Wednesday, October 28, 2009

பன்றி ஆராய்ச்சி உதவி தேவை.

உலகம் முழுவதும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி, கண்டுபிடித்த மருந்து வேலை செய்கிறதா என்ற ஆராய்ச்சி, டாமிபுளு பன்றிக்காய்ச்சல் வந்த அனைவருக்கும் தேவையா ? இல்லையா? பன்றி ஃபுளூ,மற்ற ஃபுளூவைவிட எந்தவிதத்தில் அபாயமானது என்ற ஆராய்ச்சி, பன்றி என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் பன்றிக்காய்ச்சல் என்ற ஒன்றே இருந்திருக்காது என்ற தெளிவான ஆராய்ச்சி முடிவு.

இந்த மாதிரி ஆராய்ச்சிகளுக்கிடையில். என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் காட்டுப்பகுதியில் வசிக்கிறார்.அவர் வீட்டு நாய் கொண்டுவந்த அவர் வீட்டருகே போட்ட இந்த மண்டை பன்றியினுடையதா என்ற சந்தேகத்தில் உள்ளார். இந்த முக்கியமான ஆராய்ச்சியை நாங்கள் இப்போது நடத்திக்கொண்டிருக்கிறோம்.






இந்த பன்றி மண்டை என் கைக்கெட்டும் தூரத்தில் அலுவலகத்தில் கடந்த ஒரு மாத காலமாக உள்ளது. இது உண்மையாகவே பன்றி மண்டையா என பன்றியும் தெரிந்த பதிவர்கள் பின்னூட்டத்தில் எங்கள் ஆராய்ச்சிக்கு உதவலாம்.

பி.கு: பெப்பரோனி பிஸ்ஸா சாப்பிடுபவர்கள் எல்லாம் பன்றியும் தெரிந்தவர் என்றால், அந்த வகையில் நானும் பன்றியும் தெரிந்தவர் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். ஆனாலும் இது பன்றி மண்டையா என எனக்கு தெரியவில்லை.

Thursday, October 22, 2009

இங்கிலாந்து ஆராய்ச்சி, துக்ளக் பதில்,பப்புவின் கேள்வி,பெண் தூதுவர்.

இங்கிலாந்து ஆராய்ச்சி, துக்ளக் பதில்,பப்புவின் கேள்வி,பெண் தூதுவர்.

கே: பெண்களால் ரகசியத்தை காப்பாற்றவே முடியாது என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நிருபிக்கப்பட்டுள்ளதே ?

பதில்: பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே, மஹா பாரதத்தில் இது மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருகிறது. அது ஆண் ஆதிக்கத் தீர்ப்பு; இன்று சொல்லப்பட்டிருப்பது ஆரய்ச்சியின் முடிவு. இதை ஏற்காதவன் மூட நம்பிக்கையில் உழல்பவன்.

அப்படியா ? பெண்கள் இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள் ? (மஞ்சள் இட்லிவடை )

சித்திரக்கூடத்தில் பப்புவும் அவங்கம்மாவும்.

அவ்வப்போது ஆன்லைனில் கேம்ஸ் விளையாட பப்புவை அனுமதிப்பதுண்டு. அப்படி ஒருநாள் விளையாடிக்கொண்டிருந்தவள், "ஆச்சி, நான் பாயா கேர்லா" என்றாள்! அவ்விளையாட்டின் இடையில் 'oh boy' என்று வரும், விளையாட்டை பற்றி விளக்கும்போதோ அல்லது ஊக்குவிக்கும் போதோ அப்படிச் சொல்வதை கேட்டபின் அவளுக்கு வந்த சந்தேகமே அது!!

'நீ கேர்ல்'தான் - என்று சொன்னதும், 'ஏன் என்னை ஓ பாய் ன்னு சொல்லுது" என்றுக் கேட்டாள்.

Its time to change!!

இந்த இரண்டையும் படிக்கும்போது எனக்கு தோன்றியது, ரகசியம் காக்கத்தெரியாத பெண்களில் ஒருவரை ஏன் இறைவன் இதுவரை தூதுவராக்கவில்லை. அப்படி இறைவன் மனிதனுக்கு அனுப்பிய செய்தியை பெண்கள் மூலம் அனுப்பியிருந்தால் எந்த ரகசியமும் இல்லாமல் சரியாக அனைவரிடமும் சேர்த்திருப்பார்களோ?

அப்படி அனைவரிடமும் சேர்த்திருந்தால் 'oh boy' என்று கேம் விளையாட்டின் மூளையாக இருந்தவர் ஒரு பெண்ணாக இருந்து 'oh girl' என்று வடிவமைத்திருக்கலாமோ?

இறைவன் வரும் காலங்களில் ஒரு பெண் தூதுவரை அனுப்புவாரா?

பி:கு: நான் ஆணாதிக்கவாதியும் அல்ல பெண்ணுரிமை வாதியுமல்ல, ஒரு நல்ல சுயநலவாதி. நான் என் குடும்பம் என்று இருப்பவன், அதில் பெண்களும் அடக்கம்.

Tuesday, October 20, 2009

பின்விளைவுகள்

இடம்: கல்பாக்கம் அனுமின் நிலையம் கேண்டீன்:
நான் : கொஞ்சம் கூட்டு கூட கொடுப்பா
சர்வர் : எக்ஸ்ட்ரா கூட்டு ஒரு கப் 1 ரூபாய் சார்.

இடம் : வசந்தபவன்,அடையார்

நண்பனும், நானும் இருந்த காச வெச்சு அளவு சாப்பாடு வாங்கி,கூட்டு,பொறியல் மூனு,நாலு தடவை சாப்பிடலாம்னு இங்கே அடையார் வசந்தபவன் போய் சாப்புட்டோம். சாப்பிடும் போது கல்பாக்கத்தில கூட்டுக்கு காசு கேக்கற கதையை நண்பனிடம் சொல்லிட்டு இருந்தேன். எதிரில் இருந்த நபர் என்னது கூட்டுக்கு எக்ஸ்ட்ரா காசான்னாரு. நாங்களும் ஆமாமா தலைய ஆட்டி வெச்சோம்.
பாவம் மனுசன் முதல் தடவை வெச்ச கொஞ்ச கூட்டு பொறியல வெச்சே சாப்பிட்டு போயிட்டார்.

இடம் : ரத்னா கபே, திருவல்லிக்கேணி

வழக்கமா இரண்டு இட்லி வாங்கி நாலு குவளை சாம்பார் குடிக்க போறது. இன்னைக்கு நண்பனும், நானும் இட்லி வாங்கி சாப்பிடறப்போ, எதிரில் ஒருத்தர் வலது கையில வாட்ச் கட்டி இருந்தார். பார்க்கவும் கிட்டதட்ட நடிகர் ரவிச்சந்திரன்(இளமையான) மாதிரி இருந்தார். சரி அப்படியே ஓட்டலாம்னு முடிவு பண்ணி, சார் நீங்க நடிகர் ரவிச்சந்திரன் ரசிகரான்னு கேட்டேன்.
அதுக்கு அவர் ஏன் கேக்கறீங்கன்னு கேட்டார். இல்ல அவரு மாதிரியே வலது கையிலே வாட்ச் கட்டியிருக்கீங்களே அப்படின்னேன்.

அப்ப மனுசன் திட்ட ஆரம்பிச்சார் பாருங்க, உங்கள மாதிரி ஆளுங்க இருக்கிறதுனாலதாண்டா …….. வேண்டாம் விடுங்க. இன்னும் கொஞ்சம் நேரமானா சாம்பார எடுத்து தலையில ஊத்திருவாரு போல இருந்திச்சி, அப்படியே இட்லியையும் பாதில வெச்சுட்டு தப்பிச்சம்டா சாமின்னு பின்னங்கால் பிடறில அடிக்க ஒடி வந்தேன்.

இடம்: தொடக்கப்பள்ளி

தொடக்கப்பள்ளியில் 5 ம் வகுப்பு படிக்கும் போது நான்தான் பிரேயர் நடத்துவேன். அப்போது தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட எனக்கு பிடித்த இரண்டு பெண்களை நியமிப்பேன்.பிடிக்காத ஒரு பெண்ணை பள்ளியை கூட்டுறதுக்கு (ஆணாதிக்க வழக்கப்படி , (அது சரி அண்ணே நான் ஒரு சராசரி என்ன விட்டிருங்கோ) ) நியமிப்பேன். அந்த பிடித்த பெண்கள் இரண்டு பேரும் எங்க இருக்காங்கனு தெரியல,பிடிக்காத பெண் இப்போது என் நெருங்கிய உறவினரின் மனைவி.

இடம் : வீடு

ஏன் இந்த பேப்பர்லாம் எரஞ்சி கெடக்கு, இந்த cd வேனுமா, வேண்டாட்டி குப்பையில போட்டா என்னா? காபி குடிச்ச கப்ப இப்படிதான் வெப்பாங்களா………………………………………………………………………………………………………………………………………


இதுக்கு பேருதான் பின்விளைவா?

இந்த பதிவிற்கு பின்விளைவு?

Tuesday, October 6, 2009

மலையாளப்படத்தினால் ஏற்படும் நன்மைகள்.

நான் கிராமத்திலேர்ந்து தஞ்சாவூருக்கு டவுன் பள்ளிக்கூடத்திலே மேல் படிப்பு படிக்க போனப்பதான் மலையாளப்படங்கள் பற்றிய அறிவு எனக்கு கிடைத்தது.+1 படிக்கும் போது ஒன்னும் பாத்ததா ஞாபகம் இல்லை, ஆனா + 2 படிக்கும் போது எங்க கிளாஸ்ல ஒரு பெரிய குரூப்பா இந்த படங்களுக்கு போவோம்.

காலைல பஸ்ஸில் வந்து இறங்கி , பஸ்ஸ்டாண்டு சுவத்துல பாத்தாலே தெரியும் , திருவள்ளுவர் தியேட்டர்ல படம் மாத்தியாச்சுன்னு,அறத்துப்பால் பள்ளிக்கூடத்திலேயும், பொருட்பால் வீட்லேயும் சொல்லிக்கொடுத்துருவாங்கல்ல அதுனால இந்த திருவள்ளுவர் ஒன்லி காமத்துப்பால் மட்டுமே நடத்துன நவீன நகராட்சி தியேட்டர்.

11 மணி காலைக்காட்சிக்கு முதல் பிரீயடு 10.45 க்கு முடியும் அந்த கேப்புல , நண்பர்கள் குழு படத்திற்கு கிளம்பிருவோம், முக்கியமா தஞ்சாவூர் சேப்பனவாரிலேந்து இரண்டு பேர், மேல வீதிலேந்து ஒருத்தன், அய்யம்பேட்டைலேந்து ஒருத்தன் மற்றும் நான். டிக்கெட் வாங்கி உள்ளே போகும் போது அத அப்படியே முழுசா வாங்கிப்பாங்க, கிழிச்சி தாங்கன்னு கேட்டா , உங்கள கிழிச்சி தந்துருவாங்க.

உள்ளே போய் இருட்டுக்குள்ளே கிழிஞ்சிபோன சீட்டில மூட்டையாரோட முக்கால் மணிநேரம் அம்பலக்கார பஞ்சாயத்து, பிடிக்கிட்டா புள்ளி போன்ற படங்களை பாத்தா பிட்டே போட்டிருக்கமாட்டான், இதுக்குதாண்டா முத நாள் முத ஷோவுக்கு வரக்கூடாது, ஆபிஸர் ரெய்டு வருவாங்கன்னு ஜாக்கிரதையா இருக்காங்க போலருக்குன்னு சொல்லி கிளம்பிருவோம். ஆனாலும் நாலாவது பிரியடு கிளாஸுக்கு திரும்ப போயிரலாம் , அங்கே பாட்டனி வாத்தியார் கல்யாண முருங்கை தடவி பாத்தா நல்லா மொழ மொழன்னு இருக்கும்னு சொல்றது கேட்டு கிறங்கிப்போகவேண்டியதுதான் ,நேரமும் மிச்சம்.

உதாரணத்துக்கு அஞ்சரைக்குள்ள வண்டி படத்தை மேட்னி ஷோ பாத்தா மூனு மணிக்கு 26 A (பஸ் நம்பர்தான் A )பஸ்ஸ பிடிச்சி அஞ்சரைக்குள்ள வீட்டுக்கு போயிரலாம், ஏண்டா சீக்கிரம் வந்துட்டேன்னு வீட்ல கேட்டா, சீக்கிரம் பள்ளிக்கூடம் மூடிட்டாங்க அதான் அப்படின்னு சொல்லிரலாம் , ஆஹா பய படமெல்லாம் பாக்காம வீட்டுக்கு வந்துட்டானேன்னு பஜ்ஜி கிடைக்க வாய்ப்பு இருக்கு.சினிமா டிக்கட்ட கிழிச்சி குடுக்காம அவங்களே வாங்கிக்கரதுனால, துவைக்கும் சட்டைப்பையில் இருந்து மாட்டிக்கவும் வாய்ப்பு இல்லை.

மலையாளப்படங்கள் தரமானவை நீங்க மம்பட்டியான் படமெல்லாம் பாத்ததில்லையான்னு நிறைய பேரு சொன்னாங்க , நானும் ஒன்னாவது பாத்திரனும்னு ஒரு நாள் தஞ்சாவூர் ராஜா கலையரங்கத்தில் DSP மம்மூட்டி ன்னு ஒரு படம் போட்டிருந்தான், நானும் கலைப்படம் பாக்கிற ஆவலோட போனேன், படத்திலே ரெய்டுக்காட்சிகள்ள DSP வந்தாரு ஆனா மம்முட்டி வரவேயில்லை. போஸ்டர் போட்டிருந்த படமே உள்ள ஓடலைன்னு படம் பாத்த பின்னாடிதான் தெரிஞ்சது.

மலையாளத்துல கலைப்படம் எடுக்கிறேன்னு ஒருத்தன் பல்லு விளக்குறதையும், உச்சா போறதையும் மூனு மணி நேரம் பாக்கிறது, பிசன் சிங் பேடின்னு ஒருத்தர் விக்கெட்டே எடுக்காம 125 ஓவர் ஒரு இன்னிங்ஸ் பவுலிங் போடுறத பாக்கிற மாதிரி போர் அடிக்கிற விசயம். இந்த முக்கா மணி நேர படங்கள் B.S சந்திரசேகர் பவுலிங் மாதிரி விழுந்தா விக்கெட் இல்லாட்டி ரண்.மாட்டிக்கிட்டா டின்னு.

காலேஜ் படிக்கும் போது தென்றல் அப்படின்னு ஒரு தியேட்டர் இருந்தது, அந்தக்கருமத்துக்கு கதவே கிடையாது அதுனால நாங்க போறது இல்லை, தஞ்சாவூர் வழியா ஊருக்கு போகிற நண்பர்கள் சிலர் திருவள்ளுவரின் அருமை அறிந்து ஒருநாள் தஞ்சை நகராட்சி தங்கும் விடுதியில் ரூம் போட்டு தங்கி மிஸ்.ஜானகின்னு ஒரு படம் பார்க்க போனோம், தியேட்டருக்கு கிட்ட போனா தியேட்டர் சீல் வெச்சிட்டாங்க அப்படின்னாங்க.

அதுக்கப்புறம் நானும் உண்மைத்தமிழன் , ஜாக்கி சேகர் மாதிரி திருந்தி நல்ல பிள்ளையா பொழப்ப பாக்க ஆரம்பிச்சாச்சி,பரங்கிமலை ஜோதி தியேட்டர் காரனும், திருவள்ளுவர் தியேட்டரும் திருந்தி உலகத்தரத்தில தமிழ்ப்படம் போட ஆரம்பிச்சிட்டாங்க.இந்தக்கலைப்படம் பாக்கிறோம்னு காலம் முழுவதும் பள்ளு வெளக்குறது வெறிச்சி வெறிச்சி பாத்துக்கிட்டே காலத்த ஓட்டறதுக்கு இது எவ்வளவோ மேல்.

தப்பு பண்றோம்னு ஒத்துக்கிட்டா திருந்திரலாம்கிறது உண்மைதானே, இது மலையாளப்படம் பாக்கிறதுக்கு மட்டும் இல்லை. இதுதான் பதிவோட மெஸேஜூ.

Friday, October 2, 2009

தொவையல் : பரிணாம வளர்ச்சி குழந்தைக்கு எப்படி சொல்லிக்கொடுப்பது?

தொவையல் 1 :

தூங்க செல்லும்முன் கதைகள் சொல்லச்சொல்லி எனது மகள் அவ்வப்போது கேட்பதுண்டு, சமயங்களில் அவை கேள்வி பதிலாகவும் ஆகிவிடும். சமீபத்தில் ஒருநாள் மனிதர்கள் எப்படி உருவானார்கள் என்று அதிரடியாக ஒரு கேள்வியை கேட்டாள். நானும் டார்வினின் பரிணாம வளர்ச்சி பற்றி சொல்லி புரியவைக்க ஒருகாலத்தில் ஒரு விதமான குரங்கிலிருந்து மனிதன் உருவாகி இருக்கலாம். அப்படின்னேன்.

அப்படின்னா நான் பிறந்தப்ப குரங்கா பிறந்து அப்புறம் இப்படி ஆயிட்டேனா?

இல்லைப்பா சில மில்லியன் வருடத்துக்கு முன்னாடி நம்முடைய மூதாதையர்கள் குரங்கா இருந்திருக்கலாம், அப்புறம் கொஞ்சமா மாறி பரிணாம வளர்ச்சியில் மனுசனா ஆயிட்டோம்.

அப்படின்னா நீங்க குரங்கா இருந்தீங்களாப்பா ? அப்புறம் மனுசனா மாறீட்டீங்களா?ஆனா குரங்குக்கு வால் இருக்குமே, உங்களுக்கு வால் இருந்துச்சா?

இல்லடா அதெல்லாம் மில்லியன் வருடத்துக்கு முன்னால், மனிதன் கொஞ்சம் கொஞ்சமா குரங்கிலிருந்தோ/ குரங்கு மாதிரி ஒன்றிலிருந்தோ வந்திருக்கலாம் அப்படின்னு டார்வின்னு அறிஞர் சொல்லிருக்கார்.

அப்படின்னா உங்கப்பா குரங்கா இருந்து அப்புறம் மனுசனா வந்திட்டாரா?.அப்புறம் மனுசனா மாறீட்டீங்களா?தாத்தாவுக்கு வால் இருந்துச்சா?


இல்லப்பா கிரேண்ட் கிரேண்ட் ........... தாத்தாவுக்கெல்லாம் கிரேண்ட் கிரேண்ட்.............. தாத்தாவோட மில்லியன் வருட முன்னாடி தாத்தாவுக்கு வால் இருந்திருக்கும், கொஞ்சம் கொஞ்சமா வால் தேய்ந்து நம்ம இப்படி ஆயிட்டோம்.

Its funny to have வால்.

இப்படியே கேள்விகள் தொடர்ந்தது நானும் பேச்சை மாற்றி ஒரு புத்தகத்தை படிச்சு தூங்கவெச்சிட்டேன். பரிணாம வளர்ச்சியை சொல்லிக்கொடுப்பதற்கு பதில் ஆதாம்,ஏவாள் கதை சொல்லிக்கொடுத்து சுலபமா வாயை அடைச்சிருக்கலாம். ஆனாலும் நான் நம்பாத ஒன்றை நான் சொல்லிக்கொடுக்க விரும்பவில்லை, பரிணாம வளர்ச்சி தியரி மூலம், மனிதன் எப்படி உருவானான் என்று ஆராய்ச்சி வாய்ப்பாவது இருக்கிறது, ஆனால் ஆதாம்,ஏவாள் தியரி, ஆதாம்,ஏவாள் யார் என்று கண்டுபிடிக்கலாம் என்ற ஆராய்ச்சியை தவிர மற்ற ரீதியில் சிந்திக்க வாய்ப்பளிக்குமா என்று தெரியவில்லை.

MSN news

தொவையல் 2:

கடந்த இரண்டு ஆண்டுகாளாக சன் டிவி வைத்துக்கொள்ளாமல் இருந்தேன், மகள் இப்போதெல்லாம் தமிழில் பேசுவதை நிறுத்திவிட்டாள், சன் டிவி இருந்தால் மீண்டும் பேசவைக்கலாம் என்ற நம்பிக்கையில் மீண்டும் இணைப்பு வாங்கினேன். ஆனால் அவள் சன் டிவியில் பார்த்த ஒரே நிகழ்ச்சி, கந்தசாமியில் ஸ்ரேயா உடையை கிழித்துக்கொண்டு கத்தும் காட்சி, பார்த்துவிட்டு this girl is funny..அப்படின்னு சொல்லிட்டு சன் டிவி வீட்டில் போடவே கூடாது என்று தடை போட்டுவிட்டாள்.

டோரா மட்டும்தான் ஓடுகிறது இப்போது. சன் டிவி பார்த்து கோலங்கள் , மேகலா, ராதிகாவின் சீரியலுக்கெல்லாம் விமர்சனம் எழுதி பதிவின் எண்ணிக்கையை கூட்டி, கோலங்கள் மாதிரி ஒரு ஆறு ஆண்டுகள் தரமா பதிவுகள் தரவேண்டும் என்ற என் எண்ணம் ஈடேறவில்லை.