Thursday, February 9, 2012

தமிழகப்பயணம் -2 : மாரியம்மன் கோவில்கள்.

தஞ்சைப்பகுதியில் மாரியம்மன் கோவில் பிரபலமானது என்பது அனைவரும் அறிந்ததே, மகனுக்கு முடி எடுக்க தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன், சென்னை ரயில் நிலையத்தில் என்னைத்தேடி வந்து பார்த்து பேசிய பதிவர் அப்துல்லா யதார்த்தமாக கேட்டார், பையனுக்கு குல தெய்வத்துக்கு முடி எடுக்கிறீர்களா என்று, நான் எங்கள் குல தெய்வ வழிபாடு/மொட்டை அதற்கு மொட்டை அடிக்கும் பழக்கமெல்லாம் இப்போது வழக்கில் இல்லை, திராவிடர் கழக சிந்தனைகளில் மறக்கப்பட்டிருக்கலாம் என்றேன்

எங்கள் குல தெய்வத்தின் பெயர் ஆதியத்தம்மன்(ஆதியற்ற அம்மன்), பொதுவாக மாட்டுப்பொங்கல் அன்று பழங்கள் வைத்து இந்த சாமிக்கு வீட்டிலேயே படைப்பார்கள், பெரிதாக யாரும் எடுத்துச்செய்வதில்லை, எங்கள் பங்காளிகள் பலர் தற்போது எடுத்துச்செய்யவேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர், ஆதி என்ற பெயரும் சேர்த்து பெயரிடுகின்றனர்.

புன்னைநல்லூருக்கு பதிலாக கிராமியப்பொருளாதாரம் மற்றும் எங்கள் ஊர் போன்றவை கருத்தில் கொண்டு, எங்கள் பகுதியான பாப்பாபட்டி மாரியம்மன் கோவிலில் முடி இறக்க முடிவு செய்தேன்,குறிப்பிட்ட ஒரு நாளில் மைத்துனர் குடும்பம் சென்னையிலிருந்து வந்திருந்தனர்,பாப்பாபட்டி எங்கள் கிராமத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வானம் பார்த்த பூமி, கல்லணைக்கால்வாயின் வடிகால் உளவாய் என்று பெயர்,அதன் மூலம் கிடைக்கும் உபரி நீரில் அவ்வூரின் சிறுபகுதி பலனடையும். ஒரு காலத்தில் பெரிய சந்தை இருந்த ஊர், இப்பொழுது ஒரு பப்ளிக் ஹெல்த் சென்டர் உள்ளது, மற்றபடி சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் வருமானமில்லாத ஏழைகளை மட்டுமே உள்ளடக்கிய ஊர். இந்த ஊரில் உள்ள கடையில் இரண்டு தோசை ஒரு டீ பத்து ரூபாய்தான், நான்கு கிலோ மீட்டர் தள்ளி உள்ள தஞ்சைப்பகுதி கிராமத்தில் ஒரு தோசை மட்டும் பத்து ரூபாய்.

மொட்டை போட சென்ற அன்று கோவில் பூட்டி இருந்தது, எதிரே இருந்த அய்யர் வீட்டில் சாவி இருக்கும் , அங்கே சென்று கேட்டேன் அய்யர் திருமண நாளுக்காக திருச்சி சென்று விட்டார், அவரையும் குறை கூற முடியாது ஒரு காலத்தில் வருமானம் அதிகம் தந்த கோவில் இன்றைக்கு இந்த கோவிலை நம்பி அவர் ஒன்றும் சம்பாதிக்கமுடியாது, நாட்டார் தெய்வமான மாரியம்மனுக்கு எதற்கு சமஸ்கிரத பூஜை என்ற கேள்வி மீண்டும் எழுந்தது, ஜெமோவின் மாடன் படித்தபின் கொஞ்சம் புரியவும் செய்தது.

அய்யர் வீட்டில் கோவில் சாவி கொடுங்கள் என்றேன், அவர் தந்தையிடம் போன் செய்துவிட்டு, வந்திருப்பது எங்கள் குடும்பம் என்று தெரிந்தவுடன் , அவரது மகளையே திறக்கச்சொல்லி பூஜையும் செய்யச்சொல்லிவிட்டார்.

மொட்டை அடித்து முடிக்கும் வரை அழுது தீர்த்துவிட்டான், மொட்டை முடிந்தவுடன் சாப்பாட்டிற்காக தஞ்சை தேவர்ஸ் பிரியாணிக்கு வந்தோம், ஒரு மணி நேரம் காத்திருக்க சொன்னார்கள், பசி தாங்காது என்பதால் புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு அசைவ உணவகத்தில் சாப்பிட்டோம், காடை, மட்டன் கறி, மீன் வருவல் எல்லாமே சுவை அமிர்தம்.

பின்னொரு நாளில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றோம், நிறைய கூட்டம் , ஸ்பெஷல் வழியில் கூப்பிட்டு செல்கிறோம் என்று பணம் பறிக்க சிலர், சமயபுரத்திலும் அய்யர்களையே காணமுடிந்தது, ஏன் கிராமப்பூசாரிகளை இங்கே அனுமதிக்ககூடாது என்ற கேள்வி மீண்டும் எழுந்தது, சமயபுரம் கோவிலின் வருமானம் கண்டிப்பாக அதிகமாக இருக்கும், அதற்கு ஏற்றார்போல் அதன் வெளிப்புறங்களில் சுகாதாரம் பேணப்படவில்லை.இந்து சமய அறநிலையத்துறை அரசிடம் இல்லாமல் இருந்தால் ஒருவேளை சுத்தமாக இருக்க வாய்ப்பு அதிகம்.

சாமி கும்பிட்டுவிட்டு (என்னுடைய பக்திமேல் எனக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை), கோவில் அருகே ஒரு உணவகத்தில் காலை சாப்பாடு, தமிழகத்தில் இம்முறை இங்கே குடித்த காபிதான் சூப்பர், ஒரு அதிமுக அரசியல்வாதியும் அவருடைய பரிவாரங்களோடு அங்கே சாப்பிட்டார், அவரும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தோம்.

சமயபுரத்தில் இருந்து புன்னைநல்லூர், சுங்கச்சாலையில் வெகு விரைவாக வந்தடைந்தோம், புன்னைநல்லூரில் மாரியம்மன், மற்றும் குழந்தைகளுக்காக ஒரு அம்மனை வணங்கிவிட்டு, மாரியம்மன் கோவில் முறுக்கு கொஞ்சம் வாங்கிக்கொண்டு தஞ்சை வீட்டிற்கு திரும்பினோம்.

டைரி மாதிரி இருக்கிறது....:))))))

7 comments:

sriram said...

ஒரு சிலர் தினத்தந்தி பேப்பரை பப்ளிஷ் பண்றாங்க, நீங்க டைரியை பப்ளிஷ் பண்றீங்க, அவ்வளவுதான் வித்தியாசம்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

நசரேயன் said...

நல்லா இருக்கு ..போகட்டும் ..போகட்டும்

vasu balaji said...

ஆமாம். போகட்டும் போகட்டும்.

Unknown said...

வெரிகுட்

பா.ராஜாராம் said...

நாட்டார் தெய்வமான மாரியம்மனுக்கு எதற்கு சமஸ்கிரத பூஜை என்ற கேள்வி மீண்டும் எழுந்தது, ஜெமோவின் மாடன் படித்தபின் கொஞ்சம் புரியவும் செய்தது

:-))

ராஜ நடராஜன் said...

//அதிமுக அரசியல்வாதியும் அவருடைய பரிவாரங்களோடு அங்கே சாப்பிட்டார், அவரும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தோம். //

இரண்டு பேருமே எதிர்கால கூட்டணியைப் பற்றி நினைச்சிருப்பீங்களோ:)

கோவி.கண்ணன் said...

//டைரி மாதிரி இருக்கிறது....:))))))//

அதெல்லாம் நாங்க சொல்லனும்
:)

//நாட்டார் தெய்வமான மாரியம்மனுக்கு எதற்கு சமஸ்கிரத பூஜை என்ற கேள்வி மீண்டும் எழுந்தது,//

நீங்கள் தவறாக புரிந்துள்ளீர்கள், சாமிக்கு மொழி பேதம் கிடையாது.
:))))))