உங்கப்பந்தான் என் படிப்ப கெடுத்தது...
இடம் : சரவணா மேன்சன், திருவல்லிக்கேணி.
காலையில் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும்போது அறைக்கதவை யாரோ தட்டுகிறார்கள், திறந்து பார்த்தேன் ஊரிலிருந்து அருள் வந்திருந்தான்.அருள் என்னைவிட ஐந்து வயது பெரியவன் ஆனாலும் வாடா போடா என்றுதான் அழைத்துக்கொள்வோம்.
அருள்: என்னடா வாத்தி மவனே, எப்படி இருக்கே, நான் ஒரு வேலையா வந்தேன், எங்கண்ணன் மச்சான் துபாய்லேர்ந்து வந்திருக்கான் அசோக் நகர்ல ஒரு வீடு வருது வாங்கப்போறான், அதுக்கு உதவியா என்ன கூப்பிட்டு வந்திருக்கான்.
நான் : சரி சரி இங்கே தங்கிக்க, நான் ஆபிஸ் போயிட்டு சாயந்தரம் வரேன்.
அருள்: சரி போயிட்டு வா, நாங்களும் வேலையை முடிச்சிட்டு வரோம்.
----
அன்றிரவு:
அருள்: ஊர்லேந்து வந்திருக்கேன், என்னைக்கவனிடா, பணத்தை எடுத்துட்டு வாடா போய் பார்ல ஒரு ரவுண்டு உட்டுட்டு அப்படியே டிபன் பண்ணிட்டு வருவோம்.
நான்: பொறுடா ATM கார்ட எடுத்துக்கிட்டு வரேன்.
அருள் : நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு ATM கார்டு , செக் புக்கு, எனக்கு தெரிஞ்சு உங்க ஊர்ல டவுசர் போடாம திரிஞ்சவன். எல்லாம் நேரம். நானும் உன்னை மாதிரி ஆகிருப்பேன், உங்கப்பந்தான் என் படிப்ப கெடுத்தது.
நான்: எங்கப்பா எங்கடா உன் படிப்ப கெடுத்தாரு?
அருள்: ஆறாவது முனியங்கோயில் மந்தை பள்ளிக்கூடத்திலதான், சேத்தாங்க, நீ அப்ப ஒன்னாவது படிச்சிருப்ப,பள்ளிக்கூடம் ஆரம்பிச்ச முதநாளே உங்கூரு பயலுகளுக்கும் எங்கூரு பயலுகளுக்கும் தகறாறு ஆகிப்போச்சு, புதுசா சாமண்றி பாக்ஸ் வாங்கி கொடுத்திருந்தாங்க, அதுலேந்து காம்பஸ எடுத்து உங்கூரு பயலுவ சைக்கிள் எல்லாம் பஞ்சர் ஆக்கிப்புட்டேன், பத்து பாஞ்சு பேரு சேந்து என்னை மடக்கி முடிச்சி உங்கப்பன்கிட்ட ஒப்படைக்க வெச்சிருந்தாங்க, உங்கப்பன் பேர கேட்டாலே ஏரியாவிலே எல்லாரும் வணக்கம் சொல்வாங்க, மாட்டினா சங்குதான்னு எப்படியோ கழண்டு ஓடிட்டேன். அப்படியே கொண்டு போய் தஞ்சாவூர் ஆண்டனிஸ் ஸ்கூல்ல சேத்துட்டாங்க.
நான்: ஆண்டனிஸ் நல்ல ஸ்கூல்தானடா?
அருள்: அது என்னமோ சரிதான்,அதுனாலதான் அங்க சேத்தா அருள் வரும்னு சேத்தாங்க , ஆனா ஆண்டனிஸுக்கும் அருள் தியேட்டருக்கு ஒரே பஸ் ஸ்டாப் , இந்தப்பக்கம் ஆண்டனீஸ் அந்தப்பக்கம் அருள், ஆண்டனீஸ் போய்தான் அருள் வரனுமா என்னான்னு நான் நேரா அருளுக்கே போயிட்டேன், இரண்டு வருசம் ஆறாவது, ரெண்டு வருசம் ஏழாவது படிச்சேன், போதும்னு அழைச்சிட்டு வந்து முட்டி ஏர் அடிக்க விட்டுட்டாங்க. இதே தஞ்சாவூர் போகாம முனியங்கோயில்லயே படிச்சிருந்தா எப்படியும் பத்தாவது வரைக்குமாவது படிச்சிருப்பேன், மேலேயும் படிச்சிருக்கலாம் . இப்பக்கூட உங்கப்பன பாத்தா சொல்லுவேன் உன்னாலதான் நான் படிக்கலைன்னு அவரும் சிரிச்சிக்குவாரு நானும் சிரிச்சிக்குவேன்.
--------
ஒரு வழியாக ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு திருவல்லிக்கேணி வீதிகளில் நடந்து வந்துகொண்டிருந்தோம், வரும் வழியெல்லாம் தஞ்சாவூர்காரங்கன்னா சும்மாவா அப்படி இப்படி என போதை தலைக்கேறியதால் வேகமாக கத்தியபடி வந்தான். எதிரில் ஒரு போலிஸ்காரர் வந்தார். சட்டென சப்த நாடியும் ஒடுங்கி நடந்து வந்தான்.
நான்: ஏண்டா பெரிசா பேசுன, போலிஸ பாத்தவுடன் வடிவேலு கணக்கா ஒதுங்கிட்ட..
அருள்: போலிஸ்காரங்ககிட்ட மட்டும் வாலாட்டப்புடாது, முதல்ல எப்படியும் லத்தி எடுத்து முட்டிக்கு முட்டி தட்டிருவான், அதுக்கப்புறம்தான், நம்ம பவரை காமிச்சி நம்மூரு காரங்கள கூப்பிட்டு வெளிய வந்திரலாம், ஆனா அடி வாங்கினது வாங்கினதுதானே, அதான் ஒதுங்கிப்போயிரனும். அதுவும் இன்னைக்கு அந்த வீடு முடிச்சு கொடுத்ததுக்கு ஒரு லட்சம் கமிசன் கெடச்சது அது வேற பாக்கெட்ல இருக்கு.
நான் : ஒரு லட்சம் காசு வெச்சிக்கிட்டு என் காசுல சரக்கு வாங்கி குடிச்சிட்டு வர, நியாயமா பாத்தா நீதானடா செலவழிக்கனும் ?
அருள் : அதுனால நான் பிஸினஸ் பண்றேன், நீ இன்னும் உங்கப்பன மாதிரி கை நீட்டி சம்பளம் வாங்கிட்டு இருக்க, அதுக்கெல்லாம் ஒரு சூட்சுமம் தெரியனும்டா? நீ எதுவும் இடம் வாங்கிறதுன்னா சொல்லு கமிசன் இல்லாம முடிச்சு தரேன்.
11 comments:
//இந்தப்பக்கம் ஆண்டனீஸ் அந்தப்பக்கம் அருள், ஆண்டனீஸ் போய்தான் அருள் வரனுமா என்னான்னு நான் நேரா அருளுக்கே போயிட்டேன்//
பழைய கல்லூரி, பள்ளிகளுக்கு பக்கத்தில் பல இடங்களில் இந்த மாதிரி அமைந்திருக்கிறது தல.,
// அதுனால நான் பிஸினஸ் பண்றேன், நீ இன்னும் உங்கப்பன மாதிரி கை நீட்டி சம்பளம் வாங்கிட்டு இருக்க, அதுக்கெல்லாம் ஒரு சூட்சுமம் தெரியனும்டா? ...//
ஆஹா..
இப்படி எல்லாம் வேற நடக்குதா..
நல்ல ஆளுங்கப்பா..
அண்ணே, அட்ச்சி ஆடுங்க!
இதை தானே எதிர் பார்த்தேன்
அருமையா எழுதியிருக்கீங்க நண்பா.
ஹிஹி...இது நல்ல பிசினஸா இருக்கே...!! :))
இது சத்தியமான உண்மை 75%படித்தவன் அடுத்தவனிடம் தான் சம்பளம் வாங்கவேண்டுன் படிக்காதவன் ஆடு மாடு மேய்தாலும் சொந்தமானதாக இருக்கும்!
//.. அதுக்கெல்லாம் ஒரு சூட்சுமம் தெரியனும்டா? ..//
இப்படி ஒரு சூட்சமம் இருக்கா??
//உங்கப்பந்தான் என் படிப்ப கெடுத்தது... //
தலைப்பே ரொம்ப நல்லா இருக்கே.....
//நான் : ஒரு லட்சம் காசு வெச்சிக்கிட்டு என் காசுல சரக்கு வாங்கி குடிச்சிட்டு வர, நியாயமா பாத்தா நீதானடா செலவழிக்கனும் ?
அருள் : அதுனால நான் பிஸினஸ் பண்றேன், நீ இன்னும் உங்கப்பன மாதிரி கை நீட்டி சம்பளம் வாங்கிட்டு இருக்க//
சரியான நெத்தியடி.... இதேமாதிரி நெறைய இடங்களில் நான் வங்கி கட்டினதுண்டு.... அப்பாட என்ன மாதிரியே இன்னொரு இளிச்ச வாயன் (நம்ம குடுகுடுப்பை அண்ணாச்சி) இருக்காரு .... கேக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு...
//ஒரு வழியாக ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு திருவல்லிக்கேணி வீதிகளில் நடந்து வந்துகொண்டிருந்தோம், வரும் வழியெல்லாம் தஞ்சாவூர்காரங்கன்னா சும்மாவா அப்படி இப்படி என போதை தலைக்கேறியதால் வேகமாக கத்தியபடி வந்தான். எதிரில் ஒரு போலிஸ்காரர் வந்தார். சட்டென சப்த நாடியும் ஒடுங்கி நடந்து வந்தான்.//
தஞ்சாவூரு வீரம் இம்புட்டு தானா.... எங்க ஊருல எல்லாம் எங்கள பாத்தா போலீஸ்காரன் பயந்து ஓடிருவான். இல்லன்ன அவங்க துப்பாக்கிய புடுங்கி அவங்களையே சுட்டுபுடுவோம்ல.......சாமான் (அருவா கத்தி) இல்லாம நடமாடமாட்டம்ல வெளில....
Post a Comment