தங்கராசன் என்னுடன் ஆறாம் வகுப்பில் ஒன்றாக படிக்க வந்தவன், மார்க் எடுக்கும் படிப்பில் கொஞ்சம் கூட தேறாதவன், ஆனாலும் பெரிதும் பெயில் போடாத அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை தப்பி வந்தவன். ஒன்பதாம் வகுப்பு வரையில் என்னுடன் அவனுக்கு அவ்வளவு பழக்கமும் இல்லை, ஒன்பதாம் வகுப்பில் ஒரே டெஸ்க்கில் உட்கார்ந்தோம், அதன் மூலம் டெஸ்க்மேட் என்ற வகையில் சில நாட்கள் பழக்கம்.
என்னுடைய தந்தை ஆறாம் வகுப்பிற்கு அவ்வப்போது வந்து நீதிபோதனை என்ற வகுப்பில் ஆங்கிலம் நடத்திவிட்டு செல்வார், ஆனால் முதன்முதலாக எனக்கு ஒரு பாட ஆசிரியராக அறிமுகமானது ஒன்பதாம் வகுப்பில்,வரலாற்று ஆசிரியராக.
ஒருநாள் தங்கராசனிடம் எந்த ஊர் என்று கேட்டார், ஊரைச்சொன்னவுடன் கருப்பையன்னு ஒருத்தன் என்கிட்ட படிச்சான் என்று சொல்லிமுடிக்குமுன், அவரின் தம்பிதான் நான் என்றான் தங்கராசன். கருப்பையன் இந்த பள்ளி கண்ட மிகச்சிறந்த மாணவன், வறுமையின் காரணமாக பத்தாம் வகுப்பில் பாதியோடு சென்றவர், அவரின் தம்பியான நீ மக்கு மாணவனாக இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஒழுங்காக படி என்று கூறியதோடு சமீபகால வரலாறு முடித்து பானிபட் போருக்குள் சென்று விட்டார்.
கொஞ்சம் கொஞ்சமாக தங்கராசன் என்னிடம் ஒட்டிப்பழக ஆரம்பித்தான், அவனுக்குள்ளே இருந்த அவன் அண்ணன் கருப்பையன் வெளிப்பட அவனுடைய திறமையும் வெளிப்பட்டது.
பத்தாம் வகுப்பு படிக்கும் போது தங்கராசன் நிறையநாள் எங்கள் வீட்டிலேயே தங்க ஆரம்பித்தான், எனக்கும் அவனுக்கும் நட்பு என்பதில் எங்களையும் மீறி ஒரு வர்க்க இடைவெளி இருந்தது என்பதும் உண்மை, எங்களுக்குள்ளான ஒற்றுமையில் முக்கியமானது தேர்வுக்காக படிப்பது பிடிக்காதது, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் போது கூட தங்கராசன் எங்கிருந்தோ கொண்டு வரும் ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் கதையில் டெக்ஸாஸில் அலெக்ஸ் மாடு மேய்த்த கதையை, பத்தாய சந்தில் படித்தது நினைவு வருகிறது.பத்தாம் வகுப்பில் நான் முதலிடமும் அவன் இரண்டாமிடமும் எடுத்தோம்.
வேறு வேறு பள்ளி சென்றோம் இயல்பான பிரிவு, தங்கராசன் பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு படிக்காமல் பல தவறான செயல்களில் ஈடுபட்டு வறுமையின் பிடியில் சிக்கி, சிறிது காலம் காமராஜரால் கத்துக்கொடுக்கப்படாத குலத்தொழில் தானே கற்று பிழைப்பு நடத்தினான். பின்னர் அவன் ஊரை விட்டு பிழைப்பு தேடி எங்கேயோ சென்றுவிட்டான், நானும் என் குழந்தைகளை அமெரிக்க அதிபாராக்கும் நோக்கில் அமெரிக்கா வந்துவிட்டேன்.
கடந்த ஆண்டு முதல் என் தந்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறான், நானும் சென்ற ஆண்டு ஊர் சென்றபோது அழைப்பு விடுக்க நான் வந்திருப்பது தெரிந்து என்னுடன் தொலை பேசினான், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருப்பதாக கூறினான், கண்டிப்பாக உன்னைப் பார்க்கவேண்டும், நான் தஞ்சை வருகிறேன் என்றான், உன்னுடைய வேலையை விட்டு என்னைப்பார்க்க வராதே என்றேன், சனிக்கிழமை ஓய்வு நாள் வருகிறேன்.
ஒரு சனிக்கிழமை மதிய உணவிற்கு ஒட்டன்சத்திரத்திலிருந்து எனக்காக வந்திருந்தான், நிறைய பேசினோம் என்னுடைய நட்பை எந்த அளவிற்கு நேசித்திருக்கிறான் என்பதை தான் தோன்றியான எனக்கு புரியவைத்தான், இதய நலம் குன்றிய ஒரு பெண்ணை மணந்து ஒரு மகனோடு நிறுத்திக்கொண்டுள்ளான், ஒட்டன்சத்திரம் சந்தையில் கூலி ஆளாக வேலைக்கு சேர்ந்து, எந்தவித சாதிய பின்னணியும் இல்லாமல் இன்றைக்கு ஒட்டன்சத்திரம் சந்தையில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் அளவுக்கு வியாபாரம் செய்யும் மண்டி வைத்திருக்கிறான். செத்துப்போன அண்ணன் கருப்பையனின் குழந்தைகளுக்கும் உதவிக்கொண்டிருக்கிறான்.
என் தந்தையின் பங்கும் என் நட்பின் பங்கும்(?) அவனுடைய முன்னேற்றத்தில் இருப்பதாக உறுதியாக கூறினான், அவன் மனைவியிடம் நண்பன் என்று கூறும் ஒரே நபர் நான் என்ற அளவில் நான் அவனுக்கு நட்பு, எனக்கு தங்கராசன் நினைவில் வந்தாலும் நான் அப்படி அல்ல, எப்போதும் போல தான் தோன்றியே. சமீபத்திய முல்லைப்பெரியாறு பிரச்சினையின் போது இவனுடைய வியாபாரம் பாதிக்கப்பட்டிருக்கும் என்ற ஆதங்கப்பட்டபோது எனக்கும் அவன் மீது நல்ல நட்பு இருப்பது புரிந்தது.மீண்டும் தமிழகம் செல்லும்போது பார்க்கவேண்டிய நண்பன்.
8 comments:
ஆஹா டெல்டா சொன்னா மாதிரி நீர் எழுத்தாளர்தானோ? மிச்சத்த மாந்திட்டு தூங்கி எழுந்து அடுத்த பார்ட் போடும்.
நல்ல பதிவு குகு.. தொடருங்க :))
ஊர் மெய்ச்சவேண்டிய நல்ல நண்பர், நட்பு..
அந்த நாள் ஞாபகம் படிக்க நிறைவாய் இருக்கிறது.
உங்கள் பயண அனுபவங்களின் மூன்று தொடரையும் தொடர்ந்து வாசிப்பதன் நோக்கம் வெளிநாடு சென்ற பின் தமிழகம் குறித்த பார்வை எப்படியாக இருக்கும் என்று அறியும் முதல் ஆர்வமே.
Natpukku oru vanakkam.
யோ... இப்டி உருப்படியா வேற எழுத ஆரம்பிச்சிட்டீரா... வெரி குட்... வெரி குட்... எனக்கும் என்னோட பள்ளிக்காலம் எல்லாம் கவனம் வருது... பரீட்சைக்குப் பதிலா பாலகுமாரன், இந்துமதி படிச்சதும் ஞாபகம் வருது... ஹிஹி...
hi
antha okkur, yembalnnu sonnathu naanthampa
ayya yaarunnu sonna nalla irukkum!!!!!
Post a Comment