Friday, February 27, 2009

தமிழ்மணம் விருதுகள்- நன்றி:முதல் பத்தில் என்னுடைய பதிவுகள் இரண்டு.

பதிவுலக நண்பர்களுக்கும், என்னுடைய பதிவுகளை தொடர்ந்து படித்து ஊக்கமளித்து வரும் அனைவருக்கும் எனது நன்றி. தமிழ்மண விருதுகளுக்கு நானும் என்னுடைய சில பதிவுகளை போட்டிக்கு சமர்ப்பித்து இருந்தேன்.அத்தோடு அதனை மறந்தும் விட்டேன். நான் என் பதிவு உட்பட யாருக்கும் வாக்களிக்கவில்லை. நான் கற்பனை வளம் உள்ள எழுத்தாளனோ கவிஞனோ அல்ல.அனுபவங்களை மட்டுமே நகைச்சுவையோடு தர விரும்புவேன்.அதன் எல்லை தாண்டி செல்வதில்லை.

எனக்கெல்லாம் யாரும் விருது கொடுக்கமாட்டார்கள் என்று தெரிந்து நானே விருதுகளை உருவாக்கி எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கொடுத்து மகிழ்வேன்.இந்நிலையில் என்னுடைய பதிவுகள் இரண்டு முதல் பத்துக்குள் தேர்வு பெற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி.
வாக்களித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.தொடர்ந்து படித்தும், பின்னூட்டமிட்டும் ஊக்கப்படுத்தி வரும் அனைவருக்கும் நன்றி.


தமிழ்மண விருது பெற்ற பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


இங்கே என் பதிவுகளும் இருக்கிறது

வென்றவர்கள்

Thursday, February 26, 2009

அமெரிக்காவில் கார் ஓட்டக்கற்றுக்கொண்ட அனுபவம்

அமெரிக்கா வந்து மூன்று மாதம் வரையில் நண்பர்களோடு அலுவலகம் வந்து விடுவது, கார் இல்லாதது ஒன்றும் பிரச்சினையாக இல்லை, திடீரென இன்னும் இரு வாரங்களில் 20 மைல் தொலைவில் உள்ள அலுவலகத்திற்கு போகவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்,நான் மட்டும்தான் வாடகை கார் எடுத்துதான் போகவேண்டும். சரி கார் ஓட்ட கத்துக்கொள்வோம் என்று தென் அமெரிக்காவை சேர்ந்த ஒரு 60 வயது மதிக்கத்தக்க டிரைவிங் டீச்சரிடம் கத்துக்கொண்டேன், மனுசன் கொஞ்சம் கூட கருணையே இல்லாம திட்டுவாரு. பிரேக் வேகமா அடிச்சா thank you for the ஜெர்க்கி அப்படின்னு சொல்வாரு.

என்னோட அலுவலகத்தில வேலை பாத்த இன்னோரு பெண்ணும் இவரிடம் கார் ஓட்டக் கற்றுக்கொண்டிருந்தார், ஒருவழியாக எங்கள் இருவருக்கும் ஒரே நாளில் டிரைவிங் தேர்வு வந்தது. பின் சீட்டில் அமர்ந்தபடி அந்தப்பெண் என்னிடம் தமிழில் பேசியபடியே வந்தார். ரொம்ப நேரம் பொறுத்துப்பார்த்த தாத்தா, if you guys வாந்து தாக் i will டிரோப் you at புர்கர் கிங், talk and come back அப்படின்னாரு. அதுக்கு அப்புரம் அந்தப்பெண் பேசவே இல்லை.

முதலில் டெஸ்ட் எடுக்க நான் போனேன், left turn yield on green light இருந்தது. எதிர்த்தாப்ல ஒரு பெரிய டிரக் வந்துட்டு இருந்தது நான் அவருதான் நமக்கு yield பண்ணனும்னு நெனச்சி லெப்ட் எடுத்துட்டேன்.பக்கத்துல உக்காந்திருந்த டிரைவிங் டெஸ்ட் வாத்தியார் ஆடிப்போயிட்டாரு, நல்லவெலையா அந்த கார்ல(தாத்தாவோட டிரைவிங் ஸ்கூல் கார்) அவரு கால்லயும் ஒரு பிரேக் இருந்தது ஒரே அமுக்கா அமுக்கி அவரையும் என்னையும் காப்பாத்திட்டாரு. அடுத்த நிமிசமே அந்த பார்க்கிங்க் லாட்ல நிறுத்த சொல்லி பெயில் போட்டுட்டாரு.

அதுக்கு அப்புரம் அந்தப்பெண்ணும் ஏதோ பார்க்கிங்ல தவறு பண்ணி பெயில் பண்ணிட்டாரு, அந்த பெண் ரொம்பக்கவலையா இதுவரைக்கும் ஒரு தேர்வுலேயும் பெயில் ஆனதில்லை ஒரு புலம்பல்.

மறுபடியும் டெஸ்ட் இந்த முறையும் left turn yield on green light ல இலேசா தப்பு பண்ண போகும்போதே அவரு எச்சரிச்சிட்டு பாஸ் பண்ணி விட்டிட்டாரு. ஒருவேலை எல்லா நேரத்திலேயும் அவரு பிரேக் அடிச்சு உயிர காப்பாத்திக்க முடியுமான்னு பயந்து மனுசன் பாஸ் போட்டுட்டாருன்னு நினைக்கிறேன்.

இப்பவும் அந்தப்பெண் நான் கார் ஓட்டும்போது பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தமிழில் பேசுகிறார், ஆனால் நான் புர்கர் கிங்கில் இறங்கி பேசிவிட்டு வரச்சொல்வதில்லை.

வலைமாமணி விருது பெரும் நாகம்மாள்.

வலைமாமணி விருது பெரும் நாகம்மாள்.

திருமதி நாகம்மாள் நடேசன் அவர்கள் இந்த ஆண்டிற்கான வலைமாமணி விருதை பெருகிறார். இவர் புகழ்பெற்ற பதிவர் குடுகுடுப்பையின் தந்தையை பெற்றெடுத்த தாய் என்பது குறிப்பிடத்தக்கது.பத்தோடு ஒன்று பதினொன்றாக கொடுக்காமல் இந்த ஆண்டிற்கான வலைமாமணி விருது இவருக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது.இவருக்கு இந்த விருதை அளிப்பது பிரபல பதிவரின் குடுகுடுப்பையின் பாட்டி என்பதால் அல்ல.அவருக்கு மீன் வலையைத்தவிர எந்த வலையும் தெரியாத காரணத்தினால் வலைமாமணி விருது இவருக்கு கொடுக்கப்பட்டது சாலப்பொருந்தும் என அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Wednesday, February 25, 2009

சிகாகோவில் உயிருள்ள கோழி வாங்க அலைந்த கதை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு, நானும் பதிவுலகத்தில் இருக்கேன் சொல்லிக்க.என்னுடைய வலைப்பதிவும் 25000க்கு மேற்பட்ட வருகை தந்திருக்கிறார்கள். வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி.

சாம்பர்க்,சிகாகோவில் வசித்த நாட்களில் ஒரு ஆசை எத்தனை நாளைக்கு இப்படி குளிரூட்டப்பட்ட கோழிய சாப்பிடறது,எங்காவது பக்கத்துல பண்ணைல போய் உயிரோட கோழி வாங்கி சாப்பிடலாம்னு முடிவு பண்ணி, நானும் பல்லவர்களுடன் அனுபவத்தில் வரும் நண்பன் மண்டையனும் ஹாம்ப்சையர்னு ஒரு ஊருல உள்ள சில பண்ணைகளை அலசினப்போ, ஒரு பண்ணையில நம்மூரு நாட்டுக்கோழி மாதிரி கலர் கலரா நிறைய கோழிகள் இருந்தது.

பண்ணைக்காரார் இப்போ அதெல்லாம் முட்டை போடுது இப்போ விற்க மாட்டோம்னு சொல்லிட்டார்.வேணும்னா வெள்ளாடு இருக்கு வாங்கிக்கங்க அப்படின்னு சொன்னார்,எல்லாம அருமையான உருப்படிதான், வெட்டித்தரமாட்டேன் நீங்கதான் வீட்ல போயி வெட்டனும் அப்படின்னு சொல்லிட்டார்.ஆடு வெட்டுற அளவுக்கு நாங்க பக்குவப்படலை, அதுனால தோல்வியோடு திரும்பினோம்.

எதிரே இன்னொரு பண்ணை கண்ணில்பட்டது, அங்கும் கோழி இல்லை ஆனால் முயல் இருக்கிறது என்றார் அங்கிருந்த 90ஐத்தாண்டிய கிழவியார் 10$ கேட்டார் அந்த முயலுக்கு. முயல் வாங்கிவிட்டோம். ஒரு அட்டைப்பெட்டியில் வைத்து ட்ரங்கில் வைத்து வீட்டுக்கு வந்தோம்.

நான் தங்கியிருந்தது எங்கள் கம்பெனியின் கார்ப்பரேட் அபார்ட்மெண்ட், நண்பன் பக்கத்தில் வேறு வீட்டில் இருந்தான்.
என்னுடைய அபார்ட்மெண்டில் சமைக்க முடிவெடுத்தோம் என்னோடு தங்கியிருந்த இன்னொரு சென்னைக்காரரும் கலந்து கொண்டார்.இப்போது முயலை எப்படி எங்கே வெட்டுவது, இருக்கவே இருக்கு பாத்டப்,அங்கே வைத்து வெட்டி சுத்தம் செய்து,பாத்டப்பையும் சுத்தம் செய்துவிட்டு சமைத்து சாப்பிட்டோம். ஒரு மாதிரி புல் வாடையுடன் கொஞ்சம் முரட்டுத்தனமாக இருந்தது.சரியாக சமைக்கத்தெரியாததால் சுவை சரியில்லை.

எப்படியாவது கோழி வாங்கியே ஆவது என்ற வெறியில் மீண்டும் அதே பண்ணைக்கு இன்னொரு நாள் சென்றோம், இந்தமுறையும் அவர் விற்கவில்லை,ஆனால் வாத்து வாங்கிக்கொள்ள சொன்னார்.வெறுங்கையோட திரும்புவது பிடிக்காத நாங்கள் வாத்தை வாங்கினோம். அதே போல என் வீட்டு பாத்டப்பில் வைத்து வெட்டி சுத்தம் செய்தோம். ஆனால் இம்முறை வாத்தின் நாத்தம் சகிக்கவில்லை.கிட்டத்தட்ட அந்த புளோர் முழுவதும் நாற்றம். ஆனாலும் ஒரு ஆந்திரா நண்பரின் உதவியுடன் சமைத்து சாப்பிட்டோம்.

இந்தக்கதையை ஒருநாள் எங்களுடன் தங்கியிருந்த ஒரு கன்னட நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தோம், இந்தக்கன்னட நண்பர் காவிரி கர்நாடகாவில் தோன்றுகிறது, அவங்க பயன்படுத்தி மிச்சம் இருந்தா தமிழ்நாட்டுக்கு விருப்பபட்டு கொடுக்கலாம், அதுல தமிழ்நாடு உரிமை கொண்டாடுவது தப்பில்லையா எனக்கேட்டு தமிழ்நாட்டின் தவறை எனக்கு புரியவைத்தவர்.இவர் ஒரு சைவர், அவரிடம் பாத்டப்பில் வைத்து முயல்,வாத்து வெட்டியது பற்றி சொல்லிவிட்டு ,வெட்டியது நண்பர் மண்டையன் வீட்டில் என்றும் சொல்லிவிட்டோம்.மனிதர் இதை அப்படியே போய் நண்பர் மண்டையன் வீட்டில் உள்ள மற்றொரு நண்பனிடம் சொல்லி உங்க பாத்டப்பில வெச்சி முயல், வாத்தெல்லாம் வெட்டி இருக்காங்க உனக்கு தெரியாதன்னு கேட்டிருக்காரு, அவரு ஒரு பெரிய டேட்டாபேசு, வெட்டினதெல்லாம் தெரியும் ஆனா இடம் உங்க பாத்டப்பு எங்க வீட்ல இல்ல அப்படின்னு எடுத்துரைக்க, கன்னட நண்பர் என்னிடம் காவிரி தண்ணீர் கேட்ட தஞ்சாவூர்காரன்காரன் மேல உள்ள கோபத்தோட என்னை எரிச்சிட்டார்.

அப்படியே ஒருநாள் hampshire farms அப்படின்னு கூகிள் பண்ணினா, அங்க உள்ள பண்ணை விலங்குகளுக்கு ஏதோ வைரஸ் அட்டாக், அதை சாப்பிடுவர்களுக்கும் வரும் வாய்ப்பு உள்ளது, வயித்தில புளிய கரைச்சிட்டாங்க... நல்லவேளை ஒன்னும் ஆகல.

Sunday, February 22, 2009

வாழ்த்துக்கள் ரகுமான்,பூக்குட்டி

வாழ்த்துக்கள் ரகுமான் மற்றும் பூக்குட்டி.

Thursday, February 19, 2009

ஒரு நகைச்சுவை உரையாடல்

மு:கு:இந்த பதிவு முற்றிலும் பட்டிக்காட்டானுக்கு மட்டும். ஒரு பட்டிக்காட்டு உரையாடலை எழுதியிருக்கிறேன், ஆனாலும் உயிர் கொண்டு வர முடியவில்லை.

மு:கு2:செந்தழல் ரவி ஏற்கனவே what the hell is it brother ? அப்படின்னு கமெண்ட் போட்டாரு அதான் தூக்கிட்டேன் அன்னிக்கே,
ஆனாலும் மீண்டும் இங்கே.


-----------------------------------------
டேய் கணேசா ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுறா,-- பண்பரசன்
சரி மாப்பிள்ளை போட்டா போச்சு, என்ன மாப்பிள்ளை இப்படி திராசு படிக்கல்லோட திரியற....

அது ஒன்னும் இல்லடா , நெல்லு போட சென்டருக்கு வந்தேன், அந்த ஆபிசர் பயகிட்ட காலைல கையெழுத்து போட்டு ஒரு நூறு ரூபாய் வெட்டிட்டு நூறு சாக்கு வாங்கிட்டு போனேன், நெல்லும் சாக்குல புடிச்சு 71 கிலோ கலத்துலயே எடை போட்டு ஏத்திட்டு வந்தாச்சு,இப்போ நெல்லை பாத்துட்டு ஈரப்பதம் 24 க்கு மேல இருக்கு, எடுக்க முடியாதுன்னு சட்டம் பேசறான்,காய வெக்க சொல்றான், என்கிட்டே இதெல்லாம் நடக்குமா, அதான் திராசு படிக்கல்ல கையோட எடுத்துட்டு வந்திட்டேன், என் நெல்ல வாங்காம மத்தவன் நெல்ல எப்படி வாங்கிறான்னு பாத்துபுடறேன்.

ஏற்கனவே நெல்லுக்கு வெல இல்ல, இந்த டவுண்காரங்க ஒரு மயிறுக்கும் போறாத படத்தை குடும்பத்தோட 1000 ரூவா குடுத்து பாக்ஸ்ல உக்காந்து பாப்பாங்க ஆனா மாசம் 1000 ரூவா குடுத்து அரிசி, காய்கறி வாங்கறதுக்கு கால் ..லுன்னு கத்துவாங்க. வெவசாயின்னா எல்லாருக்கும் எலக்காரம் ஆயி போச்சி.

ஆபிசர் சொல்ற மாதிரி நீ கொஞ்சம் நெல்ல காய வெச்சு கொடுக்க வேண்டியது தான மாப்பிள்ளை ஏன் பிரச்சினை பண்ணிக்கிட்டு ......

நீ டீய ஒழுங்கா போடுறா வெண்ண, பொழக்க வந்த நாய் எனக்கு அட்வைஸ் பண்ணது போதும், சும்மா பேசின பால் குண்டானெல்லாம் பறந்துரும் பாத்துக்க, நான் இருக்கிற வெறில நீ வேற கடுப்ப கெளப்புற , அவன் எல்லாம் ஒரு ஆளா, மூணு மாசத்துக்கு தான் அவன் ஆபிசர், சென்டரு மூடுனா வேல கோயிந்தா அப்புறம் சிங்கிள் டீக்கு சிங்கி அடிக்கிறவன், அவன் சொல்றத நான் கேட்கமுடியுமடா? நாங்க வெவசாயம் பண்றவன் எல்லாம் கேண்க்.... இப்ப வருவான் பாரு கெஞ்சிகிட்டு.

ஆமா டீத்தூள் போடுறியா இல்ல மரத்தூள்ல டீ போடுறியா நீ, காசு மட்டும் வாங்குங்கடா நல்லா , இதை குடிக்கறதுக்கு,வீட்ல கொஞ்சம் வடிச்ச கஞ்சிய குடிச்சிட்டு வந்திருக்கலாம்.

அங்கே வந்த பெரிய மனிதன் கோவிந்தராஜன், என்னடா பண்பு, நெல் கிட்டங்கில எதோ பிரச்சினை பண்ணியாமே? அவர் உன் மேல கேசு கொடுக்க போறேன் சொல்றார் ஏன்டா இப்படியெல்லாம் பண்ற?

என்னது கேசு கொடுக்கிறானா? நெல்லு உங்களுது ,உங்க கையெழுத்து போட்டுதான் சாக்கு எடுத்திருக்கு, போலீஸ் வந்தா உங்களைத்தான் பிடிச்சுட்டு போவான், இந்தாங்க திராசு படிக்கல்லு நான் வரேன்.

டேய் பண்பு டீக்கு காச கொடுத்திட்டு போடா?

இது ஒரு மறுபதிவு

Friday, February 13, 2009

காதலர் தினம் இந்தியாவில் மாபெரும் வெற்றி.

கலாச்சார காவலர்கள் காதலர் தினத்திற்கு பெரும் இடைஞ்சல் கொடுத்ததாக வந்த செய்தியையும் மீறி காதலர் தினம் மாபெரும் வெற்றி.

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சேனாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காதலர் தின ஆதரவாளர்கள் போட்டி போட்டு பிங்க ஜட்டி வாங்கினர்,பல இடங்களில் பிங்க் ஜட்டிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.பிங்க ஜட்டியை வாங்கி சேனா தலைமையிடத்திற்கு அனுப்ப கூரியர் சர்வீஸ் நிறுவணங்கள் இரவு பகலாக வேலை செய்வதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காதலர் தினத்தன்றும், மற்றும் ஜட்டி அனுப்புவர்களுக்கும் அவர்கள் ஆண்களாக இருந்தாலும் கூட புடவை வழங்கப்படும் என்ற சேனாவின் அறிவிப்பின் படி அவர்களும் புடவை கொள்முதலில் இறங்கியுள்ளனர்.புடவை வியாபாரம் அமோகமாக இருக்கும் என ஜவுளிக்கடை அதிபர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஜட்டிக்கம்பெனி,கூரியர் சர்வீஸ் கம்பெனி,புடவைக்கம்பெனி ஸ்டாக்குகள் திங்கள் அன்று உச்சத்தில் பறக்கும் என ஸ்டாக் மார்க்கெட் ஜோசியர்கள் உறுதி அளித்துள்ளனர்.

மொத்தத்தில் காதலர் தினம் வெற்றி பெற்றதாக வியாபாரிகள் அறிவிப்பு.