Thursday, February 9, 2012

தமிழகப்பயண அனுபவம் - 1

கடந்த ஜூன் மாதம் தமிழகப்பயணம் செய்தது பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், ஆர்வக்குறைவால் எழுதமுடியவில்லை, டெக்ஸாஸில் மகளின் பள்ளிக்கு விடுமுறை ஜூன் முதல் ஆகஸ்ட் மூன்றாவது வாரம் வரை என்பதால், தமிழகத்திற்கு விடுமுறைக்கு பெரும்பாலும் ஜூனில்தான் வரமுடியும்.இந்த ஆண்டு மகனின் பிறந்தநாளை எனது சொந்த கிராமத்தில் கொண்டாடவும் முடிவெடுத்திருந்தோம், மிகுந்த உற்சாகத்துடன் கிளம்பி சென்னை வந்து, ஒரு பகல் மட்டும் மைத்துனர் வீட்டில் தங்கிவிட்டு, அன்று மாலையே திருச்சிக்கு விமானம் மூலம் சென்றடைந்தேன், திருச்சியிலிருந்து சொந்த ஊருக்கு ஒன்னரை மணி நேரத்தில் சென்று விடலாம்.

திருச்சி வழியே செல்லும்போதெல்லாம் ஒரு உணவகத்தில் அடிக்கடி சாப்பிட்டிருக்கிறேன், அதே இடத்தில் இப்பொழுதும் இரவு டிபன் இரண்டு மூன்று நெய் தோசைகளை சாப்பிட்டுவிட்டு, ஊர் நோக்கிய பயணம், திருவெறும்பூர் தாண்டியதும், திருச்சி, தஞ்சை நான்கு வழி சுங்கப்பாதை அசத்தலாக இருந்ததால் வல்லத்திற்கு இருபது நிமிட நேரத்தில் வந்தடைந்தோம், அதற்குபின்னர் தஞ்சை செல்லாமல் எங்கள் கிராமத்திற்கு அரை மணி நேரம், தஞ்சையில் படிக்கும்போது பயணம் செய்த அதே கல்லணைக்கால்வாய் கரை ஒற்றைப்பாதை, இப்பொழுது எனக்கு மிகவும் குறுகலாக தெரிந்தது(அமெரிக்க என் ஆர் ஐ வியாதி). ஒரு வழியாக 2002க்கு பிறகு எனது உடல்நலன் காரணமாக ஊருக்கு செல்லாமல் இருந்ததை முறித்து சொந்த கிராமத்தில் அடி எடுத்து வைத்தேன்.

என் வீடு எனக்கு சிறியதாக தெரிந்தது, சிறிது நேரத்தில் சரியாகிப்போனது, மகள் விபரம் அறிந்து முதல்முறை இங்கே வருகிறாள், சுற்றும் பார்த்துவிட்டு, ஏன் இரண்டு வீடு இருக்கிறது, நடுவில் ஏன் இடைவெளி, இரண்டும் நம்ம வீடா என்றாள், வீடு பிடித்திருக்கிறது என்றாள், உறக்கமில்லாத உறங்கியபின்,அடுத்த நாள் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஊரில் பலரை சந்திந்தேன், என் உருவமாற்றம் அவர்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கும், ஐம்பது கிலோவில் இருந்து தொண்ணூறு கிலோவை பலர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

மாமனார் வீட்டிற்கு அடுத்தநாள் சென்றுவிட்டு, மீண்டும் அடுத்தநாள் எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் திருவிழாவிற்கு ஊருக்கு வந்துவிட்டோம். பெரிய ஊர் திருவிழாக்களுக்கே ஆள் இல்லாத நிலையில், மிகச்சிறிய கிராமமான எங்கள் ஊரில் திருவிழா நடக்கிறது என்பதற்கு மைக் செட் சவுண்டைத்தவிர வேறு எந்த அறிகுறியும் இல்லை.

திருவிழாவில் பெரிசுகளுக்கு தலையாட்டிவிட்டு,ஒன்பது ஆண்டுகளில் இளைஞர்களான சிறுவர்களின் அடையாளம் அறிந்து பேசிவிட்டு,மகளுக்கு வீட்டில் விளைந்த கொய்யாக்காய், சாத்துக்குடி, எலுமிச்சை பறித்துக்கொடுத்தேன், எல்லாவற்றையும் விட மகளுக்கு பிடித்தது இந்த தோட்டமும் உள்ள வீடு.பிடிக்காதது டாய்லெட்.

அடுத்தநாள் மகனின் பிறந்தநாளுக்கான ஏற்பாடுகளை செய்ய சொல்லிவிட்டு, தஞ்சையில் சிலோன் தாசன் பேக்கரியில் கேக் வாங்கிக்கொண்டு டூ வீலர் பயணம். கல்லணைக்கால்வாய் ஆற்றங்கரையின் நாணல் புற்களை இப்போது ரசிக்கமுடிந்தது.

மகனின் பிறந்தநாள் முடிந்த அளவு சிறப்பாக கொண்டாடினோம். என் வீட்டிற்கு எதிராகவே பள்ளியும் இருப்பதால் அந்தக்குழந்தைகளையும் பிறந்தநாள் கொண்டாண்டத்தில் வலுக்கட்டாயமாக சேர்த்துக்கொண்டோம்.

எங்கள் கிராமம் பெரிதாக மாறவில்லை, ஆனால் மாறியவை பற்றியும் மற்ற அனுபவங்களும் இனி மெதுவாக.

8 comments:

Unknown said...

//எல்லாவற்றையும் விட மகளுக்கு பிடித்தது இந்த தோட்டமும் உள்ள வீடு.பிடிக்காதது டாய்லெட்.//

:))

//கல்லணைக்கால்வாய் ஆற்றங்கரையின் நாணல் புற்களை இப்போது ரசிக்கமுடிந்தது.//

கள்ளு இப்பல்லாம் விக்கிறாய்ங்களா ஆத்துக்கரையில?

நசரேயன் said...

Welcome to blog world

கோவி.கண்ணன் said...

நாடோடி இலக்கியன் என்று ஒருபதிவர் உங்க ஊர்காரராமே அவரை சந்தித்தீர்களா ?

:)

sriram said...

நீங்க ப்ளாக்ல கூட எழுதுவீங்களா? சொல்லவேயில்லை!!!!

இந்தியப் பயணத்தை வச்சி ஒரு 10 எபிசோட் எழுதுங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ராஜ நடராஜன் said...

Good to read you after a long break.

vasu balaji said...

கோப்ஸூ--டாப்ஸூ--கண்டின்யூ

Unknown said...

இதுதான் உங்க ப்ளாகா??

பா.ராஜாராம் said...

sema! kalakkunga.. :-)