Sunday, January 30, 2011

உன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா?






பிகு: பதிவு பிரியாமணியின் சட்டையை வைத்து உருவானது.

Sunday, January 9, 2011

கால்வின் கிளெயின் சட்டையும், கால்சட்டையும்.

அமெரிக்கா வந்து இன்னும் இரண்டு வருடத்துல ஒரு மாமாங்கம் ஆகப்போகுது, ஆரம்ப காலத்தில் நான் வேலை பார்த்த இடங்கள் பெரும்பாண்மை தகவல் தொடர்பு ஆராய்ச்சி நிறுவணங்களே, அங்கேயெல்லாம் டிரெஸ் கோடு ஒரு டி ஷர்டும், ரொம்பக்கிழியாம இருக்கிற ஜீன்ஸுந்தான், அதுனால ஃபார்மல் சட்டை எடுக்கிற வேலையே இல்லை, சென்னையில இருக்கும் போது ஒரு வெண்ணெய் 900 ரூபாய்க்கு ஒரு லூயி பிலிப் சட்டை இனாமாத்தந்தான் இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணும்போது போடறதுக்காக, அதுதான் இன்னைய வரைக்கும் இண்டர்வியூ/ கிளையண்டுகளை பார்க்கப்போறதுக்கு போடறதுக்கு வெச்சிருக்கேன்.

தகவல் தொடர்பு ஆராய்ச்சி விட்டு, மருந்துக்கடைல பில்லு போடற சாப்ட்வேர் கட்டமைக்கவும் வந்தாச்சு, இங்கயும் கிழியாத ஜீன்ஸூம், பனியனும்
போதும் நீங்க கிழிக்கிற கிழிக்குன்னு சொல்லிட்டாங்க, நானும் அப்படியேத்தான் இருந்தேன், இடையிலே தமிழ் வலைப்பதிவுகள் சகவாசம் என்னோட உடன்பிறப்பு மூலமாக கிடைத்து, பெரிய எழுத்தாளராகவும் ஆகியாச்சு, என்னதான் பச்சை நோட்டுல சம்பளம் வாங்கினாலும், திங்கிறதுக்கு செலவு பண்ற அளவுக்கு நான் உடைக்கு பண்றதில்லை ஆனா பாருங்க எழுத்தாளனா மாறின பிறகு எனக்கு அந்த ஆசை வந்திருச்சு. இந்தவாரம் அதுக்கு நேரம் கூடி வந்துச்சு, எப்பவும் கூடவே வருகிற என் மனைவி, நான் வர இரண்டு
மணி நேரம் ஆகும் நீங்க மேசிஸ்ல அதுவரைக்கும் ஷாப்பிங் பண்ணுங்க, அந்த எலெக்ட்ரிக் தோசைக்கல்லு, கரண்டு விளக்குமாறு எல்லாம் பாத்து வைங்கன்னாங்க.
தனியா ஷாப்பிங் பண்ண வாய்ப்பு கிடைச்ச இந்த நேரத்துல கடைக்குள்ள நுழைஞ்ச உடன், கால்வின் கிளெயின் சட்டை கண்ணுல பட்டுச்சு, படார்னு எங்கியோ தமிழ் எழுத்துலகுல இந்தப்பேர பாத்த ஞாபகம் வந்தது, உடனே நானும் எடுத்திட்டேன், ஒரிஜினல் விலை $79.99. தள்ளுபடியெல்லாம் போக $34.99 விற்பனை வரி உட்பட, வாங்கிட்டேன்.

இப்பக்கூட ஒரு இணைய எழுத்தாளனா என் மேல எனக்கே கோபம் வந்தது, நம்மோட எழுத்த படிக்கிற யாரும் இந்த மாதிரி வரி கட்டறதில்லை, அப்புறம்தான் தோனுச்சு இலவசமா அதுவும் தெரியாத்தனமா படிக்கிறதுக்கெல்லாம் வரி எப்படி கட்ட முடியும்னு.

சட்டைய மடிச்சு மேஸில் கொடுத்த பிளாஸ்டிக் பையில வெச்சிக்கிட்டேன், திடீர்னு ஒரு சமூக ஆர்வலான ஏகாதிபத்தியத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பையை புறக்கணிக்கலாமான்னு தோனிச்சு, ஆனா பாருங்க பக்கத்து வீட்டு ரவி கொடுத்த வாத்துக்க்குழம்பு ரொம்ப நல்லா இருந்தது, அதுனால ராத்திரிக்கும் வைச்சிக்கலாமின்னு மிச்சம் வெச்சது சட்டைல கொட்டிருச்சுன்னா சட்டை வீனாப்போயிரும்னு பொது உடமை நாட்டுல உருவான அந்த பிளாஸ்டிக் பையிலேயே வெச்சுக்கிட்டேன்.

இந்த நேரத்துல ரவி வீட்டு வாத்துக்குழம்பு நல்லா இருக்குன்னு சொல்லச்சொல்லி எங்கம்மாகிட்ட போன் பண்ணி அவருகிட்ட சொல்லச்சொன்னது ஞாபகம் வருது. ரவி எனக்கு போன் ஏன் வாத்துக்குழம்பு நல்லா இல்லையான்னு கேக்கிறார், எங்கம்மா தமிழ்ல சொன்னது, தெலுங்கருக்கு புரியல இந்த மாதிரி கம்யூனிகேசன் கேப்பையாவது ஒத்துக்கலாம், பல எழுத்தாளர்கள் தமிழ்ல எழுதறது பல தமிழர்களுக்கு புரியுறதில்லை.

கடைய விட்டு வெளில வராலாமின்னு கிளம்பினேன், வழியில கால்வின் கிளெயின் ஜட்டி வேற இருந்தது, பச்சை நோட்டுல சம்பாதிச்சாலும், தமிழ்நாட்லேந்து ஜோக்கி ஜட்டி வாங்கி போட்டு பழகிட்டதால,கால்வின் கிளெயின் ஜட்டி பேரையே நான் கேள்விப்பட்டதில்லை,என்னடா கஞ்சப்பிசினாறின்னு நினைக்காதீங்க, என்னைவிட பல மடங்கு
சம்பாதிக்கிற என் நண்பர் ஒருத்தன் கிலோ நூறு ரூபாய்க்கு மதுரை நாடா ஜட்டிதான் போடுறான். சரி எழுத்தாளரா ஆயாச்சு, இனி ஜோக்கி வேணாம் கால்வின் கிளெயின் வாங்குவோம்னு போனா அந்த ஜட்டியெல்லாம் சேல்ல போட்டிருக்கான், ஒரு ஜட்டி இரண்டு டாலர்தான், அப்படிங்கிறான், குறைந்தபட்சம் ஆயிரத்து முன்னூறு ரூபாய் அதாவது $25க்குதான் எனக்கு ஜட்டி
வேணும் அப்படின்னேன், இப்ப இந்த ஜட்டிய அவ்வளவுக்கு நாங்க விக்க முடியாது சேல் இல்லாதன்னிக்கு வந்து வாங்கிக்க சொல்லிட்டான். நானும் சரின்னு சொல்லிட்டி வந்துட்டேன்.

கடையிலிருந்து வெளிய வரதுக்குள்ள பயங்கர கூட்டம், நீங்கதான் குகுவான்னு அப்படின்னு கேட்டாங்க, ஆட்டோகிராப் வேனும்னாங்க, உடனே $25க்கு ஒரு பேனாவை வாங்கினேன் அப்புறந்தான் ஞாபகம் வந்தது எனக்கு கையெழுத்து போடத்தெரியாதுங்கிற விசயமே, பேனாவை ரிட்டன் பண்ணிட்டு கைநாட்டு போட இங்க் பேடு இருக்கான்னு கேட்டேன், அதெல்லாம் இங்க இல்லை வேணும்னா டாலர் ஷாப்பில கேட்டுப்பாருங்கன்னாங்க, ஒரு எழுத்தாளன் கைநாட்டு வைக்க தரமான இங்க் பேடு கிடைக்கல, டாலர் ஷாப்பில வாங்கின இங்க் பேடு கைநாட்டு வெச்சா கை வெந்துப்போயிருமோன்னு ஒரு பக்கம் பயமா இருக்கு. மனைவிகிட்டேயிருந்து போன் வந்தது, மின்சார தோசைக்கல்லு பார்க்காத பயமும் வந்தது.

Wednesday, January 5, 2011

வரலாறு திரும்புகிறது.

ஆகஸ்ட் 11 ,3009.

ஆகஸ்ட் பத்தாம் தேதியன்று திண்ணியத்தில் உயர்சாதிக்காரர் வீட்டிலும் வயல்களிலும் வேலைப்பார்த்துக்கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட சாதியினரான மூர்த்தி தேவர், குரு ஐயங்கார், ஷண்முக நாயக்கர் ஆகியோர், உயர்சாதிப்பண்ணையார் முருகப் பறையனார் வீட்டில் உள்ள கோவிலின் உள்ளே சென்று சாமி கும்பிட்டதற்காக முருகப்பறையானாரும் அவரது மனைவி சசிரேகா பறைச்சியாரும் , கீழ்சாதி தேவப்பயலுக்கும் பாப்பாரப்பயலுகளுக்கு என்னடா திமிரு, நாயக்கப்பயலும் இவனுங்க கூட சேர்ந்து கொட்டமடிக்கிறீர்களா என்ன தைரியம் இருந்தா கோவிலுக்குள்ள நுழைவீங்க என்று கூறியவாரே வாயில் மலத்தை கரைத்து ஊற்றி முப்பத்தொண்றாம் நூற்றாண்டில் மிகப்பெரிய சாதி வன்கொடுமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த செய்தியை அறிந்த உலக நாட்டுத்தலைவர்கள் தங்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து இந்தியா உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

சவூதி அரேபியா பிரதமர் ஸ்வாதி நாயர் வழிபாடு அனைவருக்கும் பொதுவானது , அனைத்து மதத்தினருக்கும் வழிபாட்டு உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்றார்.அந்நாட்டுச்சட்டம் தனிமனித வழிபாட்டு உரிமையை உறுதி செய்வதை சுட்டிக்காட்டினார். சவூதி அரேபியாவில் கடந்த 50 வருடமாக இஸ்லாமிய மத வழிபாட்டுத்தளங்கள் தவிர மற்ற மத வழிபாட்டுத்தளங்களை வெடி வைத்து தகர்ப்போம் என்று கூறிய தீவிரவாதக் குழுவை இரும்புக்கரம் கொண்டு தான் அடக்கியதை, துபாய் பிரதமர் குட்டி முகமது பாராட்டியதை நினைவு கூர்ந்தார்.இவர் சவுதி அரேபியாவில் ஆண்களுக்கு ஓட்டுரிமையும் , ஓட்டுனர் உரிமையும் வழங்கி புரட்சி ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெர்சிய பிரதமர் சொராஸ்டிர் அகமதுவும்,குர்து பிரதமர் முகமது சேக்கும் தங்களது கணடனத்தை தெரிவித்தனர்.

பாலஸ்தீன பிரதமரும், இஸ்ரேலியப் பிரதமரும் ஜெருசலத்திலிருந்து விட்ட கூட்டறிக்கையில் இம்மாதிரி நிகழ்வுகள் களையப்பட்டு எங்களைப்போல ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றனர்.

மனித உரிமை எங்கெல்லாம் மீறப்படுகிறதோ அங்கெல்லாம் எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும் என சீன ஜனநாயக கூட்டமைப்பின் தலைவர் தியானென்மென் சதுக்கத்தில் இருந்தபடியே இச்செயலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார்.

இலங்கை பிரதமர் சிவத்தமிழ்நம்பி வழிபாட்டு உரிமைகள் சாதியின் பேரில் தடுக்கப்படுவதை கடுமையாக கண்டித்ததோடல்லாமல், இலங்கையில் இந்து மதத்தில் சாதிப்பாகுபாடே இல்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

ஆப்கானிஸ்தான் அதிபர் சந்திரகுப்த மவுரியர், எங்களின் ஆதித்தாயகமான இந்தியாவில் இவ்வாறு நடப்பது வருத்தமளிக்கிறது என்றார். இவர் புத்த மதத்தை சேர்ந்த தீவிரவாதிகளால் உடைக்கப்பட்ட மசூதிகள் அனைத்தையும் மீளக்கட்டிந்தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் குடுகுடுப்பை இந்த நிகழ்வு கண்டிக்கப்படவேண்டிய ஒன்று, எனது மூதாதையர்கள் வாழ்ந்த ஊரில் இப்படி நடப்பது வருத்தமளிப்பதால் தான் தலையிட்டு பிரச்சினையை தீர்க்க விரும்புவதாக கூறினார். கி.பி 2700 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழர்களுக்கு நிகராக சிங்களர்களுக்கும் உரிமையை தன் எள்ளுத்தாத்தா அதிபர் குடுகுடுப்பை வாங்கிந்தந்ததையும், கி.பி 2500 ல் பாலஸ்தீன இஸ்ரேல் பிரச்சினையை தன் எள்ளெள்ளுத்தாத்தா அதிபர் குடுகுடுப்பை தீர்த்துவைத்ததையும் நினைவு கூர்ந்தார்.

இந்தியப்பிரதமர் ஸ்டீபன் காந்தி இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது, பிரச்சினையை நாங்களே தீர்த்துக்கொள்கிறோம் என்று தள்ளாத வயதிலும் உறுதிபடக்கூறினார்.

கடைசி நேரத்தகவலின்படி கருப்புசாமி தேவர், மற்றும் கபாலி ஐயர் தலைமையில் இந்தியா முழுவதும் உள்ள கோவில்களில் கருவறை நுழைவு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.இவ்வளவு கோவில்களில் பிரச்சினை இருக்கும்போது பாஜக தலைவர் விநாயகம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்பது வியப்பளிப்பதாக கூறினர்.

Monday, January 3, 2011

மனம்போன போக்கில் மாடு போன போக்கில்

மனம் போன போக்கில் வீட்டின் கொள்ளைப்புறத்திலிருந்து நடந்து கொண்டிருந்தேன், தூரத்திலிருந்து உத்திராபதியின் குரல் கேட்டது.

"மாப்பிளை உங்க மாடு எங்க வீட்டு தொட்டிய மொட்டை அடிக்குது, பிடிச்சிக்கட்டுங்க"


உத்திராபதிக்கு நான் பங்காளி அதனால் என் வீட்டு மாடு அல்ல என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன், அப்படியே சித்தன் கடையில் டீ குடிக்கும் எண்ணத்தோடு மேலும் நடந்தேன்.

"மாப்பிளை தமிழ்ல தானே சொல்றேன் மாட்ட புடிச்சு கட்டுங்க"

இதுவரை அமைதியாக இருந்த வாத்தியார் சங்கரன் வாயைத்திறந்தார்.

"பரவாயில்லை மாப்பிளை நீங்க இங்கிலிசுலேயே சொல்லுங்க அப்புறமா புடிச்சி கட்டுறேன்"

"இந்த எடக்கு மயிருக்கெல்லாம் கொறச்ச இல்ல மாட்டைப் புடிச்சி கட்டலைன்னா, நான் புடிச்சி கட்டி ரெண்டு நாளைக்கு தீனி போடமாட்டேன்"
உத்திராபதி இப்போது என்னைக் கை காட்டி கூப்பிட்டான்.

"டேய் நீதான் இன்ஜினியருக்கு படிச்சிருக்க, இந்த சின்னப்பள்ளிக்கூடத்தான், என்னை இங்கிலீசுல மாடு புடிச்சி கட்டச்சொல்றான், நீ கொஞ்சம் இங்கிலிசுலே மாடு கட்டச் சொல்லி சொல்லுடா"

"இல்ல உத்திராபதி, நான் படிச்சது இன்ஜினியரிங் இங்கிலீசு அதுல மாடு புடிச்சி கட்டுறதுக்கெல்லாம் சொல்லித்தரலை"

"சரி ஏதோ படிச்சத சொல்லு , மாப்பிளை என்ன பண்ணுறார்னு பார்ப்போம்"

"டியர் மாப்பிள், யுவர் மொட்டைமாட் ஜம்புடு தி வேலி அன்ட் ஈட்டிங் தி பருத்திகொட் இன் உத்திரன்ஸ் வாட்டர் டேங், பிளீஸ் யூ கட் தி மொட்டமாட் இன் தி மொள ஸ்டிக்"

"மாப்பிளை நீங்க சொன்னது மாதிரியே என் பங்காளி இங்கிலீசுல சொல்லிட்டான் இப்பயாச்சும் கட்டுங்க"

"அவன் என் மொட்டமாடி தண்ணித்தொட்டி வேலி தாண்டி ஊத்தி வேஸ்டாப்போகுது, ஸ்டிக் வைச்சு அடைக்கச்சொல்றான், ஆனாலும் இன் ஜினியர்னா இன் ஜினியர்தான்"

"இல்ல சார் நான் மொட்டை மாட்டைத்தான் கட்டச்சொன்னேன்"

"என்ன இன் ஜினியரே , மோழ மாட்ட மொட்டை மாடின்னு சொல்றீங்க, என்னத்த படிச்சியளோ போங்க, உங்கப்பாரு காசு உன் படிப்பு என்னமோ போங்க, நீங்க படிச்சிப்புட்டு மாடியும் கட்டவேண்டாம் , மாடும் கட்டவேண்டும் கக்கூஸாவாது கட்டப்பாருங்க"

"காலைல டீக்குடிக்கலாமின்னு இந்தப்பக்கம் வந்ததுக்கு எனக்கு வேணும்"
இப்படியாக வெட்டிப்பேச்சு ஓட்க்கொண்டிருக்கையில் கொண்டியாரகள்ளி, சத்தம் போட்டுக்கொண்டு வரவும் சரியாக இருந்தது.

"ஏன்டா வாத்திப்பயலே மோழ மாட்டை அவுத்து விட்டு என் பயித்தை மொட்டையடிக்கலாமின்னா இருக்க, மாட்டை அவுத்து விட்டுப்புட்டு இங்க என்னடா பேச்சு வேண்டிக்கெடக்கு, இன்னொரு வாட்டி மாடு அந்தப்பக்கம் மாடு வந்திச்சு,பள்ளிக்கூடத்து வேலில ஆடு மேஞ்சா ஆட்டுக் காத அறுப்பியாமே நீ, நான் உன் காதை அறுத்துப்புடுவேன் பாத்துக்க"

Tuesday, December 14, 2010

ஜிம் அனுபவம்.

கடந்த சில வாரங்களாக என் மனைவி ஜிம்மில் சேரப்போகிறேன் நல்ல ஜிம் எதுன்னு சொல்லுங்க அப்படின்னு ஒரே குடைச்சல். அடிக்கடி வீட்டுக்கு வர விளம்பரத்தில விலை குறைந்த மாதக்கட்டணம் உள்ளதுதான் நல்ல ஜிம்முன்னு சொல்லிடலாம்கிற முடிவோட இருந்தேன். என்னுடைய நல்ல நேரம் $ 1 க்கு ஜாயின் பண்ணலாமின்னு ஒருத்தன் விளம்பரம் கொடுத்திருந்தான்.

வீட்டுக்கு வந்திருந்த கூப்பனை எடுத்துக்கொண்டு குடும்ப சகிதம் அங்கே சென்றோம், சரியான அளவுகளில் இருந்த இளம்பெண் ஒருவர் வரவேற்றார், மற்றொருவர் கேள்விகளை வீசத்தொடங்கினார்.

முதலில் என்னிடம் என்ன காரணத்துக்காக ஜிம் ஜாயின் பண்றீங்கன்னு கேட்டார்.
நான் எந்தக்காரணத்திற்கும் ஜிம்மில சேரும் யோசனையில்லை என்றேன், மனைவி இடையே குறுக்கிட்டு, நாந்தான் ஜிம்மிலே சேரப்போறேன் என்றார்.

என்ன காரணம்?

"குழந்தை பிறந்து ஆறு மாதம் ஆகியாச்சு, ஜிம்மிலே சேர்ந்து வெயிட் குறைக்கலாமின்னு யோசிக்கறேன்"

"இதுக்கு முன்னாடி எப்ப ஒல்லியா இருந்தீங்கன்னு கேட்டாங்க" எனக்கு பகீர்னு தூக்கி வாரிப்போட்டது, ஆனாலும் அடக்கி வாசித்தேன்.

"இரண்டு வருடம் முன்னர்"

"உங்க பெண்ணும் சேருராங்களா? அவங்களுக்கு கிட்ஸ் கிளப் இருக்கு"

"யெஸ் ஐ வாண்ட் டூ ஜாயின் தி கிட் கிளப் "- மகள்

"வெரி நைஸ்"

அப்படியே எங்களை ஜிம் டூர் அழைத்துச்சென்றார், முதலில் யோகா அறையைக்காட்டினார், எனக்கும் சிறிதாக ஆசை முளைத்தது,

"முதுகு வலிக்கு எதாவது பெர்சனல் டிரெய்னர் இருக்காங்காளா?"

"ஓ யெஸ்" இப்படி ஆரம்பித்து அருமை பெருமைகளை எடுத்துரைத்தார். ஒவ்வொரு மெசினாக, அறையாக காண்பித்தார், இறுதியாக மஸாஜ் அறை மற்றும் பாத் ரூமையும் சுற்றிக்காட்டிய பின் ஜிம்மில் சேரும் பிராசஸை விவரித்தார்.

"ஜிம் அக்செஸ் மட்டும் போதும், இந்தக்கூப்பன் இருக்கு"

"ஜிம் அக்செஸ் மட்டும் மாதம் $19.99 ஒன்டைம் ரெஜிஸ்ட்டிரேசன் $199 பிராஸஸிங் $49" என்றார்.கிட்ஸ் கிளப் $99.

"அப்ப இந்தக்கூப்பன்"

"அதுவா அது வருட மெம்பர்ஷிப் சேர்ந்தா ரெஜிஸ்ட்டரேசன் கிடையாது $399 மட்டும் கட்டினா போதும் பிராஸஸிங் $39 எக்ஸ்ட்ரா"

"உங்களோட தொழில் போட்டியாளர்கள் $14.99 க்கே தராங்களே"

"எங்ககிட்ட நிறைய எக்யூப்மெண்ட்ஸ் இருக்கு"

"எனக்கு டிரெட் மில்லும் ,சைக்கிளிங் மட்டும் போதும்"- மனைவி.

"சைக்கிள் இருக்கு, டிரெட் மில் வாங்கிடலாம் நான்"

நாங்க உங்க தொழில் போட்டியாளர்களை விசாரிச்சிட்டு இன்னொரு நாள் வரோம் அப்படின்னு சொல்லிட்டு கிளம்பும்போது கவனித்தோம், ஜிம்மிலே ஓடி அனைவரும் களைத்து இளைத்து விட்டிருந்தனர், கம்பேக் சூன் என்று குண்டாக இருந்த ஓனர் அலுவலக அறையிலிருந்து குரல் கொடுத்தார்.

குடுகுடுப்பைக்காரன் உலகத்தரத்தில் தமிழ்த்திரைப்படம்.

-----------------
?

என்னுடைய நீண்ட நாள் கனவு, அதை நனவாக்கமுடியுமான்னு சந்தேகம் என் ஆழ்மனதில் ஓரத்தில் இருந்துகொண்டே இருந்தது, அதன் காரணமாகவே என்னுடைய வலைப்பக்கத்திற்கு குடுகுடுப்பை என்று பெயர் வைத்து நடத்தினேன்.%&* அதன் பலன் வலைப்பதிவர்களில் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று வெறிபிடித்து அலையும் நசரேயனின் நட்பு கிடைத்தது. எங்களுக்குள் ஒரு வலைற்றி ஒத்துப்போனது, பதிவர்கள்/வாசகர்கள் பலர் இருவரும் ஒருவரோ என எண்ணுமளவுக்கு எழுத்துப்பிழைகள் முதல் கருத்துப்பிழைகள் வரை ஒன்றாகவே பயணித்தோம்.

இப்படியாக ஒருநாள் பேசிக்கொண்டிருந்தபோது என்னையே ஹீரோவாக @$***&^ வைத்து என்னுடைய தயாரிப்பில் அவர் இயக்குவதாக ஒரு கதை சொன்னார், கதை சொன்னவிதம் பிடித்திருந்தது, ஆனாலும் பாட்டி வடை சுட்ட கதைய சுட்ட டோராக்கதைப்போல் எங்கேயோ கேட்ட மாதிரி உள்ளுணர்வு உருத்திக்கொண்டே இருந்தது. அதே நேரத்தில் கடந்த வருடம் ஃபெட்னாவில் (*&&^%) பிரியாமணியை பார்த்தது முதல் தானும் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுவதாகவும், தானே அப்படத்தை தயாரிக்கவும் தயார் என்றும் கூறினார்.

ஒரு நாள் என்னுடைய குடுகுடுப்பைக்காரன் கதையைக் கூறினேன், அதற்கு பொருத்தமான ஹீரோவாக நீங்கள் இருப்பீர்கள் என்றும் சொன்ன போது சற்றே அதிர்ந்தாலும், குடுகுடுப்பை என்ற பெயரில் வலைப்பதிவு நடத்தும் நீங்களே ஏன் ஹீரோவாக நடிக்கக்கூடாது என்றும் கேட்டார், அந்தக்காலத்து மிலிந்த் சோமன் போல் இருக்கும் நான் குடுகுடுப்பைக்காரன் கேரக்டரில் அவ்வளவாக பொருந்தமாட்டேன் என்பதை *&^ உணர்த்தினேன். இப்படித்தான் படம் உருவானது.

?
கதை ஒன்றும் புதிதல்ல, அதோட ஒன்லைன் சொல்லிடறேன், கதையின் நாயகன் இரவெல்லாம் தூங்கமாட்டான்,பகல் முழுவதும் தூங்குவான். நேர்மாறாக கதையின் நாயகி இரவெல்லாம் தூங்குவாள், பகலெல்லாம் தூங்கமாட்டாள். இவர்கள் எப்படி சந்திப்பார்கள் காதல் செய்வார்கள் அப்படிங்கிறது அருமையா படம் பிடிச்சிருக்கோம். ??{*&^ ரொம்ப நல்லா வந்திருக்கு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல உலக சினிமாவிலேயே இந்தவகை காட்சிப்படுத்தல் நிச்சயமா புதிய சிந்தனைதான்.

காதல் கதைன்னு சொன்னப்புறம் வில்லன் இல்லாமல் சுவராஸ்யம் இருக்காதல்லவா, இந்தப்படத்தோட வில்லன் வழக்கமான வில்லன் கிடையாது ஒரு சுவராஸ்யமான கேரக்டர், இவர் இருபத்து நாலு மணி நேரமும் தூங்கிக்கொண்டேதான் இருப்பார், ஆனால் எப்படி ஹீரோ , ஹீரோயினுக்கும் இடைஞ்சல் தருவார் அப்படிங்கறது படத்தோட ஹைலைட்.

?

உலகத்தரத்தில் குடுகுடுப்பைக்காரனின் காதலை சொல்லனும்னு முடிவு செஞ்சப்பவே இசை உலகத்தரத்திலே !!@&%^*#) இருக்கனும்னு சொல்லிட்டேன், ஒரு சின்ன சாம்பிள் சொல்றேன் உடுக்கை ஒலியை உலகத்தரத்தில் கொண்டுவருவதற்காக, செவ்விந்திய டிரம்ஸ்,நைஜீரீயாவின் பாரம்பரிய இசை,தென்னமெரிக்காவில் ^}{{ உடுக்கை போன்ற வடிவத்தில் உள்ள இசைக்கருவிகளெல்லாம் கலந்து, கடைசியில் மங்கோலியர்கள் சண்டைக்கு கிளம்பும் முன்னர் அடிக்கும் தப்பட்டை இசையையும் கலந்தவுடன் , அச்சுப்பிசகாமல் குடுகுடுப்பைக்காரன் அடிக்கும் உடுக்கை ஒலி உலகத்தரத்தில் கிடைத்தது, லண்டன்ல வெச்சி ரெக்கார்ட் பண்ணிருக்கோம்.

?

கண்டிப்பாக இந்தப்படம் எந்த உலகப்படத்தின் சாயலிலும் இருக்காது, குடுகுடுப்பைக்காரனின் காதல் உலகத்தரத்தில் உருவாகும் தமிழ்ப்படம், தியேட்டர் கிடைத்தவுடன் உங்களின் பார்வைக்கு.

பிகு: பதிவு உலகத்தரத்தில் உள்ளது என்பதை உணர்த்தவே, ஆங்காங்கே குறியீடுகள்.

நன்றி பிச்சைப்பாத்திரம் சு.க.

Thursday, December 9, 2010

வேட்பாளர்கள் தேவை : கு.ஜ.மு.க

கு.ஜ.மு.க வரும் 2011 சட்டமன்றத்தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

தேர்தல் வாக்குறுதிகள் சுருக்கம்:
1. அனைத்து வீடுகளுக்கும் இலவச லாப்டாப்(மேக்புக் புரோ).

2.அனைத்து வீடுகளுக்கு இலவச இண்டர்நெட். 99 வருடங்களுக்கு மட்டுமே இந்த சலுகை.

3. வீட்டில் உள்ள அனைத்து நபர்களுக்கும் ஐபோன் அல்லது ஆண்டிராய்ட் போன்

4. செல் போன் பில் 99 வருடங்களுக்கு இலவசம்(வேறு பெயரில் மாற்றமுடியாது, இறந்து போனால் சலுகை வேறொருவருக்கு மாற்றித்தரப்பட மாட்டாது)

5. இலவச உணவு பிட்சா,பர்கர் மாதிரியான மேற்கத்திய உணவுகளுடன், விரும்பினால் தென்னிந்திய உணவுகளும் மூன்று வேளையும் வீட்டிலேயே பறிமாறப்படும்.ஒருநாளைக்கு மூன்று வேளைக்கு மேல் உண்பவர்கள் முன்னரே பதிவு செய்யவேண்டும்.

இவ்வளவு வாக்குறுதிகள் தருவதால் கு.ஜ.மு.கவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதாகிறது, எனவே வேட்பாளர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

பிகு1: இலவசங்கள் அனைத்தும் வேட்பாளர்கள் சொந்த செலவிலேயே செய்யவேண்டும்.

பிகு2: கு.ஜ.மு.க பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று ஜக்கம்மா மீது செய்த ஆணை மீறப்படாது.