Tuesday, July 17, 2012

தஞ்சைக்கள்ளர் - முதலியார்கள்.


முதலியார்களில் பலவகை சாதி முதலியார்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் தஞ்சை மாவட்டத்தில் ஒரு சில ஊர்களில் மட்டும் வாழும் தஞ்சைக்கள்ளர் சமூகத்தை சேர்ந்த முதலியார்களைப் பற்றி எனக்கு வாய் வழியாக கிடைத்த தகவல்களை பகிர்கிறேன். 

முதலிப்பட்டி எனும் கிராமம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில்,பழைய புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு உட்பட்ட ஒரு சிறிய கிராமம், தற்போது முதலிப்பட்டி எனும் ஊர் புதுக்கோட்டை மாவட்டத்திலும், அதனைச்சார்ந்த அவிச்சிக்கோன்பட்டி எனும் ஊர் தஞ்சை மாவட்டத்திலும் இருக்கிறது, முன்பு ஒன்றாக இருந்திருக்கவேண்டும்,இன்றும் இதன் ஊரின் எல்லை வீடுகளின் கொள்ளைப்புறம்தான். இந்தப்பெயரில் இருக்கும் முதலி மற்றும் கோனில் வரலாறு இருக்கிறது.

கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டிற்கு முன் அல்லது சோழர்களின் ஆட்சிக்காலத்தில் முதலிப்பட்டி எனும் கிராமம், தற்போது இருக்கும் இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மஹாராஜா சமுத்திரம் எனும் காட்டாற்றின் கரையில் இருந்திருக்கிறது, இன்னும் கிட்டத்தட்ட  ஐநூறாண்டு பழைய சிவன் கோவிலும், பொன்னிநதியின் பெயர் கொண்ட சாமியாகிய பொன்னியம்ம்மன் கோவிலும் இடிபாடுகளுடன் உள்ளது. இங்கு வாழ்ந்தவர்கள்தான் இந்தப்பதிவில் வரும் முதலியார்கள்.இன்றும் பொன்னியம்மன் கோவிலுக்கு காணும் பொங்கல் அன்று செல்வார்கள், சில காலம் முன் வரை பொன்னியம்மனுக்கு படையல் எல்லாம் செய்திருக்கிறார்கள், சிதிலமடைந்த சிவன் கோவிலில் பெரும்பாலும் யாரும் வழிபடுவதில்லை.

காட்டாற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு உயிரிழப்புகளும்,கால்நடை இழப்புகளும் ஏற்பட்டதால், மிச்சமிருந்தவர்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கோனார்கள் சிலர் வசித்த மேடான இடத்திற்கு குடியேறியிருக்கிறார்கள் முதலியார்கள், மேலும் சில குழுக்கள் இடம்பெயர்ந்து பட்டுக்கோட்டை பகுதி நோக்கி சென்றுள்ளனர், இவர்களின் தற்போதைய கிராமம் திருநல்லூர், கிளாமங்களம், கரம்பயம் ஆகியவை, கிளாமங்களம் குஞ்சான் தெருவில் இன்றைய முதலிப்பட்டியில் அன்று இருந்த கோனார்கள் குடியேறி இருக்கிறார்களாம், குஞ்சான் தெருவில் உள்ளவர்கள் இன்றைக்கும் முதலிப்பட்டி கிராமத்தினருக்கு தங்கள் இருப்பிடத்தில் இருந்து விரட்டி விட்டதால் குடிக்க தண்ணீர் கொடுக்கமாட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது. ஆனால் முதலிப்பட்டியில் இருந்து செல்பவர்களிடம் எங்களுடைய பூர்வீகம் முதலிப்பட்டி என்று பொன்னாப்பூர், திருநல்லூர் பகுதி முதலியார்கள் சொல்வது கேள்விப்பட்டிருக்கிறேன்.

மன்னார்குடி பகுதி நோக்கி இடம் பெயர்ந்தவர்கள் பொன்னாப்பூர்,மூவரக்கோட்டை,பெருகவாழ்ந்தானிலும்,தஞ்சை நோக்கி இடம் பெயர்ந்தவர்கள் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள குளிச்சப்பட்டு, கருப்பமுதலியார்கோட்டை போன்ற கிராமங்களிலும், ஊருக்கு அருகே இடம் பெயர்ந்தவர்கள் ஈச்சங்கோட்டை மற்றும் குருங்குளம் பகுதிகளிலும் வாழ்கிறார்கள்.

தஞ்சைப்பகுதியில் இருப்பவர்கள் ,அதுவும் தஞ்சைக்கள்ளர் சாதியை சார்ந்தவர்களுக்கே பலருக்கு முதலியார் என்ற பட்டம் இருப்பது தெரியாது, என்னுடைய முந்திய பதிவின் மூலம் இவர்கள் பற்றி யாருக்கும் தெரியுமா என்று அறிய முயன்றேன்,எதிர்பார்த்தது போல் யாருக்கும் தெரியவில்லை.

இன்றைய அவிச்சிக்கோன்பட்டியில் வாழ்பவர்கள் பெரும்பாலும் செட்டியார்கள்,ஒரே ஒரு கோனார் குடும்பம்தான் உள்ளது.  முதலியார்கள் நகரமயமாக்கப்பட்ட சூழலில் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்துவிடும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் நாளைய முதலிப்பட்டியில் வேறு யாரோ இருக்கலாம்.

நாடோடி இலக்கியன் எழுதிய பதிவினை காணவில்லை, கிடைத்தவுடன் இணைப்பு தருகிறேன்.

1 comment:

Dino LA said...

சிறப்பான பார்வை