Monday, September 20, 2010

டவுசரும் நானும்.

பள்ளிக்கூட காலத்திற்குப் பிறகு டவுசர் போடுவதில்லை, இங்கு கோடைக்காலங்களில் எல்லோரும் டவுசருடன் வெளி வருவதையும், நான் மட்டும் வேகாத 110F வெயிலிலும் ஜீன்ஸ் பேண்டோடு வெளிவருவதையும் வெகு காலமாக கவனித்து,நீங்களும் டவுசர் வாங்கி அணிந்து பாருங்கள்,ஏன் இப்படி வெயில் காலத்தில் ஜீன்ஸ் போடுகிறீர்கள் என்று வீட்டில் நச்சரித்ததால் நானும், புதிதாக மூன்று டவுசர் வாங்கினேன்.

வாங்கின டவுசரில் இரண்டு என்னுடைய சற்று காலம் முன்னர் உள்ள இடுப்பு அளவு, இருந்தாலும், தொப்பையைக் குறைக்கும் தீவிர முயற்சியில் இருப்பதால் பழைய அளவையே வாங்கினேன். போட்டுப்பார்த்தால் தொப்பையை டவுசர் கடிக்கிறது,குறைக்கலாமின்னு நினைக்கிறப்போ பின்னூட்டரும் நசரேயனின் உளவாளியுமான வில்லன், பிரியாணி விருந்துக்கழைத்து மிச்ச பிரியாணியும் தலையில் கட்டி இப்போ அடுத்த சைஸூ டவுசரே தொப்பையை கடிக்குமா என்ற சந்தேகத்தில் உள்ளேன்.

இந்த டவுசரை அணிந்துகொண்டு நானும் இப்போது கடைக்கெல்லாம் செல்கிறேன், டவுசர் நல்லா இருக்கா என்று ஒருநாள் மகளிடம் கேட்டேன்.

"டவுசருன்னா என்னாப்பா" என்றாள்

"டிரவுசருக்கு தமிழ்ப்பெயர்தான் டவுசர் என்றேன்"

"டிரவுசருன்னா என்னாப்பா"

" டவுசருக்கு இங்கிலீசுல வெச்சப்பேருன்னு"

"அப்ப ஷாட்ஸ்னா என்னா"

"அமெரிக்கா, பிரிட்டீஷ் அப்படின்னு இங்கிலீஸ் வித்தியாசம் இருக்கு, அதெல்லாம் எனக்கு சரியாத்தெரியாது
டவுசர்-டிரவுசர்-ஷாட்ஸ் அவ்ளோதான்"

"சரிப்பா எனக்கும் டவுசர் பிடிச்சிருக்கு, நானும் இனிமே டவுசர் போட்டுகிட்டே விளையாடுறேன்"

ஒரு வழியா டவுசர் - டிரவுசரு பிரச்சினை முடிஞ்சிருச்சு, ஆனா இந்த டவுசரை ரெண்டு வருடம் போடுற அளவிற்கு யாராவது ஒரு டயட் சொல்லுங்க சாமியளா?

சமீபத்திலே நண்பரை சந்திந்தேன், ஓடியாடி கொஞ்சம் கலோரியை குறைச்ச நேரத்திலே மாங்காய் சாதம், தயிசாதம் எல்லாம் கொண்டு வந்து கொடுத்தது, வாங்கிய என் புதிய டவுசர்களை உபயோகமில்லாமல் ஆக்க நினைக்கும் சதியோ என்று எண்ணத் தோன்றுகிறது.

புதிதாக டவுசர் போடுவது மகிழ்ச்சியாக இருந்தாலும், டவுசர் கிழிந்துவிடுமோ என்ற பயமும் உள்ளது.

5 comments:

நசரேயன் said...

//டவுசர் கிழிந்துவிடுமோ//

கண்டிப்பா

பழமைபேசி said...

இந்த ஆட்டைக்கு நான் வரலே.... விருந்து போட்டதையே சதின்னு சொல்ற ஆட்களோட சகவாசமே வேணாம்....

ப.கந்தசாமி said...

பேசாம ரெண்டு சைஸ் பெரிசா வாங்கீட்டீங்கன்னா இன்னோரு அஞ்சாறு வருஷத்துக்குப் போட்டுக்கலாம். இப்ப என்ன பண்றதுங்கறீங்களா. அதான் அங்கெல்லாம் ஒரு மாதிரி வார் கெடைக்குமே, அதங்க டவசர்ல மாட்டி, அதத்தோள்ல மாட்டிக்கிற மாதிரி, அத வாங்கிப்போட்டுக்குங்க.

எதுக்கும் கிழியாத டவுசராப்பாத்து வாங்குங்க. போற எடத்துல எதாச்சும் வம்பாப் போகப்போகுது.

ILA (a) இளா said...

இதுக்குத்தான் நம்மள மாதிரி லுங்கி போட்டுகிட்டா சைஸ் பிரச்சினையே இல்லே பாருங்க

Anonymous said...

//சமீபத்திலே நண்பரை சந்திந்தேன், ஓடியாடி கொஞ்சம் கலோரியை குறைச்ச நேரத்திலே மாங்காய் சாதம், தயிசாதம் எல்லாம் கொண்டு வந்து கொடுத்தது, வாங்கிய என் புதிய டவுசர்களை உபயோகமில்லாமல் ஆக்க நினைக்கும் சதியோ என்று எண்ணத் தோன்றுகிறது//


எங்க ஏரியா முகிலன் அண்ணன் கொண்டு வந்த சாப்பாட ஒரு பிடி பிடிச்சுட்டு,இந்த மாதிரி பழிய அவர் மேல போடாதீங்க.....