Wednesday, October 20, 2010

குடிகாரன்

டைரக்டர் ஹரி படத்தில் வரும் வன்முறை வாகனத்தில் ஆலப்புழா அணை நோக்கி உறவினர்களோடு பயணித்துக்கொண்டிருந்தேன்.என்னுடைய காலில் செருப்பு இல்லை, வழியில் வரும் பொள்ளாச்சி நகரில் செருப்பு வாங்கலாம் என்று வன்முறை வாகன ஓட்டி இருமுறை சொன்னார், ஆட்டோ ஓட்டுனராக இருந்து ஒருமுறை சொல்லியிருந்தால் பஞ்ச் டையலாக்கில் சேர்த்திருக்கலாம்.

நீண்ட நாள் கழித்த சந்திப்பாதலால், ஊர்க்கதை பேசியபடி செல்கையில் ஆசிரியர் திரவியம் பற்றிய பேச்சும் வந்தது.

திரவியம் ஒரு வித்தியாசமான மனிதர், பெரும் குடிகாரன், நக்கல் பேச்சுக்கு சொந்தக்காரன்,

"என்னடா பாஸ்கர் இந்த வருசம் பாஸ் பண்ணிட்டியாடா?"

"இல்ல சார் "

"உன் பேர்லயே பாஸ் இருக்கு , அப்புறம் என்னதுக்குடா வாத்தியார் பாஸ் போடனும் வேலையப்பாரு"

திருவிழாவிற்கு செல்லுமிடங்களில் குடித்து, சீட்டாடி, கோவிலில் மொட்டை போட்டவனின் தலையில் போதையில் குட்டி, மொட்டையனால் அம்மனமாக்கப்பட்டு வாடகை காரில் ஊர் வந்து சேர்வதும் திரவியத்துக்கு திரவியமானதல்ல.

இப்படியாக இருந்த அந்த திரவியத்துக்கு நான்கு பெண் பிள்ளைகளை பெற்க எப்படி நேரம் கிடைத்ததோ, திரவியத்தைப் போலவே அழகானவர்கள். ஆனால் திரவியம் திடீர் வாஸ்து ஜோசியனாகிப்போனானாம், ஆனாலும் குடிப்பதையும் குழந்தைகளை அடிப்பதையும் நிறுத்தாத அவன் மூச்சு குடியினாலேயே நின்று போனது

"அய் அப்பா செத்துப்போயிட்டான் என்ற நான்கு குழந்தைகளும் மகிழ்ச்சியோட கூத்தாடும் நிகழ்வாக அவன் சாவு ஆயிற்று"

இவற்றை பேசி முடிக்கவும் பொள்ளாச்சியில் செருப்புக்கடை வரவும் சரியாக இருந்தது.

செருப்புக்கடை முதலாளி உட்காட்ந்திருந்த சேரை விட்டு எழவே இல்லை,அவர் வணங்கும் கடவுள் பற்றிய வசனங்கள் பக்திமான என்று பறைசாற்றியது.

கடைத்தொழிலாளிகடம் அந்த செருப்பக்காட்டு என்று உட்கார்ந்தவண்ணமே கட்டளை இட்டுக்கொண்டிருந்தார், அவரது உடல்மொழி எனக்கு கடுப்பேற்றியது, எனக்கு செருப்பு உடனடித்தேவை, விலை கேட்டேன், ஒரே விலை என்றார்,

12 % வாட் வரி என்றார், பணம் கொடுத்தேன், ஒரு பேப்பரில் ரசீது என்று ஒன்றைக்கொடுத்தார்.

வாட் வரி கட்டிய செருப்புக்காலுடன் நடந்து கடையை விட்டு வெளியே வரும்போது, ஒரு குடிகாரன் கடைக்கு முன்னர்/வாசலில் ஓடும் சாக்கடையில் வாந்தி எடுக்க ஆரம்பித்தான்.

முதலாளி வேகமாக எழுந்து ஓடிவந்தார், குடிகார நாயே கடைக்கு முன்னாடி எதுக்குடா வாந்தி எடுக்கிற அந்தப்பக்கம் போடா?

"நான் டாஸ்மாக்ல வரி கட்டி குடிச்ச சாராயத்துல வந்த வாந்தியை அதே வரிப்பணத்துல கட்டுன சாக்கடை வாய்க்கால்ல வாந்தி எடுக்கறேன், இதக்கேக்க உனக்கு என்னா ரைட்சு இருக்கு"

16 comments:

Unknown said...

//பதிவர் குடுகுடுப்பை at 11:13 PM
Labels: அனுபவம், புனைவு//

ஙே ஙே

குடுகுடுப்பை said...

முகிலன் said...
//பதிவர் குடுகுடுப்பை at 11:13 PM
Labels: அனுபவம், புனைவு//

ஙே ஙே

அனுபவப்புனைவு

vasu balaji said...

இதுல நசரேயன் சாயல் அடிக்கே:))

குடுகுடுப்பை said...

வானம்பாடிகள் said...
இதுல நசரேயன் சாயல் அடிக்கே:))
//

நான் அந்த ஆள் பதிவை படிப்பதில்லை, அந்த ஆளும் என் பதிவை படிப்பதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். முழுக்க முழுக்க என் கற்பனையில் உருவானது.நீங்கள் இப்படியெல்லாம் குறை கண்டால் உங்களை மாணவரனித்தலைவரிலிருந்து நீக்கி சிறுவர் அணித்தலைவராக வேண்டி வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

இதில விவகாரம் எதுவும் இல்லையே..

குடுகுடுப்பை said...

வெறும்பய said...
இதில விவகாரம் எதுவும் இல்லையே..
//

குடிகாரனெல்லாம் கெட்டவன் குடிக்காதவனெல்லாம் நல்லவன் என்ற பொது புத்தியை வைத்து எழுதப்பட்ட அனுபவம் கலந்த புனைவு இதுதான் விவகாரம்.

நசரேயன் said...

யோவ் சரக்கு ஏதும் மிச்சம் இருக்கா ?

http://urupudaathathu.blogspot.com/ said...

உண்மையான கதை என்றால், நாயகன் கடை உள்ளே இல்லை, வெளியில் தான் இருக்கிறான்..
( அது நீங்க தான்னு சொல்லிடுவாங்கன்னு, உஷாரா செருப்பு வாங்க நீங்க உள்ளே இருப்பதாய் சொல்லிட்டீங்க)

http://urupudaathathu.blogspot.com/ said...

அனுபவமா இல்லை புனைவா???

vasu balaji said...

குடுகுடுப்பை said...
வானம்பாடிகள் said...
இதுல நசரேயன் சாயல் அடிக்கே:))
//

நான் அந்த ஆள் பதிவை படிப்பதில்லை, அந்த ஆளும் என் பதிவை படிப்பதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். முழுக்க முழுக்க என் கற்பனையில் உருவானது.நீங்கள் இப்படியெல்லாம் குறை கண்டால் உங்களை மாணவரனித்தலைவரிலிருந்து நீக்கி சிறுவர் அணித்தலைவராக வேண்டி வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்//

அப்ப அப்துல்லா?:))

பழமைபேசி said...

அந்த குடிகாரப்பயல் யாரா இருக்கும்னு நான் யோசிக்கவும் இல்லை! யூகிக்கவும் இல்லை!!

கபீஷ் said...

இலக்கியத் தரம் வாய்ந்த புனைவு:)

Philosophy Prabhakaran said...

பின் நவீனத்துவம் அப்படின்னு சொல்றாங்களே அது இதுதானா...

வருண் said...

நம்ம ஊர்களிலே இந்த குடிகாரங்க இருக்காங்களே, தண்ணியப் போட்டுட்டா நம்ம சாருவைவிட நல்லாவே வக்கனையா பேசுவானுக!

குடுகுடுப்பை said...

வருண் said...
நம்ம ஊர்களிலே இந்த குடிகாரங்க இருக்காங்களே, தண்ணியப் போட்டுட்டா நம்ம சாருவைவிட நல்லாவே வக்கனையா பேசுவானுக!
//


குடிகாரனெல்லாம் கெட்டவன் குடிக்காதவனெல்லாம் நல்லவன் என்ற பொது புத்தியை வைத்து எழுதப்பட்ட அனுபவம் கலந்த புனைவு. சரியாக எழுதப்படவில்லை என்று உணர்கிறேன்.

கண்ணன் said...

தமிழனின் கற்பனை விலை மிக்கது