Thursday, June 7, 2012

உலகமயமாக்கலில் ஓரங்கட்டப்பட்ட சாதிகள்.



தலைப்பின் படி இது உலகமயமாக்கலின் சாதிகள் ஒழிந்துவிட்டதாக வெற்றுக்கோஷம் பேசும் பதிவு அல்ல,உலகமயமாக்கப்பட்ட இந்த சூழலில் தங்களை புதுப்பித்துக்கொள்ளாத/ வாய்ப்பளிக்கப்படாத சாதிகளைச் சார்ந்தவர்களின் பொருளாதார நிலையை என்னுடைய அனுபவம்,நான் சார்ந்த பகுதியில் உள்ள சாதிகளை வைத்து என்னுடைய கருத்து, இதில் கருத்துப்பிழைகள் தவறுகள் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம், ஆனாலும் இதனை ஒரு விவாதப்பொருளாக்க விரும்புகிறேன்.


தஞ்சை,புதுக்கோட்டை மாவட்டத்தை களமாக வைத்து எழுதுகிறேன்.நான் எடுத்துக்கொள்ளப்போகும் சாதிகள், முத்தரையர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் முக்குலத்தோரில் ஒரு பிரிவான கள்ளர்கள். இந்த மூன்று சாதியினரும் பெரும்பாலும் தஞ்சை, மற்றும் புதுக்கோட்டை கிராமப்பகுதிகளில் வசிப்பவர்கள். இவர்களது ஆதாரத் தொழில் விவசாயம் மட்டுமே. அன்றைய சாதிய மற்றும் வசதிப்படிநிலைகளின்படி, தஞ்சை மாவட்டத்தில் கள்ளர்கள் நில உடைமைக்காரர்களாககவும், முத்தரையர் மற்றும் தாழ்த்தபட்டவர்கள் விவசாயக்கூலிகளாகவும் பெரும்பாலும் இருந்தனர், முத்தரையர்களில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதிகளில் நிலஉடைமக்காரர்களே,விவசாய நிலஉடைமைக்காரர்களை குடியானவர்கள் என்று அழைக்கும் பழக்கம் இன்றும் உண்டு, ஆலங்குடி பகுதியில் இன்றும் முத்தரையர்களை குடியானவர்கள் என்றே அழைக்கிறார்கள்.பழங்கதைகளில் கடைசியாக விவசாயம் கொழித்தபோது நிலஉடைமைக்காரர்களும் சரி அதனை நம்பி இருந்த விவசாயக்கூலிகளும் வாழ்க்கையை நன்றாகவே வாழ்ந்து வந்தனர். (சாதியக்கொடுமைகளை இங்கே பேசவில்லை). விவசாயம் இன்றைக்கு மற்றைய உலக முன்னேற்றத்திற்காக அமுக்கப்பட்ட தொழில், உணவுப்பொருள் உற்பத்தி செய்பவனுக்கு உழைப்பு இழப்பு மட்டுமே மிச்சம் என்ற நிலையில் இவர்களுக்கு வேறு தொழில் தெரியாததால் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

இந்த மூன்று சாதியினருக்கும் வியாபாரம் எட்டாத கலை, எனக்குத் தெரிந்து இவர்கள் மளிகைக்கடை கூட வைப்பதில்லை, தலித்துக்கள் நினைத்தாலும் வைக்கமுடியாத அளவு ஆதிக்க கள்ளர் சாதியினரே அனுமதிக்க மாட்டார்கள்.பக்கத்தில் இருக்கும் நகரத்திற்கு சாமான் வாங்க /சினிமா பார்க்க சென்றே பழக்கப்பட்ட இவர்களுக்கு, நகரமயமாக்கப்பட்ட இன்றைய உலகில் நகரங்களில் ஒரு சிலரைத்தவிர இடமோ/வீடோ இருக்காது.தஞ்சை நகரில் இருக்கும் நிலங்களை கள் குடிப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன்னரே விற்றுவிட்டனர்.:)

இன்றைய ரியல் எஸ்டேட் மதிப்பில் நகரத்தின் மதிப்பு விளைநிலங்களில் இல்லை.நகரத்திற்கு அருகில் விளைநிலம் வைத்திருந்தவர்களும் அதனை குறைந்த விலைக்கு ரியல் எஸ்டேட் காரர்களிடம் விற்று குடித்திருப்பார்கள்.கிராமங்களில் மிச்சமுள்ள விளைநிலங்களுக்கு மதிப்பும் கிடையாது, அந்த மதிப்பில்லாத நிலத்தை வாங்க/விற்க கூட இவர்களிடம் பொருளாதாரம் கிடையாது, ஒரு சில வட்டிக்கடைகாரர்கள், பண்ணைநிலம் தேடும் வெளியூர்க்காரர்களிடம் விற்றுவிட்டு வாழ்க்கையை ஓட்டுபவர்களும் உண்டு.

முத்தரையர் சமுதாயத்தை எடுத்துக்கொண்டால், ஆலங்குடி பகுதி தவிர இவர்கள் பெரும்பாலும் நாடோடி உல்லாச வாழ்க்கை வாழும் கிராமவாசிகள், இன்றைக்கும் இவர்கள் கூலி வேலை செய்து அன்றைக்கே செலவு செய்துவிட்டு,கிராமங்களிலேயே குடி இருப்பவர்கள், எம்ஜியார் படம் வந்தால் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக பார்ப்பார்கள்.படிப்புக்கும் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்காதவர்கள்.வருங்காலத்தில் கிராமத்தை ஆள வாய்ப்புண்டு, ஆனால் என்ன இருக்கும் ஆள்வதற்கு என்பதுதான் கேள்விக்குறி.ஆலங்குடி.பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில் பெருமளவில் வசித்தாலும் இவர்களுக்கும் பணம் சம்பாதிக்கும்/ பொருளாதார முன்னேற்றம் அடையும் எந்தக்கலையும் தெரியாது.நகரங்களில் எந்த ஒரு வியாபாரமும் இவர்கள் செய்ய வாய்ப்பில்லை, நினைத்தாலும் முடியாத அளவிற்கே லாபி இருக்கும்.

புதுக்கோட்டை கள்ளர்களால் ஆளப்பட்ட தனி சமஸ்தானம் ஆனால் இன்றைக்கு புதுக்கோட்டை நகரில் அவர்களுக்கு சொந்தமாக இடம் இருக்குமா என்றால் இருக்காது, பெருமைக்காக வியாபாரிகளிடம் விற்றுவிட்டு குடித்து ஓட்டாண்டிகளாகத்தான் இருப்பார்கள். ஆலங்குடி நகரில் தலித்துக்களிடம் தங்களுடைய ஆதிக்கத்தை காட்டும் கள்ளர்களுக்கு வியாபாரம் செய்ய வாடகைக்கு கூட கடை கொடுக்கமாட்டார்கள் இதுதான் இவர்கள் நிலை, தங்களுடைய பொருளாதார நிலை தெரியாமல் ஜாதி ஜம்பம் பேசுவதில் எந்தக்குறையும் இன்றும் இருக்காது.

வட்டித்தொழில் நடத்தும் சிலர் உண்டு, சிலர் நேரடியாக நடத்துவார்கள் பலர் வட்டித்தொழில் நடத்தும் வியாபாரிகளிடம் அடியாட்களாக இருப்பார்கள்,வேற்று சமூகத்துக்காரன் கேட்டால் பணம் திரும்பக்கிடைக்காது அதனால் அடியாட்கள் வேலை இவர்களுக்கு கண்டிப்பாக உண்டு:)

தலித்துகளின் நிலை இட ஒதுக்கீட்டில் படித்த ஒரு சில குடும்பங்கள் வெளியேறி மீண்டும் அவர்களே இட ஒதுக்கீட்டை அனுபவித்து தப்பிக்கிறார்கள் மற்றபடி,தனக்கே ஒன்றுமில்லை என்று அறியாத ஆதிக்க சாதியினர்,நலிந்து போன விவசாயக்கூலிகளாக இருந்து, தங்களை ஆதிக்கம் செய்யும் ஆதிக்க சாதியினருக்கே திறக்கப்படாத லாபியைத்தாண்டி இவர்கள் மேலே எங்கே வருவது.?

இவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்குவதால் இலவச அரிசிக்கும்/வேட்டிக்கும் அலையும், ஜனநாயகத்தை காப்பாற்றப்பயன்படும் வாக்காளர்கள் மட்டும் ஆகிப்போவார்கள் என்பதுதான் யதார்த்தம்.

3 comments:

ராசின் said...

gud one!

குடுகுடுப்பை said...

ராசின் said...
gud one!//
ஒருத்தருக்கு பிடிச்சிருக்கு:)

எல் கே said...

Good One kudukudups.