Wednesday, November 18, 2009

தொவையல் : சமையல் மருத்துவமனை, பச்சைப்பயிறு அடை.

தொவையல் 1: சமீப காலமாக வேலைப்பளுவால் அதிகம் பதிவெழுத முடிவதில்லை, அதனால் கு.ஜ.மு.க வின் கொள்கைகளின் மிக முக்கியமானதும், கட்சியின் அடிப்படை உரிமையுமான வாரிசுப்பெருமை பேசமுடியவில்லை. கடந்த சில மாதங்களாக வாரிசும் கு.ஜ.மு.கவிற்கு உழைக்கும் நோக்கத்தில் ஒரு அட்டைப்பெட்டி மேல் ஏறி கீழே விழுந்து இடது கையை ஒடித்துக்கொண்டார். அழுதுகொண்டே வந்தார், ஏதோ சாதாரண அடி என நினைத்தால் வலியால் மிகவும் துடித்துப்போனார். முழங்கைப்பகுதியில் வீங்கியும் போனது, அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் பொதுக்குழு கூடி முடிவெடுத்து, பொதுக்குழு பரிந்துரைத்தபடி அருகில் உள்ள குழந்தைகள் மருத்துமனைக்கு அழைத்து சென்றேன். அந்த மருத்துவமனையின் பெயர் Cook Childeren's Hospital. அதைப்பார்த்து என் மகள் கேட்டது அப்பா மருத்துவமனை எப்படிப்பா சமைக்கும். It is a funny name அப்படின்னாள். ஒரு வழியாக x-ray எடுத்து எலும்பு முறிவு கண்டுபிடித்து கட்டுபோட்டு , ஆறு வாரம் கழித்து பிரித்தாகிவிட்டது, இன்னும் மூன்று நான்கு வாரங்களில் கையின் முழுமையான இயக்கம் கிடைத்துவிடும் என்று கூறியிருக்கிறார்கள்.

பெல்ட் லைன் ரோடு என்ற பெயர் உள்ள சாலையில் காரில் சென்று கொண்டிருந்தோம், அப்போது கேட்டது

ஏம்பா பெல்ட் லைன் ரோட்ல கார்ல போகும் போது கண்டிப்பா பெல்ட் போட்டு இருக்கனுமா? அதுனாலதான் பெல்ட்லைன் ரோடுன்னு பேரு வெச்சாங்களா?

இல்லம்மா எந்த ரோட்டிலும் காரில் போகும் போது பெல்ட் போடனும்.

அப்ப ஏன் இந்த ரோட்டிற்கு மட்டும் பெல்ட் லைன் ரோடுன்னு பேரு வெச்சிருக்காங்க?

???அது டாலஸ சுத்தி பெல்ட் மாதிரி போறதினால அப்படி வெச்சிருக்காங்க.

அப்பா உங்களுக்கு மியூசிக்ல தாளம்னா என்ன தெரியுமா? ச,ரி,க,ம,த பாஆஆஆஆஆ , தாளம் (நோட்ஸல ஏதோ கமா வந்தா)வந்தா பாஆஆஆஆ அப்படின்னு சொல்லனும், (சரியா எனக்கு புரியலை, அதுனால தவறா கூட எழுதிருக்கலாம்)நீங்க மியூசிக் கிளாஸ் போகும்போது சொல்லிக்கொடுத்தாங்களா?

நான் மியூசிக் கிளாஸ் எல்லாம் போகலை? எனக்கு பாட்டெல்லாம் தெரியாது?

அப்புறம் எப்படிப்பா நீங்க வீட்ல தெலுகு பாட்டு பாடறீங்க? ஒரு தெலுகுப்பாட்டு பாடுங்க

ராஜாலூ கைலூ வெச்சுலூ, சத்யமு
ராங்குடு போனுடு,
பணமு எண்டுலு ஸ்டாக்கூ எண்டுலு
எல்லாம் என்னுலூ.
இன்வெஸ்டருக்கு துண்டுலு.

தொவையல் 2:

இயக்குனர் பதிவர் ஷண்முகப்பிரியன் அவர்களின் ஒரு பதிவில் பச்சைப்பயிறு அடை சொல்லியிருந்தார், அடை செய்ய பச்சைப்பயிறு ஆறு மாதம் முன்னரே வாங்கியாச்சு, இப்போதுதான் அடை செய்ய நேரம் கிடைத்தது.

1. பாசிப்பயிறு ஊறவைத்து முளைகட்டும் வரை வெளியில் வைத்திருக்கவேண்டும்.

முதல் நாள் செய்முறை:

முளைகட்டிய பாசிப்பயிரை மிக்ஸியில் சிறிது, சோம்பு, மிளகு, உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, சிறிதாக வெட்டிய அரை பெரிய வெங்காயம் மற்றும் வெங்காயத்தைவிட இரு மடங்கு, வெங்காயம் போலவே வெட்டப்பட்ட முட்டைகோஸ், அரைத்த மாவுடன் சேர்க்கவும். தோசைக்கல்லை நன்கு சூடு செய்தபின் அடைய ஊற்றி, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு வேகவத்து சாப்பிடவும்.

சுவை: ஷண்முகப்பிரியன் சொன்னது போல் ஆம்லெட் மாதிரி இருந்தது.

இரண்டாம் நாள் செய்முறை:(முட்டைகோஸ் வீட்டில் இல்லை, ஆனால் பிராக்களி, ஸ்பினாச்சும் இருந்தார்கள்)

முளைகட்டிய பாசிப்பயிரை மிக்ஸியில் சிறிது, பிராக்களி, ஸ்பினாச் கீரை,சோம்பு, மிளகு, உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, சிறிதாக வெட்டிய அரை பெரிய வெங்காயம் அரைத்த மாவுடன் சேர்க்கவும். தோசைக்கல்லை நன்கு சூடு செய்தபின் அடைய ஊற்றி, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு வேகவத்து சாப்பிடவும்.

சுவை: சற்றே வழவழப்புடன் இருந்தது, எனக்குபிடித்தது, ஆனால் வீட்டிற்கு இரண்டு நண்பர்கள் வந்தார்கள், சாப்பிடச்சொன்னேன், இனி அடை செய்தால் முன்னமே சொல்லிவிடுங்கள் நாங்கள் அடை செய்யாத பிரிதொரு நாளில் வருகிறோம் என்றார்கள்.

மூன்றாம் நாள் செய்முறை:(மீண்டும் முட்டைகோஸ், கூடுதலாக கொள்ளு, சீரகம் )

பாசிப்பயிருடன் கொள்ளும் கலந்து ஒரு நாள் முழுவதும் ஊறவைக்கவும்.

முளைகட்டிய பாசிப்பயிரை மிக்ஸியில் சிறிது, சீரகம்,சோம்பு, மிளகு, உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, சிறிதாக வெட்டிய அரை பெரிய வெங்காயம் மற்றும் வெங்காயத்தைவிட இரு மடங்கு, வெங்காயம் போலவே வெட்டப்பட்ட முட்டைகோஸ், அரைத்த மாவுடன் சேர்க்கவும். தோசைக்கல்லை நன்கு சூடு செய்தபின் அடைய ஊற்றி, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு வேகவத்து சாப்பிடவும்.

சுவை: வீட்டில் அனைத்து உறுப்பினர்களும் சாப்பிட்டார்கள்:)

உங்கள் விருப்பத்திற்ப உண்ண முடிந்த எதையும் சேர்த்து அரைக்கலாம், கடைசியில் வேகவைத்து உண்ணலாம். இதுதான் அடை ரெசிப்பீ

மேலே சொல்லப்பட்ட அடைகளின் மருத்துவ பலன்கள் எல்லாம் எனக்குத்தெரியாது, ஆனா தூள் படத்துல நடிச்ச பாட்டியின் கிராமத்து சமையலில் அரை லிட்டர் நல்லெண்ணெய், நெய் எல்லாம் சேத்து நல்லா கொழுப்போட உள்ள ஆட்டுகறிய சமைச்சுப்புட்டு மேலுக்கு நல்லதுன்னு சொல்ற மாதிரி இதுவும் மேலுக்கு நல்லது.

சிலருக்கு அடை என்ற பெயர் ரொம்பப்பழசா இருக்கிறதால பிடிக்காம போகலாம், அதனால் அவங்க இத சிறிது மாற்றத்தோட பீட்சா மாதிரி மாடர்னா செஞ்சும் சாப்பிடலாம்.

இதுவரை சேர்த்தவைகளோடு, பாசிப்பயியிறு பிரட் மேலே ஒரு கரண்டி சீஸ் போடவும், ரெட் சாஸ் அப்படின்னு டப்பாவில விக்கிறத வாங்கி ஒரு லேயர் ஊத்தவும், அதற்கு மேல் பெப்பரோனியோ, ரெட் மீட்டோ இல்லை சிக்கனோ, காய்கறிகளோ போட்டுக்கலாம்.
இதுக்கு நீங்க பச்சாஸ்ஸா(பச்சைப்பயிறுன்னு சொல்றவங்க) அல்லது பாசிஸ்ஸா(பாசிப்பயிறுன்னு சொல்றவங்க) என்று மாடர்னாக பெயர் வைத்தும் சாப்பிடலாம்.

சீஸ் போடவும் சாஸ் போடவும் மீட் போடவும் ஆகியன தொப்பை போடவும் உதவும்.

8 comments:

Anonymous said...

வாரிசுப்பெருமை, சமையல்னு பல்கலைவித்தர் ஆகிட்டு வர்றீங்க.
பல்கலைவித்தர் குடுகுடுப்பை வாழ்க.

நசரேயன் said...

வழக்கம் போல அடை நீங்க செஞ்ச மாதிரி தெரியுது

சந்தனமுல்லை said...

வாரிசு விரைவில் பாடல்கள் எழுத வாழ்த்துகள்!!

ஆனாலும் உங்க தெலுங்கு...எனக்கே புரியுதுங்க!! :))))

சந்தனமுல்லை said...

நசரேயன் கமெண்ட்ல கூட விட்டு வைக்க மாட்டேங்கறாரே...!! :))) நசரேயன்..வொய் ப்ளட்?சேம் ப்ளட்!! :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))

பித்தனின் வாக்கு said...

எங்களின் வருங்கால முதல்வருக்கு இந்த இடுகைக்காக டாக்டர் பட்டம், கட்சி விதிகளின் படி அவரே கொடுத்து அவரே வாங்கிக் கொள்வார் என நமது கட்சி கண்மணிகளுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி. தெலுங்குப் பாட்டு சூப்பர்.

RAMYA said...

இடுகை பூரா லொள்ளு தூள் பறக்குது.

இப்படி எல்லாம் கூட பதிவு எழுத முடியுமா :)

சமையலைச் சொல்லியே இடுகையை ஒப்பேத்திடீங்க போல :)

உங்க பொண்ணு ரொம்ப உஷாரு நல்ல கேள்வியா பார்த்து அப்பாவை கேட்டிருக்காங்க!

பதில் கூட சுவாரசியம் குறையாமல் சொல்லி இருக்கீங்க.

RAMYA said...

//
ராஜாலூ கைலூ வெச்சுலூ, சத்யமு
ராங்குடு போனுடு,
பணமு எண்டுலு ஸ்டாக்கூ எண்டுலு
எல்லாம் என்னுலூ.
இன்வெஸ்டருக்கு துண்டுலு.
//

அது சரி! இது தெலுங்கு பாட்டு?

ம்ம்ம் எப்படியோ வண்டி ஓடுது :))

பாவம் உங்க பொண்ணு, இதை நம்பிச்சா?