Friday, February 5, 2010

பம்பரம் விளையாடுவது எப்படி

முகு: எனக்கு பம்பரம் விளையாடத் தெரியும், ஆனால் நான் பம்பர விளையாட்டில் கரைகண்டவன் இல்லை, எனக்குத் தெரிந்த பம்பர விளையாட்டு ரகசியங்களை உங்களுடன் பகிர்கிறேன். நீங்கள் தரும் ஆதரவைத் தொடர்ந்து, கில்லிதாண்டு,பேபந்து, சாபூதிரி போன்ற விளையாட்டு ரகசியங்களும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

பம்பரம் சுற்றும் முறைகள் எனக்குத் தெரிந்தவை மூன்று.

மூன்றுக்கு பொதுவான விதிகள்.
1. மரக்கட்டையால் செய்யப்பட்ட பம்பரம், ஒரு பகுதியில் சுற்றும் வகையில் ஆணி அடித்திருக்க வேண்டும்.
2. பம்பரம் சுழற்றத் தேவையான கயிறு.

மேலே உள்ள இரண்டையும் வைத்து, பம்பரத்தின் சுற்றி கயிறு சுற்றத் தெரிந்திருக்கவேண்டும்.

முதல்முறை: இழுப்பு

பம்பரம் கற்றுக்கொள்ளும் முதல் தலைமுறையினருக்கான எளிய வழி, பம்பரக்கயிறு சுற்றியபின், பம்பரத்தை நேராக கையில் பிடித்து, பம்பரக்கயிறின் ஒருமுனையை கட்டைவிரலுக்கும், தொடுவிரலுக்கும் நடுவில் வைத்துக்கொள்ளவேண்டும், கீழே குனிந்த நிலையில் நின்று, பம்பரம் உள்ள கையை முடிந்த அளவு முன்பக்கம் வேகமாக கொண்டு சென்று அதே வேகத்தில் கையை பின்பக்கம் கொண்டுவரவேண்டும், பின்பக்கம் கையை இழுக்கும்போது, பம்பரக் கயிற்றை மட்டும் கையில் வைத்துக்கொள்ளவேண்டும், பம்பரம் தரையில் பட்டு , கயிற்றின் மூலம் கிடைத்த விசையால் சுற்றும்.

இரண்டாம் முறை: சாட்டை

தோலுக்கு மேலே ஆனால் உடலுக்கு வேளியே, கையை இழுத்து பம்பரம் உள்ள கையை சுழற்றவேண்டும், இந்த முறையில் பம்பரத்திற்கு கொஞ்சம் கூடுதல் விசை கிடைக்கும், கீழே விழுந்த பம்பரம் சற்று கூடுதல் நேரம் சுற்றும்.

மூன்றாம் முறை: குத்து

தலைக்கு மேலே பம்பரம் உள்ள கையை கொண்டு சென்று, முடிந்த அளவு வேகமாக பம்பரத்தை விடவேண்டும், இதன் வேகம் அதிகமாதலால், பம்பரம் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற சத்தத்துடன் சுத்த ஆரம்பிக்கும், பம்பரப் போட்டியில் எதிரியின் பம்பரத்தில் ஆக்கூறு அடித்து உடைக்க குத்து முறை மட்டுமே உதவும். சாட்டை, இழுப்பு முறைகள் உதவாது. குத்து முறை பம்பரம் விளையாடும் போது வேடிக்கை பார்ப்பவர்கள் மேல் காயப்படவும் வாய்ப்பு அதிகம்.

பம்பரம் சரியாக விடப்படாத நிலையில், ஊர் ஊராக பம்பராக சுற்றும் வைகோவின் பம்பரம் போல் மொட்டைக்கட்டை அடிக்க வாய்ப்பு அதிகம். அதனால் பம்பர போட்டிகளில் கலந்து கொள்ளுமுன் திறமையை வளர்த்துக்கொள்ளுதல் அவசியம்.உணர்ச்சி வசப்பட்டால் பம்பரமும் கயிறும் வழுக்குமாதலால் ஒழுங்காக பம்பரம் சுற்றமுடியாது.

Thursday, February 4, 2010

தினம் நடமாடும் ரசிகக் குயில்கள்

நுனிப்பாதம் கொண்டு பூமி தொட்டு
கிராபிக்ஸ் உதவியோடு மிதந்தாடியோடி
டூப்பின் உதவியுடன் மரம்தாவி,மலைதாவி
டிரெய்ன் அருவி குருவி எல்லாம் தாவி
நளினமான நடிகையின் அரையாடை சுற்றிய
இடையை நுகர்ந்து நடன இயக்குனரின்
உதவியுடன் குழைந்து சுற்றிவந்து ஆடி
நடிகையின் அப்பா பணக்கார வில்லன் நடிகருடன்
மோதி துணை நடிகர் அடிவாங்கி
பூனையுமாகிப்போனதால் நீ சிங்கமானதை
ரசிக்க என் சொந்த நிலமதில் விளைந்த நெல்லை
விற்று உன் கட் அவுட்டுக்கு பாலாபிசேகம் செய்ய
காவடி எடுத்து பாலாபிசேகம் முடிந்து நூறு ரூபாய்
அதிகம் கொடுத்து தியேட்டருக்குள்ளே படம்
பார்க்காமலேயே விசிலடித்து கைதட்டி ரசித்து
வீடு வந்து விகடன் படித்தேன் படம் பாடாவதி
தோல்வி உறுதி என்று படித்து வெற்றியாக்க
மிச்சமிருந்தை நெல்லையும் விற்று ஐம்பதாவது
முறையாக படத்தை பார்த்த பின் என்னை நீ அறிக்கை
மூலம் பாராட்டியதில் அகம் மகிழ்ந்து இருக்கையில்
அடுத்தபடம் பற்றிய உன் அறிக்கை
படமும் வந்து வெற்றிப்படமும் ஆகி ஆக்கப்பட்டு
நீயும் சொல்லாமல் அமெரிக்காவிற்கு ஓய்வெடுக்கப்போக
இப்போது வந்த தமிழ்ப்படமும் பார்த்து
சிரித்து ரசிக்க பக்குவப்பட்டது என் மனசு
மீண்டும் உன்னிடமிருந்து அறிக்கை அமிஞ்சிக்கரையில்
இருந்து என் ரசிகர்கள் என் உயிர் மயிரென்று
அடுத்தப்படம் வருவது தெரிகிறது
நீயும் நுனிப்பாதத்தில் ஆரம்பிக்கப்போகிறாய்
நானும் நெல் விற்பனையில் ஆரம்பிக்கப்போகிறேன்.
நீ வணங்கும் இறைவனிடன்
நான் வேண்டுவதெல்லாம் ஒரு டப்பா படம் கொடுத்து
என்னை ஐம்பது முறை பார்க்க வைத்துவிடாதே.

அசல் இங்கே

பிகு: சனிக்கிழமை அசல் படம் பார்க்க தியேட்டருக்கு செல்கிறேன்.

Wednesday, February 3, 2010

வில்லன் வீட்டு பிரியாணி மற்றும் வடை.

இந்தப்பதிவு இடுவதா வேண்டாமா என்ற குழப்பம் இருந்தது, ஆனால் விருந்து கொடுத்து சிறப்பித்தவர்களை பாராட்டினால்தானே அடுத்தடுத்து விருந்து கிடைக்கும் என்ற சுயநலத்திலும், பிரியாணி செரித்துவிட்டமையாலும் , வார இறுதி நெருங்கிவிட்டமையால் அடுத்த விருந்தை எதிர் நோக்கி அவசரமாக இந்த சிறு பதிவு.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிய விருந்திற்கு அழைத்திருந்தார் , நசரேயனின் மனைவியின் உயிர் நண்பரின் கணவரான வில்லன் என்ற பின்னூட்டர். யார் நான் வெஜ் சாப்பிடக் கூப்பிட்டாலும் தவறாது செல்வது என்னுடைய வழக்கம். வில்லன் சர்ச்சுக்கு போய்விட்டு மதியம் பணிரெண்டு மணிக்குள் வீடு திரும்புவேன், பணிரெண்டு மணிக்கு மேல் வரவும் என்று சொல்லிவிட்டார், எங்கே காலை சாப்பாட்டுக்கும் வந்துவிடுவாரோ என்ற பயமாகவும் இருக்கலாம். வீட்டில் இருந்து கிளம்பி ஜிபிஸ் சொல்லியபடி கேட்டதில்,அது டோல் ரோடு வழியாக செல்லச்சொல்லிவிட்டது, இரண்டு டாலர் டோல் கொடுத்தேன், பிரியாணி இரண்டு டாலருக்கு வொர்த்தா இருக்குமா இல்லை , மட்டன் புளிசாதமாக இருக்குமா என்று வயிற்றில் புளியைக்கரைத்தது.ஒரு வழியாக என்னுடைய பென்ஸ் காரில் அவருடைய வீட்டை அடைந்தேன்.

குழந்தை இருக்கும் வீட்டுக்கு வெறும் கையை வீசிக்கொண்டு செல்லக்கூடாது என்பதால், கோள்ஸுக்கு சென்று 99% டிஸ்கவுண்டில் அவருடைய மகளுக்கு ஒரு உடையையும் மரியாதை நிமித்தம் வாங்கி சென்றேன். வீட்டுக்குள் நுழைந்தால் பிரியாணி வாசமே வரவில்லை, எதற்கும் ஜாக்கிரதையாக வாங்கிச்சென்ற டிஸ்கவுண்ட் துணியை கொடுக்காமல் பத்திரமாக நானே வைத்துக்கொண்டேன், மட்டன் பிரியாணி பரிமாறப்பட்டது, சிக்கன் கிரேவியுடன். சும்மா சொல்லக்கூடாது பிரியாணி சுவை அலாதியாக இருந்தது, சிக்கன் குருமாவும் அருமை. ஐந்து அல்லது ஆறு ரவுண்ட் வெட்டினேன். வில்லன் பிரியாணியில் இருந்த கரியை சாப்பிடக்கூடாது என்று வில்லி கட்டளை இட்டபடி இருந்தார். அவருக்கு கொலஸ்டிரால் , கொழுப்பெல்லாம் அதிகமாகிவிடும் என்று காரணம் சொன்னார். பாவம் மனுசன் சாப்பிடாமல் ரொம்ப சோப்ளாங்கியா இருக்கார். வெள்ளாட்டுக்கறி, சிக்கனை விட குறைந்த அளவு கொலஸ்டிராலும், கொழுப்பும் உள்ளது பரவாயில்லை அனுமதியுங்கள் என்றேன். வில்லன் முகத்தில் ஒரு பளபளப்பு ஏற்பட்டது புரிந்தது.

பிரியாணி நன்றாக இருந்ததால் டிஸ்கவுண்ட் துணியையும் வில்லனிடம் கொடுத்துவிட்டேன். பின்னர் சற்றே இளைப்பாறிவிட்டு நான்கு மணியளவில் பருப்பு வடை செய்து தந்தார்கள், சுவை கூடுதலாக இருந்ததால் பத்து வடை சாப்பிட்டேன். மகளுக்கு தமிழ் வகுப்பு இருந்ததால் 4:30 மணியளவில் கிளம்பினேன், மறக்கமால் மிச்சமிருந்த பிரியாணியையும் வடையும் கேட்டு வாங்கி வந்துவிட்டேன்.

இப்போது வில்லனுக்கு என்னிடம் இருக்கும் ஒரே கேள்வி இந்த விருந்து இந்த வாரம் மட்டும்தானா இல்லை வாரா வாரம் இப்படி பிரியாணி போடுவாரா என்பதுதான்? இரண்டு முறை மட்டுமே பார்த்திருப்பதால் நேரடியாக கேட்க கூச்சமாக இருந்தது அதுதான் இப்படி பதிவின் மூலம் கேட்கிறேன். நீங்கள் வீட்டுக்கு அழைக்கவேண்டாம் பிரியாணி செய்து எங்கள் வீட்டு வாசலில் வாரம் ஒருமுறை பார்சலாக போட்டால் கூட போதும்.

பிகு: நசரேயனின் போட்டோ வில்லியின் தயவில் பார்த்தேன். தளபதியின் படம் விரைவில் வலையேற்றப்படலாம்.

Monday, February 1, 2010

கல்லூரி சாலையும் கரண்ட் ரோடும், தி.கு.ஜ.மு.கவும்

பொறியியல் கல்லூரி முதலாமாண்டு படித்தபோது, சிவில் லேப் இருக்கும், சிவில் லேப்பிற்கு சீனியர் ஆசிரியர் ஒரு மலையாளி, அவருக்கு அஸிஸ்டண்ட் மதுரையைச் சேர்ந்த தமிழ்பேசும் பெண். ஒரு நாள் லேப் வகுப்பில் மணி என்ற ஒரு மாணவனைப் பார்த்து, மலையாள ஆசிரியர் உன் பேரு மணியா, மாணியா,? கேரளாவில் மாணி என்று ஒரு முன்னால் அமைச்சர் கூட உண்டு. என்று மாணி மாணி என்று கூவிக்கொண்டிருந்தார். மதுரை டீச்சரும், சார் தமிழ்நாட்டில் மாணின்னெல்லாம் பேர் வைக்கமாட்டாங்க சார். உடனே நம் மலையாளி ஏன் வைக்காது மாணி நல்ல பெயர்தானே என்று நிறுத்தாமல் சொல்லிக்கொண்டிருந்தார். முதலாண்டு ஆகையால் லேப்பில் சிரிக்கமுடியாமல் ஹாஸ்டல் சென்று வெகு நேரம் சிரித்தோம்.
-----------------------------------------------------
டேய் வாடா போய் பேஸ்(B for F) வாஸ் பண்ணிட்டு வருவோம்.

பேஸ்(Base) வாஸ் பண்ணனும்னா கக்கூஸ் போகனும், ஃபேஸ்(Face) வாஷ் பண்ணனும்னா வாஷ் பேசின் உள்ள பாத்ரூமுக்கு போகனும், நீ பேஸ்(Base) வாஷ் பண்ண, வாஷ் பேசினுக்கு கூப்புடுற.

டேய் உனக்கு எப்பயும் கிண்டல்தான் நான் பேஸ்(B for F) வாஸ் பண்ணதாண்டா கூப்பிட்டேன். பேஸ்(Base) வாஸ் பண்ண கும்பலா எப்படிடா?

நானும் அதத்தாண்டா சொல்றேன் பேஸ்(Base) வாஷ் பண்ணவெல்லாம் கும்பலா போகமுடியாது, வாஷ் பேசின்லயும் பேஸ்(Base) வாஷ் பண்ணமுடியாது. நீ தனியா கக்கூஸ் போய் பேஸ்(Base) வாஷ் பண்ணிட்டு வாடா?

காலங்கள் கடந்து பேஸ்(Base) வாஷ் பண்ண மறந்து ,துடைக்கப் பழகியபின் மீண்டும் கிடைத்தான் பேஸ் வாஷ் நண்பன்.

”மாப்பிள்ளை பேஸ்புக்((F)Basebook) இல்லாட்டி உன்னைக்கண்டுபிடிச்சிருக்க மாண்டேண்டா.”

--------------------------------------------------

மதிப்பிற்குறிய வானம்பாடிகள் உட்பட பலரும் கு.ஜ.மு.க வில் ஒரு பதவி கேட்டு தினமும் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

பின்னூட்டமிட்ட தமிழ் பிளாக்கர்களை நான் மறந்துவிட மாட்டேன், சமீப காலமாக நான் எழுதிக்கொண்டிருக்கும் கொண்டியாரகள்ளிக்கு உங்களது ஆதரவு தொடர்ந்து தேவைப்படும் இந்த நிலையில், என் கடமையை நான் செய்யவேண்டியுள்ளது. அதற்காக புதிதாக திராவிட குடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்றக் கழகம் என்ற ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளேன்.

வானம்பாடிகள் அய்யா அவர்களின் தலையிலிருந்தே அவருக்கு என்ன பொறுப்பு கொடுக்கலாம் என்ற முடிவுக்கும் ஓரளவுக்கு வந்துள்ளேன், அவர் இளைஞரணிக்கு ஏற்றவராகத் தெரியவில்லை, அவரை அகில உலக தி.கு.ஜ.மு.க மாணவரனி தலைவராக பொறுப்பு அளிக்கலாம் என்ற எண்ணம் உள்ளது. இலக்கிய அணிக்கு முகிலனும், கள்ளக்காதல் அணித்தலைவராக நசரேயன் ஒரு மனதாகத்தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.

பொதுச்செயலாளராக குடுகுடுப்பையாகிய நானே ஜனநாயக ரீதியாக நீடிக்க விருப்பப்படுகிறேன். ஆனால் ஒருவரே இரண்டு பெரும் கட்சிக்கு பொதுச்செயலாளராக இருக்க முடியுமா என சட்ட அணித்தலைவர் அது சரி அவர்களின் சட்ட ஆராய்ச்சியின் முடிவு தெரிந்தபின் மற்ற விபரங்கள் தெரிவிக்கப்படும்.

Tuesday, January 26, 2010

ஆ.ஒ அல்லக்கை கார்த்தியும், சிக்கன் புளிசாதமும்.

ஆயிரத்தில் ஒருவனும் ஒரு வழியாக நானும் பார்த்துவிட்டேன், சந்தனமுல்லையின் பதிவின் சொன்னதுபோல் பிரபல தமிழ்/தெலுங்கு படங்களில் (கட்டிப்புடி , கட்டிப்புடிடா என்ற பாடலை விட ,ஒரு உதாரணத்துக்கு) உள்ள ஆபாசத்தை விட, இந்தப்படத்தில் எங்கே ஆபாசம் இருக்கிறது என்று எனக்குத்தெரியவில்லை, வன்முறை இருக்கிறது ஆனால் தேவைப்பட்டதாகத்தான் இருக்கிறது.தன் கழுத்தை தானே அறுத்து பலியிட்டுக்கொள்வதும் , அதனை ராஜாக்கள் ஏற்றுக்கொள்வதும் அந்தக்காலத்தில் இருந்திருக்கலாம், அதற்கேற்றப் புனைவு தான் இது எனவும் நாம் ஏற்றுக்கொள்ளலாம். பலருக்கு இந்த வன்முறை அதிகமாக தோன்றியிருப்பதில் ஒன்றும் வியப்பில்லை.இந்தப்படம் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம். இப்படத்தில் கார்த்திக் ஏற்று நடித்திருக்கும் வேடமான எடுபிடி வேலை செய்பவர்களின் தலைவன் வேடத்தில்(தலையாரி) சிறப்பாக செய்திருக்கிறார், தமிழ் சினிமாக்களில் வழக்கமாக நடிகைகளுக்கு வேலை இருக்காது, ஆனால் இந்தப்படத்தில் இரண்டு நடிகைகளுக்கும் வேலை இருக்கிறது, ரீமா சென்னுக்கு பழிவாங்கும் பாண்டியத்தி வேடமென்பதால் ஆதிக்கம் செலுத்துகிறார், சோழர்களுக்கு சேதி கொண்டு போக தலையாரியாக சென்ற அவருடைய வேடத்தை அவரும் சிறப்பாக செய்திருக்கிறார், ஹீரோயிசத்தையே பார்த்து பழகிவிட்ட நமக்கு , அல்லக்கை வேடம் என்றாலே வடிவேல் அல்லது, தாமு போன்றவர்கள் தமிழ் சினிமாவில் வருவது போல் ஹீரோவுக்கு சொம்பு தூக்கும் வேடம் நம் மனதில் நின்றுவிட்டதால் , கார்த்தி அல்லக்கை வேடத்தில் வீனடிக்கப்பட்டுவிட்டார் என்று நம் மனம் கருதுகிறது. படத்தில் கிளைமாக்ஸில் கார்த்தி தனி மனிதனாக சண்டை போட்டு ரீமாவைக்கொண்று, பார்த்திபனை காப்பாற்றி ஆண்டிரியாவை கைப்பிடித்திருந்தால், கார்த்தி கலக்கிவிட்டார் என்று விமர்சனம் வந்திருக்ககூடும்.அல்லக்கையோ , தலையாரி வேடமோ ஒரு ஹீரோவுக்கு உரிய கதாபாத்திரம் என்பதை நாம் என்றுக்கொள்ளும் போது இன்னும் நல்ல படங்கள் வரலாம். கார்த்தி நன்றாக நடித்திருக்கிறார் நல்ல நடிகராக வலம் வருவார்.

சிக்கன் புளிசாதம்

அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு நானும் மனைவியும் வந்துகொண்டிருந்தோம் , என் வீட்டுக்கு வெகு அருகில் புதிதாக ருசி என்று ஒரு இந்திய உணவகம் திறந்திருந்தார்கள், இன்றுதான் என் கண்ணில் பட்டது, என் மனைவியிடம் சொன்னேன், அவரும் உடனடியாக இன்று இங்கேயே சாப்பிடுவோம் என்றார். மாலை ஆறரை மணிக்கு நாங்கள் மட்டுமே அங்கே இருந்தோம். சிக்கன் பிரியாணி, சில்லி சிக்கன் ஆர்டர் செய்தோம், சில்லி சிக்கன் என்ற பெயரில் வேகவைத்த சிக்கனுடன் ரெடிமேட் சில்லி சாஸை சிக்கனில் ஊற்றி வெங்காயமும் எலுமிச்சையும் வெட்டி வைத்து கொடுத்தனர். அடுத்து வந்தது சிக்கன் பிரியாணி, பாஸ்மதி அரிசியில் புளிசாதம் பொடியை கலந்து சிக்கனையும் சேர்த்து செய்தது போன்ற சுவையுடன், பக்கத்தில் உள்ள குரோசரி கடையில் நான்கு டாலருக்கு மட்டன் பிரியாணி பார்சல் கிடைக்கும் சுவையும் அருமை. இவன் புளிசாதத்தில் சிக்கனைப் போட்டு அதை வேற உட்காந்து சாப்பிட வெச்சிட்டான். ஆனாலும் ஒரு நன்மை என் மனைவிக்கு புளிசாதம் மிகவும் பிடிக்கும் என்பதால் நன்றாக சாப்பிட்டார். மிச்சமுள்ள சி.புளி சாதத்தை பார்சல் செய்து கொண்டோம் , நாளைக்கு என் மனைவிக்கு அதுதான் மதிய உணவு. எனக்கு ஞாயிறு அன்று வைத்த பழைய மீன் குழம்பு இருக்கிறது அதை வைத்தே அரைபடி அரிசி சோறு இறங்கும். வழக்கமாக என் மனைவிக்கு புளி சாதம் வாங்க வேண்டா வெறுப்பாக எட்டு மைல் தூரம் உள்ள கடைக்கு சென்று புளி சாதம் வாங்கி வருவேன்,(இதுவே மீன் வாங்கச்சொன்னா எவ்வளவு தூரம் வேணும்னாலும் சலிச்சிக்காம போவேன்) இனி அந்த சிரமம் இல்லை, நடந்தே சென்று ருசியில் சிக்கன் இல்லாத சிக்கன் பிரியாணி ஆர்டர் பண்ணினா போதும் அலைச்சல் மிச்சம்.

Monday, January 18, 2010

டயட் பொங்கல்.

குக்கர் பொங்கல் வைத்து சாப்பிட்டாலும், உடல் உழைப்பில்லாத இந்தக்காலத்தில், பொங்கலில் உள்ள இனிப்பு,நெய் முந்திரி பொன்றவை உடல் எடை கொலஸ்டிராஸ், கார்பொஹைட்ரேட் எல்லாவற்றையும் அதிகரித்து உடல் பருமனை அதிகரித்துவிடும். பின்னர் வீட்டைப் பூட்டிவிட்டு டிரெட் மில்லில் தினம் ஒரு மணி நேரம் ஓடவேண்டும். இதற்கு மாற்றாக ஒரு புதுவகை டயட் பொங்கல் எப்படி செய்வதென்று இப்போது பார்ப்போம்.

தேவையானவை

ஓட்ஸ் முடிந்த அளவு (குவேக்கர் ஒன் மினிட் ஓட்ஸ் உபயோகப்படுத்தலாம்.) 2 கப்
0 கலோரி ஸ்வீட்னர் 20 பாக்கெட்
பிரவுன் கலர் பொடி(சக்கரை கலரில் கலோரி இல்லாத ஏதோ உண்ணக்கூடிய ஒரு பொடி, மிளகாய்த்தூள் அல்ல).
உலர் திராட்சை 10
பாதாம் பருப்பு(முந்திரிக்கு பதிலாக, இதில் ஒமேகா 3 கொழுப்பு இருப்பதால் கொலஸ்டிராலை குறைக்க உதவும்)
ஆலிவ் ஆயில் ஒரு மேசைக்கரண்டி.
ஸ்கிம் மில்க்(கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பால்) ஒரு டம்ளர்.

செய்முறை:

அடுப்பை மெதுவான தழலில் எரியவிட்டு, எவர் சில்வர் பாத்திரத்தில் ஸ்கிம் மில்க்கை ஊற்றவும், பால் பொங்கியவுடன், போங்கலோ பொங்கல் சொல்லிவிட்டு, ஓட்ஸ் போட்டு இரு நிமிடம் வேகவைக்கவும், பின்னர் சீரோ கலோரி ஸ்வீட்னர் சேர்த்து கலக்கவேண்டும், அத்துடன் உலர் திராட்சை, பொடியாக நறுக்கிய பாதம்பருப்பை சிறிது ஆலிவ் ஊற்றி ஒரு நிமிடம் வறுத்து பொங்கலில் சேர்க்கவும், தேவைக்கேறப் ஆலிவ் ஆயில் சேர்த்துக்கொள்ளலாம், முடிந்த அளவு எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் உபயோகபடுத்தவும். பொங்கல் இப்போது தயார். நேரமில்லாதவர்கள் இதையே மைக்ரோவேவ் ovenலும் செய்யலாம். பாத்திரத்தில் ஸ்கிம் மில்க்கை ஊற்றி பொங்கலோ பொங்கல் சொல்லிவிட்டு மேலே கூறிபடி செய்து மைக்ரோவேவில் இரண்டு நிமிடம் வைத்தால் சூடான ஓட்ஸ் பொங்கல் தயார்.

இந்தப்பொங்கல் இதுவரை நான் செய்யவில்லை ஆதலால் அதன் சுவை எனக்குத்தெரியாது, யாராவது செய்து எப்படி இருந்தது என்று சொல்லவும்.

Thursday, January 14, 2010

காணும் பொங்கலும் என் பங்காளி தனசேகரனும்

பாகம் 1.

வில்லு விமர்சனத்துல தவறவிட்ட முக்கியமான ஒரு விசயம். இந்தப்படத்தில ஏகப்பட்ட திருப்பங்கள் இருப்பது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயந்தான். ஆனா திருப்பவே முடியாத ஒன்னும் இருந்துச்சுங்க அதாங்க குஷ்பூவும் ஒரு குத்தாட்டம் போட்டாங்க திரும்பவே முடியாம....

என்ன சாப்பாடுன்னா ஆட்டுக்கறி, மீன்,கோழி,கருவாட்டுகுழம்பு,முட்டை இவை அனைத்தும் இருக்கும் கூடுதலாக ஒரு வெண்பொங்கலும்,அதற்கென வைத்த ஒரு குழம்பும் இருக்கும்


மேலே உள்ள எல்லாத்தையும் சாப்பிட்டு, அடுத்த நாள் முறை பார்த்து யார் வீட்டு மாட்டை முதலில் அவிழ்த்து கோவிலுக்கு அழைத்துசெல்வது என்று ஒரு ஊர் கூட்டம்.இந்த முறை பாக்கிர தாத்தா இறந்து போனதுக்கு அப்புரம் தூங்கிரதுக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் போகாத அவரோட பையன் வந்து அவங்கப்பா வெச்சிருந்த முறை பார்க்கும் நோட்ட (டேட்டாபேசு) மடியில வெச்சிட்டு கூட்டத்துக்கு வந்துருவார்.விசயம் எல்லாருக்கும் தெரியும்கிறதுனால அப்புரம் வேற ஒருத்தர் டேட்டாபேச படிச்சி இந்த வருசம் யார் வீட்டு மாடு கியூவில முதலில் இருக்குன்னு பார்க்கனும்.அதுல பிரச்சினை வேற வரும்.

பங்காளி தனசேகரன் இப்போ முழு போதையில் இருப்பார்.இந்த வருசம் என் முறைதான் நாந்தான் மாடு அவுக்கனும் அப்படின்னு அலப்பறைய ஆரம்பிச்சிருவாரு. ஆமாண்டா தம்பி எங்கப்பன் ஊர விட்டு வெளில போனதுக்கு அப்புரம் எல்லாருக்கும் துளிர் விட்டு போச்சு சும்மா விடக்கூடாது அப்படின்னு சொல்லிட்டே வம்பு இழுத்த படி இருப்பாரு.

இந்த வருசம் அவரு வீட்டு முறை இல்லன்னு தெரிஞ்சா அது எப்படின்னு சண்டைக்கு நிப்பாரு.

இல்லப்பா பெரிய மனுசன் சொன்னா கேட்டுக்கனும்.

பெரிய மனுசன்னா என்னாங்கடா உள்ளங்கையிலா மசுரா மொளச்சிருக்கு. பேச வந்துட்டாங்க அது எப்படி என் முறை இன்னும் வரவேயில்லை.எங்கப்பன் வரட்டும்டா உங்களுக்கெல்லாம் வெச்சுக்கிறேன்.இன்னைக்கு எவன் மாடு அவுக்கிறான்னு பாக்கிறேன். எவனாவது அவுத்தான் இன்னைக்கு வெட்டுதான்.

சரி விடுங்கப்பா அவன் எப்பயுமே அப்படிதான் பேசுவான் கண்டுக்காதீங்க.

என்னாங்கடா கண்டுக்காதீங்க. நீங்க எல்லாம் இப்ப புதுப்பணக்காரன் திமிர்ல பேசரீங்களாடா.உங்க லெட்சணம் தெரியாது, இந்த குருசாமி வீட்டு பயலுவ இன்னைக்கு வேணா லட்சாதிபதியா இருக்கலாம், ஆனா அன்னைக்கு நீங்க கூலு குடிச்ச கொட்டாச்சியெல்லாம் என் வீட்டு வேலி ஓரம் இன்னைக்கும் கெடக்குதுடா, பிச்சைக்கார பயலுவலா.எங்கப்பன் வரட்டும் கணக்கு கேட்டு எவன் எவன் என் சொத்தை அனுபவிக்கிறான்னு பாக்கிறேன்.அன்னைக்கு இருக்குடா உங்களுக்கெல்லாம்.

ஒருவழியா அவர எப்படியோ அடக்கி முறை வீட்டில் மாடு அவிழ்த்து கோவிலுக்கு செல்ல புறப்படுவோம்.அதற்கு முன்னர் அன்று காலையிலேயே மாடுகளுக்கு செண்டிப்பூமாலை,பேப்பர் மால்,வண்டி மாடுகளுக்கு பிளாஸ்டிக் மாலை அவரவர்கள் சார்ந்த் அரசியல் கட்சிகளின் கலரில் மாடுகளின் கழுத்தில் ஜொலிக்கும்.மாட்டுக்கொம்புகளும் திமுக,அதிமுக,காங்கிரஸ்,மதிமுக அப்படி மாறிடும்.அண்ணன் அதிமுக தம்பி திமுக என்றால் மாடு ஒவ்வொரு கொம்பும் ஒவ்வொரு கட்சியில் இருக்கும்.

இந்த மாடுகளை அவித்துவிட்டு மல்லுக்கட்டி மாலைகளை அவிழ்ப்பதுதான் வீரவிளையாட்டு,வீரவிளையாட்டுன்னு சொன்னதுக்கப்புரம் அதுல நான் கலந்துக்கமாட்டேன்னு தனியா வேற சொல்லனுமா?ரோட்டில அவித்துவிட்டு குதூகலமான ஜல்லிக்கட்டும், மல்லுக்கட்டும்தான் இந்த நேரத்தில முக்கால்வாசிப்பேரு தண்ணிலதான் இருப்பாங்க,தானும் தண்ணி போட்டு மாட்டுக்கு தண்ணி போட்டு விடற ஒருத்தரும் எங்கூர்ல உண்டு. தனசேகரனும் எல்லா மாட்டையும் மல்லுக்கட்டி,ரகளை பண்ணி விழுப்புண்ணோடு கட்டியிருந்த வேட்டியையும் ஏதாவது ஒரு மாட்டுக்கொம்பில் இழந்து ஜட்டியுடன் சவுண்ட் விட்டபடி எங்காவது விழுந்து விடுவார்.

இந்தக்கூத்தெல்லாம் முடிந்தவுடன் காணும் பொங்கலுக்கு காசு உள்ளவர்கள் தஞ்சாவூருக்கு படத்துக்கு போயிருவாங்க, இல்லாதவனுக்கு பக்கத்து ஊரில் உள்ள கீழே காட்டாறும், மேலே கல்லனை கால்வாயும் ஓடும் வெள்ளைக்காரன் கட்டிய மஹாராஜ சமுத்திரம் பாலம் பாக்க போவாங்க.சரி நான் எங்கே போவேன்.எங்கப்பா ரொம்ப கண்டிப்பு,உடனே எதாவது விழா நாள் வந்துட்டா வயலுக்கு தண்ணி கட்ட போ, அந்த சைக்கிள் தொடச்சி ஒரு மாசம் ஆகுதுன்னு வேல கை மேல வெச்சிருப்பாரு.

காணும் பொங்கலுக்கு அடுத்த நாள் நிறைய பேர விழுப்புண்ணோட பாக்கலாம். பங்காளி தனசேகரனும் நல்ல பிள்ளையா மாறி அவரு வேலைய பாக்க போயிடுவாரு.....

நீங்களும் உங்க கருத்த சொல்லிட்டு போங்க மக்களே.