முதல் நாள் கல்லூரி செல்ல பெற்றோருடன் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து ஏர்வாடி செல்லும் அரசுப்பேருந்தில் பயணம் செய்தோம். பஸ்ஸில் நிற்க இடமில்லாத அளவிற்கு கூட்டம். பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும்போது பிஸ்தா ஐஸ்கிரீம் கலரில் சட்டையும், வெள்ளைக்கட்டம் போட்ட கைலியுமாக என்னைவிட மெலிந்த தேகத்தில் ஒருவன், நாங்கள் பேசிக்கொண்டிருந்தை ஒட்டுக்கேட்டு, கீழக்கரை காலேஜ் போறீங்களான்னான்,ஆமாம் என்றேன்.
பேசிக்கொண்டேயிருக்கையில் மண்வாசனை கருவாட்டு வாசனையாக மாறி வந்ததும், அதிராம்பட்டிணம் வந்துவிட்டோம் என்று புரிந்தது, பயங்கரமா ஸ்மெல் அடிக்குதுன்ன்னான், ராம்நாடு வரைக்கும் அப்படித்தான் அடிக்கும்னு சக பயணி ஒருவர் தைரியம் ஊட்டினார். ஒருத்தன் கிடைச்ச மகிழ்ச்சில அவனும் நானும் பேசிக்கொண்டே வந்தோம், அவன் மன்னார்குடி நேசனல் ஸ்கூலில் படித்ததாக சொன்னான், சொந்த ஊர் கூத்தாநல்லூர் பக்கம் தண்ணீர்குன்னம் என்று தண்ணி அடித்துவிட்டு மூக்கால் பேசுபவன் போல பதில் சொன்னான். ஆளு சின்னமா இருந்தாலும் விவரமாத்தான் பேசினான்.
உங்கூட வருவது யார் என்றேன், அப்பா இறந்துட்டாங்க, மாமாதான் வறாங்க என்றான், இந்தக்காலேஜ் பத்தி முன்னாடியே உங்களுக்கு தெரியுமான்னேன், கூத்தாநல்லூர்லேந்து நிறைய சீனியர்ஸ் இருக்காங்க, காலேஜ் ரொம்ப நல்ல காலேஜ், பயங்கர ஸ்டிரிக்ட் அப்படின்னு மூக்காலேயே சொன்னான். +2 படிக்கும்போது கொஞ்சம் மலையாளப்படம் பாத்ததுனால இவன் பேசறத புரிஞ்சிக்கிறது அவ்வளவு சிரமமா இல்லை.பஸ் மணமேல்குடி வந்து சேந்திருந்தது, கிட்டத்தட்ட பாதி பஸ் காலி ஆகிவிட்டிருந்தது. டீக்குடிக்கிறவங்க இறங்கி குடிக்கலாம்னு கண்டக்டர் அறிவிப்பு விடுத்தார்.
பேருக்கு ஏத்த மாதிரி தார் ரோடு கூட தெரியாம மணல்தான் இருந்தது,பத்து நிமிடத்தில் பஸ் மீண்டும் புறப்பட்டது, இப்போது பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே கிடந்தது, ஒரு இருக்கையில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டே வந்தோம், சரி காலேஜ்ல ராகிங் எல்லாம் இருக்குமே, இவனுக்கு தெரிஞ்ச சீனியருங்க இருக்காங்க தப்பிச்சிக்குவான், நமக்கு அப்படி யாரும் கிடையாதே என்ற பயத்தில் அவனிடம் அது பற்றி பேசநினைத்தேன்.
பஸ் தூக்கிப்போட்டதில் இருவரும் இருக்கையில் இருந்து நிலைகுலைந்தோம், டிரைவர் எதையும் கண்டுகொள்ளாமல் ஓட்டிக்கொண்டிருந்தார். என்ன இப்படி இருக்கு ரோடு என்று இருவரும் சலித்துக்கொண்டோம்.
காலேஜ்ல ராகிங்லாம் இருக்குமா? கேள்விப்பட்டிருக்கீங்களா?
இருக்கும்,ஆனால் நீங்க ஹாஸ்டல்தானேன்னான், ஆமாம் என்றேன்
ஹாஸ்டல் ஸ்டூடன்ஸூக்கு கைடு சிஸ்டம் உண்டுன்னான்.
கைடு சிஸ்டம்னா என்னான்னு புரியலை, கொஞ்சம் யோசிச்சு கேட்டேன், இல்லை ஹாஸ்டல்லேருந்து,கிளாஸ் வரைக்கும் பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ஸ தனியா பாதுகாப்போட கிளாஸ் ரூம்ல கொண்டு வந்து விட்டுருவாங்கன்னான்.
நேரமும் நல்லிரவு நெருங்கி விட்டிருந்தது, திடீரென கருவாட்டு நாத்தம் கடுமையாக அடித்தது, ஜெகதாப்பட்டினம் என்ற ஊர் நெடுஞ்சாலைத்துறை போர்டு மூலம் தெரிந்துகொண்டேன், இந்த ஊர்ல ஈ விழாம டீ குடிக்கறது ரொம்ப கஷ்டம், கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லாதது. பல தூக்கிபோடலுக்குப் பிறகு, ராமர் இந்த வழியா போகும் போது இளைப்பாறியதாக சொல்லப்படும் உப்பூர், தொண்டி, தேவிப்பட்டிணம் கடந்து இரமாநாதபுரம் அடைந்தோம். இப்பொழுது இந்த சாலை நன்றாக இருக்கிறதாம்.
இராமநாதபுரத்தில் தெரிந்தவர் வீட்டிற்கு நாங்கள் சென்றுவிட, நண்பன் ஏர்வாடி பஸ்ஸில், ஏர்வாடிக்கு சற்று முன்னதாக இருக்கும் எங்கள் கல்லூரிக்கு சென்றுவிட்டான்.
அடுத்த நாள், பெற்றோர்களுக்கு ஒரு லைட் ரெப்ரெஷ்மெண்டோட மாணவர்களுக்கு லஞ்ச் மெஸ்ஸில் என்று அறிவிப்பு பலகை ஆங்கிலத்தில் இருந்தது, லஞ்ச் சாப்பிடும் போது புரிந்தது என்ன மாதிரி உணவை உண்ணப்போகிறோம் என்று, எங்கப்பா என்னடா கருமாதில கூட நல்ல சாப்பாடு போடுவாங்களேடா என்று சலித்துக்கொண்டார்.
முதலாண்டு மாணவர்களை பிஸ்தா ஐஸ்கிரிம் சட்டைக்காரன் சொன்னது போலவே கைடு சிஸ்டத்தோட வரிசைல நிக்கவெச்சி, முன்னாடி ஒரு ஆள் பின்னாடி ஒரு ஆள் காவலுக்கு வெச்சி கூட்டிட்டு போனாங்க, பயந்துகொண்டே கிளாஸூக்கு போனோம்.
தண்ணீர்குன்னத்துக்காரனும் என்னோட கிளாஸ்தான், எல்லோர்கிட்டயும் ஊர் பேர் கேட்கும்போது, ஒருத்தன் ஒக்கூர், இன்னொருத்தன் ஏம்பன்னதும் எல்லாரும் கொல்லுனு சிரிச்சாய்ங்க, தண்ணீர்குன்னத்துக்காரன், கூத்தாநல்லூர்னு சொன்னான், நானும் தஞ்சாவூர்னு சொல்லி சிரிப்பொலிலேந்து தப்பிச்சிட்டேன்.
சென்னையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் காலத்தில் ஒருநாள் போன் பண்ணினான், பயோடேட்டா எடுத்து வந்திருக்கேன் கொடுக்கனும்னான், எனக்கு பனியாரம் கொண்டு வந்திருக்கேன் கொடுக்கனும்னு காதுல விழுந்துச்சு.பனியாரம் ஊசிப்போயிருமே அதைப்போய் எதுக்கு எடுத்துட்டு வந்திருக்கான்னு நினைச்சிக்கிட்டே பாக்கப்போனேன், அப்பதான் புரிஞ்சது அவன் சொன்னது பயோடேட்டா பனியாரம் இல்லைன்னு. வட இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பான்னு சுத்திட்டு இப்போ சவுதி அரேபியாவில் ஐடில நல்ல பொறுப்பில் இருக்கிறான்.
பதிவு எழுத மீண்டும் நான் முயற்சி செய்யும் இந்த நேரத்தில் நய்னா அப்படின்னு ஒரு புது பாலோயர் அவனா இருக்குமோன்ன்னு ஒரு டவுட்டு, அதையே வெச்சு ஒரு பதிவு தேத்தியாச்சு.
2 comments:
இந்த நடை நல்லாருக்கு:). இம்புட்டு லொள்ளும் அப்பலருந்தே இருக்கா? எப்புடியெல்லாம் பதிவு தேத்துறாய்ங்கப்பா:))
ரொம்ப நல்லா இருக்குங்க... என்னையும் என்னுடைய முதல் நாளை யோசிக்க வைத்தது.
Post a Comment