Wednesday, July 25, 2012

கோபாடெக்ஸ், திராவிடன் பண்ட்.


 மிகச்சிறிய கிராமத்தில் வளர்ந்தாலும், அப்பா ஆசிரியராக பணி ஆற்றியதால் நடுத்தர விவசாய குடும்பத்தினரை விட வசதியான ஒரு பிம்பம் எங்கள் குடும்பத்தின் மேல் எப்போதும் உண்டு. அதற்கு இரண்டு காரணம் எங்கப்பாவின் ஆசிரிய வருமானம் மற்றும், நகரத்தில் பிறந்த அம்மா.

தஞ்சை மாவட்ட விவசாய குடும்பம் எவ்வளவு வசதியாக இருந்தாலும், நகர மக்களை போல் விரும்பிய உணவு உட்கொள்ள முடியாது, வயலில் வேலை செய்யும் ஆட்களுக்கும் சமைக்க வேண்டும் என்பதால் பெரும்பாலும், காலையில் பழைய சோறும், மதியம் சில நாட்களில் பருப்பு கொழம்பு அல்லது ரசமோ தான் அன்றாட விவசாய குடும்பத்தின் உணவு, அதுவும் நடவு போன்ற பெரு வேலை நாட்களில் வெறும் கஞ்சி ஆகிவிடும்.(இப்பொழுது கஞ்சி இல்லை). கிராமங்களில் உள்ள குளங்களில் மீன் பிடித்தாலோ, பாய் ஆடு வெட்டினாலோ உயர் தர கவிச்சியும் , காசு இல்லாத நிலையில் ஒரத்தநாடு சந்தையில் வாங்கிய திருக்கை கருவாட்டை ரசம் சோத்துக்கு சுட்டுதின்பதும்தான் பெரும்பாலான விவசாயிகளின்  உணவு முறை. எங்கள் வீட்டிலும் இப்படியும் உண்டு  என்றாலும், பள்ளிக்கு செல்வதால், தினமும் மதிய உணவு, புது விதமான குழம்புகளுடன் நல்ல சாப்பாடு அம்மா புண்ணியத்தால் உண்டு.மேலும் விவசாய குடும்பங்களில் சில திண்ணு கெட்ட குடும்பங்கள் இருக்கும், அவர்களோடு நாங்கள் நெருக்கமாக இருப்போம், அவர்களோடு சேர்ந்து ஆடு வாங்குவது, மீன் வாங்க ஊரனிபுரம் செல்வது போன்றவை என்னுடன்  படிப்பவர் சிலருக்கு வசதியான தோற்றத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது.


அப்பா அதே பகுதியில் வேலை பார்த்ததாலும், நான் அவர் பள்ளியிலேயே படித்ததாலும் ஏற்பட்ட சங்கடங்கள் நிறைய. அதிலும் பள்ளி இருக்கும் ஊரைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் குடும்பம் எங்களுக்கு உறவும் கூட. அவர் ஒரு வித நக்கல் கலந்த சோகத்தோடும் பொறாமையோடு பேசுவார். அவரின் அப்பாவோ அடிக்கடி என்னிடம் ‘நான் பள்ளிக்கூடம் கட்டி வெச்சேன், ஒங்ஙொப்பன் சம்பாதிக்கிறான்’ என்பார். பள்ளிக்கூடம் கட்டினேன் என்று அவர் சொல்வது அவர் காண்ட்ராக்ட் எடுத்து கட்டிய பள்ளி. எனக்கு அப்போதுமே கொஞ்சம் வாய்க் கொழுப்பு அதிகம்.

‘நீங்க பள்ளிக்கூடம் கட்டாட்டியும், அவர் வேற ஊர்ல வாத்தியாரா இருந்து சம்பளம் வாங்கியிருப்பார்!’ என்று பதிலடி கொடுப்பேன்.

அவர் மகனும் அவர் போலவே ஆரம்பித்தான்.

’உனக்கென்னடா! உங்கப்பா தீவாளி, பொங்கலுக்கு கோபாடெக்ஸ்ல கெவருமெண்ட் காசுல துணி வாங்கி கொடுப்பாரு’ என்பான். உண்மையில் தீபாவளிக்கு வீட்டில் கோ ஆப்டெக்ஸ் போர்வை வாங்குவோம். அதோடு சகோதரர்கள் மூவருக்கும் போர்வை மாதிரியே இன்னோரு துணி அஞ்சு மீட்டர் எடுத்து சட்டைக்கு கொடுப்பார்கள். அதையும் என் பங்காளி டெய்லர் ஆறு மாசத்துக்கு பிறகு தைத்துக் கொடுப்பார்.

அதோடு அவன் புலம்பல் நிற்காது. ‘உங்களுக்கு பணத்துக்கு என்னடா குறைச்சல்? கெவருமெண்டு திராவிடன் ஃபண்டுல பணம் போட்டு வைக்கிறான். அடிச்சி மொழக்குவீங்கன்னு சொல்லுவான்.

இன்றைக்கு நினைத்துப் பார்த்தால் விவசாயம் மட்டுமே செய்து கொண்டிருந்தால் அப்பாவால் எங்களைப் படிக்க வைத்திருக்க முடியாது. அவரின் ப்ராவிடன்ட் ஃபண்ட் கடன், நிலங்களை விற்றகாசோடு சம்பளமும் கொஞ்சம் உதவி இருக்கிறது.

விவசாயம் மட்டுமே செய்து கொண்டிருக்கிற அத்தனை குடும்பங்களும் இன்று மேலும் நலிவடைந்து இருக்கிறது.கிராமங்களில் இன்னும் விவசாயத்தை மட்டும் நம்பி வாழும் குடும்பங்களின் எதிர்காலம் கண்டிப்பாக ஒரு வறட்சி தன்மையை எதிர் நோக்கியிருக்கிறது. வறுமை பல நேரம் போராட்ட குணத்தை கொடுத்து வெற்றிக்கு வழி வகுக்கும், ஆனால் கிடைக்கும் இலவச அரிசிக்கும் நூறு நாள் வேலைக்கும்,சாராயத்துக்கும் அடிமையாகி ஒட்டு உரிமை கொண்ட ஜனநாயக அடிமைகள் ஆகும் வாய்ப்பும் கண்ணுக்கு தெரிகிறது.

7 comments:

vasu balaji said...

அங்கதமாச் சொன்னாலும் முக்கியமான கருத்து. உண்மையில் அரசாங்கம் விவசாயிக்குத் தோழனாக இல்லை. அவனையும் ஓசிக்கு அடிமையாக வைத்திருக்கிறது.

ILA (a) இளா said...

நம்ம பொழப்பு மாதிரியே இருக்கே? விவசாயம்- ஆசிரியர்- மவன். என்ன? கோ- அப்டெக்ஸ்ல துணி எடுத்தது இல்லை

வருண் said...

பதிவு ரொம்ப நல்லாயிருக்கு!

டாக்டர் இஞ்சினியர் பிள்ளைக படிக்கிதோ இல்லையோ வாத்தியார் பிள்ளைங்க பொதுவாக நல்லாப் படிச்சு உங்களைமாரி முன்னேறுவதைப் பார்த்து இருக்கேன்.

நாங்கல்லாம் தஞ்சை மாவட்டம் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்பதால் உங்க பகுதியில் விவசாயிகள் எல்லாம் ரொம்பப் பணக்காரங்க, வசதிக்கு குறைவிருக்காதுனுதான் நெனைப்பதுண்டு.

துளசி கோபால் said...

உண்மைதான். விவசாயியைப் பிச்சை எடுக்க வச்சுருச்சு நம்ம அரசு:(

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஊருக்கே சோறு போடும் ஆட்கள் இன்றைக்கு :(((

Agila said...

kudukudu,
Went away from google+ quitely?
-Agila

Nalangkilli said...

👍