Friday, October 29, 2010

இயற்கை விரும்பியாகிய நான்

ஒரு வசதியான இடத்தில் தனிமையின் இனிமையை இயற்கைத்தாய் அருளிய கொடையின் மூலமாக ரசிக்கும் எண்ணத்தோடு செயற்கையாக செய்யப்பட்ட தங்க வடிப்பானின் உதவியுடன் ஊண்றுகோல் இல்லாமல் இயற்கை அண்ணையின் விசித்திரமான மேடு பள்ளங்களில் செருப்பில்லாத கால்களோடு நான் நடத்துகொண்டு தவளையின் தன்னிகரில்லா ஒலியை என் காது மடல் வழியாக ரசித்துக்கொண்டிருக்கும் போது பின்னணி இசை போல் சீறிய பாம்பின் சீற்றம் எனக்குப் பயத்தைக்கொடுத்தாலும் தவளையை முழுங்கியபின் பாம்பின் கவனம் என் மீது இல்லை என உறுதிப்படுத்திக்கொண்டபின், என்னுள் உணவுச்சுழற்சியை பற்றிய எண்ணம் ஆக்கிரமித்தது, ஆக்கிரமிப்பு வடமொழியா, தமிழ்மொழியா என்று யோசித்துக்கொண்டே , தூண்டிலில் உணவுச்சுழற்சி விதிகளின் படி அனுமதிக்கப்பட்ட செய்கையாக மண்புழுவை கோர்த்தேன், பாம்பு வாயில் தவளை இருப்பதால் அது என் தூண்டிலில் மாட்டாது என்ற நம்பிக்கை என் ஆழ்மனதில் ஓடியது, தூண்டிலை வீசினேன் தக்கை மிதப்பதை பார்த்துக்கொண்டே இருப்பது மனதை ஒருநிலைப்படுத்தும் இது ஒருவகை தியானம் என்ற என் அப்பன் கூறியது நினைவுக்கு வந்த வேளையில், கொண்டு வந்த ஐஸ் பெட்டியில் இருந்த பீர் பாட்டில் ஞாபகம் வந்ததை தடுக்கமுடியவில்லை, பீர் பாட்டில் திறப்பதற்கு திறப்பான் கொண்டுவரவில்லை என்று தெரிந்ததும் என் கூரிய சிங்கப்பல்லால் மூடியை திறத்து தண்ணீரில் விழுந்துவிட்ட மூடி இயற்கையை குப்பையாக்கும் என் அறிவு சொல்லினாலும் என் உடனடித்தேவையாக, அரை பீரை யோசிக்கும் முன்னரே வயிற்றுக்குள் தள்ளியிருந்தேன், இந்நேரம் தவளையும் பாம்பின் கழுத்துப்பகுதியை தாண்டி உள்ளே சென்றதை பாம்பை உற்று நோக்கியதில் அறிய முடிந்தது.

முற்றுமாக முற்றிய மூங்கிலின் பிளாச்சுகளால் கைதேர்ந்த ஆசாரியால் செயற்கையாக செய்யப்பட்ட இயற்கை பாலத்தில் உட்கார்ந்தபடி நாணலால் செய்யப்பட்ட தக்கையை மீண்டும் பார்த்தன், அசைவற்று மிதந்தது எனக்கு சற்றே அயர்ச்சி தந்தது, அயர்ச்சியின் பலனாக சிங்கப்பல் மீண்டும் வேலை செய்ய மற்றோரு பீர் பாட்டில் காலியாகியிருந்தது, தவறி தண்ணீரில் விழுந்த பீர் பாட்டிலை சிறிய மீன்கள் சுற்றி வந்தது, அவற்றிக்கு குடிக்கும் வயது இன்னும் ஆகவில்லை, ஆனாலும் பீரை மோந்து பார்க்க வயது வரம்பு இல்லை என்று ஆறுதல் பட்ட்டுக்கொண்டேன். எங்கிருந்தோ பறந்து வந்த காக்கை என் தலையில் எச்சமிட மிச்சமிருந்த பீரை தலையில் ஊற்றி எச்சம் கழுவிய பின்னர் தோன்றியது எதிரில் தண்ணீர் நிறைய இருப்பது.

குடித்த பீருக்கு இப்போது உச்சா வந்தது, நீர்நிலையை அசுத்தப்படுத்தக்கூடாது என்ற சமூக அறிவு இருந்ததால் சற்று தூரம் சென்று வெட்ட வெளியில் உச்சா அடித்தேன், உச்சா அடித்ததன் விளைவில் போதை சுத்தமாக இறங்கியதால் மீண்டும் ஒருமுறை சிங்கப்பல்லில் வலி வந்தது, குடித்தபின் பிடித்த மீன் சாப்பிட ஆசைப்பட்டு மீண்டும் தக்கையைப் பார்த்தேன், தக்கை அங்கிமிங்கும் ஆடியது மாட்டியிருந்தது கயல்விழி கொண்ட கெண்டை மீன், மீனை தூண்டில் முள்ளில் இருந்து எடுக்கும்போது என்னையும் அறியாமல் பக்கத்து ஊர் கயல்விழிக்கு தூண்டில் போட்டிருந்தால் மாட்டியிருப்பாளோ என்றும் தோன்றியது, மனிதப்பிறவியாய் பிறந்ததால் இப்படியெல்லாம் தோன்றுகிறது என்று மனதைத் தேத்திக்கொண்டு கிடைக்காத கயல்விழி மறந்து , கிடைத்த கயல்விழியை உண்ணும் மனநிலைக்கு மீண்டு வந்தேன்.மீனை சுத்தம் செய்ய கத்தி தேடினேன், மறந்து விட்டிருந்தது தெரிந்தது, ஆதிமனிதன் போல் தீயிட்டு திண்ணலாம் என்ற எண்ணத்தில், சுற்றிக்கிடந்த சுள்ளி பல பொருக்கி, தங்கவடிப்பான் பற்ற வைக்கும் அதே லைட்டர் மூலம் பற்றவைத்து தீமூட்டி மீனை மேலே போட்டு வாட்டினேன்.

சற்று தூரத்தில் திடீரென மரங்கள் பற்றி எரிந்தன, உடனடியாக உணர்ந்தேன் சுள்ளித்தீயில் பறந்த கங்கு ஒன்றுதான் காரணம், ஐஸ் பெட்டியில் தண்ணீர் எடுத்து அணைக்க முயன்றேன், தீ எல்லை தாண்டிய நிலையில் ஒன்றும் செய்யமுடியாது என்றும் உணர்ந்தேன், இயற்கை ஆர்வலனான எனக்கு இயல்பாக இப்போது தோன்றியது தப்பித்து விடு, முடிந்தவரை என் சாமான்களை சமர்த்தாக எடுத்துக்கொண்டு மனிதன் ஆகினேன். அன்று மாலை காடுகளை அழிப்பது தவறு என்று எனது உரையை நான் முடிக்கும்போது எழுந்த கைதட்டல் ஓசை என் செவியில் தேனாய் பாய்ந்தது.

Wednesday, October 27, 2010

எப்போதோ கேட்ட உரையாடல்.

இடம் : அலுவலகத்தில் இருக்கும் ஓய்வு அறை/சாப்பிடும் அறையில் மதிய சாப்பாட்டு நேரம்.

"என்ன அயித்தான் புதுசா இன்னைக்கு சாப்பாடெல்லாம் எடுத்துட்டு வந்திருக்கிய, எப்பயும் சைக்கிள் எடுத்துட்டு போயி வீட்ல இருக்கிற பழைய சோறுதானே சாப்பிடுவிய"

"இன்னைக்கு உங்கக்கா இட்டிலி பண்ணிருக்கா, அதனாலதான் எல்லாருமா சாப்பிடுங்கன்னு கட்டி கொடுத்திருக்கா, நான் பழைய சோறு திங்கறேன்னு பேசறே , உன் வீட்ல என்னத்த திங்கிற நீ "

"பழைய சோறு நம்ம அகராதிலயே கிடையாது,நான் காலைல டிபனுக்கு டிரை பிஷ்ஸ ஃபிரை பண்ணு ராகி மால்ட்தான் தினமும் "

"என்னமோ சொல்ற , சரி உன் மதிய சோத்து மூட்டை எங்கடா?"

"இன்னைக்கு எங்கக்கா இட்டிலி கட்டி கொடுக்கும்னு தெரிஞ்து என் பொண்டாட்டி சோத்து மூட்டைய கட்டலை போலருக்குத்தான்"

"சரி இந்தா நீ ரெண்ட முழுங்கு"

"என்னத்தான் இது கருப்புக்கலர்ல இட்டிலி, கருக்காய் குருணைல மாவு அரைச்சு இட்டிலி சுட்டியலா கஞ்சப்பிசினாறித்தனமா? "

"சோறு கொண்டு வர வக்கில்லை, பேச்சுக்கு ஒன்னும் கொறச்ச இல்லை உனக்கு"

"கருப்பு/சிகப்புல இட்டிலி சுட்டிருந்தா உங்க தலைவரு கலைஞரு எதவாது பண்ணிருப்பாருத்தான்"

"கலைஞர நோண்டலன்னா உங்களுக்கு தூக்கம் வராதே, கலைஞரோட குசுவில் கூட தமிழ் மணக்கும்டா"

"ஆமா இவருக்கு அதுல தமிழ் மணக்குதா இல்லையான்னு மோந்து பாக்கிறதுதான் தினம் வேலை"

"உங்கள மாதிரி உண்டி குலுக்கிகளுக்கு நாங்கள் தேவலாம்டா"

"நாங்க உண்டியோ குண்டியோ குலுக்குறோம், மோந்து பாக்கிற வேலையெல்லாம் நாங்க பாக்கிறதில்லை"

"தேர்தல் வரட்டும் அப்ப பாத்துக்குறோம் நீங்க யாரு குசுவ குடிக்கிறியன்னு"

அநத நேரத்தில் சக ஊழியர் உள்ளே வருகிறார்

"என்னய்யா என் டிபன் கேரியர் காலியா இருக்கு"

அயித்தானும், மச்சானும் கோரஸாக

"பேச்சு சுவராஸ்யத்துல உங்க சாப்பாட்ட சாப்பிட்டோம், இந்தாங்க அக்கா வீட்டு இட்டிலி இருக்கு சாப்பிடுங்க"

பிகு: இது அரசியல் பதிவல்ல, மாமன் மச்சான் உரையாடலில் அரசியலும் வருகிறது

Friday, October 22, 2010

ருசி

விடாதழைத்த
தொலைபேசி மணியை நிராகரித்தேன்..
சற்றுத் தாமதித்து
IM ல் செய்தி வந்தது
பிஸி என்று ஸ்டேட்டஸ்
வாசல் அடைத்தேன்
இன்பாக்ஸில் புதிய மெயில்
உட்புகுந்தது..
அசைத்துப் பார்த்தது
ஆனாலும் அலட்சியம் செய்தேன்
பின்பக்கன் கை நீட்டி
நெட்டி முறித்தேன்
சொப்பனத்தில் காணாக்கூடாத..
டேமேஜர்
நேரில் வந்து ஸ்டேட்டஸ்
கேட்டார்
ஜாக்கி Vs Anti ஜாக்கி..
உச்சகட்டம் அடைந்துள்ளது..
இன்னும் இரு வாரம் ஆகும்...
முடிய என்றேன்

Wednesday, October 20, 2010

குடிகாரன்

டைரக்டர் ஹரி படத்தில் வரும் வன்முறை வாகனத்தில் ஆலப்புழா அணை நோக்கி உறவினர்களோடு பயணித்துக்கொண்டிருந்தேன்.என்னுடைய காலில் செருப்பு இல்லை, வழியில் வரும் பொள்ளாச்சி நகரில் செருப்பு வாங்கலாம் என்று வன்முறை வாகன ஓட்டி இருமுறை சொன்னார், ஆட்டோ ஓட்டுனராக இருந்து ஒருமுறை சொல்லியிருந்தால் பஞ்ச் டையலாக்கில் சேர்த்திருக்கலாம்.

நீண்ட நாள் கழித்த சந்திப்பாதலால், ஊர்க்கதை பேசியபடி செல்கையில் ஆசிரியர் திரவியம் பற்றிய பேச்சும் வந்தது.

திரவியம் ஒரு வித்தியாசமான மனிதர், பெரும் குடிகாரன், நக்கல் பேச்சுக்கு சொந்தக்காரன்,

"என்னடா பாஸ்கர் இந்த வருசம் பாஸ் பண்ணிட்டியாடா?"

"இல்ல சார் "

"உன் பேர்லயே பாஸ் இருக்கு , அப்புறம் என்னதுக்குடா வாத்தியார் பாஸ் போடனும் வேலையப்பாரு"

திருவிழாவிற்கு செல்லுமிடங்களில் குடித்து, சீட்டாடி, கோவிலில் மொட்டை போட்டவனின் தலையில் போதையில் குட்டி, மொட்டையனால் அம்மனமாக்கப்பட்டு வாடகை காரில் ஊர் வந்து சேர்வதும் திரவியத்துக்கு திரவியமானதல்ல.

இப்படியாக இருந்த அந்த திரவியத்துக்கு நான்கு பெண் பிள்ளைகளை பெற்க எப்படி நேரம் கிடைத்ததோ, திரவியத்தைப் போலவே அழகானவர்கள். ஆனால் திரவியம் திடீர் வாஸ்து ஜோசியனாகிப்போனானாம், ஆனாலும் குடிப்பதையும் குழந்தைகளை அடிப்பதையும் நிறுத்தாத அவன் மூச்சு குடியினாலேயே நின்று போனது

"அய் அப்பா செத்துப்போயிட்டான் என்ற நான்கு குழந்தைகளும் மகிழ்ச்சியோட கூத்தாடும் நிகழ்வாக அவன் சாவு ஆயிற்று"

இவற்றை பேசி முடிக்கவும் பொள்ளாச்சியில் செருப்புக்கடை வரவும் சரியாக இருந்தது.

செருப்புக்கடை முதலாளி உட்காட்ந்திருந்த சேரை விட்டு எழவே இல்லை,அவர் வணங்கும் கடவுள் பற்றிய வசனங்கள் பக்திமான என்று பறைசாற்றியது.

கடைத்தொழிலாளிகடம் அந்த செருப்பக்காட்டு என்று உட்கார்ந்தவண்ணமே கட்டளை இட்டுக்கொண்டிருந்தார், அவரது உடல்மொழி எனக்கு கடுப்பேற்றியது, எனக்கு செருப்பு உடனடித்தேவை, விலை கேட்டேன், ஒரே விலை என்றார்,

12 % வாட் வரி என்றார், பணம் கொடுத்தேன், ஒரு பேப்பரில் ரசீது என்று ஒன்றைக்கொடுத்தார்.

வாட் வரி கட்டிய செருப்புக்காலுடன் நடந்து கடையை விட்டு வெளியே வரும்போது, ஒரு குடிகாரன் கடைக்கு முன்னர்/வாசலில் ஓடும் சாக்கடையில் வாந்தி எடுக்க ஆரம்பித்தான்.

முதலாளி வேகமாக எழுந்து ஓடிவந்தார், குடிகார நாயே கடைக்கு முன்னாடி எதுக்குடா வாந்தி எடுக்கிற அந்தப்பக்கம் போடா?

"நான் டாஸ்மாக்ல வரி கட்டி குடிச்ச சாராயத்துல வந்த வாந்தியை அதே வரிப்பணத்துல கட்டுன சாக்கடை வாய்க்கால்ல வாந்தி எடுக்கறேன், இதக்கேக்க உனக்கு என்னா ரைட்சு இருக்கு"

Thursday, October 14, 2010

காதலி இருந்தால்.


காதலி இருந்தால்.

பி.கு : எனக்கு காதலியும் இல்லை , இந்த டிரக் என்னுடையதும் இல்லை

Friday, October 8, 2010

இவைகள்தான் அந்தக் குதிரைகள்


பின்னூட்டத்தில் இமேஜை ஏற்றமுடியுமா என்று தெரியவில்லை, அதனால் குதிரைகள் இங்கே