடுத்துக்கூட பாக்கமாட்றாங்க, அதுனால நவ்வி மொழில நான் முதன்முதலில் பாநிதாவைப்பற்றி எழுதி விமர்சனக்கட்டுரை பண்டோரா தேசத்தில வெளியானது. நவ்வி மொழி என்று நான் கருதி எழுதியதை இதுவரை யாருமே படிக்காததால், எனக்கே எனக்குன்னு இருக்குற கு.ஜ.மு.க விலேயே தமிழ்ப்படுத்தி எழுதவேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

விமர்சனத்துக்கு போகுமுன் ஒரு விசயத்தை உங்ககிட்ட பகிர்ந்துக்கனும், என்னை பண்டோரா தேசத்திற்கு கூட்டிட்டு போன பாண்டா ஒரு உலகத்தரமான இலக்கிய ரசிகன் என்று அறியமுடிந்தது, தமிழ் வாசகனை நினைக்கும்போது எனக்கும் வாந்தியும் வந்தது, சாராயம் கிடைக்காதுன்னு வந்த வாந்தியை அடக்கிக்கிட்டேன்.பண்டோரா தேசத்தில வாரிஸ்னு ஒரு நகரம், அங்கேதான் என்னைப்போன்ற இலக்கிய விமர்சகர்களை ரவுண்டு கட்டி உட்கார வைச்சி சரக்கு ஊத்திகுடுத்து லக்கியத்தை பத்தி உளறச்சொன்னாங்க, நகரம்னா அதுதான் நகரம், சாராயம்னா அதுதான் சாராயம், அதுலேயும் உப்பே இல்லாத அந்தக்கருவாட்டு ருசி சொல்லி மாளாது, அனுபவிச்சாதான் தெரியும்.

இப்ப விசயத்துக்கு வரேன், உங்களோட இந்தக்கால எழுத்துக்களை படிக்கும் போது நீங்களும் ரிட்டையரான தமிழ்பிளாக்கர் மாதிரி பொதுக்கழிப்பிடத்துக்கு போகாம வாய்க்கா வரப்புல கக்கா போகிற மாதிரி உங்கள் எழுத்துக்கள் இருக்குன்னு எனக்கு தோனுது, இதையெல்லாம் படிக்கும்போது, உங்களோட ஜீரா டிகிரில நீங்க எப்படியெல்லாம் டிகிரி காப்பில சீனி போட்டு சுவையாக்கனும்னு எழுதிருந்தத நெனச்சா, தஞ்சாவூர் காபி பேலஸ்ல கடன் வெச்சு குடிச்ச காப்பி எனக்கு இன்னைக்கு ஞாபகம் வருது, அதுவுமில்லாம மூனாவது அத்தியாயத்தில கருப்பட்டி காச்சி ஜீரா காப்பி போடுறது எப்படின்னு சொல்லிருந்தீங்க அன்னையிலேந்து கள்ளு குடிக்கறதையே விட்டுட்டேன் கருப்பட்டி உற்பத்தி பாதிக்கப்பட கூடாதுன்னு, அந்த அளவிற்கு பாதித்த உங்கள் எழுத்துக்கள் எங்கே?

பாம்புக் கவிதைகளில் வருமே ஒரு வரி, இப்ப நினைச்சாலும் மனசு படம் எடுக்குது

சட்டையவுக்கும் பாம்பே
நீ ஏன் ஜட்டி அவுப்பதில்லை
கலாச்சார காவல் பாம்புகளும் உண்டா?

இந்த மாதிரி வீர வரிகளை உங்களைத் தவிர வேறு யாரல் எழுதமுடியும், எங்கே தொலைந்தது உங்கள் எழுத்து?

முந்தாநாள் ஒரு கன்னட நண்பன் கூப்பிட்டான், பாரு கன்னடாவில உங்கள் எழுத்து வந்திருக்குன்னு சொன்னான், நானும் படிச்சிப்பாத்தேன், எடியூரப்பாவை திட்டி குமரசாமி திட்டுன எழுத்தும்,நீங்கள் எழுதிருந்ததும் ஒரே மாதிரி இருந்தது, அப்புறந்தான் தெரிஞ்சது எனக்குக் கன்னடம் படிக்கத்தெரியாதுங்கிற விசயமே. அப்புறம் எப்படி அது இன்னாரு எழுதுனாங்கன்னு தெரியும்னு கேக்கறீங்களா? அதான் பெரிசா படம் போட்டிருந்தாங்கள்ள.

எது எப்படியோ எழுத்துலக வாசிப்பே இல்லாமல் நானும் ஒரு விமர்சனம் எழுதிட்டேன். ஏன் எழுதினேன்னா ரொம்ப நாளா கடை தொறக்கலை சும்மா கூட்டம் சேக்கத்தான்னு சொல்லித்தெரியுற நிலைமையிலேயா தமிழ் வலை வாசகன் இருக்கிறான்.

Thursday, September 23, 2010

கல்லூரி சாலை - வாழ்க்கைன்னா ஒரு பிடிப்பு வேணும்டா


"டேய் குடுகுடுப்பை ஆயில் ஆப் ஸ்பெச்பிக் கிராவிட்டி இருந்தா குடுடா" -- பாரிஸ்

"என்னடா சேச்சி ஞாபகமா இருக்கியா"

"எதையுமே ரிலேட் பண்ணி படிக்கனும்டா? ஆனா நான் இப்பக் கேட்டது தேங்காய் எண்ணெய் , தலை காஞ்சு, தீஞ்சு போச்சு அதுக்குதான் ஆயில் ஆப் ஸ்பெசிபிக் கிராவிட்டி கேட்டேன்"

"என்கிட்ட அதெல்லாம் இல்ல,நல்ல சாயிபு பெட்டிக்குள்ள பூட்டி வெச்சிருப்பான், பெட்டியை உடைச்சு எடுப்போம், ஒரு தம்மு இருந்தா கொடு "

"தெர்மல் எஞ்சினியரிங் புத்தகத்திலே 417 வது பக்கம் ஒரு பிளெயின் இருக்கு எடுத்துக்கடா"

"யாரும் தொடாத புத்தகத்தில ,இப்படிதான் நீ சிகரெட் ஒளிச்சி வெக்கிறியா. வெவரம்டா"

"அடப்போடா நீ வேற படிப்பு வேணாம்டா, வாழ்க்கைன்னா ஒரு எய்ம், அப்பாரட்டஸ் ரெக்கொயர்டு வேணும்டா, இத்துப்போன இந்த லேபுக்கு இதெல்லாம் இருக்கு, என் வாழ்க்கைல ஒன்னுமில்லடா"

பேச்சு சத்தமும், பெட்டி உடைக்கும் சத்தமும் கேட்டு பக்கத்து ரூமில் பார்ட்டி வந்து எங்களுடன் கலந்து கொண்டார்.

"பார்ட்டி வாழ்க்கைல பிடிப்பு இல்லை நீ எதுனா ஒரு யோசனை சொல்லுடா"

"டேய் என்னடா சொல்ற நீ தான் ரைஸ் மில்லு, ரோட்டரியெல்லாம் வெச்சிருக்க, அதை வெச்சே பிஸினஸ் பண்ணலாமேடா"

"அடப்போடா கூலியெல்லாம் போக கடைசில உமிதாண்டா மிஞ்சுது, அதுவும் என் தலை மாதிரி காஞ்சு கெடக்கறதுனால,காத்துல பறந்து போயிறுது, அதுக்கு பேசாம உன்னை மாதிரி சொட்டைத்தலையனா இருந்திருக்கலாம்டா"

"டேய் அப்படி சொல்லாத ஐடியாஸ் ரூல்ஸ் தி வேல்டு, அப்படின்னு புத்தகம் எழுதியே பெரும் பணக்காரன் ஆனவனெல்லாம் அமெரிக்காவில இருக்கான், காத்துல பறக்கிற உமிய முதலீடு ஆக்குடா "

"எப்படி"

"டேய் மாட்டுத்தீவனம் தயாரிச்சி பையில அடைச்சி விக்கலாம்டா, ரொம்ப சிம்பிள் பார்முலா, உமியை, கொஞ்சம் கடலைப்புண்ணாக்கு , எள்ளுப்புண்ணாக்கோட சேத்து ரோட்டரில போட்டு அரைச்சு, முறுக்கு மாதிரி ஒரு அச்சுல வார்த்து பாக்கெட் போட்டியன்ன ஒரு காசு தவிடு இரண்டு ரூபாய்க்கு விக்குமுடா?"

"இன்சினியரிங் படிச்சிப்புட்டு மாட்டுத்தீவனம் விக்க சொல்ற? நீ மட்டும் சொட்டை மண்டைய வெச்சிக்கிட்டு அமெரிக்கா போயி துரைச்சிகளோட(நன்றி நசரேயன்) திரியலாம்னு இருக்குற."

"டேய் ஆண்டர்பிரினியரிங் பெரிய விஷயம்டா? நல்ல யோசனை பிடிச்சா செய்யுடா?

"அடப்போடா நான் தொட்டிக்குள்ள கைய விட்டு கலக்கியெல்லாம் , டெமோ காட்டமுடியாதுடா"

----

தெரிந்த முடிவுதான்

சில வருடங்கள் கழித்து, சொட்டைத்தலையில் ஒட்ட வைத்த முடியுடன் அமெரிக்காவிலிருந்து பார்ட்டி வந்தான், பாரிஸ் மாட்டுத்தீவனம் வரவேற்பரையில் சொட்டைத்தலையுடன் பாரிஸ் வரவேற்றான்.

"நான் சொன்ன யோசனை, எனக்கு ராயல்டி கொடுக்கனும் நீ"

"அடபோடா வெண்ணெய், தவிடும் , புண்ணாக்கும் மாடு திங்கிறத நீ சொல்லித்தான் ஒலகத்துக்கு தெரியுமாக்கும்"

"அதை முறுக்கு மாதிரி பொட்டலம் போட்டு விக்கிறதலாண்டா புத்திசாலித்தனம் இருக்கு"

"அது சரி அமெரிக்க வாழ்க்கை எப்படி இருக்கு, அடுத்த வாட்டி வரும்போது எனக்கும் உன்னை மாதிரியே ஒரு விக் வாங்கிட்டு வாடா"

" நீ வேறடா வேலை இல்லை ரிஷெஷன் அப்படின்னு தொறத்திட்டாங்க, அதான் உன்னைப்பாத்து, தீவன யோசனைய பேசலாம்னு வந்தேன், ஆனா நீ முன்னாடியே பண்ணிட்டுருக்க, நானும் சேந்துக்கட்டுமா?"

"ஓ அப்படியா நீதான் காலேஜ் படிக்கும்போதே நல்லா டேமோ காட்டுவியே? தொட்டித்தண்ணில எப்படி தீவனத்தை கரைக்கிறதுன்னு டெமோ காட்டுற வேலை இருக்கு அத நீ பாத்துக்க , மாசம் ஏழாம் தேதி சம்பளத்தை தந்துடறேன்"

Monday, September 20, 2010

டவுசரும் நானும்.

பள்ளிக்கூட காலத்திற்குப் பிறகு டவுசர் போடுவதில்லை, இங்கு கோடைக்காலங்களில் எல்லோரும் டவுசருடன் வெளி வருவதையும், நான் மட்டும் வேகாத 110F வெயிலிலும் ஜீன்ஸ் பேண்டோடு வெளிவருவதையும் வெகு காலமாக கவனித்து,நீங்களும் டவுசர் வாங்கி அணிந்து பாருங்கள்,ஏன் இப்படி வெயில் காலத்தில் ஜீன்ஸ் போடுகிறீர்கள் என்று வீட்டில் நச்சரித்ததால் நானும், புதிதாக மூன்று டவுசர் வாங்கினேன்.

வாங்கின டவுசரில் இரண்டு என்னுடைய சற்று காலம் முன்னர் உள்ள இடுப்பு அளவு, இருந்தாலும், தொப்பையைக் குறைக்கும் தீவிர முயற்சியில் இருப்பதால் பழைய அளவையே வாங்கினேன். போட்டுப்பார்த்தால் தொப்பையை டவுசர் கடிக்கிறது,குறைக்கலாமின்னு நினைக்கிறப்போ பின்னூட்டரும் நசரேயனின் உளவாளியுமான வில்லன், பிரியாணி விருந்துக்கழைத்து மிச்ச பிரியாணியும் தலையில் கட்டி இப்போ அடுத்த சைஸூ டவுசரே தொப்பையை கடிக்குமா என்ற சந்தேகத்தில் உள்ளேன்.

இந்த டவுசரை அணிந்துகொண்டு நானும் இப்போது கடைக்கெல்லாம் செல்கிறேன், டவுசர் நல்லா இருக்கா என்று ஒருநாள் மகளிடம் கேட்டேன்.

"டவுசருன்னா என்னாப்பா" என்றாள்

"டிரவுசருக்கு தமிழ்ப்பெயர்தான் டவுசர் என்றேன்"

"டிரவுசருன்னா என்னாப்பா"

" டவுசருக்கு இங்கிலீசுல வெச்சப்பேருன்னு"

"அப்ப ஷாட்ஸ்னா என்னா"

"அமெரிக்கா, பிரிட்டீஷ் அப்படின்னு இங்கிலீஸ் வித்தியாசம் இருக்கு, அதெல்லாம் எனக்கு சரியாத்தெரியாது
டவுசர்-டிரவுசர்-ஷாட்ஸ் அவ்ளோதான்"

"சரிப்பா எனக்கும் டவுசர் பிடிச்சிருக்கு, நானும் இனிமே டவுசர் போட்டுகிட்டே விளையாடுறேன்"

ஒரு வழியா டவுசர் - டிரவுசரு பிரச்சினை முடிஞ்சிருச்சு, ஆனா இந்த டவுசரை ரெண்டு வருடம் போடுற அளவிற்கு யாராவது ஒரு டயட் சொல்லுங்க சாமியளா?

சமீபத்திலே நண்பரை சந்திந்தேன், ஓடியாடி கொஞ்சம் கலோரியை குறைச்ச நேரத்திலே மாங்காய் சாதம், தயிசாதம் எல்லாம் கொண்டு வந்து கொடுத்தது, வாங்கிய என் புதிய டவுசர்களை உபயோகமில்லாமல் ஆக்க நினைக்கும் சதியோ என்று எண்ணத் தோன்றுகிறது.

புதிதாக டவுசர் போடுவது மகிழ்ச்சியாக இருந்தாலும், டவுசர் கிழிந்துவிடுமோ என்ற பயமும் உள்ளது.

வகுக்காத வியூகம்...

பாம்புமுகம் கொண்ட
இரு விலாங்குமீனை
சாம்பலில் உருட்டி
வறுவறு பன்னிரண்டு
துண்டுகளாக்கும்
சாத்தியக்கூறுகளைக்
கணக்கிட்டுக்
கொண்டிருக்கிறார்கள்..

ஏரியை விடப் பலமடங்கு
அதிகப் பாம்புமீன் கொண்ட
குட்டைக்குள ஒரத்தில்
கோரப்பற் துவாரத்தில்
மண்புழு புகுத்தி
தூண்டில் வீசி
தூண்டிலின்
தக்கையை கூர்ந்து
நோக்குகிறேன் நான்..

மண்புழு
அனைத்தையும்
உபயோகித்து
எனக்கேயான
பாம்புமீனை பிடித்துக்கொள்(ல்)ள(ல)
என் தூண்டிலின் தக்கை
மேலும் கீழுமாய்
கட்டுக்குள் அடங்காது
தூண்டியையும் சேர்ந்திழுக்க
நானும் இழுக்க
இனங்காணமுடிநத சாரப்பாம்பு
நகர்ந்தபடியே தூண்டிலில்.

சேற்று மீன்
தூண்டிலில் மாட்டாதென
தெரியாமல் பிடித்த
பாம்பில் நடுக்கண்டமும்
எனக்கே என திருப்தியுடன்.


Wednesday, September 15, 2010

பதிவர் முகிலனின் மன உலைச்சலுக்கு யார் காரணம்.

பதிவர் முகிலனின் மன உலைச்சலுக்கு யார் காரணம்.

சமீபத்திய பதிவுலக குஸ்தியில் பாதிக்கப்பட்டுள்ள பதிவர் முகிலனின் மன உலைச்சலுக்கு யார் காரணம் என்பது மட்டுமே ஆராயும் ஆராய்ச்சிக்கட்டுரை, அவர் ஆணாதிக்காவாதியா, இந்த சண்டையில் அவரின் பங்களிப்பு என்ன என்றெல்லாம் ஆராய்வது இந்தக்கட்டுரையின் நோக்கம் அல்ல. அவர் இருக்கும் கூகுள் குழமத்தில் சேர்த்துவிடுவதாக காங்கிரஸ்காரர் சஞ்சய்காந்தி சில மாதங்களுக்கு முன்னர் சொன்னார், ஆனால் நான் காங்கிரஸில் கூட சேரத்தயார், இநதக்குழுமமெல்லாம் எனக்கு வேலைக்காகாது என்று மறுத்துவிட்டேன், விதி பதிவர் முகிலனை விடவில்லை. இதற்கு யார் காரணம்?

பதிவர் முகிலன் வில்லு விமர்சனத்தை தேடி அலைந்து, வில்லு ஒரு முன் பழமைத்துவகாவியம் என்ற என்னுடைய பதிவினை படித்ததன் மூலம் தமிழ்ப்பதிவுகளுக்கு அறிமுகமானதை,தமிழ்ப்பதிவுகளில் உலாவரும் மொக்கைத்தொடர் பதிவின் மூலம் தெரிவித்திருந்தார், இதன் மூலம் சிலர், பதிவர் முகிலனின் மன உலைச்சலுக்கு குடுகுடுப்பையே காரணம் என்று குற்றம் சாற்ற எண்ணுகின்றனர் என்று நான் தகவல்கள் அறிகிறேன்.

இந்த பதிவின் மூலம் உங்களுக்கு அறியத்தருவது என்னவென்றால், நடிகர் விஜய் அந்தப்படத்தில் நடித்த பெரு நடிப்பே என்னை அந்த விமர்சனத்தை எழுதத்தூண்டியது, ஆகவே நடிகர் விஜய் அவர்களே பதிவர் முகிலனின் மன உலைச்சலுக்கு காரணம் என்று இங்கே கூற கடமைப்பட்டுள்ளேன், மேலும் அந்தப்படத்தை இயக்கிய பிரபுதேவா, அந்தப்படத்தில் நடித்த நயன்தாரா அவர்களுடைய பெற்றோர்கள், வில்லு என்று தேடியவுடன் என் பதிவில் இறக்கிய கூகுளாண்டவர் ஆகியவர்களும் பதிவர் முகிலனின் மன உலைச்சலுக்கு காரணமாக இருக்கலாம் என்ற ரீதியிலும் நாம் சிந்திக்கவேண்டியுள்ளது.இப்படியெல்லாம் சிந்தித்தால்தான் இதன் பின்னனியில் உள்ள சூழ்ச்சியை நாம் அறியமுடியும்.

பொறுப்பு அறிவித்தல்: நடிகர் விஜய்,பிரபுதேவா,நயன்தாரா இவர்களின் பெற்றோர்கள், கூகுளாண்டவர் மற்றும் பதிவ்ர் முகிலனிமும் இவர்களின் பெயர்களை இந்த மொக்கைக்கு பயன்படுத்தியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

Monday, September 6, 2010

நண்டு குழம்பு, சாக்லேட், டைஜின்.

சில வருடங்களுக்கு முன்னர் சிகாகோ நகரத்தில் வசித்தபோது,மீன் வாங்கலாம்னு நண்பர்களோடு ஆசியா மார்க்கெட் போனேன்.மீன் வாங்க போன இடத்துல பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி எனக்கு பிடிச்ச நண்டு உயிரோட கெடச்சது.

அமெரிக்கா வந்து நண்டு சமைச்சு சாப்பிட்டதில்லை. உயிரோட நண்ட பாத்திட்டு அத வாங்கி சமைக்கலன்னா எனக்கு தூக்கமே வராது. ஒரு அஞ்சாறு நண்பர்கள் மொத்தமா இருந்தோம். பத்து நண்டு வாங்கியாச்சு.

இப்ப உயிரோட இருக்க நண்ட எப்படி உடைக்கிறது, எல்லாருக்கும் நண்டு கடிச்சுருமோன்னு பயம் , ஆனால் நண்டுக்கோ என்னைப்பாத்து பயம். நண்டு உடைக்கிறது ரொம்ப சுலபம். முதல்ல நண்ட ஒரு சிங்ல போட்டு சுடுதண்ணிய திறந்து விட்டுட்டா நண்டார் மாண்டார்.

நண்டு சுலபமா உடைச்சாச்சு, அதுல ஒரு நண்பர் எப்படி உடைக்கிறது, நண்டுக்கு எத்தனை கால், எப்படி கடிக்கும், ஓட்டை எப்படி சாப்பிடரதுன்னு எக்கச்சக்க கேள்வி கேட்டு தெரிஞ்சுக்கிட்டாரு. இவரு பாய்ஸ் படத்தில வர செந்தில் மாதிரி பெரிய டேட்டாபேஸ்.எந்த இன்சுயூரன்ஸ் நல்லா இருக்கும், எந்த கடைல காய்கறி இன்னக்கி நல்லா இருக்கும், வாலி புரடுயூஸல(நம்ம நாடார் கடை மாதிரி ஒரு கடை) இன்னைய டீல் என்ன அப்படினு அவருக்கு தெரியும்.கிரீன் காடு இப்ப யாருக்கு என்னா ஸ்டேஜ்ல இருக்கு,இந்த வருடம் இன்னா புது ரூலு, அடுத்தவன் சம்பளம் எவ்ளோ இப்படி நெறயாயாயாயா. நல்ல உபயோகமான தகவல் களஞ்சியம், அதுல நண்டு எப்படி உடைக்கிறது அப்படிங்கிறதும் இப்போ ஏறிப்போச்சு.நண்டு உடைக்கிறது எப்படின்னு இப்போ அவரு சொல்லிருந்தா இன்னும் முழுமையா இருந்திருக்கும்.

நண்டு எப்படி சமைக்கிறது இது இப்போ கேள்வி? பல்லவர்களோடு ஒரு அனுபவத்தில வர நண்பன் சொன்னான் எங்க வீட்ல வருவல் பண்ணுவாங்கன்னு, நான் சொன்னேன் எங்க வீட்ல கறிக்குழம்பு மாதிரி பண்ணி நெறய புளி ஊத்தி குழம்பு வெப்பாங்க அது மாதிரி பண்ணி பாப்போம். சரி எதையோ பண்ணு அப்படின்னு சொல்லிட்டு அவன் பீரடிக்க போயிட்டான்.

ஒரு வழியா நண்டு கொழம்பு வெச்சாச்சு, நண்டு குழம்பு வாசம் தூக்குது,நம்ம மக்கள் இருக்கிற பீரெல்லாம் முடிச்சிட்டு சாப்பிட தயார், ஒவ்வொருத்தரும் குழம்பு வாசம் கும்முன்னு இருக்கு நண்டு உடைச்சி சாப்புட்டு இன்னக்கி ஒரு கும்மு கும்மிர வேண்டியதுதான்னு ஒரு வெறில இருந்தாங்க. எல்லாருமா சேந்து எல்லாத்தையும் எடுத்து டைனிங் டேபிள்ல வெச்சிட்ட்டோம்.

டேய் குழம்பு வாசம் ஆள தூக்குது அப்படியே இன்னோரு ரவுண்டு பீர உட்டுகிட்டே சாப்பிடுவோம் அப்படின்னு சில பேரு சொன்னாங்க.
பேசிட்டிருக்கும்போதே நம்ம டேட்டாபேஸ் நண்பர் எனக்கு ரொம்ப பசிக்குது நான் சாப்பிட ஆரம்பிக்கிறேன்னார், சரி நீங்க குடிக்க மாட்டீங்க் சாப்பிட ஆரம்பிங்க நாங்களும் சேந்துக்கறோம்.

டேட்டாபேஸ் நண்பர் சாப்பாட்ட போட்டு ஒரு 90% நண்டு குழம்ப எடுத்து ஊத்திட்டு போயிட்டாரு. மத்தவங்களுக்கு குழம்பு தொட்டு நக்கற அளவிலதான் இருக்கு, எல்லாரும் ஒருத்தன் மூஞ்சிய ஒருத்தன் பாக்கிறோம்.என்னடா எல்லாத்தையும் டேட்டாபேஸ்ல லோடு பண்ணிட்டாரு.

வேற வழி, இருக்கிறத வெச்சி எல்லாரும் சாப்பிட்டோம், ரொம்ப நல்லா இருந்துச்சுன்னு எல்லாரும் பாராட்டுனாங்க, எனக்கும் பயங்கர சந்தோசம். என் தெறமய ரொம்ப மதிச்சு 90% குழம்ப சாப்பிட்ட டேட்டாபேசும் நம்மள கொஞ்சம் அதிகமாவே பாராட்டுனாரு.

அடுத்த நாள் அலுவலகத்தில ஒரு பதினொரு மணி போல நாங்க எல்லாரும் பேசிட்டுருந்தோம், டேய் குடுகுடுப்பை நண்டு குழம்பு வயித்த கலக்கிருச்சு அப்படின்னாங்க. அந்த நேரம் பாத்து அங்க சாக்லேட் கலர் பேண்டும், டைஜின் கலரு சட்டையோட சும்மா ஜம்னு வந்த நம்ம டேட்டாபேஸ் நண்பர் ஆமாம் பாசு எனக்கும் வயிர கலக்கிருச்சுன்னாரு..