Thursday, February 9, 2012

தமிழகப்பயணம் -2 : மாரியம்மன் கோவில்கள்.

தஞ்சைப்பகுதியில் மாரியம்மன் கோவில் பிரபலமானது என்பது அனைவரும் அறிந்ததே, மகனுக்கு முடி எடுக்க தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன், சென்னை ரயில் நிலையத்தில் என்னைத்தேடி வந்து பார்த்து பேசிய பதிவர் அப்துல்லா யதார்த்தமாக கேட்டார், பையனுக்கு குல தெய்வத்துக்கு முடி எடுக்கிறீர்களா என்று, நான் எங்கள் குல தெய்வ வழிபாடு/மொட்டை அதற்கு மொட்டை அடிக்கும் பழக்கமெல்லாம் இப்போது வழக்கில் இல்லை, திராவிடர் கழக சிந்தனைகளில் மறக்கப்பட்டிருக்கலாம் என்றேன்

எங்கள் குல தெய்வத்தின் பெயர் ஆதியத்தம்மன்(ஆதியற்ற அம்மன்), பொதுவாக மாட்டுப்பொங்கல் அன்று பழங்கள் வைத்து இந்த சாமிக்கு வீட்டிலேயே படைப்பார்கள், பெரிதாக யாரும் எடுத்துச்செய்வதில்லை, எங்கள் பங்காளிகள் பலர் தற்போது எடுத்துச்செய்யவேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர், ஆதி என்ற பெயரும் சேர்த்து பெயரிடுகின்றனர்.

புன்னைநல்லூருக்கு பதிலாக கிராமியப்பொருளாதாரம் மற்றும் எங்கள் ஊர் போன்றவை கருத்தில் கொண்டு, எங்கள் பகுதியான பாப்பாபட்டி மாரியம்மன் கோவிலில் முடி இறக்க முடிவு செய்தேன்,குறிப்பிட்ட ஒரு நாளில் மைத்துனர் குடும்பம் சென்னையிலிருந்து வந்திருந்தனர்,பாப்பாபட்டி எங்கள் கிராமத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வானம் பார்த்த பூமி, கல்லணைக்கால்வாயின் வடிகால் உளவாய் என்று பெயர்,அதன் மூலம் கிடைக்கும் உபரி நீரில் அவ்வூரின் சிறுபகுதி பலனடையும். ஒரு காலத்தில் பெரிய சந்தை இருந்த ஊர், இப்பொழுது ஒரு பப்ளிக் ஹெல்த் சென்டர் உள்ளது, மற்றபடி சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் வருமானமில்லாத ஏழைகளை மட்டுமே உள்ளடக்கிய ஊர். இந்த ஊரில் உள்ள கடையில் இரண்டு தோசை ஒரு டீ பத்து ரூபாய்தான், நான்கு கிலோ மீட்டர் தள்ளி உள்ள தஞ்சைப்பகுதி கிராமத்தில் ஒரு தோசை மட்டும் பத்து ரூபாய்.

மொட்டை போட சென்ற அன்று கோவில் பூட்டி இருந்தது, எதிரே இருந்த அய்யர் வீட்டில் சாவி இருக்கும் , அங்கே சென்று கேட்டேன் அய்யர் திருமண நாளுக்காக திருச்சி சென்று விட்டார், அவரையும் குறை கூற முடியாது ஒரு காலத்தில் வருமானம் அதிகம் தந்த கோவில் இன்றைக்கு இந்த கோவிலை நம்பி அவர் ஒன்றும் சம்பாதிக்கமுடியாது, நாட்டார் தெய்வமான மாரியம்மனுக்கு எதற்கு சமஸ்கிரத பூஜை என்ற கேள்வி மீண்டும் எழுந்தது, ஜெமோவின் மாடன் படித்தபின் கொஞ்சம் புரியவும் செய்தது.

அய்யர் வீட்டில் கோவில் சாவி கொடுங்கள் என்றேன், அவர் தந்தையிடம் போன் செய்துவிட்டு, வந்திருப்பது எங்கள் குடும்பம் என்று தெரிந்தவுடன் , அவரது மகளையே திறக்கச்சொல்லி பூஜையும் செய்யச்சொல்லிவிட்டார்.

மொட்டை அடித்து முடிக்கும் வரை அழுது தீர்த்துவிட்டான், மொட்டை முடிந்தவுடன் சாப்பாட்டிற்காக தஞ்சை தேவர்ஸ் பிரியாணிக்கு வந்தோம், ஒரு மணி நேரம் காத்திருக்க சொன்னார்கள், பசி தாங்காது என்பதால் புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு அசைவ உணவகத்தில் சாப்பிட்டோம், காடை, மட்டன் கறி, மீன் வருவல் எல்லாமே சுவை அமிர்தம்.

பின்னொரு நாளில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றோம், நிறைய கூட்டம் , ஸ்பெஷல் வழியில் கூப்பிட்டு செல்கிறோம் என்று பணம் பறிக்க சிலர், சமயபுரத்திலும் அய்யர்களையே காணமுடிந்தது, ஏன் கிராமப்பூசாரிகளை இங்கே அனுமதிக்ககூடாது என்ற கேள்வி மீண்டும் எழுந்தது, சமயபுரம் கோவிலின் வருமானம் கண்டிப்பாக அதிகமாக இருக்கும், அதற்கு ஏற்றார்போல் அதன் வெளிப்புறங்களில் சுகாதாரம் பேணப்படவில்லை.இந்து சமய அறநிலையத்துறை அரசிடம் இல்லாமல் இருந்தால் ஒருவேளை சுத்தமாக இருக்க வாய்ப்பு அதிகம்.

சாமி கும்பிட்டுவிட்டு (என்னுடைய பக்திமேல் எனக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை), கோவில் அருகே ஒரு உணவகத்தில் காலை சாப்பாடு, தமிழகத்தில் இம்முறை இங்கே குடித்த காபிதான் சூப்பர், ஒரு அதிமுக அரசியல்வாதியும் அவருடைய பரிவாரங்களோடு அங்கே சாப்பிட்டார், அவரும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தோம்.

சமயபுரத்தில் இருந்து புன்னைநல்லூர், சுங்கச்சாலையில் வெகு விரைவாக வந்தடைந்தோம், புன்னைநல்லூரில் மாரியம்மன், மற்றும் குழந்தைகளுக்காக ஒரு அம்மனை வணங்கிவிட்டு, மாரியம்மன் கோவில் முறுக்கு கொஞ்சம் வாங்கிக்கொண்டு தஞ்சை வீட்டிற்கு திரும்பினோம்.

டைரி மாதிரி இருக்கிறது....:))))))

தமிழகப்பயண அனுபவம் - 1

கடந்த ஜூன் மாதம் தமிழகப்பயணம் செய்தது பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், ஆர்வக்குறைவால் எழுதமுடியவில்லை, டெக்ஸாஸில் மகளின் பள்ளிக்கு விடுமுறை ஜூன் முதல் ஆகஸ்ட் மூன்றாவது வாரம் வரை என்பதால், தமிழகத்திற்கு விடுமுறைக்கு பெரும்பாலும் ஜூனில்தான் வரமுடியும்.இந்த ஆண்டு மகனின் பிறந்தநாளை எனது சொந்த கிராமத்தில் கொண்டாடவும் முடிவெடுத்திருந்தோம், மிகுந்த உற்சாகத்துடன் கிளம்பி சென்னை வந்து, ஒரு பகல் மட்டும் மைத்துனர் வீட்டில் தங்கிவிட்டு, அன்று மாலையே திருச்சிக்கு விமானம் மூலம் சென்றடைந்தேன், திருச்சியிலிருந்து சொந்த ஊருக்கு ஒன்னரை மணி நேரத்தில் சென்று விடலாம்.

திருச்சி வழியே செல்லும்போதெல்லாம் ஒரு உணவகத்தில் அடிக்கடி சாப்பிட்டிருக்கிறேன், அதே இடத்தில் இப்பொழுதும் இரவு டிபன் இரண்டு மூன்று நெய் தோசைகளை சாப்பிட்டுவிட்டு, ஊர் நோக்கிய பயணம், திருவெறும்பூர் தாண்டியதும், திருச்சி, தஞ்சை நான்கு வழி சுங்கப்பாதை அசத்தலாக இருந்ததால் வல்லத்திற்கு இருபது நிமிட நேரத்தில் வந்தடைந்தோம், அதற்குபின்னர் தஞ்சை செல்லாமல் எங்கள் கிராமத்திற்கு அரை மணி நேரம், தஞ்சையில் படிக்கும்போது பயணம் செய்த அதே கல்லணைக்கால்வாய் கரை ஒற்றைப்பாதை, இப்பொழுது எனக்கு மிகவும் குறுகலாக தெரிந்தது(அமெரிக்க என் ஆர் ஐ வியாதி). ஒரு வழியாக 2002க்கு பிறகு எனது உடல்நலன் காரணமாக ஊருக்கு செல்லாமல் இருந்ததை முறித்து சொந்த கிராமத்தில் அடி எடுத்து வைத்தேன்.

என் வீடு எனக்கு சிறியதாக தெரிந்தது, சிறிது நேரத்தில் சரியாகிப்போனது, மகள் விபரம் அறிந்து முதல்முறை இங்கே வருகிறாள், சுற்றும் பார்த்துவிட்டு, ஏன் இரண்டு வீடு இருக்கிறது, நடுவில் ஏன் இடைவெளி, இரண்டும் நம்ம வீடா என்றாள், வீடு பிடித்திருக்கிறது என்றாள், உறக்கமில்லாத உறங்கியபின்,அடுத்த நாள் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஊரில் பலரை சந்திந்தேன், என் உருவமாற்றம் அவர்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கும், ஐம்பது கிலோவில் இருந்து தொண்ணூறு கிலோவை பலர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

மாமனார் வீட்டிற்கு அடுத்தநாள் சென்றுவிட்டு, மீண்டும் அடுத்தநாள் எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் திருவிழாவிற்கு ஊருக்கு வந்துவிட்டோம். பெரிய ஊர் திருவிழாக்களுக்கே ஆள் இல்லாத நிலையில், மிகச்சிறிய கிராமமான எங்கள் ஊரில் திருவிழா நடக்கிறது என்பதற்கு மைக் செட் சவுண்டைத்தவிர வேறு எந்த அறிகுறியும் இல்லை.

திருவிழாவில் பெரிசுகளுக்கு தலையாட்டிவிட்டு,ஒன்பது ஆண்டுகளில் இளைஞர்களான சிறுவர்களின் அடையாளம் அறிந்து பேசிவிட்டு,மகளுக்கு வீட்டில் விளைந்த கொய்யாக்காய், சாத்துக்குடி, எலுமிச்சை பறித்துக்கொடுத்தேன், எல்லாவற்றையும் விட மகளுக்கு பிடித்தது இந்த தோட்டமும் உள்ள வீடு.பிடிக்காதது டாய்லெட்.

அடுத்தநாள் மகனின் பிறந்தநாளுக்கான ஏற்பாடுகளை செய்ய சொல்லிவிட்டு, தஞ்சையில் சிலோன் தாசன் பேக்கரியில் கேக் வாங்கிக்கொண்டு டூ வீலர் பயணம். கல்லணைக்கால்வாய் ஆற்றங்கரையின் நாணல் புற்களை இப்போது ரசிக்கமுடிந்தது.

மகனின் பிறந்தநாள் முடிந்த அளவு சிறப்பாக கொண்டாடினோம். என் வீட்டிற்கு எதிராகவே பள்ளியும் இருப்பதால் அந்தக்குழந்தைகளையும் பிறந்தநாள் கொண்டாண்டத்தில் வலுக்கட்டாயமாக சேர்த்துக்கொண்டோம்.

எங்கள் கிராமம் பெரிதாக மாறவில்லை, ஆனால் மாறியவை பற்றியும் மற்ற அனுபவங்களும் இனி மெதுவாக.

Saturday, January 14, 2012

த்ரீ இடியட்ஸூம் அவதாரும், டாலஸ் தமிழ்ச்சங்கத்தில் சிலப்பதிகாரமும்

இந்த வாரம் த்ரீ இடியட்ஸ் படம் பார்த்தாகிவிட்டது, வெகுசில இந்திப்படங்களே நான் பார்த்துள்ளேன், இந்தப்படத்தையும் மொழி தெரியாமல் ரசித்துப் பார்க்கமுடிந்தது, காரணம் இது ஒரு சாதாரண படமாக எடுக்கப்பட்டிருந்தது என்றே எனக்குத்தோன்றியது. படத்தில் 44 வயது அமீர்கானை இளமையாக காண்பிக்க கரினா கபூரை ஜோடியாக போட்டிருப்பார்களோ என்று ஒரு பயங்கர சந்தேகம். அமீர்கான் எந்தவித ஹீரோயிசமும் காண்பிக்காமல் ஒரு மாணவனாக அசத்தியிருக்கிறார்.இப்படத்தின் இயக்குனர் இதற்கு முன்னர் இயக்கிய முன்னாபாய் படத்தை டெம்ப்பிளேட்டாக வைத்தே இப்படத்தை தந்திருக்கிறார். தாரே சமீன் பர் படத்தில் ஒரு ஆசிரியர் மாணவனின் டிஸ்லேக்ஸியா கண்டுபிடித்து அவனின் தனித்திறமையும் கண்டுபிடித்து ஊக்குவிப்பார். இந்தந்தனித்திறமை என்ற கருவை எடுத்து, வழக்கமாக பெற்றோர்களின் இஞ்சினியர்/டாக்டர் கனவுகளோடு சேர்த்து முன்னாபாய் படத்தளத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
அந்தப்பேராசிரியர் வேடம், அவரின் மகள் கரினா கபூரும் , வசூல்ராஜா படத்தில் வந்த பிரகாஷ்ராஜ் , சினேகா பாத்திரப்படைப்புகளின் வேறு மாதிரியான பிரதி, அமீர்,மாதவன் உள்ளிட்ட மூவர் கூட்டணி கமல் , பிரபு , கருணாஸ் கூட்டணியின் வேறு பிரதி. மூவர் கூட்டணியில் இயல்பான கல்லூரி கால வாழ்க்கை மூலம் வெகு அழகாக கதையை திரைக்கதை அமைத்து நகர்த்தி உள்ளார். குறிப்பாக கரீனாவின் அக்காவிற்கு அமீர் பிரசவம் பார்க்கும் காட்சி , வசூல்ராஜா கோமா கேரக்டருக்கு கமல் வைத்தியம் செய்து சிரிக்கை வைத்ததை போன்ற அதே உத்தி, அதே போல் கமலின் தேர்வுக்கு கிரேஸி உதவுவது போன்றதே, ராஜீ கேரக்டருக்கு அமீர் தேர்வுப்பேப்பரை கடத்தி உதவுவதும் மாட்டிக்கொள்வதும், இந்த இலகுவான உத்தியை வைத்து அதே அளவு நகைச்சுவையுடன் தெளிவான கருத்தை மொழி தெரியாதவனும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள். தமிழில் இப்படத்தை எடுத்தால் என்னுடைய தேர்வு நடிகர் விஜய். குருவி.வில்லு,வேட்டைக்காரன்,சுரா ஆகியவற்றை கலக்கி ஒரு இறா கொடுப்பதற்கு பதில் இப்படி ஒரு நல்லபடத்தை கொடுக்கலாம். விஜய் மீசையை மழித்துவிட்டு கொஞ்சம் முடிவெட்டிக்கொண்டால் மட்டும் போதும், வெகுஜன மக்களை எளிமையாக இப்படம் சென்றடையும்.

மீள்பதிவு.
----------------------------------------------------------------------------------------------------

அவதார் படம் பார்க்க என் மகள் அனுமதி கொடுக்கவில்லை,எப்படியோ அனுமதி பெற்று ,டாலஸில் இரண்டே இரண்டு ஐமேக்ஸ் தியேட்டரில்(?) ஒன்றான சினிமார்க் ஐமேக்ஸ் 3Dயில் பார்த்தேன் வெகு எளிமையான கதை அதன் பிரமாண்டம் பிரமிக்க வைத்தது, இயல்புடன் சேர்ந்த வாழ்க்கையை வலியுறுத்தும் இந்தப்படமும் எனக்கு மிகவும் பிடித்தது. தமிழ்ஹிந்து தளத்தில் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய இப்பட விமர்சனத்தில் இயற்கை வழிபாட்டோடு இணைத்து எழுதியிருந்தார்,பெரும்பகுதி அதில் எனக்கு உடன்பாடு உண்டு, இயற்கை வழிபாடு என்ற பெயரில் மூடநம்பிக்கையே / நம்பிக்கையோ எதுவாக இருப்பினும் மஞ்சள் கயிறு கட்டி சாமி மரமாகிய வேப்பமரம் அதிகநாள் உயிர்வாழ்கிறது, அதுபோல் கோவிலில் உள்ள ஸ்தல விருட்சங்கள். கிராமக்கோவில்களில் உள்ள அரசமரம் எதுவாக இருப்பினும் இயற்கை வழிபாடு நல்லதாகவே இருந்திருக்கிறது. அதே நேரத்தில் மூடநம்பிக்கையில் வீட்டு வாசலில் புளியமரம் நின்றால் வெட்டுவதும் நடக்கத்தான் செய்கிறது.

நேற்று டாலஸ் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்படும் பொங்கல் விழாவிற்கு சென்றேன். முன்னூறுக்கு மேற்பட்ட அளவிற்கு மக்கள் வந்திருந்தனர், ஆண்கள் வேட்டி சட்டையுடன், பெண்கள் பட்டுப்புடவை, குழந்தைகளும் தமிழக கலாச்சார உடை அணிந்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நன்றாக நடந்தது, இடைநிலைப் பள்ளி மாணவர்கள் நடித்து வழங்கிய சிலப்பதிகாரம் வெகுவாக என்னைக் கவர்ந்தது, பெரும்பாலான குழநதைகள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் ஆனாலும் மிகத்தெளிவாக தமிழ் உச்சரிப்பு இருந்தது, வீடியோ தொகுப்பு கிடைத்தால் அடுத்தடுத்த பதிவுகளில் இணைப்பு தருகிறேன்.


Thursday, November 10, 2011

எவருமில்லாமலில்லை


முதுகுக்கு
இந்தப் பக்கம்
இந்த மூஞ்சி
முகம் மாற்றி
அகம் மாற்றி
உனக்காகவே
காத்துக் கொண்டிருக்கிறது


உயிர்விட்டு
உயிரை வாங்குகிறது
ஊதிய சிகரெட்டுகள்
துண்டுகள் எண்ணிக்கை
ரொம்ப லேட் என்றே
உறுதி செய்கின்றன


எச்சரிக்கையை
ஏளனம் செய்தபடி
ஊதியபடி நிற்கிறது
மூஞ்சி..

காதலி
அவன் காதலனுடன்
இருக்கையைப் பின் தள்ளி
இறுக்கமாக
காதலிக்க கற்றுக்கொண்டேன்..
காதலி மட்டும் தேவை..

Tuesday, October 18, 2011

விவசாயம் தேவையா?

எந்த ஒரு பிரச்சினையிலும், பிரச்சினையோட மூல காரணத்தை ஆராய்ந்து அதை முளையிலேயே கிள்ளி எறியனும், அப்படியே விட்டா அது வளர்ந்து தீவிரவாதமாகிவிடும். ஒரு உதாரணத்துக்கு இன்றைக்கு தமிழக விவசாயிகளை எடுத்துங்கோங்க, காவிரியில் கர்நாடகா தண்ணீர் விடலைங்கிறான், முல்லைப்பெரியாரில் கேரளா தண்ணீர் விடலைங்கிறான், பாலாத்துல ஆந்திராகாரன் அணை கட்டுறான் இப்படியெல்லாம் பிரச்சினை பண்றாங்க, இதுக்கு மூல காரணம் என்னன்னு கண்டுபிடிச்சி தீர்க்கனும்.

"இதுக்கு மூல காரணம் என்னங்க?"

ரொம்ப சிம்பிள், தமிழ்நாட்டுக்காரன் விவசாயம் பண்றதே தவறு, விவசாயம் செய்வதால்தானே தண்ணீர் கேட்குறான், அவன் எப்படி கொடுப்பான், மிஞ்சி இருக்கிறத மட்டும்தான் கொடுப்பான், அதுனால தண்ணி கேக்குறத நிறுத்தனும், அதுனால விவசாயம் செய்வதை நிறுத்தனும், இல்லாட்டி இது தீவிரவாதம் வளர வழி வகுத்துவிடும்.விவசாயம் எனது பிறப்புரிமைம்பான் இன்னும் நிறைய வெத்துக்கோஷம் போடுவான்.

எப்படி நிறுத்த முடியும்?

விவசாயம் பண்ற எல்லாரையும் சும்மா விட்டா ஆடிய காலும்,பாடிய வாயும் போல சும்மா இருக்கமாட்டான், அந்தக்காலத்துல ஏழு போகம் வெள்ளாமை போட்டேன்னு அவ்வையார் பாட்டைப்பாடிட்டு வெறும்பேச்சு பேசிட்டு இருப்பான், அதுனால அவங்கள இரும்புக்கரம் கொண்டு அடக்கனும், ஒரு ஒரு ஆற்றுப்பகுதிக்கும், முகாம்கள் அமைத்து எல்லாரையும் அடைச்சிரனும், இலங்கையிலே இதே மாதிரி பிரச்சினை தீர்த்த புண்ணியவான்கள் பெயர்களான ராஜபக்ஷே சகோதரகள் பெயர்களை அந்த முகாம்களுக்கு பெயர் வைத்து அவர்களையும் கவுரவிக்கலாம். உலகத்துக்கே ஒரு முன்மாதியாக விவசாயத்தீவிரவாதத்தை ஒழித்த மாதிரியும் இருக்கும்

விவசாயிகள் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள்?

எவ்வளவோ வழிகள் இருக்கும்போது, ஏன் இன்னும் விவசாயத்தைப்பத்தி பேசறீங்க, அவங்கள விவசாயிகள்னு சொல்றதே தப்பு, விவசாயத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டவர்கள்னு வேணும்னா சொல்லலாம்
ஆறுகளில் தண்ணீர் பற்றாக்குறையினால்தான் விவசாயத்தை நிறுத்தறோம், ஆனா அதே ஆறுகளில் பல்வேறு பிஸினஸ் உருவாக்கலாம், ஆத்துல படகு சவாரி விடலாம், ரிட்டையர் ஆன பெரிசுகள் மீன் பிடிக்க வாடகைக்கு விடலாம், தண்ணீர் வராதபோது ரிரை ரிவர் ஷோ அப்படின்னு சொல்லி டிக்கெட் போட்டு பொழுது போக்கு காண்பிக்கலாம், அந்தக்காலத்து விவசாயிகள் இப்படியெல்லாம் பயிர் பண்ணினாங்கன்னு ஒரு புரோட்டோடைப் ஷோ வெச்சு வெளி மாநில/நாட்டு மக்களை கவரலாமே? நான் பொருளாதார நிபுணன் அல்ல, அவர்கள் இன்னும் நிறைய யோசனைகள் தரக்கூடும்

சரிங்க இதில அந்த விவசாயத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டவர்கள்?

அவங்க இந்த கம்பெனிகள் உருவாக்கும் வேலை வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கலாம், அதனை சார்ந்து நிறைய அல்லக்கை தொழில்கள் உருவாகும், இந்தந்தொழில்களுக்கு தேவையான மின்சாரத்தை கூட புதிய அணுமின்சாரம் மூலம் தயாரிக்கலாம்,அதிலும் வேலைக்கு சேரலாம். புதிய ஆற்றங்கரை நாகரிகம் உருவாகும், ஆற்றங்கரைல கக்கா போகிற விவசாயிய அதே ஆற்றங்கரைல வெஸ்டர்ன் டாய்லெட்ல கக்கா போக வைக்கலாம், ஆற்றங்கரைலை பேப்பர்ல துடைக்கும்போது கிடைக்கும் வசதியை உணரும்போது, விவசாயியா இருந்த காலத்தில் ஆற்றில் கழுவிய அந்தக்காலத்தை நினைத்து ஒரு பழைய பின்னவீன இலக்கியம் படைக்கலாம்,விவசாயம் பொய்க்குமா இல்லையான்னெல்லாம் கவலைப்படாம வேலையப்பாத்தமா காமிடியா எதையாவது படிச்சமான்னு ஹாயா இருக்கலாம்.

எனக்கு ஒன்னும் புரியலீங்க, இதெல்லாம் செஞ்சாலும் சோறு எப்படி கிடைக்கும்?

அது டப்பாவில வரும் வாங்கி சுடவெச்சி சாப்பிட்டுக்கலாம்.


நெல்லைப்பெண்ணை டாவடிக்கும் கொங்கு பையன்.



கொங்குப்பையன் : (மனசுக்குளே)என்னடா ஒரு காச்சப்பாடா இருக்.. பிஸினசும் சரியா போகல கோயமுத்தூரு போயி ஆர்டர் எடுத்துட்டு அப்படியே அந்த கம்பேனில வேல பாக்கிற அந்த வட இந்தியா காரிய மடக்க முடியாதுன்னு பார்ப்போம்.

அப்படியே உடுமலையில பஸ்ஸப்புடிச்சி கோயம்புத்தூர்ல அந்த அழகான புள்ளய மடிக்கிறதுக்கு அண்ணன் வந்து இறங்கி பாக்கிறார், ஆனா அங்க வேற ஒரு பொண்ணு இருக்கு.

கொங்குப்பையன்: ஏனுங் அம்மணி கம்பெனிக்கு புதுசாங்.. இப்பதானுங் ஒங்கள பாக்கிரனுங்..

நெல்லைப்பெண்: ஆமாவே நான் கோயம்புத்தூருக்கே புதுசு சார், நேத்தைக்கு என் பிரண்டு ஒருத்தி மூலமா சிபாரிசு பண்ணி இங்கே சேந்தேன்.

கொங்குப்பையன்:உங் பேரெண்ணங்.

நெல்லைப்பெண்: நீங்க என்ன சொல்லுதியன்னு சரியா வெளங்க மாட்டங்குதுவே.

கொங்குப்பையன்:அம்மினி அப்பா,அம்மா உங்களுக்கு வெச்ச பேரெண்ணங்..உங்கள் எப்படிங் ..கூப்பிட்டு போடரது..

நெல்லைப்பெண்: என் பேர கேக்குதியலா, எங்கய்யா வெச்ச பேரு லெட்சுமி, ஊருப்பக்கம் எல்லாரும் என்னிய வீரலெட்சுமின்னு சொல்வாக கூப்புடுதாங்க.

கொங்குப்பையன்: இருக்கட்டுங் நல்ல பேருங்.. அம்மினி இந்த ஆர்டரை எங்களுக்கு கொடுத்துப்போடுங்க , உங்களுக்காக ரெண்டு நாள்ல முடிச்சு கொடுத்துப்போடரனுங்க்...

நெல்லைப்பெண்: என்னமோ சொல்லுதிய நெல்லைக்காரிக்கு வாக்கு மாறுனா பிடிக்காது,அப்புரம் உங்களுக்கு ஆர்டர் கெடக்காது அத நல்லா தெரிஞ்சுகிடுங்க.

கொங்குப்பையன்: அது என்னமோ தெரியலங்.. உங்கள பாத்தோடனே மனசு பரி கொடுத்து போட்டனுங்..நீங்க ரொம்ப அலகா இருக்கீங்க அம்மினி உங்க பேரு மாதிரியே...சிறுவானி தண்ணி குடிச்சு போட்டு கொங்கு கார அம்மினிகளுக்கு குரல் நல்லா இருக்குமுன்னு சொல்லுவாங்... ஆனா அது நெசமில்லீங போலருக்குங்க .. தாமிரபரணி தண்ணி குடிச்ச உங்க குரலு குயிலு மாதிரி இருக்குங்... ஆள அப்படியே மயக்கி போடுதுங்.....

நெல்லைப்பெண்: நல்லாத்தேன் பேசுதீய, பாத்தவுடனே இப்படி சொல்லுதீய..உங்க பேரு என்னா?

கொங்குப்பையன்:துக்ளக்குங்..

நெல்லைப்பெண்: என்னா தூக்குலருக்கு சட்டிலருக்குன்னு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேர ஒழுங்கா சொல்லுவே.

கொங்குப்பையன்: துக்ளக் மகேஷுங். துக்ளக் நம்ம கடைபேருங்..என்னங்க பேர சொன்னோன வெக்கப்பட்டு போறீங்..

நெல்லைப்பெண்: நல்ல பேராத்தேன் இருக்கு,பாக்கலாம் எனக்கு புடிக்குதான்னு.அப்புரம் எங்கய்யாவுக்கு வேற புடிக்கனும்.

கொங்குப்பையன் : (மனதினுள்)இரண்டு நாள் கழிச்சு ஆர்டரை முடிச்சு போட்டு கொடுத்துப்போட்டு தேத்திப்பாப்போம் இல்லாட்டி அல்வா கொடுத்துருவொம்.

காலையில ஆர்டர் முடிச்சு கொடுத்துட்டு,நாளைக்கு போயி நெல்லைப்பெண்ண் பாக்குற நெனப்புல வீட்டுக்கு போகிறார்

கொங்கு அம்மினி: வாங்க கால கழுவி போட்டு வாங்க இந்தாங்க தண்ணி.

கொங்குப்பையன் : என்ன சாப்பாடு அம்மினி.

கொங்கு அம்மினி: வழக்கமான சாப்பாடுதானுங்.., ஆனா பாருங்.. நீங்க ஏதோ கோயமுத்தூருக்கு.. ஒரு ஆர்டர் இன்னிக்கு காலைல கொடுத்துபோட்டிங்களாம், அங்கே இருக்கிர அம்மினி அதுக்காக இந்த அல்வாவ கொடுத்து போட்டிருங்காங்...கடைப்பசங்க கொண்டு வந்தாங்..நீங்க சாப்பிடுங்..

கொங்குப்பையன் : (மனதினுள்)ஆஹா நாம கடலை போட்ட வெசயம் கடைப்பசங்ககிட்ட சொல்லிப்போட்டாளோ..சே இருக்காது.. பாசமா அல்வா அனுப்பிச்சிருக்கா.. நாம வேற அல்வா கொடுக்கனும்னு நெனச்சோம் ஆனா அவ திருநெல்வேலி அல்வா கொடுத்து போட்டிருக்கா போல ,ஆமா திருநெல்வேலி அல்வா இளக்கமாத்தன இருக்கும் இது என்ன கல்லு மாதிரியாட்டம் இருக்கு..

கொங்கு அம்மினி: எனக்கு தெரியாதுங்..சும்மா சாப்பிடுங்க்.. நல்லா இருக்குதா..

கொங்குப்பையன் : ..........கடிக்க கொஞ்ச சிரமமா இருந்தாலும் நல்லாதான் அம்மினி இருக்கு..

கொங்கு அம்மினி: இது காயல்பட்டிணம் அல்வா, அடங்காம திரியரவனுக்கு கொடுத்தா பத்து நாளைக்கு பாத்ரூம் வராதாமுங்.. நீங்க வழிஞ்சு போட்ட லெட்சுமி என் கிளாஸ்மேட்தானுங்...பொண்ணுங்கள்ள கொங்கு,நெலலைன்னெல்லாம் ஒன்னும் வித்தியாசம் கெடயாதுங்..
அந்தக்காலத்துல புலிய முறத்தால அடிச்சமுங்.. இப்ப இப்படி அல்வா வெச்சு அடைப்பமுங்..... என்னங் புரிஞ்சுதாங்..

கொங்குப்பையன் : பழமைபேசி அய்யா உங்க அனுபவத்தை வெச்சு அந்த ஓலைச்சுவடிய படிச்சு போட்டு ஒரு வைத்தியம் சொல்லுங்க, வாயைக்கட்டுனா பரவாஇல்லீங் ,இங்கன வேறய கட்டிப்புட்டாங்....

பழமைபேசி: அந்தப்பொண்ணா, அவிங்க மொதவே வாலு பண்ண நசரேயன்னு ஒரு நெல்லைக்காரர இப்படி கட்டி போட்டாங..,அவிரு கிட்ட கேளுங் வைத்தியம்...

மீள்பதிவு.

Friday, April 15, 2011

கல்லூரி சாலை: கல்லூரி சாலையும் சாத்தூர் சாலையும்.

இந்தப்பதிவு வருங்கால முதல்வரில் விருதுநகர் பற்றிய நாநாவின் பதிவிற்கு துணைப்பதிவாக எழுதலாமென்றிருந்தேன்.நாநா ரெண்டு பதிவுக்கு அப்புரம் ஆளையேக்காணோம் அந்த வலைத்தளமும் விருதுநகர் மாதிரியே காஞ்சு போச்சு. இடையில் சஞ்சய் காந்தி வந்து தரும புரிய அவங்க ஊரு தோட்டம் மாதிரி பசுமையா காமிச்சாரு, கோடை காலம் வந்திருச்சா திரும்பவும் காஞ்சு போச்சு, தண்ணீர் இல்லாமேலேயே உயிர் வாழும் கலை அறிந்த புதுக்கோட்டை பத்தி எழுதி உயிர் கொடுக்க சொல்லி புதுகை அப்துல்லா கிட்ட சொன்னேன் அவரு சிங்கப்பூர், துபாய்னு குடும்ப விசயமாவும் வேலை விசயமாவும் பறந்துட்டே இருக்கிறதானலே ஜி சாட்ல ’பதிவு விரைவில் ரெடி’ அப்படின்னு தந்தி அடிக்கிறார், நானும் ஒரு தந்தி அடிச்சேன் பதிவு எங்கேன்னு அது எங்க வீட்டு பரண் மேல கெடக்குன்னு எடக்கா சொல்றார்.

இஞ்சினியரிங்க் இறுதித்தேர்வு முடிந்த சமயம், ஒரே ஒரு செய்முறைத்தேர்வு மற்றும் சேர்த்தவைகள் எழுதவேண்டிய நேரம். அயன் வடமலாபுரம்ன்னு ஒரு ஊர் அருப்புக்கோட்டைக்கும் , எட்டையபுரத்துக்கும் நடுவில் சாத்தூர் , விளாத்திக்குளம் சாலை சந்திப்பின் அருகில் இருக்கிறது. இந்த ஊரைச்சேர்ந்த நண்பன் பெரிசு அவங்க ஊர் திருவிழாவிற்கு கூப்பிட்டிருந்தான். அந்த மிகச்சிறிய கிராமம் பற்றிய பதிவுதான் இது.

ஜூலை மாதம் மதியம் அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் உள்ள தாப்பாத்தி என்ற ஊரில் பெரிசுவுடன்,டொல்பி மற்றும் நான் சென்று இறங்கினோம். அங்கிருந்து பெரிசு ஊருக்கு 3 கிலோமீட்டர் நடக்கவேண்டும்.ஜூலை மாதம் கரிசல்காட்டில் தார் ரோட்டில் மதிய நேரம் என் வாழ்க்கையில் முதன் முதலாக பூமியில் இருந்து ஒரு சூரியனும் மேலேயிருந்து ஒரு சூரியனும் சேர்ந்து தாக்குவதை கண்டேன். வெயிலின் கொடுமையை சொல்வதென்றால், சங்கமம் என்றொரு படத்திற்கு குமுதம் விமர்சனத்தில் ரகுமானும், விந்தியாவும் நடனமாடுவதை உச்சி வெயிலில் தார் ரோட்டில் செருப்பில்லாதவன் படும் அவஸ்தை போன்று இருந்தது வர்ணித்திருப்பார்கள் , ஓசி செருப்பு அணிந்திருந்தும் எங்கள் நிலைமையும் அதுதான்.

ஊரில் திருவிழாக்கோலம் கலை கட்டி இருந்தது, ஊரில் வாழும் அனைவரும் தெலுங்கு மொழி பேசுபவர்கள்.பெரிசு வீட்டின் அருகில் ஒரு மிகப்பெரிய பங்களா இருந்தது, அது மதுரை அரவிந்த கண் மருத்துவமனை உரிமையாளரின் வீடு. சிறிய ஊரில் பிறந்து கண் மருத்துவத்தில் பெரிய புரட்சி செய்த அவரை எப்படி வேண்டுமானாலும் பாரட்டலாம்.

100 வீடுகளுக்கு குறைவாக உள்ள ஊர், மிக ஒழுங்கான இரண்டு மூன்று தெரு, சாக்கடையை நடு ரோட்டில் ஓட விடமால் சிமெண்ட் குழாய்கள் வழியாக எடுத்துச்செல்ல வசதி, மழையே பெய்யாவிட்டாலும் அருமையான வடிகால் வசதி. கிராமத்தில் உள்ள அனைவருக்கும் பல ஏக்கர் நிலம் இருக்கிறது,ஆனால் அனைத்தும் விவசாயம் செய்யவே முடியாத கரிசல் காடு, ஏக்கர் 2000 ரூபாய்க்கு விற்றால் பெரிய விசயம் , அதுவும் இந்த ஊர்ப்பக்கம் உள்ள ரெஜிஸ்ட்டர் ஆபிஸில் கல்யாணம் ரெஜிஸ்ட்டர் ஆனால்தான் உண்டாம், பெரிசுக்கு தெரிந்து யாரும் நிலம் வாங்கியதோ விற்றதோ இல்லை.

திருவிழாவிற்கு வந்த இளம்பெண்கள் மத்தியில் எங்கள் பெரிசுதான் ஹீரோ, சினிமாவில மட்டும்தான் பெரிசுங்க ஹீரோ அப்படின்னு நெனச்சிருந்தா உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள், பெரிசும் பெண்களும் தெலுங்கில் சிரித்துக்கொண்டார்கள் எங்களுக்கும் புரிந்தது, முளைப்பாறி பால் குடம் போன்ற திருவிழாக்கு உரித்தான அனைத்தும் முடிந்தவுடன், பெரிசு வீட்டில் எங்களுக்காக தயாராக இருந்த மட்டன் பிரியாணி நோக்கி நாங்கள் சென்று கொண்டிருந்தோம்.

போகும் வழியில் எங்கள் பெரிசுவிடம் அதைவிடப் பெரிசு ஒன்று
“என்ன விருந்தாடிகள் வந்திருக்காங்க வீட்டுல ஆட்டு மட்டனா , கோழி மட்டனா தம்பி எனக்கேட்டார்.பெரிசு சிரித்தபடியே ஆட்டு மட்டன் தான், கோழிக்கறிய சிக்கன்னு சொல்லுவாங்க என்று தெலுங்கிவிட்டு எங்களுக்கு நடந்ததை தமிழினார். நிறைய சிரிப்பு வந்தாலும் என் சிந்தனையெல்லாம் சீக்கிரமாக ஆட்டு மட்டன் பிரியாணியை சாப்பிடுவதிலேயே இருந்தது.

அருமையான பிரியாணி சாப்பிட்டோம், டொல்பி ரொம்பவே பிரியாணிய பாராட்டினான், உண்மையிலேயே துளுக்க வீட்டு பிரியாணி மாதிரியே இருக்கு அப்படின்னான். என்ன ஒரு குவாட்டர் உட்டிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்னான்.அவன் குவாட்டர் உட்டிருந்தா எங்க நிலைமை வேற மாதிரி ஆயிருக்கும்.டொல்பி வீட்லேயும் பக்ரீத்துக்கு ஆடு வெட்டி சாப்பிட்டிருக்கேன்(நான் சாப்பிடதா ஊடு எதுன்னு கேக்காதீங்க) அதனால் அவன் சொன்னது சரியென்றே பட்டது.

எனக்கு அடுத்த நாள் செய்முறைத்தேர்வு இருந்ததால் நான் அன்று மாலையே மீண்டும் தாப்பாத்தி வந்து காலேஜுக்கு வந்துவிட்டேன்,அடுத்த நாள் ஹாஸ்டலுக்கு பெரிசு போன் பண்ணினார், டொல்பிய நட்டுவாக்கலி கடிச்சிருச்சு, இப்பதான் ஹாஸ்பிட்டலேந்து வரோம், ஒன்னும் பயமில்ல நாளைக்கு வந்திருவான் அப்படின்னார்.

இங்க ஹாஸ்டலில் நட்டுவாக்கலி , தேள், விஷப்பாம்புகள் வண்டுகள் எல்லாம் காசு குடுக்காம எங்க கூட தங்கியிருக்கும் ஜந்துக்கள்,ஆனாலும் ஒரு நாளும் இவைகள் எங்களை கடித்ததில்லை, இந்த அருப்புக்கோட்டை நட்டுவாக்கலி ஏன் டொல்பிய கடிச்சதுன்னு இன்னமும் எனக்கு புரியல..ஒருவேளை கரிசல் காட்டு நட்டுவாக்கலிக்கு செட்டிநாட்டு இரத்தம் பிடிக்குமோ?