Saturday, January 19, 2013

கொண்டியார(ன்)கள்ளி.(3)


காலைக்கடனை அப்பனின் ஆனைப்படி சொந்த வயலில் முடித்துவிட்டு , ஊரான் வீட்டு வேப்ப மரத்தில் குச்சி ஒடித்து பல் விளக்கிவிட்டு குளத்திற்கு குளிக்க வந்திருந்தான் பழனி, குளக்கரையில் ஊர்க்காரர்கள் அவனிடம் பேச்சுக்கொடுத்தார்கள்.

”என்னடா பழனி உங்கண்ணங்களுக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சி, உனக்குன்னே பொறந்த ங்கொத்தை மவ வேற சமைஞ்சி இருக்கா அடுத்து உனக்குத்தான் கால்கட்டு போடப்போறாங்க, கொஞ்சம் சாராயம், சீட்டாட்டத்தையெல்லாம் குறைச்சிக்கடா , சூதாடிப்பயன்னு பொண்ணு கொடுக்க முடியாதுன்னு சொல்லிருவாங்க”

”அட நீங்க வேற அவள நான் கோடி ரூபா கொடுத்தாலும் கட்டமாட்டேன், இவங்க என்னா என்னை சூதாடிப்பயன்னு சொல்றது”

”ஏண்டா, அவ ஆளு கலரா தளுக்கு, புளுக்குன்னுதானட இருக்கா”

” அவ ஒரு கன்னத்த அறுத்து நம்மூருக்கு விருந்து வெச்சிரலாம், இன்னொரு கன்னத்தை அறுத்து அவங்க ஊருக்கும் விருந்து வெச்சு மிஞ்சி போயிரும்”

”என்னமோ போடா நாலு எழுத்து படிச்சிருக்கா, நீ வேண்டாம்கிற”

”படிச்சி என்ன பண்றது, வாசல்ல கலர் கலரா கோலம் போடலாம்.”

இப்படியாக குளக்கரை பேச்சு ஓடிக்கொண்டிருக்கையில், அரக்க பரக்க ஓடிவந்தான் கடைக்குட்டி எருமை திருப்பதி. வந்த வேகத்தில் அண்ணனிடம் வீட்டில் அம்மாவுக்கும், அண்ணிகளுக்கும் நடக்கும் சண்டையைச் சொன்னான். இருவருமாக உடனடியாக வீட்டுக்குத் திரும்பினர்.

சின்னப்பொண்ணு தன் அம்மாவிடம் தானே சாணி அள்ளுகிறேன், என்று சொல்லிவிட்டாள், அண்ணிகளும் தாங்களும் ஒத்தாசையாக இருக்க ஒத்துக்கொண்டதால் பிரச்சினை அப்போதைக்கு ஓய்ந்திருந்தது. அந்த நேரத்தில் நடுவீட்டு முனியன் அங்கே வந்தான், தன் ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒத்திக்கு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டான்.

முனியனின் நிலம் இவர்களின் நிலத்தோடு ஒட்டியது, முனியன் அடகு வைத்துவிட்டு திருப்பும் தகுதியிம் மிகக்குறைவு என்பதை நன்கறிந்த கொண்டியாரகள்ளியும்/ கொண்டியாரனும் சேர்ந்து பணம் நாங்க இன்னும் இரண்டு வாரத்தில் தர்றோம் என்று முனியனிடம் வாக்கு கொடுத்தனர்.

”பணம் குடுக்குறமுன்னு சொல்லியாச்சு, வீட்ல முப்பது ரூபாய் இருக்கு இன்னும் எழுபது ரூபாய் பிரட்டனும் ” -- கொண்டியாரன்

“ பணம் இல்லாம எப்படி கொடுக்க முடியும், ஏன் அவசரப்பட்டு வாக்கு குடுத்த ” மூத்தவன் ரவி.

” உன் பொண்டாட்டி நகைய வாங்கி அம்பது ரூபாய்க்கு அடகு வெச்சு திருப்பலாமேடா” கள்ளி

“ என் கிட்ட நேத்தைக்கு நாட்டுத்திருவிழால சீட்டாட்டத்தில செயிச்ச இருபது ரூபா இருக்கு அதை நான் தரேன், நிலத்தை இப்ப ஒத்திப்புடிச்சா அவன் கண்டிப்பா வித்திருவான்” --- பழனி

“ ஒரு நாளைக்கு இருபது ரூபா செயிக்கலாமாடா, அப்ப இன்னைக்கு திருவிழால ஆடி அம்பது ரூபா செயிச்சா பணம் குடுத்துரலாம்டா”-கள்ளி

”யம்மா இது வெட்டாட்டம் இருபது பணத்த வெச்சி அம்பதெல்லாம் செயிக்கமுடியாது” பழனி

“வீட்ல இருக்கிற முப்பதையும் எடுத்துட்டுப் போடா , உன் தம்பியவும் கூட்டிக்க சீட்டு கீட்டு பாத்து சொல்லுவான், எப்படியாச்சும் நாளைக்கு லட்ச ரூவாயோட வாடா ” கொண்டியாரன்

“ என்ன பேசறீங்க எல்லாம் , இப்படி சூதாடி அந்த நிலத்தை வாங்கனுமா? இருக்கிற காசும் சூதுல போச்சுன்னா என்ன பண்ணுவீங்க” ரவி

“ நீ படிச்சவன் இப்படிதான் பேசுவ , நான் பல வருசமா சீட்டாடுறேன், சொந்தமா டோக்கன் விட்டெல்லாம் காசு பாத்திருக்கேன், யப்பா நீ பணத்தைக்கொடு நான் ஒரு லட்ச ரூபாய் காசோட வரேன், திருப்பதி , அந்த குருதுக்குள்ள பத்து டிசைன்ல டோக்கன் வெச்சிருக்கேன் அதை எடுத்துக்கிட்டு என் கூட வா, களத்துல என்ன கலர்/டிசைன் டோக்கன் போடுறாங்கண்ணு பாத்து, நம்மகிட்ட அதே டோக்கன் இருந்தா இறக்குவோம், பணமே இல்லாம ஜெயிப்போம்” என்றான் பழனி

தொடரும்...

Friday, January 11, 2013

கொண்டியார(ன்)கள்ளி.(2)

முன்குறிப்பு: ஒரு சிறு தொடர் எழுதும் முயற்சி, தொடரில் வரும் கதாபாத்திரங்களில் சில மிகவும் ஆபாசமான சொற்களை பயன்படுத்தவேண்டிய அவசியம் இக்கதைக்கு உள்ளது. என்னுடைய பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் பெண் வாசகர்கள் நம்பிக்கையோடு படிக்கலாம். இக்கதை ஆபாசமானதல்ல,இயல்பில் பேசப்படும்/பேசப்பட்ட வார்த்தைகளே அவைகள், இருப்பினும் 18 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் இப்படிப்பட்ட ஆபாச வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் தயவு செய்து படிக்கவேண்டாம்.

கொண்டியார(ன்)கள்ளி.(1)

" பால் குடுக்க நேரமாச்சு, குடுத்துப்புட்டு அப்படியே அவன் கிட்டயே ஒரு டீய குடிச்சிட்டு வந்திருங்க"

"சரி "
------------------------
டீக்கடை:
--------------------
"என்ன கொண்டியாரே இவ்ளோ லேட்டாவா பால் கொண்டு வருவ, பால் இல்லாம எல்லாரும் உனக்காக காத்துக்கிட்டிருக்கோம்".

" எந்த வல்லார ஓழிப்பய வீட்டு மாடோ முட்டி ரவையில கண்ணுக்குட்டியை அறுத்துவிட்டிருச்சு, நடுச்சாமத்திலதான் புடிச்சி கட்டுனேன் அதுக்குள்ள அது நல்லா பால குடிச்சிருச்சிடா, அதான் கொஞ்சம் நேரம் கழிச்சி பால் பீச்ச வேண்டியதாப்போச்சு"

" என்னய்யா பால் இது , எருமைப்பால்னா ஒன்னுக்கு நாலு எட கட்டலாம், நீ மொட்டத்தண்ணியா குடுக்கிற, இடையவீட்ல வாங்குற பசும்பாலே கெட்டியா இருக்கு ஒன்னுக்கு மூனு எட கட்டுறேன், இப்படி தண்ணிய ஊத்தி தடியால அடிச்சு குடுத்தா, நீ பால் குடுக்கிறத நிப்பாட்டிக்க"

" தண்ணியெல்லாம் ஊத்தலடா, எடப்பய வீட்டைச்சுத்தி கள்ளி இருக்கு,அவன் எதுவும் கள்ளிப்பால கலந்து ஊத்துரானோ என்னமோ"

"இந்த எடக்குக்கு ஒன்னும் கொறச்ச இல்ல, சரி இந்தா உன் டீ, குடுக்கிற தண்ணிப்பாலுக்கு ஓசில டீ வேற"

கடையில் டீக்குடிக்க வந்த சிலரும் கொண்டியாரனிடம், அவரின் மகன்களின் திருமணம் குறித்து விசாரித்தனர்.

"என்னய்யா மூத்தாளுக்கு குடிக்காடு மாடி வீட்டுப்பொண்ணாம்ல, யோகந்தான்யா உனக்கு"

"மூத்தவன் பள்ளிக்கூடம் போனதுனால பொண்ணு அமைஞ்சி போச்சு, சந்திரனுக்குதான் நம்ம நாட்ல ஒருத்தனும் கொடுக்கலங்கிறான், மாட்டுத்தரவு ரெங்கன் மூலியமா கீழச்சீமைல பாக்கிறோம், ஒரு இடத்தில தரேன்னு சொல்றாங்க, கொஞ்சம் வசதியில்லாத இடம், இரண்டு ஏக்கர் நிலந்தான் இருக்காம், மாடு கண்ணெல்லாம் ஒன்னும் இல்லையாம், காய்கறி,கிழங்கு வெவசாயம் பண்ணி டவுன்ல வித்து பொழப்பு நடத்துறாங்களாம், கொஞ்சம் வசதியான இடமா பாக்கச்சொல்லிருக்கேன், ஒன்னும் அம்புடலன்னா இதையே முடிக்கவேண்டியதுதான்"

"என்னய்யா மாட்டுத்தரவுகாரன பொண்ணு பாக்க சொல்லிருக்க, கல்யாணத்தரகர் இருந்தா பாக்கவேண்டியதுதானே?"

"நீ வேற வெவரம் புரியாம, அதெல்லாம் டவுண்காரங்களுக்குதான் சரியா வரும், இவனுக்கு மாடு இருக்கிற வீடெல்லாம் தெரியும், அங்கே உள்ள பொட்டப்புள்ளைகளையும் தெரியும் , இவந்தான் நமக்கு சரியான ஆள்".

ரோட்டில் கொண்டியாரனின் மூன்றாவது மகன் பழனி உழவு மாடு கலப்பையோடு நடந்து போய்க்கொண்டிருக்கிறார், அவரை கொண்டியாரன் டீ குடிக்க அழைக்கிறார்.

"நீ குடுக்கிற பாலுக்கு ரெண்டு டீ ஓசில குடிச்சா எப்படி , ரொம்ப அநியாயமா இருக்குய்யா ஒன்னோட" என்று புலம்பினான் டீக்கடைக்காரன், பிழைப்பு நடத்த வந்தவனால் புலம்ப மட்டுமே முடியும்.

--------
சில மாதங்கள் அலைந்தும், கடுமையான உழைப்பாளியாக இருந்தும் பள்ளிக்கூடம் போகாத சந்திரனுக்கு, கொண்டியாரனும் , கள்ளியும் எதிர்பார்த்தது போல் வசதியான வீட்டுப்பெண் அமையவில்லை,முடிவில் கீழைச்சீமை ஏழைப்பெண் வசந்தாவே முடிவானது, இரண்டு திருமணத்தால் வீட்டில் இட நெருக்கடி ஏற்படும் என்பதால், ரோட்டோரம் இருந்த மனையில் சிறிதாக ஒரு ஓட்டு வீடும் கட்டினார்கள். ஒரு நல்ல நாளில் ரவிக்கும், மாடி வீட்டு இந்திராவுக்கும், சந்திரனுக்கும் குச்சிவீட்டு வசந்தாவிற்கும் திருமணமும் ஒரே முகூர்த்தத்தில் நடந்தது.

கல்யாணத்துக்கு பின்னர்:
-------------------------------------------

"விடிஞ்சி வெயில் எரிக்க ஆரம்பிச்சிருச்சி, இன்னும் என்னடி பண்றீய வீட்டுக்குள்ள , இனிமே என் மவ சாணி அள்ளமாட்டா, நீங்க ரெண்டு பேருந்தான் அள்ளனும் " கொண்டியாரகள்ளி.

"எங்க வீட்ல நான் சாணியெல்லாம் அள்ளுனது இல்லை, வேலையாள்தான் செய்வாங்க, " ரவியின் மனைவி இந்திரா

"ம்க்கூம் நீ மாடி வீட்ல பொறந்தவ பெரிய இந்திராகாந்தியம்மா, அவ மாடே இல்லாத வீட்ல பொறந்தவ அவளும் அள்ள மாட்டா"

"யம்மா , சின்னப்பொண்ண இன்னைக்கு அள்ளிப்போடச்சொல்லு, அப்படியே இவங்களும் ஒத்தாசையா இருப்பாங்க, புதுசு பழக்கம் இல்லாதவங்க கொஞ்சம் கொஞ்சமா சரியாயிடும்"

"என் மவ இவளுகளுக்கு வேல பாக்க முடியாது, அவளுகதான் அள்ளனும், யோவ் என்னய்யா பொண்ணு பாத்த, ஒருத்தி மாடிவீட்ல பொறந்து வீட்டுக்குள்ளேயே உள் வேலை பாத்தாளாம், இன்னொருத்தி டவுண்ல கத்தரிக்காய் வித்துப்புட்டு கண்ட பயலயும் பாத்து பல்ல இளிச்சுப்புட்டு , மத்தியான சோத்துக்கு இல்லாம ,மரவல்லிக்கிழங்கை அவிச்சி தின்னுப்புட்டு மரவல்லிக்கிழங்கு வேல பாத்தாளாம், எங்குடி இப்படி குட்டுச்சாரா போச்சே"

"இந்தப்பாருங்க என்ன இப்படி அசிங்கமா பேசறீங்க." இந்திராவும் , வசந்தாவும்.


"ஆமாண்டி பத்தினி செத்துக்கெடந்தாளாம் கொட்டுக்கூடை XXX எழவுக்கு வந்துச்சாம்."


தொடரும்....


கொண்டியார(ன்)கள்ளி.(1)

முன்குறிப்பு: ஒரு சிறு தொடர் எழுதும் முயற்சி, தொடரில் வரும் கதாபாத்திரங்களில் சில மிகவும் ஆபாசமான சொற்களை பயன்படுத்தவேண்டிய அவசியம் இக்கதைக்கு உள்ளது. என்னுடைய பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் பெண் வாசகர்கள் நம்பிக்கையோடு படிக்கலாம். இக்கதை ஆபாசமானதல்ல,இயல்பில் பேசப்படும்/பேசப்பட்ட வார்த்தைகளே அவைகள், இருப்பினும் 18 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் இப்படிப்பட்ட ஆபாச வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் தயவு செய்து படிக்கவேண்டாம்.

இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் , கற்பனையே, ஆங்காங்கே கேட்ட/பார்த்த சொற்களை வைத்து ஒரு கற்பனைக்காவியம்(?).இக்காவியத்தில் திருப்பங்களெல்லாம் இருக்காது ஒரே நேராக செல்லும்.டைரக்டர் ஷண்முகப்பிரியன் சொன்னது போல் ரஷ்ய எழுத்தாளர்கள் திருப்பம் வைக்கமாட்டார்களாம் அது போலவே இருக்கும், ஏனென்றால் திருப்பம் வைத்தெல்லாம் எனக்கு எழுதத்தெரியாது. மற்றபடி எனக்கும் ரஷ்யாவிற்கும், மாஸ்கோவிற்கும் மன்னார்குடிக்கும் உள்ள சம்பந்தம் கூட கிடையாது.

கதாபாத்திரங்கள்: கொண்டியாரன், கொண்டியாரகள்ளி இவர்களின் நான்கு மகன்கள்(ரவி,சந்திரன்,பழனி,திருப்பதி) மற்றும் ஒரு மகள் மற்றும் அதனைச்சார்ந்த கதாபாத்திரங்கள்.

கொண்டியாரனும், கொண்டியாரகள்ளியும் ஜாடிக்கேத்த மூடி போன்ற வாழ்க்கைத்துணை, இருவருக்கும் பிறந்திருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டுமே போதும் அவர்களின் பிணைப்பை உறுதிப்படுத்த. இவர்களின் அடுத்தடுத்த குழந்தைகளுக்கு ஒரு வயதுதான் வித்தியாசம். சொத்து சேர்ப்பதில் இருவரும் வல்லவர்கள், பணக்காரன் என்றும் சொல்லும் அளவிற்கு வசதியானவர்கள், தங்களுடைய உழைப்பை மட்டும் உரமாக்காமல், உச்சா, கக்கா கூட வயலிலேயே இட்டு உரமாக்கும் கெட்டிக்காரர்கள்.

மூத்தவன் ரவி கடுமையான பாட்டாளி, பத்தாவது வரை படித்துவிட்டு கொண்டியாரனுக்கு உதவியாக விவசாயம் செய்து வருகிறார்.நேர்மையானவர்/நல்லவர் என்ற பெயரையும் சம்பாதித்து வைத்திருக்கிறார், தனியாக தொழில் தொடங்கி முன்னேறவேண்டும் என்ற ஆசையுள்ளவர்.

இரண்டாமவன் சந்திரன் மிகக்கடுமையான பாட்டாளி, அவர்கள் வீட்டு உழவு மாடு, வண்டி மாடு இரண்டும் செய்யும் வேலைகளைவிட இவர் செய்யும் வேலை அதிகம், பள்ளிக்கூடத்தில் இரவில் படுத்து தூங்குவார், அதைத்தவிர வேறு காரணத்திற்கு பள்ளிக்கூடம் சென்றதில்லை.

மூன்றாமவர் பழனி துறுதுறுப்பான இளைஞர், கடுமையான பாட்டாளி, சற்றே குடிப்பழக்கமும் நிறைய சீட்டு ஆடும் பழக்கமும் உள்ள வாலிபர்.இவரும் பள்ளிக்கூடம் சென்றதில்லை, பகலில் வீட்டு வேலை இரவில் சீட்டாடும் இடத்தில் தூக்கம், அது கோவிலாகவோ,பள்ளிக்கூடமாகவோ,திருவிழாவாகவோ, கருமாதி வீடாகவோ இருக்கலாம்.

நான்காமவர் விடுகுட்டிப்பையன், வாத்தியார் திட்டுவார் என்று பயந்து மூன்றாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, பனைமரம் ஏறி நொங்கு பறித்து உண்பது, விற்பது, ஓனான்,பாம்பு அடிப்பது, மீன் பிடிப்பது கூடுதலாக வயலுக்கு கஞ்சி கொண்டு செல்லுதல் , எருமை மாடு மேய்த்தலும் இவருடைய வேலை.

ஐந்தாமவர் பெண், இவர் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்படவேயில்லை, இவரின் வேலை எருமை சாணி அள்ளுதல், கூட்டுதல், பாத்திரம் கழுவுதல், அனைவருக்கும் சமைத்தல் அண்ணன்களுக்கு பரிமாறுதல், தலை முடியை கருப்பாக வைத்திருக்க கரிசலாங்கன்னி முதல் அடுப்புக்கரி வரை அறைத்து தலையில் தேய்த்து குளித்தல் ஆகியன இவருடைய பிரதான பணி.

ஏங்க நம்ப சின்னப்பொண்ணே இருவது எருமை சாணிய அள்ள முடியுமா, பெரிய பயலுக்கும் , சந்திரனுக்கும் கல்யாணத்தை பண்ணிருவோம் குடும்பத்துக்கு ஒத்தாசையாவும் இருக்கும், அவங்களுக்கும் இருபது வயசு ஆயிருச்சு நல்ல வசதியான இடமா பாத்து பொண்ணு தெவச்சு வைங்க சீக்கிரம் இந்த தைக்குள்ள கல்யாணத்த முடிக்கனும்-- கொண்டியாரகள்ளி.

பெரியவனுக்கு நம்ம நாட்டுலேயே ஒரு பொண்ணு தெவஞ்சிருக்கு, சந்திரனுக்கு ஒன்னும் தெவய மாட்டேங்குது கீழச்சீமையிலதான் பாக்கனும். என் தங்கச்சி மவள பழனிக்குதான் குடுப்பேன்னு சொல்லிட்டாங்க, கீழச்சீமையிலேயே தான் போய் பாக்கனும்.

கீழச்சீமையிலேயே பாரு அவங்கதான் வீட்டுக்கு நூறு எருமை வச்சிருப்பாங்க, சாணி சலைக்காம அள்ளுவாளுவ, அவளுகதான நமக்கும் தேவலாம்.

தொடரும்